மலையகத்தின் சிறுவர் வர்த்தகம் நீடிப்பதற்கு தமிழ்த் தலைமைகளும் பொறுப்பு கூற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தின் சிறுவர் வர்த்தகம் நீடிப்பதற்கு தமிழ்த் தலைமைகளும் பொறுப்பு கூற வேண்டும்

நாட்டிலேயே சிறுவர் உரிமை மீறல் மலையகத்திலேயே அதிகம். உடல் உள ரீதியாக  தமக்கு அநீதி விளைவிக்கப்படுகின்றது என்னும் யதார்த்தத்தைப் புரிய  முடிந்தால் மட்டுமே அதற்கு எதிர்ப்பை காட்டமுடியும். பாதுகாப்புக்கோரி   குரல்கொடுக்க முடியும். இப்படியொரு விழிப்புணர்வு இப்பொழுது அவசரத் தேவை. 

இதேநேரம் பாடசாலை இடை விலகலால் படிப்பைப் பாதியில் கைவிட்ட சிறார்கள் மீளவும் அதனைத் தொடர ஆவன செய்யப்படுமாயின் வரவேற்புக்குரியது.   அத்துடன் எக்காரணம் கொண்டும் வேலைக்காக சிறுபிள்ளைகளை வெளியில் அனுப்பமாட்டோம் எனும் உறுதியைப் பெற்றோர் எடுக்க வேண்டும்

ஹிஷாலினியின் கொடூரச் சாவு எழுப்பியுள்ள அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. ஒருபுறம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது காவல்துறை. இதேவேளை மனித நாகரிக கலாசாரத்தை அடிப்படையாகக்    கொண்ட மக்கள் மனவெழுச்சிப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் அரசியல் இலாபம் கருதி ஹிஷாலியினின் மரணத்தைக் கையாள்வதும் தெரிகின்றது. இதைவிட ஒருபடி மேலேபோய் இனவாதத்தைத் தூண்டிவிடவும் முயற்சிகள் இடம்பெறாமல் இல்லை.  

இவற்றுக்கிடையே நீதி நிலை நிறுத்தப்பட்ட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நியாயம் எந்தச் சூழ்நிலையிலும் விலைபோய்விடக் கூடாது. இதுதான் முக்கியம். ஹிஷாலினியின் அகால மரணம் ஒரு சமூகத்தின் விழிப்புணர்வுக்கான அறைகூவலாகவே இருக்கின்றது. இந்தச் சிறுமியின் மரணத்தை வறுமையின் கொடுமைக்கூடான ஒரு சம்பவமாகவே முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றது. வேறு சில காரணங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. 

குறிப்பாக, கல்வியறிவின்மையின் தாக்கம் இதில் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகின்றது. பெருந்தோட்டக் கட்டமைப்பின் இறுக்கம் வறுமைப் போக்குதல்களுக்கான வேறு மார்க்கங்களைத் தடைப்போட்டுத் தடுத்துவிட்டுள்ளது. இதனால் இல்லாமை ஒரு புறமும் கல்லாமை மறுபுறமும் சுமையான ஒரு வாழ்வியலை வலிந்தேற்றுகின்றது. பொருளாதார ரீதியிலான தளர்ச்சி இங்கு சகல மட்டங்களிலும் ஆட்சி செய்து வருவதால் தேவைகள் நிறைவேற்றுப்படாத ஒரு ஏக்கம் சிறார்களை பாதிக்கவே செய்கின்றது. முக்கியமாக போஷாக்கான ஆகாரமில்லாமையால் நோய்த்தொற்று, உடல் பலவீனம் என்பவற்றால் இளம் பராயத்திலேயே உளவியல் ரீதியிலான அழுத்தங்கள் இவர்களை ஆட்கொள்கின்றன.  

இதனை ஊக்குவிப்பது போலவே பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வியானது பலவீனமடைந்து காணப்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொன்னால் முதற்படியே கோணல். அதுவே ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்று விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் கல்வியறிவு மட்டத்திலான வீழ்ச்சி பெரும்பாலும் சிறுவர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் காரணியாக மாறிவிடுகின்றது. பெற்றோர்களிலிருந்து பிள்ளைகள் வரையிலான கல்வி மந்தம் சாதக பாதகங்களை புரிந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்குவதில்லை. 

இதனாலேயே பெருந்தோட்டப் பிரதேசங்களில் பாடசாலை இடைவிலகல் அதிகமாகவே இடம்பெறுகின்றது. இவ்வாறு இடைவிலகலுக்கு உட்படுவோர்களில் சிறுமிகளே அதிகம் என்று தரவுகள் சுட்டுகின்றன. அதுவம் பூப்பெய்திய பின்னர்   சிறுமிகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பலபெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. படித்து என்ன செய்யப் போகிறது என்னும் அலட்சியம், பாடசாலைகளின் தூரம்  போன்ற காரணங்களால் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. வசதியின்மையும் ஒரு சாட்டாக கொள்ளப்படுகின்றது.  

பாடசாலை வளவுக்குள்ளும் சில பாடசாலைகளில் விரும்பத்தக்காத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சிறுவர்கள் பாடசாலை செய்வதை விரும்புவதில்லை. திறன் குறைந்த சில பாடசாலை நிர்வாகங்களும் இச்சிறார்களின் கல்வியைச் சீரழிக்கின்றன. இதன் காரணங்களால் இடைவிலகல் நியாயப்படுத்தப்பட்டு விடுகின்றது. இதனால் இளம் வயதிலேயே தொழில் தேடும் படலம் ஆரம்பமாகி விடுகின்றது. அநேகமாக சிறுமிகளே இந்த வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பெற்றோர் வறுமையினால் படும் அவஸ்தைகளைக் கண்டு கவலைப்படும் இவர்கள் பெற்றோரின் சுமையைப் பங்கு போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். 

இதன் பாடுகளையே ஹிஷாலினி உள்ளிட்ட சிறமிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். என்னே பரிதாபம்!      இங்கு வறுமையை தமக்குத் தீனி போடும் சாதனமாகப் பயன்படுத்தும் இடைத்தரகர்கள்   தெரிந்து கொண்டே பாவச்செயலுக்குத் துணைபோகிறார்கள். எல்லாம் சுளையாகக்  கிடைக்கும் சலவை நோட்டுக்களுக்காகத்தான். இவ்வாறு இளம் பிஞ்சுகளை வறுமைக்கு இரையாக்குவதற்கு ஏகப்பட்ட இடைத்தரகர்கள் மலையகம் எங்கும் உலா வருகிறார்கள். 16 வயதுக்குக் குறைந்தவர்களை வேலைக்கமர்த்துவது குற்றம் என்று தெரிந்துக்கொண்டே இந்த இடைத் தரகர்களும் சிறார்களை விலைகொடுத்து வாங்கும் வீட்டுரிமையாளர்களும் செயற்படுகின்றார்கள். இதனாலேயே ஹிஷாலினி ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது அவரது வயது 18 என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

தோட்டங்களில் இயங்கும் இடைத்தரகர்கள் பெற்றோரையும் இளம் பிள்ளைகளையும் ஆசை வார்த்தைகளைக் கூறி வளைத்துப் போடுவதில் வல்லவர்கள். இதனால் சுலபமாக ஏமாந்து போகும் பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாரை வார்க்க தயங்குவது இல்லை. இப்படி சிறுவர் தொழிலாளர்களாக சென்ற பிள்ளைகள் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் பிணமாகவே திரும்பிய சம்பவங்களும் இருக்கின்றன. இவர்களுக்கெதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வெளிவராமலே போனதும் உண்டு. பெரும்பாலும் வேலைக்காகச் செல்லும் வீட்டில் இடம்பெறும் மரணங்களை தற்கொலை என்றே முடிவு கட்டப்பட்டுள்ளன. ஹிஷாலியின் மரணம் கூட தற்கொலை என்றே சம்பந்தப்பட்டவர்கள் சாதிக்க முனைந்துள்ளனர்.

உடற் கூராய்வு அறிக்கையில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள விவகாரம் வெளிவராமல் இருந்திருந்தால் இது தற்கொலையென்று முடிக்கப்பட்ட விடயமாகக்கூட ஆகியிருக்கலாம். நடந்தது அநீதி என்று தெரிந்து கொண்டு பணத்தால் பலிகடாக்கள் ஆக்கப்பட்ட சில பிள்ளைகளின் பெற்றோர் உண்மையை ஊமையாக்கி விட்டதும் உண்டு.  

தற்போது ஹிஷாலினி உள்ளிட்ட பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ள சங்கதி அம்பலமாகியுள்ளதால் இன்று இதுவொரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. மலையக மக்கள் கெளரவமாக வாழ்வதற்குரிய உரிமைகொண்டிருப்பது உறுதி செய்யப்படுவது அவசியம். சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபை மலையகத்துக்கு வெளியே சிறப்பாக சேவையாற்றி வருகின்றது. இது போலவே மகளிர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சும் கரிசனையுடன் செயற்படுகின்றது. ஆனால் இந்த அமைப்புகளின் சேவை பெருந்தோட்டப் பிரதேசங்களை எட்டிப்பார்ப்பது கிடையாது. இனியாவது மலையகத் தலைமைகள் இதுபற்றிக் கவனம் செலுத்தியாக வேண்டும்.  

ஏனெனில் மலையகத்தில்  சிறுவர் வியாபாரம் நீண்டகாலமாகவே நடந்துவரும் சங்கதி. இதை அறிந்திருந்தும் இந்தத் தலைமைகள் மெளனம் காத்து வந்துள்ளன. மலையக மக்களின் வறுமைக்கு தீர்வுகாணும் திட்டங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. இது போலவே கல்வி மேம்பாட்டுக்கும் உருப்படியாக காரியம் ஆற்றியது கிடையாது. சொல்லப் போனால் மலையக மக்களின் சமூகவியல் மாற்றங்களுக்கு வழி சமைக்காமல் அவர்களைக் கொத்தடிமை சமூகமாக இன்னும் வைத்திருப்பதற்கு இந்தத் தலைமைத்துவங்கள் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.   அநேகமான மலையக சிறார்கள் பல்வேறு காரணங்களால் விரக்தி மனப்பான்மையுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தமது பெற்றோர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் சிறுமியர் இலகுவாக மனதை நழுவவிடக்கூடிய அபாயம் உண்டு. இது அவர்களை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிடக்கூடும். செல்வந்த வீடுகளில் சித்திரவதைகளையும் துஷ்பிரயோகங்களையும் தாங்கிக் கொள்வது போல வீடுகளில் கூட இவ்வாறான கொடுமைகள் இடம் பெறும்போது மெளனம் காப்பதுண்டு. இதற்கு நெருக்கமான வாழ்விடங்கள், தனிமை, புறக்கணிப்பு, போதிய பராமரிப்பின்மை, வறுமை என்பன வழிவகுத்துக் கொடுக்கின்றன. எனவேதான் இங்கே அவசர விழிப்புணர்வு அவசியமாகின்றது. 

நாட்டிலேயே சிறுவர் உரிமை மீறல் மலையகத்திலேயே அதிகம். உடல் உள ரீதியாக தமக்கு அநீதி விளைவிக்கப்படுகின்றது என்னும் யதார்த்தத்தைப் புரிய முடிந்தால் மட்டுமே அதற்கு எதிர்ப்பைக் காட்டமுடியும்.
பாதுகாப்புக்கோரி குரல்கொடுக்க முடியும். இப்படியொரு விழிப்புணர்வு இப்பொழுது அவசரத் தேவை. தவிர மலையக பிள்ளைகள் அப்பாவிகள்.

எதையும் சகித்துக் கெள்வார்கள். விசுவாசமான அடிமைகள் என்று பிறர் எடைபோடும் நிலைமையை மாற்றியாக வேண்டும். அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் செல்வந்த வீடுகளிலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் அனைத்துச் சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு ஆக வேண்டும.் இதற்காக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுப்பது நல்லது. 
இதே நேரம் பாடசாலை இடை விலகலால் படிப்பைப் பாதியில் கைவிட்ட சிறார்கள் மீளவும் அதனைத் தொடர ஆவன செய்யப்படுமாயின் வரவேற்புக்குரியது.

அத்துடன் எக்காரணம் கொண்டும் வேலைக்காக சிறுபிள்ளைகளை வெளியில் அனுப்பமாட்டோம் எனும் உறுதியைப் பெற்றோர் எடுக்க வேண்டும். அத்துடன் சிறுவருக்கான உரிமை அதனைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அத்துடன் மலையகத்தை முற்றாக வறுமையிலிருந்து விடுவிக்கும் வேலைத்திட்டங்களை மலையக தலைமைகள் ஆரம்பிக்க வேண்டியது அவர்களது கடப்பாடு. தவிர கட்டாயக் கல்வி என்பது மலையகத்தில் பூரணமாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தேவை. அத்துடன் தரம் 13வரை அது நிலை நிறுத்தப்பட வேண்டிய நகர்வுகளும் அவசியமாகிறது. 

பாலகி ஹிஷாலியின் மரணம் இறுதி அர்ப்பணமாக இருக்கட்டும். இனி இவ்வாறான அவலங்கள் இடம்பெறக் கூடாது. இதுவே மலையக சமூகம் கற்றுக்கொண்ட பாடமாக அமைய வேண்டியது அவசியம் .

பன். பாலா

Comments