கொடிய கொரோனா பேரிடர் காலத்தில் சமூக பொறுப்பை மறந்த போராட்டங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

கொடிய கொரோனா பேரிடர் காலத்தில் சமூக பொறுப்பை மறந்த போராட்டங்கள்!

கொவிட் 19 தொற்று உக்கிரமடைந்திருக்கும் இவ்வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இன்றைய நிலையில், நாளுக்கு நாள் வீதியில் இறங்கிப் போராடும் தரப்பினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இத்தகைய போராட்டங்களால் கொவிட் தொற்று மேலும் மோசமடையுமென்று மக்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கூட்டுப் பொறுப்பைக் கூட கவனத்தில் கொள்ளாது, வீதியில் இறங்கிப் போராடுபவர்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு மட்டங்களிலும் சந்தேகம் காணப்படுகிறது. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் ஏதேனும் இருக்கக் கூடுமென்பதே மக்களின் சந்தேகமாக உள்ளது.
குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எனக் கல்வித் துறையில் உள்ளவர்கள் கடந்த சில நாட்களாக பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு தொற்று நோய் தீவிரமாகப் பரவி ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கும் இந்த ஆபத்து நிறைந்த நிலையில், கல்வித் துறையில் உள்ளவர்கள் பெருமளவில் ஒன்றுகூடி நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

ஜனநாயக நாடொன்றில் தமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உரிமை எவருக்கும் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்த போதும் தற்பொழுது காணப்படும் கொடிய தொற்றுநோய் சூழலில் ஏனைய மக்களையும் ஆபத்துக்குள் தள்ளும் வகையிலான போராட்டங்கள் எந்தளவுக்கு நியாயமானவை என்பதுதான் மக்களுக்குத் தெரியாதிருக்கின்றது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தற்பொழுது நடத்தி வரும் பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு ஆரம்பத்தில் கூறப்பட்ட காரணம் வேறாக இருக்க, தற்பொழுது வேறொரு காரணம் கூறப்படுகிறது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது தற்பொழுது சம்பள உயர்வு கோரிய ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலக்கழகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கே ஆரம்பத்தில் எதிர்ப்புக்கள் கிளம்பின. குறிப்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் அன்றி, இராணுவமயப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறியே ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவ அமைப்புக்கள் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்தன.

இது தொடர்பில் பத்தரமுல்லையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சிலர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடத்தின. அவர்களின் விடுதலை தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்பொழுது சம்பள உயர்வு கோரிய போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திற்கும் தற்பொழுது கூறப்படும் நோக்கத்திற்கும் முற்றிலும் வேறுபாடுகள் உள்ளன. அது மாத்திரமன்றி, ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் அவர்கள் எதுவிதமான கருத்துக்களையோ அல்லது கோரிக்கைகளையோ தற்பொழுது முன்வைப்பதில்லை.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் 57 வீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது. எனினும், இதனை ஏற்பதற்கு ஆசிரியர்கள் தயாராகவில்லை. கொவிட் அச்சுறுத்தலின் மத்தியில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்புக்காக அரசு பெருமளவு நிதியை செலவிட்டு வருகின்ற போதிலும், சம்பள உயர்வுக் கோரிக்கையில் ஆசிரியர்கள் பிடிவாதமாகவே நிற்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ,எல்.பீரிஸ் குறிப்பிடுகையில், 'அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. ஒரு சரியான முறைமையின் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இதேவேளை, ஆசிரியர் சேவைக்கு சமாந்தரமாக உள்ள ஏனைய அரச சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கும் தீர்வை வழங்குவதே நீதியாகும். அனைத்து அரச சேவைகளுக்கும் நீதி கிடைக்கும் வகையில் சம்பள முரண்பாட்டை தீர்க்க எதிர்பார்க்கிறோம்.
எதிர்வரும் நவம்பர் மாதம் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தில்தான் இதற்கு தீர்வை வழங்க முடியும். நிலையான தீர்வொன்றையே வழங்க வேண்டும். கொவிட் நெருக்கடியால் தனியார்துறையில் முன்னர் செலுத்தப்பட்ட சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்துள்ளனர். வருமான வழிமூலங்கள் இழக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாவிடினும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சதம் கூட குறைக்கப்படவில்லை. இது இலகுவான விடயம் அல்ல.

சம்பளத்தை அதிகரிக்க அரசுக்கு வருமான வழிமூலங்கள் இருக்க வேண்டும். வற் வரியில்தால் அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த வழி மூலம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுங்கம் மற்றும் கலால் திணைக்களத்தின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கப் பெற்றது. இவையும் வீழ்ச்சியுற்றுள்ளன. வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானமும் வீழ்ச்சியுற்றுள்ளது. சம்பளத்தை அதிகரிக்க எங்கிருந்து வருமானம் கிடைக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். இதற்கு சிறந்த தீர்வாக வரவு – செலவுத் திட்டம்தான் அமையும். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க எவ்வளவு  நிதி அவசியம் என்பதை தீர்மானிக்க முடியும்' எனக் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவாக இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள சூழல் குறித்து கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். கொவிட் 19 தொற்றுக் காரணமாக ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு மேலாக மாணவர்கள் கல்வி கற்பதற்குப் பாடசாலைகளுக்குச் செல்லாதிருக்கின்றனர். மாணவர்களை கற்பிக்கும் செயற்பாடுகள் ஒன்லைன் மூலமாகவும் தொலைக்காட்சி போன்ற நேரடித் தொடர்பற்ற முறைகளின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறைந்தளவு ஆசிரியர்களே இணையவழி மூலம் கற்பிக்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் அவ்வாறு கூட கற்பிப்பது கிடையாது. சுருங்கச் சொல்வதானால் மாணவர்கள் கற்றலை விட்டு தூரச் சென்று விட்டது ஒருபுறமிருக்க, ஆசிரியர்களில் பலர் கற்பிப்பதையே மறந்தவர்களாக உள்ளனர்.

பாடசாலைகள் பௌதீக ரீதியில் செயற்படாமையால் மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் மேலும் நிலைமையை மோசமடையச் செய்கின்றது என்றே கூற வேண்டும்.
எனினும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல ஆசிரியர்கள் எவ்வித சிரமத்தையும் பார்க்காது ஒன்லைன் ஊடாக கல்வி கற்பிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இருந்த போதும் பல ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு ஒன்லைன் ஊடாக ஒரு வகுப்பைக் கூட நடத்தாது வீட்டில் இருந்து கொண்டே சம்பளத்தைப் பெற்றபடி தற்பொழுது சம்பள உயர்வு கோரிப் போராடுவது நியாயமானதா என்பதை தமக்குத் தாமே அவர்கள் வினவிக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னின்று செயற்படும் தொழிற்சங்கங்களில் பொறுப்புக்களில் உள்ள சிலர் கூட இவ்வாறு மாணவர்களின் கல்வியில் பங்களிக்காதவர்களாக இருக்கின்றமையே வேதனைக்குரிய விடயமாகும்.

ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும், உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் காணப்படும் உரிமையை யாரும் மறுதலிக்காத போதும், அதற்கான சந்தர்ப்பம், சூழ்நிலை குறித்து சிந்திக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும். அது மாத்திரமன்றி, மாணவர்களின் எதிர்காலத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தரப்பினர் கொவிட் சூழலில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மீறும் வகையில் நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இது விடயத்தில் அவர்கள் சிந்தித்து செயற்படுவதே சிறந்ததாகும்.

இன்று ஒட்டுமொத்த உலகுமே கொடிய கொரோனாவுக்குள் சிக்கித் தவிக்கின்றது. எந்தவொரு நாட்டின் அரசாங்கத்திடமும் நிதி போதியளவில் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. மாணவர்கள் கல்வியில் பின்னடைவாக உள்ளனர். மாணவர்களின் கல்விக்கு எவ்வாறு உதவலாமென்பதையே ஆசிரியர்கள் முதலில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும். இவ்வாறிருக்கையில் சம்பள உயர்வு கோருகின்ற இன்றைய போராட்டங்கள் மக்களால் கேலிக்குரியதாகவே நோக்கப்படுகின்றன.

Comments