ஹிஷாலினி மரணத்தில் ‘நியாயத் தீர்ப்பு’ வழங்க முற்படும் அரசியல்வாதிகள்! | தினகரன் வாரமஞ்சரி

ஹிஷாலினி மரணத்தில் ‘நியாயத் தீர்ப்பு’ வழங்க முற்படும் அரசியல்வாதிகள்!

முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துகொண்டிருந்தபோது உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் தொடர்ந்து வருகிறது.அம்மரணம் தொடர்பாக தினமும் புதிய புதிய அச்சம் தரும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. அம்மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை துப்புத்துலக்குவதற்காக பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் அச்சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் இன்னமும் தொடர்ந்து வரும் நிலையில், அம்மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலும் அதிகம் பேசப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் எந்தவிதமான அரசியல் அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லையென்றும், சுயாதீனமான விசாரணைகளை நடத்துவதற்கு முழுமையான அதிகாரத்தையும் சம்பந்தப்பட்ட தரப்புக்கு வழங்கியிருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர சபையில் கூறியிருந்தார்.

ஹிஷாலினிக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக நியாயமான விசாரணை நடத்தப்படுவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கான முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர். இந்த விடயத்தை வைத்து அரசாங்கம் அரசியல் செய்யவில்லையென ஆளும் தரப்பின் அமைச்சர்கள் பலரும் ஆணித்தரமாகக் கூறியிருந்தனர்.

அதேநேரம், தனது வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு தானும் தனது குடும்பத்தினரும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும், சிலர் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துக்காக விஷமப் பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

தனது மனைவி, மாமா மற்றும் மைத்துனர் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ரிஷாட் பதியுதீனை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்குக் கிடையாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தாம் பழிவாங்கப்பட்டிருந்தாலும் தமது ஆட்சியில் அவ்வாறான பழிவாங்கல்கள் எதனையும் செய்யவில்லையென ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாந்து சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தை அரசியல் பழிவாங்கல் எனக் காண்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிரான தரப்பினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஹிஷாலினியின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

அது தற்கொலையாக இருந்தாலும் அல்லது கொலையாக இருந்தாலும், இரண்டின் பின்னணியிலும் குற்றங்களே மறைந்திருக்கின்றன. எனவே குற்றத்தின் சூத்திரதாரிகள் அல்லது குற்றத்துக்கான பின்னணியில் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்பதே ஹிஷாலினிக்காக குரல் கொடுப்பவர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிப்பெண்களாகப் பணியாற்றிய பல பெண்களிடமிருந்தும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சிலரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் புலப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேநேரம், ஹிஷாலினி தங்கியிருந்த அறைச் சுவரில் எழுதப்பட்டிருந்த ‘என் சாவுக்குக் காரணம்’ என்ற வாசகம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உண்மையில் ஹிஷாலினியால் அவ்வசனம் எழுதப்பட்டதா அல்லது விசாரணைகளைத் திசைதிருப்புவதற்கு வேண்டுமென்றே யாராவது எழுதினார்களா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இது இவ்விதமிருக்க, ஹிஷாலினிக்கு நீதி வேண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த சிறுமி வேலைக்கு அமர்த்தப்படுவதற்கான வயதைக் கொண்டிராதவர் என்பது முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்குத் தெரியாதா அல்லது அது பற்றிய சட்ட அறிவை அவர்கள் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது.

தரகர் பொய் கூறியிருந்தாலும் ஒருவரை வேலைக்கு அமர்த்த முன்னர் அதனை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு அவர்களுக்கு காணப்படுகிறது. வீட்டுப் பணிக்காக அமர்த்தப்படுபவர்களை அடிமைகள் போன்று நடத்துவதற்கான உரிமை எவருக்கும் இல்லை. அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இங்கு பணியாற்றியவர்கள் துன்புறுத்தப்பட்டிருந்தால் ஹிஷாலினி விவகாரம் நிச்சயமாக ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் எம்.பி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே ஹிஷாலினியின் மரணம் நிகழ்ந்துள்ளது. அது மாத்திரமன்றி, வில்பத்து சரணாலயத்தில் பெறுமதி மிக்க மரங்களை வெட்டி காடழிப்புச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இவர் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே பதின்ம வயது சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அவருடைய குடும்பத்தினர் மீது தற்பொழுது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் நோக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் ஹிஷாலினி போன்று ஏராளமான மலையக சிறுவர் சிறுமியர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனவந்தர்களின் வீடுகளிலும், இவரைப் போன்ற அதிகாரம் மிக்கவர்களின் வீடுகளிலும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாகும். இந்த பரிதாப நிலைமை மாற்றப்பட வேண்டும்.

வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் அது மலையகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்ற பாரம்பரிய நிலைமை மாற்றப்பட வேண்டும். கடந்த காலங்களில் காணப்பட்ட இந்த நிலைமை கணிசமானளவு மாற்றம் கண்டிருந்தாலும், இந்நிலைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேய ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும். மலையகப் பகுதிகளில் உள்ள பலர் தமது வறுமையின் காரணமாகவே இவ்வாறு வீட்டு வேலையாட்களாக வருகின்றனர். இவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால் மாற்றுவழிகளில் அவர்கள் வருமானங்களை ஈட்டக் கூடியதாக இருக்கும்.

அதேநேரம், அரசாங்கமும் சிறுவர் தொழிலாளர்கள் விடயத்தில் கரிசனை காட்ட வேண்டும். குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக உள்ள நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் இதன் ஊடாகப் புலப்படுகிறது. வேலைக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதை 18 ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

இதேவேளை ஹிஷாலினி சம்பவம் தொடர்பாக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்து வருகின்ற கருத்துகள் பொலிசாரின் விசாரணைகளுக்கு இடையூறாக உள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள கொடுமையை உணர்ந்து கொள்ளாதவர்களாக பொறுப்பற்ற விதத்தில் அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர். சமூக ஊடகங்களிலும் கருத்துகள் பகிரப்படுகின்றன. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளை அரசியல் பழிவாங்கலாக சித்திரிக்கும் விதத்தில் அவர்கள் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஹிஷாலினியின் மரணமென்பது பெரும் கொடுமை என்பதை இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மரணமானது அச்சிறுமியின் குடும்பத்தினருக்கும், மனித நேயம் படைத்தோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் வேதனையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறிருக்கையில் அரசியல் ரீதியிலோ அல்லது இனரீதியிலோ மனம் போனபடி கருத்து வெளியிட முடியாது.

குற்றவாளிகள் யாரென்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் சட்ட விவகாரங்களில் எவரும் தான்தோன்றித்தனமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது குற்றமாகும். இவ்வாறான கருத்துகள் குற்றமாகவே நோக்கப்பட வேண்டும். ஹிஷாலினி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்போர் நிரபராதிகளென்றோ அல்லது குற்றவாளிகளென்றோ தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் ஆகும். கொடுமையான மரணமொன்று நிகழ்ந்திருக்கையில் நீதிமன்றம் தவிர்ந்த எவருமே நியாயத் தீர்ப்பு வழங்க முற்படலாகாது.

பி.ஹர்ஷன்

Comments