கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு கலவை இந்த ஆரம்பப் பகுதி!

கசப்பு என்று தனியாகக் குறிக்க இயலாது. இனிப்பு என்றும் தனித்துப் போட முடியாது.

இரண்டையும் ஒரே சமயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள் அபிமானிகளே...
கடந்த திங்கட்கிழமை -02 ஆகஸ்ட், 2021 தமிழ்நாட்டு ஆட்சிமன்றத்திற்கு ஒரு பொன்னாள்.
அன்று இரு நிகழ்வுகள் அங்கு.

ஒன்று, அச்சபையின் நூறு ஆண்டுகள் பூர்த்தி விழா.

மற்றொன்று, தமிழுக்கும், தமிழ்க் கலைகளுக்கும், இலக்கியத்திற்கும் தொண்டாற்றிக் கொண்டே, ஐந்து முறை முதலமைச்சராகக் கோலோச்சியவரின் உருவப்படத் திறப்பு!
இரு நிகழ்வுகளுக்கும் இந்திய நாட்டின் தலைமகனே குடியரசுத் தலைவர் எனப்படும் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக வந்து, விழாவை ஆரம்பித்து வைத்ததோடு, உருவப்படத்தையும் திறந்து வைத்துவிட்டார்.

இதற்கு இப்பொழுது தமிழ்நாட்டு வரலாற்றுச் சுவடுகளில் முக்கிய இடம்.

ஆனால் 2010ல், 11 ஆண்டுகளுக்கு முன் நடந்தது வேறு.

அந்த ஆண்டில் சட்டசபையில் கலைஞர் படத்தைப் பதிய முற்பட்டபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இப்படி ஒரு கண்டன அறிக்கையை சபையில் வெளியிட்டார்.

“கருணாநிதி என்பவர் உண்மையில் மக்கள் சேவை ஆற்றியிருந்தால், தன்னலமற்ற மக்கள் பணிகளைச் செய்திருந்தால், எனக்குரிய பின்வரும் ஆட்சியாளர்கள் அவரைக் கெளரவிப்பார்கள்! என் காலத்தில் கருணாநிதி படம் சட்ட சபையில் இருக்க அனுமதிக்க மாட்டேன்” இப்பொழுது தமிழ் பேசும் உலகளவில் சமூகத்திற்கு காலமகள் பதில் சொல்லி இருக்கிறாள்.

இதைத்தான் “காலம் விசித்திரமானது என்பதா? (ஊடகவியலாளர் எஸ். ஏ. எம். பரக்கத் அலி சென்னையிலிருந்து அனுப்பியுள்ள காட்சிப்படத்தைக் கண்டு களியுங்கள்)
அதே சமயம், நான்காண்டுகளுக்கு முன்பு 2017 ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறக்க சமீபகாலம் வரை முதல்வராக இருந்த பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தபொழுது நடக்கவில்லை என்பதையும் தெரிவிப்பது பேனா முனையின் கடமை.

“ஊழல் புரிந்து தண்டனை பெற்ற குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறப்பது ஒரு பிரதமருக்கு உகந்ததல்ல என அவரது எண்ண ஓட்டங்கள் இருந்திருக்கலாம்.

நல்லது. இன்றையத் தமிழ்நாட்டுச் சட்டசபையில் 16வது தலைவராகக் கலைஞரின் படம் இடம்பெற்றுள்ளதோடு அது முதல் அமைச்சர் மற்றும் தி.மு.க. எம். எல். ஏ.க்கள் இருக்கைக்கு நேர் எதிராக அவரது உருவப்படம் உள்ளது. படத்திற்கு கீழ் "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சரி முக்கிய அடிக்குறிப்பொன்றையும் வழங்குகின்றேன்.

* வைபவத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர், மேனாள் முதல்வர் பழனிச்சாமியும், அவர்தம் அ.தி.முக. எம்.எல்.ஏ. சகாக்களும் சமூகமளிக்கவில்லை. (அழைப்பு விடுக்கப்பட்டும்) அதே போல் நடிகர் விஜயகாந்த் கட்சியும் அழைப்பை மதிக்கவில்லை.
ரஜினிகாந்த் சிறப்பு அழைப்புப் பெற்றாராம்.
கமல்ஹாசன் பற்றிய செய்தி கிடைக்கவில்லை. இத்துடன், இனிப்பும் கசப்பும் கலந்த இந்தக் கலவையை நிறுத்தி, இனிப்பு கலந்த இனிப்பு மட்டுமே உள்ள அடுத்தவில்லையை வழங்குகிறேன்.

இனிப்பு-1

என் வாசிப்பில் இன்றைய பொழுதுகளில் மூப்பிலும் ஒரு பேரருவியாகக் கவிதை பொழியும் ஆளுமைக்குரியவராக தமிழக “ஈரோடு தமிழன்பன்’ தென்படுகிறார்.

“கவிப் பேரருவி” என்றே மகுடம் சூட்டப்பட்டுள்ள தமிழன்பனார், தன் பெயருக்குப் பொருத்தமாக, “தமிழ் வளர்ப்போம் தொட்டிலிட்டு” என்று தாலாட்டுப் பாடவும் செய்கிறார். பாட்டு வரிகள் இனிப்புச் சுவையை வாரி இறைக்கின்றன.

இனிப்பு-2

நம் நாட்டிலிருந்து கடல் வழிக்கப்பல் பயணமாக தமிழகம் சென்ற அனுபவம் அபிமானிகளில் யார் யாருக்கு உண்டு?

‘இந்தக் கட்டைக்கு’ அனுபவம் அனேகம்! இளம் வயதிலிருந்து தலைமன்னார் தனுஷ்கோடி ‘எஸ். எஸ். ராமானுஜம் பயணம் பல தடவை.
அப்புறம் பத்து ஆண்டுகளுக்குமுன், கொழும்பு – தூத்துக்குடிப் பயணம்!

இந்தப் பயணம் ஓர் இலக்கியப்பயணம் தூத்துக்குடிக்கு அண்மித்த காயல்பட்டணத்தில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு 100,-125 பேராளர்களைக் கப்பல் வழி கொண்டு போய் சேர்க்கும் கடமையை காரைக்கால் பேராசிரியர், மாநாட்டின் செயலர் மு. சாயபு மரைக்காயர் என்னை நம்பி ஒப்படைக்க காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புத்தீன் கொழும்பு –சென்னை வழி விமானத்தில் காயப்பட்டணத்திற்குப் பேராளர்களை கூட்டிச் செல்லும் பொறுப்பைச் சுமந்தார்.

அந்தக் கப்பல் பயண அனுபவங்கள் அலாதி!

அத்தகைய அனுபவங்கள் எதிர்காலத்திலும் எல்லோருக்கும் கிடைக்க அத்திவாரக்கல் வைக்கப்பட்டு விட்டதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. லட்டு லட்டு!

ஆனால் மற்றுமொரு மாநாட்டுக்கு அன்று பொதுவான பயணிகள் போக்குவரத்து.

சென்னை- காரைக்கால்- - கொழும்பு மார்க்கத்திலோ காங்கேசன்துறை- - காரைக்கால் கடல் வழியிலோ இது நடக்கலாமாம்.
நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க இந்திய கப்பல்துறை அமைச்சர் சகாத் தீர்மானத்திற்கமைய, சென்னைத் துறை நிர்வாகத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் கானொளிக்காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு.

சேவை நடத்த ஐந்து நிறுவனங்கள் ஆர்வங்காட்டியுள்ளனவாம்.

“இந்த்ஸ்ரீ” என்றொரு தனியார் நிறுவனத்திற்கு “காங்கேசன்துறை காரைக்கால்” கடல் வழித்தடத்தில் படகுச்சேவை நடத்த ‘வலு’ ஆசையாம்!

ஆசை  நல்ல ஆசை. நமக்கும் தான் படகுப் பயணம் செய்ய ஆசை!

ஆனால் மகா  கனம் பொருந்திய, சக்திமிக்க கிருமிக்கூட்டத்தார் கருணை கொண்டு கப்பலுக்குள் ஏறி இறங்க அனுமதிக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். 

Comments