பதுளை தோட்டங்களில் நீடிக்கும் தீர்க்கப்பட வேண்டிய தொழிலாளர் பிரச்சினைகள் | தினகரன் வாரமஞ்சரி

பதுளை தோட்டங்களில் நீடிக்கும் தீர்க்கப்பட வேண்டிய தொழிலாளர் பிரச்சினைகள்

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டுஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலந்தொட்டே சம்பளப் பிரச்சினை மேலோங்கி இருந்தது. தற்போது சம்பள நிர்ணய சபையினூடாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றநாளில் இருந்து பல்வேறுவிதமான அழுத்தங்களுக்கும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள் ஒருநாள் பேருக்காக 20 கிலோ கிராம் கொழுந்தை பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. இதனால் தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருவதுடன் தொழிலாளர்கள் நிர்வாகங்களின் அடக்குமுறையை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளில் கடுமையான போக்கை கம்பனி நிர்வாகங்கள் கடைப்பிடிக்காவிட்டாலும், சம்பள நிர்ணய சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சம்பள உயர்விற்கு பின்னர் தொழிலாளர்களின் தொழில்சார் நடவடிக்கைகளில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றி வருவதைக் காணமுடிகின்றது. தனது தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் தொழிலாளர்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கி உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதே இவர்களது பிரதான நோக்கமாக உள்ளது. இது ஒருவகையில் பெருந்தோட்ட தொழிற்துறையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்ற கம்பனிகள் மேற்கொள்ளும் உபயமாக இருக்கமுடியும். பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில் அழுத்தம் காரணமாக இத் தொழிற்துறையை விட்டு வெளியேறிவிட்டால், மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு அதிக இலாபம் தேடும் முனைப்பில் செயற்படலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைத் தொடர்ந்து பதுளை மாவட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி மற்றும் இலங்கை ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியன ஏழு அம்ச கோரிக்கையை முன்வைத்து பிராந்திய தொழில் ஆணையாளர் அலுவலகத்தின் பிரதிதொழில் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நேரத்தை ஒதுக்கிதருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத் தொழிற்சங்கங்கள் கையளித்துள்ள மகஜரில், ஒருநாள் சம்பளத்திற்கு (பேருக்கு) பெண் தொழிலாளர்கள் எடுக்கவேண்டிய கொழுந்தின் நிறையை 20 கிலோவாக தன்னிச்சையாக உயர்த்தியமை, 20 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்தால் முழு சம்பளத்தை வழங்காமல் கிலோவிற்கு 40 ரூபாய் வீதம் வழங்கல், தினமும் கொழுந்து நிறுக்கும் சந்தர்ப்பங்களில் 2 தொடக்கம் 3 கி. வரை கழித்தல் மற்றும் நிறுத்தல் அளவையின் போது 250 கிராம் தொடக்கம் 750 கிராம் வரையான அளவுகள் கணக்கில் எடுக்கப்படாமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும் போது ஒன்றரை நாள் சம்பளம் வழங்குவது சட்டமாக உள்ளபோதிலும் சட்டவிரோதமாக பறிக்கும் பச்சை கொழுந்து கிலோ ஒன்றிற்கு ரூபாய் 50 வீதம் வழங்கப்படுவது, ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு அதிகமானவர்களுக்கு வழங்கப்படாமை, ஓய்வுபெற்ற (பென்ஷன்) தொழிலாளர்களுக்கு சகாயமாக வழங்கப்பட்டுவந்த தேயிலைத் தூள் மறுக்கப்படுவது என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. அரச, தனியார் துறைகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கு சம்பளப் பணத்தில் இருந்து சந்தாப் பணம் அனுப்பும் நடைமுறை சுமார் அரை நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது.

எனினும் இந்த சம்பள உயர்வுக்கு பின்னர் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்கங்களுக்கு சேரவேண்டிய சந்தாப் பணத்தை கழித்து அனுப்பாமல் இருக்க தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொண்டதுடன் கடந்த ஏப்ரல் மாதத்திற்குமுன் தொழிலாளர்களிடம் அறவிட்ட சந்தாப் பணத்தை தொழிற்சங்கங்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடாமல் இருப்பது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தவிர, கம்பனி நிர்வாகங்கள் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து செயற்படுவதால் சம்பள கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சேமநலன்சார் உதவிகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலங்களில் பிரசவசகாய நிதி, தொழில் புரியும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் திடீர் விபத்துக்களுக்கான இழப்பீடு, விலங்குகள், விஷ ஜந்துக்கள் மூலம் ஏற்படும் தாக்குதல் போன்றவற்றிற்கு தோட்ட நிர்வாகங்கள் நிதி வழங்கின.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி குறைந்த சம்பளத்தை வழங்கும் நடவடிக்கைகளிலும் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தோட்டங்களில் இருந்து ஒய்வுபெற்ற தொழிலாளர்களையும், சமயாசமய (கைக்காசு) தொழிலாளர்களையும் பணிக்கு அமர்த்தி 700 ரூபா சம்பளத்தில் பணிகளை நிறைவு செய்கின்றன. இதன் காரணமாக தோட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களது வேலைநாட்களும் குறைக்கப்படுகின்றன. பெண் தொழிலாளர்கள் 20 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தால் பதுளை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் கிலோவுக்கு 40 தொடக்கம் 45 ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும், நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஒரு கிலோ 50 தொடக்கம் 55 ரூபாய் வரை வழங்கப்படுதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை தொழில்புரியும் பெண் தொழிலாளர்கள் இதனால் தனது நாளுக்குரிய சம்பளத்தை இழப்பதோடு, அவர்களது ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பாகவும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

20 கிலோ கிராம் கொழுந்தை பறிப்பது எல்லா காலங்களிலும் சாத்தியமாகாத விடயமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது தோட்டங்களில் விளைச்சலைத் தரும் தேயிலைச் செடிகள் பல தசாப்தங்களுக்குமுன் பயிரிடப்பட்டவை, முறையான பராமரிப்பு, உரப்பாவனை, கிருமிநாசினி தெளிப்பு இன்றியுள்ளன.

இவை பயிரிடப்பட்டுள்ள மண்ணின் வளமும் குறைந்துள்ளது. வரட்சியான காலங்களில் இவற்றின் விளைச்சலும் குறையும் இதன் காரணமாக எல்லா காலங்களிலும் 20 கிலோகிராம் கொழுந்தைப் பறித்துநாட் சம்பளத்தை பெறுவது சாத்தியமற்ற விடயமாகும். தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட ஆண் தொழிலாளர்கள் தமது வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தேயிலை மலைகளை துப்பரவு செய்தல், கவ்வாத்துவெட்டுதல், மரங்களை வெட்டி தரித்தல் போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கு சமயாசமய ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேதனமே வழங்கப்படுகின்றது.

20 கிலோ கிராம் கொழுந்து பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்புத்தளை, தம்பேதன்ன தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்கமறுத்த தோட்ட நிர்வாகம் மவுசாகல, தியகல, பண்டாரெலிய, புதுக்காடு, மாகந்த பிரிவுகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்கள் ஊடாக சமரசம் செய்யமுயலாமல் காவல்துறையினருக்கு அறிவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன.

ஆ.புவியரசன்

Comments