இலங்கை மீது சர்வதேசத்தின் பார்வை குவியும் மார்ச், செப்டெம்பர் மாதங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மீது சர்வதேசத்தின் பார்வை குவியும் மார்ச், செப்டெம்பர் மாதங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் அடுத்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயர் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பமான அன்றைய தினமே, இலங்கை விவகாரம் பேசப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதுடன், இலங்கைக்கும் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குறித்து கடந்த கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்லெட் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததுடன், இலங்கைக்கு எதிராக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் அனுசரணையுடன் பிரேரணையொன்றும் அங்கு நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து முன்வைத்த அறிக்கையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நிராகரித்திருந்ததுடன், குற்றச்சாட்டுகள் ஒருபக்கச் சார்பானவை என்றும் கடும் தொனியில்கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கில் மீண்டும் பரபரப்பான பேசுபொருளாகி வருகின்றது. கடந்த கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னரே இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. எனினும், தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக அரசு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் உலகறிந்த விடயமாகும்.
இந்நிலையில் எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ள முடியாத நெருக்கடியான சூழலே நிலவுகின்றது. எனினும் சர்வதேசத்தின் எத்தகைய சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனோநிலையிலேயே இலங்கை உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெறுகின்றன. உலக அரங்கில் இலங்கையின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலப் பகுதியில் அடிக்கடி இவ்விடயம் அரசியல் களத்தில் அதிகம் பேசுபொருளாக அமைந்தது. எனினும், 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஜெனீவா விவகாரம் பாரியளவில் அலட்டிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு வழங்கிய அனுசரணையிலிருந்து தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் விலகியிருந்ததுடன், கடந்த மார்ச் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையை முறியடிப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. கடந்த மார்ச் கூட்டத் தொடர் இலங்கைக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது என்றே கூற முடியும்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும், சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகள் எந்தளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன என்பதற்கான விடை இதுவரை தெளிவாக இல்லை. அதுமாத்திரமன்றி, சர்வதேச நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமையும் போது தமது பிடியை தளர்த்துவதும், தமக்கு சார்பான அரசாங்கமொன்று அமையாதவிடத்து அதன் மீது தமது பிடியை இறுக்குவதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.

பூகோள ரீதியாக இலங்கையின் அமைவிடம் மற்றும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்பனவும் இந்த விவகாரத்தில் பெருமளவு தாக்கம் செலுத்துகின்றன. வெறுமனே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் சர்வதேசம் அதீத அக்கறை கொண்டுதான் தமது காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றன என்று கூறி விட முடியாது.

சர்வதேச நாடுகள் தத்தமது நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்பவே இலங்கை விவகாரத்தில் தீர்மானங்களை மேற்கொள்கின்றன என்பதே சர்வதேச அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.

தற்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்தும் கொவிட்19 தொற்று தாக்கத்தனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படக் கூடிய நெருக்கடிகள் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விடயமும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது. சர்வதேச நாடுகள் தமது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை மீதான பிடியை இறுக்குவதற்கு முயற்சித்தால் பொருளாதார ரீதியில் அது எவ்வாறான தாக்கத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதற்கும் விடை தேடப்பட வேண்டும்.

தொற்றுநோய் சூழலால் ஏற்கனவே மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கள் இழக்கப்பட்டு அன்றாட சீவியத்தை முன்னெடுத்துச் செல்ல வழியின்றி பலர் திணறிக் கொண்டிருக்கின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிட்டு வருகின்ற இன்றைய காலப் பகுதியில், சர்வதேசம் நெருக்கடியை சுமத்துவது பொருத்தமில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கின்றது.

தமிழர்களின் அரசியல் ரீதியான உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ஆயினும், உரிமைப் பிரச்சினைக்கு சமாந்தரமாக வாழ்வாதாரப் பிரச்சினைக்குரிய தீர்வுகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழர் தரப்பில் செயற்படக் கூடிய அரசியல்வாதிகள் வெறுமனே மக்களின் உரிமை என்ற விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளாது, களயதார்த்தத்தையும் புரிந்து கொண்டு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும். மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் முழுமையான தீர்வைப் பெற்றுத் தரும் என்பது நூறுவீதம் சாத்தியமற்றது என்பதை கடந்த கால அனுபவங்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளன.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது இருப்புகளை அந்நாடுகளில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஜெனீவாவில் இலங்கை விடயத்தை முன்னிலைப்படுத்துவதும், அதன் பின்னர் அவ்விவகாரத்தை மறந்து விடுவதும் வழமையாகிப் போயுள்ளது. உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இதனால் ஏற்படுகின்ற நன்மை எதுவுமே இல்லை. பெரும்பான்மை சமூகத்தை சீற்றமூட்டுவதாக மாத்திரமே புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அமைகின்றன.

அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கணிசமான வாக்கு வங்கிகளில் மேற்கு நாடுகள் பல தங்கியிருக்கின்றன. அத்தகைய வெளிநாடுகளாலும் அவற்றின் அரசியல்வாதிகளாலுமே இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. வாக்கு வங்கி மாத்திரமன்றி அதிகப்படியான பணமும் புலம்பெயர் தமிழர்களால் இதற்காக செலவு செய்யப்படுகிறது என்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

அதேநேரம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அவ்வப்போது மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுப்பதானது உண்மையிலேயே அவர்கள் தமிழர்களின் நலன்களின் அக்கறை கொண்டுள்ளார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஏனெனில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மெத்தனப் போக்கை அவர்கள் கடைப்பிடித்தது மாத்திரமன்றி, தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற உரிய அழுத்தங்களைக் கொடுக்கவுமில்லை. இவ்வாறான நிலையில் தமக்கு இலங்கையில் ஆட்சிகள் மாறும் போது மாத்திரம் கயிற்றை இறுக்குவது அவர்களின் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவதாகவே அமைகிறது.

எதுவாக இருந்தாலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உள்நாட்டில் சரியான நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் சர்வதேசத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதே உண்மையாகும். 
இது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில்  தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச ரீதியிலான உதவியுடன் தீர்வொன்றைப் பெற்றுத் தந்து விடுவோம் என்ற எண்ணப்பாட்டை உருவாக்குவதைத் தவிர தமிழ் அரசியல் தரப்புக்கள் வேறு எதனையும் சாதிக்கவில்லை.

மறுபக்கத்தில் தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான சமிக்ஞைகளைக் காண்பிப்பது சர்வதேசத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உறுதுணையாகவிருக்கும்.

சர்வதேச அழுத்தங்கள் மாத்திரமன்றி நாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்த முயற்சிகள் பாரியதொரு உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments