பெருந்தொற்றும் உங்களது பொறுப்பும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தொற்றும் உங்களது பொறுப்பும்

கொரோனாத் தொற்று 2020 மார்ச் மாதமளவில் இலங்கையில் வெளிப்பட ஆரம்பித்தபோது, இது சாதாரண தடிமன் சளிக் காய்ச்சலின் இன்னொரு வகை வைரஸ் தொற்று மட்டுமே என்பதால் முன்னெச்சரிக்கையாக இருந்தால் நோய் தொற்றாது, வந்தாலும் ஓடி விடும் என்று தான் மக்கள் நினைத்தார்கள். முதலாம் அலையில் அது அப்படித்தான் தோன்றியது என்பதும் உண்மைதான். எனினும் முதல் அலையின் போது உள்ளுர் மருத்துவ நிபுணர்களும் அயலக மருத்துவ விஞ்ஞானிகளும் என்னென்ன தற்பாதுகாப்பு விதிகளையும், தடுப்பு ஏற்பாடுகளையும் மற்றும் மீறப்படுமானால் என்னென்ன மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அவற்றைப் பொருட்டாக கொள்ளவில்லை என்பதன் எதிரொலியாகத்தான் இரண்டாம் மூன்றாம் அலைகளை நாம் எதிர்கொண்டோம்.

ஒவ்வொரு அலையும் முந்தைய அலையை விட வீரியம் கொண்டதாக இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அலைக்கு அலை அவற்றைக் கட்டுப்படுத்தும் சுகாதார நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்ட போதிலும் பெருந்தொற்றின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டிருப்பதையே இற்றைவரை தொற்று வீத மற்றும் மரணிப்போரின் எண்ணிக்கை புலப்படுத்துவதாக உள்ளது.

தொற்று வீத அதிகரிப்புக்கு பிரதான காரணங்கள் மூன்று. முதலாவது டெல்டா வைரசின் வீரியம். இரண்டாவது, இன்றைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் சுகாதார வழிமுறைகளில் அலட்சியம் காட்டுவது. மூன்றாவது இதில் உள்ள அரசியல். பெருந்தொற்று தொடர்பான நடவடிக்கைகளில் கட்சி நலனை கருத்திற் கொண்டதாக நகர்வுகள் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படுவது கண்கூடு. உதாரணத்துக்கு நாடு முடக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான கருத்து வெளிப்பாடுகளில் அரசியல் நலன்கள் தொக்கி நிற்கவே செய்கின்றன.

இன்று எதற்கு, எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால், முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றால், டெல்டா பரவுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத்தான். ஆனால் அதற்கு போதிய முக்கியத்துவம் மக்கள் மத்தியில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கும் இரண்டு காரணத்தை முன்னிறுத்த முடியும்.

முதலாவது, மாதச் சம்பள தொழிலில் இல்லாதவர்கள் வருமானத்துக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாய நிலை. இரண்டாவது, தனக்கு வரும் வரை இத் தொற்றின் வீரியத்தையும் விளைவுகளையும் குறைத்து மதிப்பிடும் எமது அலட்சிய மனோபாவம்.

இன்று தினசரித் தொற்று மூவாயிரத்தைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் இறப்பானது நூற்று ஐம்பதில் இருந்து இருநூறை நோக்கி நகர்வதை அச்சத்துடன் பார்க்கிறோம். சுகாதாரத் துறையினரும் உலக சுகாதார ஸ்தாபனமும் விடுக்கும் எச்சரிக்கைகள் மேலும் அச்சமூட்டுகின்றன. அச்சம் என்பது மடமையடா என்பது இங்கே செல்லுபடியாகாது என்பதை மக்கள் உணர வேண்டும். இத் தொற்றின் வீரியம் நமக்கும் நம் குடும்பத்துக்கு ஏற்பட்டால், மரணங்களை எதிர்கொள்ள நேரிட்டால் என்ன செய்வது என்று யோசித்தால் நாம் நம் தினசரி நடவடிக்கைகளில் பாதுகாப்பை கண்டிப்பாக மேற்கொள்வோம்.
தினசரி மரணங்கள் 150 என எடுத்துக் கொண்டால் அதில் கணிசமான தொகையினர் குடும்பத் தலைவர்களாக, அன்னையர்களாக இருக்கக் கூடும். ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது அன்னையர் சடுதியாக மரணிக்கும் போது அக்குடும்பத்தின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். வாழ வழியின்றி பல குடும்பங்கள் வீதிக்கு வரக்கூடும். இன்றைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துச் செல்லும் பின்னணியில் இக்குடும்பங்களின் கதியை யோசித்துப் பார்ப்போமானால், தத்தமது குடும்ப நிலவரங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால் ஏன் நாம் மிகமிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய நெருக்கடியான சூழலில், முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மீறி பயணக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்கப்பட்டிருப்பது வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே என்பதை புரிந்து கொண்டு மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இது ஒரு கோரிக்கை அல்ல. கட்டாயம். மீறிச் செயல்பட்டோமானால் முழு நாடும் முடக்கப்படுவதைத் தவிர வேறு வழி இருக்காது. நாட்டின் நெருக்கடி நிலை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் தனிமனித வருமான வீழ்ச்சி என்பனவற்றை ஒவ்வொருவரும் மனதில் கொண்டால் தொற்றின் வேகத்தைக் குறைக்கலாம்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் செயல்பட வேண்டிய தனியார்த் துறை நிறுவன ஊழியர்கள் கட்டாயம் கடமைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு பணியாற்றுவோர் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வது வேறு, அந் நிறுவனங்கள் வழங்கும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறு. அனேக  நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெயரளவில் ஒப்புக்கு சப்பாணியாக உள்ளது என்பது கவனத்துக்கு உரியது.

இன்றைய பெருந்தொற்று சூழலில் மற்றுமொரு விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.  இலங்கை குடிமக்கள் மத்தியில் மதங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. மதத் தலைவர்களின் கூற்றுகளை மந்திரமாகக் கருதுவோரே அதிகம். ஆனாலும் இப்பெருந்தொற்றில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வது பற்றியும் பெருந்தொற்று என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பது தொடர்பாகவும் மதத் தலைவர்கள் தமது கடமைகளை ஆற்றியதாகத் தெரியவில்லை. சுகாதாரத்துறையினரும், ஊடகங்களும் தமது கடமைகளை முடிந்தவரை ஆற்றிவந்தாலும் மக்கள் மத்தியில் மதரீதியான செல்வாக்கு கொண்ட மதத் தலைவர்கள் கொவிட் அபாய செய்தியை சமூகங்களின் அடி மட்டம்வரை எடுத்துச் செல்வதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்வதாக இல்லை என்பது கவலைக்குரியது. இங்கே அவர்களது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சமய நம்பிக்கை கொண்டவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமானது கோவில் திருவிழாக்களை நடத்தவும், சமய ரீதியான கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. சில தினங்களுக்கு முன் நல்லை கந்தன் கொடியேற்றத்தின் போது பக்தர்கள் கூடி பொலிசாருடன் முரண்பட்டதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கண்டி எசல பெரஹராவும், கதிர்காம உற்சவமும் பக்தர்கள் பங்களிப்பின்றி அமைதியாக நடைபெற்று முடிவடைந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிப் பிரமுகர்களும் சமூக ஆளுமை கொண்டவர்களாக விளங்குபவர்கள் என்ற வகையில் தொற்றின் தீவிரம் தொடர்பாக மக்களிடம் அவர்கள் அழுத்தமாக உரையாட வேண்டிய அவசியம் உள்ளது. தாம் இப் பெருந்தொற்று சமயத்தில், மக்கள் மத்தியில் போதிய சேவையாற்றி வருகிறோமா என்பது தொடர்பாக அவர்கள் சிந்திக்க வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பங்கினை ஆற்றினோமா என்று கேட்டுக் கொள்வது முக்கியம்.

Comments