மத்திய ஆசியப் பிராந்தியத்தை மையப்படுத்திய வல்லரசுகளின் வியூகங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மத்திய ஆசியப் பிராந்தியத்தை மையப்படுத்திய வல்லரசுகளின் வியூகங்கள்

ஆப்கானிஸ்தான் மீதான தலிபான்களின் மீள் எழுச்சி ஆளும் அரசாங்கத்தினை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் வெளியேறிய பின்னர் தலிபான் அமைப்பினர் ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பில் 65 சதவீதத்தை கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானிலேயே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமான குந்துஸ்ஸை கைப்பற்றியதுடன் பாகிஸ்தான் ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதியிலுள்ள எல்லைகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியை முழமையாக தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது. இக்கட்டுரையும் தலிபான்களின் எழுச்சிக்கு பின்பான மத்திய ஆசிய பிராந்திய அரசியலில் வல்லரசுகளது நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுவரும் போர் சூழலால் பல இலட்சம் மக்கள் தலைநகரான காபூலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே நான்கு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் காபூலை அடைந்திருப்பதாகவும் வடக்கு பகுதியிலிருந்து அத்தகைய இடம்பெயர்வு அதிகரித்துவருவதாகவும் தெரியவருகிறது. மக்கள் வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் பதுங்கு குழிகளிலும் பாதுகாப்புத்தேடி தஞ்சமடைவதாக அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதே நேரம் தலிபான்களின் தாக்குதலை முறியடிக்க மக்கள் படையைப் பயன்படுத்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகவும் உள்ளூர் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது. தலிபான்கள் முன்னர் பிரயோகித்த இஸ்லாமிய அடிப்படைவாதச் சட்டங்களை மீண்டும் அமுல்படுத்தும்  எனவும் போரில் தாம் கொல்லப்படுவதை தலிபான்கள் பெரியவிடயமாகக் கொள்ளவில்லை எனவும் ஆப்கான் மக்கள் அவர்களது வருகையை அச்சமாகப் பார்க்கிறார்கள். அதேநேரம் அமெரிக்க படைவிலகலைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கும் போது ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு அமெரிக்கா ஆயத தளபாடங்களையும் விமானத் தாக்குதலுக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஆப்கான் ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து தலிபான்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் போராடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் (9/11) தாக்குதலுக்கு பின்னர் உலகளாவிய நோக்கில் பயங்கரவாதம் ஆயதப் போராட்டங்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அழிவுக்கு உள்ளாக்கியதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டிலிருந்து அதற்கே காரணமான தலிபான்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்தார்கள் என்பது பலர் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும். அதற்கு முதலும் முடிவுமான பதில் ஆப்கானிஸ்தானின் அமைவிடமாகும். இரண்டாவது ஆப்கானிஸ்தானின் புவியியல் தன்மையாகும். இரண்டுமே இராணுவ தாக்குதலுக்கும் போர்களுக்கும் அதிலிருந்து வெற்றிகரமாக தப்பிப்பிழைப்பதற்'கும் ஏற்ற புவியல் அமைப்பாகும். மத்திய ஆசியா தென்னாசியா மேற்காசியா போன்ற பிராந்தியங்களுடன் நிலத் தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் இராணுவரீதியான அரணாக உள்ளது. தலிபான்கள் மீள் எழுகைக்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணமாக ஆப்கானிஸ்தானின் அமைவிடம் அமைந்துள்ளது. சோவியத் யூனியன் அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகள் தமது இராணுவ வலிமையால் ஆப்கானிஸ்தானையோ அதன் ஆயுத அமைப்புக்களையோ முற்றாக அழிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல இரு பெரும் வல்லரசுகளும் நெருக்கடியான படைவிலகலுக்கும் சோவியத் யூனியனது வீழ்சிக்கும் ஆப்கானிஸ்தான் ஒரு காரணமாக கொள்ளப்பட வழிவகுத்துள்ளது.  இவ்வாறு ஆப்கான் கள நிலை காணப்பட தலிபான்களது எழுச்சிக்கு பின்னரான வல்லரசுகள் மத்திய ஆசியாவை மையப்படுத்திய நகர்வுகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
இந்தியா பொருளாதார வாய்ப்புக்கள் பற்றிய நகர்வுகளை முன்னெடுத்துவருவதுடன் தலிபான்களுடன் இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறது. சார்க் அமைப்பிலும் இந்தியாவின் எல்லை நாடாகவும் ஆப்கான் விளங்குவதனால் அதிக வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை பற்றிய உரையாடலை தலிபான்களுடன் இந்தியா மேற்கொண்டதாக தலிபான் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா வெளிப்படையாக தலிபான்களை ஆதரிப்பதாகவும் பொருளாதார மற்றும் இராணுவ வாய்ப்புக்களை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்வதையும் இதே பத்தியில் முன்னர் பார்த்திருந்தோம். குறிப்பாக புவிசார் அரசியலாகவும் சீனாவுக்குள் ஏற்பட்டுள்ள உய்குர் முஸ்லிம் மக்களது பிணக்குக்கான தீர்வாகவும் தலிபான்களது எழுச்சியை சீனா கருதுகிறது. ஐஎஸ் மற்றும் ஜிகாதிகளுக்கும் உய்குர் முஸ்லிம்களுக்குமான நெருக்கத்தை எதிர்கொள்வதில் சீனா தலிபான்களை கையாள திட்டமிடுவதுடன் எதிர்கால வல்லரசுக்கான அணுகுமுறையாகவும் தலிபான்கள் விடயத்தை நோக்குகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆப்கானிலிருந்து வெளியேறிய போதும் மத்திய ஆசியாவுக்குள் அத்தகைய படைகளை நகர்த்தவும் தற்பாதுகாப்பு என்ற நோக்கில் தஜகஸ்தான் அல்லது உஸ்பகிஸ்தான் அல்லது கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் படைகளை நிறுத்தவும் திட்டமிட்டது. இது பற்றிய பேச்சுக்களை அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தோனியோ பிளிங்டன் அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சுக்களுடன் தொடர்ச்சியாக  (15.04.2021) மேற்கொண்டதாக தெரியவருகிறது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுச் செயலகம் மறுத்துள்ளதுடன் மத்திய ஆசியப்பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் பிராந்திய பாதுகாப்பினை ஏற்படுத்தவும் தாம் முனைவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் அமெரிக்காவின் நகர்வுகளை நோக்கும் போது மத்திய ஆசியாவுக்குள் இராணுவ ரீதியான பிரசன்னத்தை வலுப்படுத்துவதுடன் ரஷ்யா மற்றும் சீனாவின் பிடியிலிருக்கும் மத்திய ஆசியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலுவதனைக் காணமுடிகிறது. அது மட்டுமன்றி ஆப்கானிலிருந்து வெளியேறிய ஒன்பதாயிரம் அமெரிக்கத் துருப்புகளையும் மத்தய ஆசியாவுக்குள் அமர்த்துவதன்' மூலம் இராணுவ ரீதியில் தலிபான்களையும் இஸ்லாமிய தரப்புக்களையும் கையாளலாம் எனக் கருதுகிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை மத்திய ஆசியா அதன் பாதுகாப்பு அரண். ரஷ்யா ஒர் ஐரோ-ஆசிய நாடு என்ற வகையிலான அடையாளத்தை மத்திய ஆசியாவே கொடுக்கின்றது. அது மட்டுமன்றி ஐரோப்பிய -ரஷ்ய முரண்பாட்டிலும் ரஷ்யாவின் இருப்பினை பாதுகாக்கும் அரணான மத்திய ஆசியாவே காணப்படுகிறது. அதனால் மத்திய ஆசியாவில் அந்நிய நாட்டுப் படைகளின் தரையிறக்கம் என்பது ஆபத்தானதாக அமைந்துவிடும் என்பதில் கவனம் கொண்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளரது நகர்வை அடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது நகர்வுகளை தொடக்கினார். ஏப்ரல் முதல் யூலை வரை ஏறக்குறைய மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ரஷ்ய ஜனாதிபதி கஜகிஸ்தான் உஸ்பகிஸ்தான் தஜகிஸ்தான் ஆட்சியாளருடனும் வெளியுறவு அமைச்சர்களுடனும் உரையாடியுள்ளார். அவரது தீர்க்கமான உரையாடலில் பிரதான விடயமாக அந்நிய நாடுகளின் துருப்புக்கள் மத்திய ஆசிய நாடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதென்பதே தொனிப் பொருளாக இருந்தது. ரஷ்ய ஜனாதிபதி  Collective Security Treaty Organization (CSTO)  அமைப்பு நாடுகள் அனைத்தையும் கிரம்பிளினுக்கு அழைத்து அது தொடர்பிலான உரையாடலை ஏற்படுத்தியுள்ளார். அது மட்டுமன்றி தலிபான்களின் நெருக்கடியையும் ஊடுருவலையும் தடுக்கும் விதத்தில் உஸ்பகிஸ்தானின் எல்லைகளை பலப்படுத்தவும் குறிப்பாக தஜகிஸ்தான் மற்றும் உஸ்பகிஸ்தான பர்கானா பள்ளத்தாக்கினை (Fergana Valley) பாதுகாப்பதற்கான நகர்வுகளை முதன்மைப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளார். மேலும் இந்நாடுகளின் தலைமைகள் பிராந்தியப் பாதுகாப்புப் பற்றிய உரையாடலையும் மேற்கொண்டுள்ளன.
ரஷ்யாவின் செல்வாக்குப் பிராந்தியமான மத்திய ஆசியாவை முன்னிறுத்தி அமெரிக்க நகர்வுகளை எதிர்கொண்டதுடன் அமெரிக்க நலன்களை ஆப்கானிஸ்தானிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அகற்றுவதில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமன்றி நேட்டோவுக்கு சமமாக இல்லாது விட்டாலும் சரியானதும் தெளிவானதுமான ஐரோ-ஆசிய இராணுவ அணியை மொஸ்கோ உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மேற்குலகத்தின் விஸ்தரிப்பையும் இராணுவவாதத்தை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் இப்பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதில் ரஷ்யா கவனம் கொண்டு செயல்படுகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

 

Comments