''டெடி, எனக்கு புதிய லேப்டொப் வேணும்'' | தினகரன் வாரமஞ்சரி

''டெடி, எனக்கு புதிய லேப்டொப் வேணும்''

தனது அலுவலகத்துக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த தொழிலதிபர் அசாத் தனது மகன் கூறியதைக் கேட்டு ஒரு கணம் நின்று திரும்பி மகனை பார்த்தார்.


“டார்லிங்க் இந்த லேப்டொப் வாங்கிக்கொடுத்து இரண்டு மாதம் தானே ஆகுது. அதுக்குள்ள எதுக்கு உங்களுக்கு புதிய லேப்டொப்” என்று தனது மகனை சற்று கடிந்துகொண்டவளாக இடை மறித்தாள் அஜசாத் ஹாஜியாரின் மனைவி ஜெய்னப்.

“மமி...இந்த லேப்டொப் அவ்வளவு நல்லா இல்லை. எனக்கு புதிய மொடல்ல புது லெப்டொப் வேணும். இண்டர்நெட்ல பார்த்து வைச்சிருக்கிறேன”; என்று அடம்பிடித்து நின்றான் மகன் அனிஸ்.

எட்டு வயதே ஆகியிருந்தாலும் லேப் டொப் மொடல்களைப் பற்றி நன்கு தெரிந்தே வைத்திருந்தான் அசாத் ஹாஜியாரின மகன் அனிஸ்.

“ஓகே...நாம ஓடர் பண்ணுவோம் செல்லம். டோன்ட் வரி” என்று மகனை அன்பாக தட்டிக் கொடுத்தவராக புறப்பட்டார்;  அசாத் ஹாஜியார்.

“நீங்க தான் பிள்ளைகள செல்லம் கொடுத்துக் கெடுக்கிறீங்க. ஓன்று இருக்கிற நேரம் என்னத்துக்கு இன்னுமொன்று” என்று   கணவனை உரிமையோடு சாடியவளாக அவரை கேட் வரை வந்து அனுப்பி வைத்தாள் ஜெய்னப்.

வசதியும் செல்வாக்கும் நிறைந்த அந்தக் குடும்பத்தில் பணத்துக்கு எந்த பஞ்சமும் இல்லை. வீட்டில் இருக்கும் கணவன் மனைவி மூன்று   பிள்ளைகள் என்று எல்லோருக்குமே தனித்தனியான புதிய வகை லெப்டோப்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்கள் மலிந்து காணப்பட்டன.

தத்தமது கல்விக்காக  அவற்றை அவர்கள் பாவித்தாலும் அதிகமாக அவர்கள் படம் பார்ப்பது விடியோ கேம் விளையாடுவது என்ற பொழுது போக்குகளுக்கே அவற்றை அதிகமாக பாவிப்பார்கள்.

ஒன்லைன் கல்விக்காக செலவழிக்கும் காலத்தை விடவும் அதிகமான காலத்தை பொழுது போக்கிற்காகவமே செலவழித்து வந்தார்கள் எனலாம்.

நாடு முழுவதும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தல் காரணமான முடக்கநிலையினால் பலரது வருவாய் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின் தள்ளப்பட்டிருந்தாலும் அசாத் ஹாஜியாரின் வர்த்தகம் இந்த கொரோனா காலத்திலும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது எனலாம்.

எனவே பற்றாக்குறை என்ற சொல்லுக்கே அவர்களது வாழ்க்கையில் இடமில்லாதவாறு செல்வம் குறைவில்லாமல் நிறைவாகவே காணப்பட்டது.

ஆசாத் தொழிலுக்கு விடைபெற்று சென்றதும் அவரின் மனைவி தனது செல்போனோடு தனது அறையில் ஒதுங்கி யூடியுப் படங்களை பார்ப்பதில் தன்னை மறந்தவளானாள்.
மூத்த மகள் தனது லேப்டொப்பில் தனது ஒன்லைன் வகுப்பினை ஆரம்பித்து வைத்துவிட்டு பக்கத்திலேயே வைத்திருக்கும் தனது கையடக்கத் தொலைபேசியில் தனது நண்பிகளோடு அரட்டை அடிக்க தொடங்கினாள். அவளது தாயை பொறுத்தவரை அவளது மகள் ஒன் லைன் வகுப்பில் படிக்கிறாள் என்ற நம்பிக்கையான எண்ணம் மட்டும் தான்.

பெரிய மகன் ஒன்லைன் கிளாஸில் இருந்து கொண்டே தனது ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் கேம் விளையாட்டில் மூழ்கியிருந்தான்.

கீழ் மாடியில் வேலைக்காரர்கள் சுத்தம் செய்வது போல பாசாங்கு செய்து கொண்டு  நேரத்தை கழித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் செய்யும் வேலையை அவதானிப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த ஆஸாதின் தந்தை தனது வயது முதிர்ச்சியின் சலிப்பால் சாய்வு நாற்காழியில் அரை தூக்கத்தில் தன்னிலை மறந்தவராக தனது வாழ்நாளின் கடைசி நாட்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தார்.

சமையலறையில் இரண்டு வேலைக்காரிகளும் பகல் சாப்பாட்டிற்கு சமைப்பதும் அடிக்கடி எதையாவது குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சாப்பிடுவதுமாக சிறுசிறு அரட்டைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

சுருக்கமாக சொன்னால் அந்த ஆடம்பர சொகுசு வீட்டில் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்தனர். யாருக்குமே எந்த கவலையோ பொறுப்போ இருக்கவில்லை ஏனென்றால் ஆசாத் ஹாஜியாரின் மழை போல கொட்டும் செல்வத்தின் நிழலில் அவர்கள் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று தமது குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஆடம்பரமாக வாழ்வதிலும் காலத்தைக் கழிக்கும் அசத் ஹாஜியாருக்கு அவரது சுற்றாடலில் வாழுகின்ற சகமனிதர்கள் பற்றிய எந்த அக்கறையோ அனுதாபமோ இருந்ததில்லை. ஏனென்றால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவரது மாடிவீட்டுக்கு செல்வதற்கு என்று பிரதான வீதியில் இருந்து ஒரு தனியான பாதையை அமைத்துக் கொண்டார். அவரது வீட்டை சுற்றியிருக்கும் குடியிருப்புக்ளில் வாழ்பவர்களைப் பற்றியோ அவர்களது இன்ப துன்பங்கள் பற்றியோ அவர் கண்டு கொண்டதேயில்லை.

தனது தொழில்சாலையை அடைந்த அசாத் ஹாஜியார் தனது காரில் இருந்து இறங்கியவாறு தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டே தனது தனிப்பட்ட அலுவலகத்துக்குள் நுழைந்தார். 

அவரது கையொப்பத்தை வாங்குவதற்காக அவரது கணக்காளர் கதவருகே அவருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

அசாத் ஹாஜியாரின் கையொப்பத்தை ஒவ்வொரு செக் புத்தகத்திலும் பெற்றுக்கொண்ட கணக்காளர் அசாத் ஹாஜியாரிடம் எதையோ சொல்ல எதிர்பார்த்தவராக தயங்கிக் கொண்டு நின்றார்.

அதே கணம் அசாத் ஹாஜியாரின் ஆசிரியரும் மதிப்புக்குரியவருமான மௌளவி அமீனும் அங்கே சமூகமாகினார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மௌளவி வாங்க....எப்படி சௌக்கியமாக இருக்கிறீங்களா!” என்று அவரை உபசரித்து கதிரையில் அமர வைத்தார் அசாத் ஹாஜியார்;.
 
“ ரொம்ப பிஸியா இருக்கிறீங்களா அசாத்!” என்று வினவியவாறு கதிரையில் அமர்ந்தார் மௌளவி. மௌளவிக்கான தேனீரை தொலைபேசியில் அழைத்து விட்டு, இன்னமும் அங்கு தயக்கத்தோடு ஏதோ கேட்பதற்காக நின்று கொண்டிருந்த தனது கணக்காளரை கேள்விக்குறியோடு நோக்கினார் அசாத் ஹாஜியார்.

“என்ன...விஷயம்....சுருக்கா சொல்லி முடிங்க! எனக்கு நிறைய வேலையிருக்கு” என்று தனது தொலைபேசியை அழுத்தியவாறு அசாத் ஹாஜியார் கணக்காளரை நோக்கி தனது பார்வையை செலுத்தினார்.

“ஹாஜியார்....உங்கள்கிட்ட ஒன்று சொல்ல....”என்று வார்த்தைகளை இழுத்தார் கணக்காளர்.

“சொல்லுங்க...ஏன் தயங்குறீங்க....மௌளவி இருக்கிறார் என்று பார்க்காதீங்க. அவர் எங்கட குடும்பத்தோடு ஒருவர் மாதிரி தான்” என்று கணக்காளரின் சங்கடத்தை அப்புறப்படுத்தி துரிதப்படுத்தினார் அசாத் ஹாஜியார்.

“ஒண்ணுமில்ல....இந்த வருஷம் ஸகாத் நிதியில் இருந்து ஒரு தொகையை இந்த ஏழை பிள்ளைகளுக்கு கல்விக்காக ஒதுக்கினால் நல்லாயிருக்கும் என்று  ஒரு ஆலோசனையை முன்வைக்கிறேன்”

“கல்விக்காக....அது என்ன புது கதை!”

“ஹாஜியார் இந்த கொரோனாவால பாடசாலைகள் எல்லாம் பூட்டியிருக்கு. அதனால எங்கட வசதியில்லாத புள்ளைகளின்  கல்வி ரொம்பவும் பாதிக்கப்பட்டுப் போயிருக்கு..” என்று சொல்லி தான் கூறவந்ததை சரியாகக் கூறி முடிக்க முயற்சித்தார் கணக்காளர் நளீர்.

“அது அரசாங்கத்திட பொறுப்பென்னா நளீர். நாங்க அதுல என்ன செய்ய முடியும். எங்களால பாடசாலைகள திறக்கவா முடியும்?” என்று நகைப்பாக சிரித்தார் ஹாஜியார்.

“ஹாஜியார்...வசதியான குடும்பத்து பிள்ளைகளுக்கு ஒன்லைன்ல வகுப்புக்கள் நடக்குது. ஆனால் பாவம் இந்த ஏழை பிள்ளைகளுக்கு ஒன்லைன்ல படிக்கிற மாதிரி வசதி இல்லை”

“அதப்பற்றி நீங்க யோசிச்சு மூளைய குழப்பிக்கொள்ளாதீங்க. அத எங்களால் ஒண்ணுமோ செய்ய முடியாது. அந்த புள்ளைகள்ட தலை விதி” என்று சற்று சினமாக பேசி முடித்தார் ஹாஜியார்.

“ஹாஜியார் எங்கட ஸகாத் நிதியில இருந்து சில எழை பிள்ளைகளுக்கு லேப்டொப் வாங்கிக்கொடுத்தா....அந்த பிள்ளைகளுக்கு ஒன்லைன்ல படிப்ப தொடர வசதியாக இருக்கும்...கொஞ்சம் யோசித்து பாருங்க” என்று தான் கூற வந்ததை தயக்கத்தோடு கூறி முடித்தார் கணக்காளர் நளீர்.
 
“நளீர் நீங்க நினைக்கிறீங்களா இந்த ஏழை பிள்ளைகளுக்கு நாங்க லேப்டொப் வாங்கிக் கொடுத்தா அவங்க அத படிக்கிறத்துக்காக பாவிப்பாங்க என்று. எல்லாரும் நல்லா கேம் விளையாண்டுக் கொண்டு யூடியுப் பார்த்துக்கொண்டு இருப்பாங்க...”
 
“நீங்க சொல்றது சரிதான் ஹாஜியார். நாங்க நல்லா படிக்கிற பிள்ளைகளா தேர்ந்தெடுத்து ஒரு முறைப்படி லேப்டொப் வாங்கி கொடுத்தா....அதனால பிள்ளைகள்ட படிப்பிற்கு உதவியா இருக்கும். அதுவும் போக கல்வி என்பது ஒரு மார்க்கக் கடமையல்லவா ஹாஜியார்” என்று தனது கருத்தை சமர்ப்பித்தார நளீர்.
 
“நீங்க மார்க்கக் கடமை என்று சொல்றது மார்க்கக் கல்விக்கு தான் பொருந்தும். வெறும் உலகக் கல்வியை மார்க்கக் கடமையாக சொல்ல முடியாதே நளீர்.” என்று தனது விவேகத்தை எடுத்துக்காட்டினார் அசாத் ஹாஜியார்.

அமைதியாக அதுவரை நடந்த உரையாடலை செவிமடுத்துக்கொண்டிருந்த மௌளவி அவர்கள் புன்னகைத்தவராக ஹாஜியாரை நோக்கி தனது வாயை திறந்தார்.  

“உலகக் கல்வி இஸ்லாமிய பார்வையில் ஒரு பர்ள் கிபாயா. அதாவது சமூகத்தின் மீது மார்க்கம் கடமையாக்கி இருக்கிறது. அத ஒருத்தர் செய்தாலும் சமூகத்தின் பாரம் பாவத்தில் இருந்து விடுதலையாகி விடுகிறது. ஆனால் ஒருத்தருமே செய்யாவிட்டால் முழு சமூகத்தின் மீதும் பாவம் படிந்து விடுகிறது.” ஏன்று கூறியவாறு மௌளவி ஹாஜியாரை நோக்கி தனது பார்வையை பதித்தார்.   “மௌளவி சாகிப் நீங்க சொல்ற கருத்து புதுமையாக உள்ளது. கொஞ்சம் விரிவாக சொல்லுங்க” என்று மௌளவியை நோக்கினார் ஹாஜியார்.

“அதாவது ஹாஜியார்! இப்ப பாருங்க ஜனாஸா விடயத்தில். ஒருவர் மரணித்து விட்டார் என்றால் அவரை அடக்கம் செய்வது சமூகத்தின் மீது கடமையாகி விடுகிறது. அந்தக் கடமையை சமூகத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து செய்யலாம் அல்லது ஒரு சிலர் செய்து முழு சமூகத்தையும் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து காப்பாற்றலாம்.....கொஞ்சம் யோசித்து பாருங்க, அந்தக் கடமையை ஒருத்தருமே செய்யா விட்டால் அந்த இறந்த மனிதரின் சடலம் அழுகி நாற்றமெடுத்து முழு சுற்றாடலையும் பாதிக்கும் அல்லவா? அது போலத் தான் சமூகத்தின் கல்வித் தேவையை நிறைவேற்றுவது சமூத்தில் இருக்கும் அனைவரது பொறுப்பாக இருந்தாலும் அதனை ஒரு சிலராவது நிறைவேற்றுவதனால் நாளைய எமது தலைமுறையினர் அறியாமை என்ற அழுக்கில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். இந்த ஏழைப் பிள்ளைகளுக்கு உரிய கல்விக்கான வசதியை வசதியுள்ள முஸ்லிம்கள் முன் வந்து செய்து கொடுக்காவிட்டால் அவர்களது அறிவின்மையால் எதிர்காலத்தில் முழு சமுதாயமுமே பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா...?” என்று தனது கருத்தை ஆணித்தரமாக ஹாஜியாரின் மனதில் பதித்தார் மௌளவி.

கணக்காளர் நளீர் மௌளவியை நன்றியுணர்வோடு நோக்கினார்.
ஹாஜியாரின் இருண்டிருந்த இதயத்தில் வெளிச்சம் பாய்ந்தது. தனது மூச்சை நன்கு உள் ளிழுத்தவாறு கூறலானார்....
 
“மௌளவி நீங்க சொல்றதும் சரிதான். இந்த கருத்தை இதுவரை எந்த உலமாவும் சொல்லி நான் கேட்டதே இல்லை. நளீர்.....இந்த வருஷத்து ஸகாத் நிதியை நாங்க பிள்ளைகளுடைய கல்விக்காக பயன்படுத்துவோம். குர்பான் செலவுக்கு ஒதுக்கிய பணத்தை குறைத்துக்கொண்டு ஆகக் குறைந்தது நூறு பிள்ளைகளுக்காவது லேப்டொப் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.மௌளவி அவர்களோடு ஒன்று சேர்ந்து நீங்க சரியாக செயல்படுத்த எனக்கு நல்ல திட்டமொன்றை தாங்க....இன்ஸாஅல்லாஹ்.....மௌளவி நீங்க இத பொறுப்பெடுத்து சரியான பிள்ளைகள தேர்ந்தெடுத்து லேப்டொப் விநியோகத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.”

மௌளவி அவர்கள் தனது கருத்தால் சமூகத்துக்கு ஒரு நன்மை ஏற்பட போகிறது என்ற மகிழ்ச்சியில் மனம் குளிர்ந்தார்.

“நல்ல முடிவு எடுத்தீங்க ஹாஜியார்.....இன்ஸாஅல்லாஹ் உங்களது எதிர்காலமும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலமும் மேலும் சுபிட்சமடைய வேண்டும்” என்று தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார் மௌளவி.

தியாக செயல்களை வலியுறுத்தும் இஸ்லாத்தின் சரியான போதனைகளை சரியான தனவந்தர்கள் உணராத காரணத்தால் எத்தனையோ சமூக நலன் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாமலேயே மறைந்து விடுகின்றன. சுமூகத்தில் நல்ல நிலையில் செல்வந்தர்களாக இருக்கும் எத்தனையோ தனவந்தர்களிடம் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் எதை செய்வது எப்போது செய்வது எவ்வாறு செய்வது என்ற போதிய தெளிவுணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் பாரம்பரிய முறையில் குர்பான் செய்வது கந்தூரி கொடுப்பது உம்ராவுக்கு சக முஸ்லிம்களை அனுப்புவது போன்ற காரியங்களில் தமது தியாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒரு சமூகத்தின் கண் அதனது கல்வி. அது தடைப்படாமல் சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை அடைவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் நளீர் போன்ற புத்தி ஜீவிகளும் மௌளவி அமீன் போன்ற உலமாக்களும் அசாத் ஹாஜியார் போன்ற தனவந்தர்களின் இதயங்களை இயக்க முன் வரவேண்டும்.

இப்படியான தெளிவான மௌளவிமார்கள் எமது சமூகத்தில் இருந்தால் எத்தனையோ தனவந்தர்களது இதயங்களில் இஸ்லாமிய ஒளிச்சுடரை ஏற்றி சமூகத்துக்கு சரியான முறையில் ஸகாத் நிதி சென்றடைய வைக்கலாம் என்று சிந்தித்தவராக நளீர் அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

செய்யத் ஸபருல்லா ஷேரலி

Comments