ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி | தினகரன் வாரமஞ்சரி

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி

அமெரிக்கா கடந்த இருபது ஆண்டுகளாக சுமந்து வந்த ஒரு தலைவலிக்கு முடிவு காணப்பட்டுள்ளது. அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்ட கை யோடு, சற்றும் எதிர்பாரா வேகத்தில் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தோஹாவில் ஏற்கனவே தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே படைகள் வாபஸ் பெறப்பட்டன. அமெரிக்கா வாபஸ் பெற்றதும் தலிபான்கள் நாட்டில் அதிகாரத்துக்கு வந்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனால்தான் உலக நாடுகள் எதிர்பார்த்தது போல ஆப்கான் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே உக்கிரமான யுத்தம் நடைபெறவில்லை. இவர்கள் தான் இனி, விரும்பியோ, விரும்பாமலோ, எம்மை ஆளப் போகிறவர்கள் என்பது தெரிந்த பின்னர் வீணாக ஏன் சண்டை செய்வானேன் என்று ஆப்கான் படையினர் சரணடைந்ததில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இப்போது கூட காபூல் விமான நிலையத்தில் சுமார் மூவாயிரம் அமெரிக்க படையினர் உள்ளனர். விமான நிலையம் நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். தலிபான்களுக்கும் அமெரிக்க வீரர்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. ஏனெனில் இவை எல்லாம் ஏற்கனவே அமெரிக்காவும் தலிபான்களும் பேசி முடித்த விஷயங்கள். அமெரிக்க படைகள் முற்றிலும் அகன்ற பின்னரேயே விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

1973க்கு செல்வோமானால் ஜனவரி 24ம் திகதி அமெரிக்கா வடக்கு வியட்நாமோடு ஒப்பந்தம் செய்து கொண்டதோடு அமெரிக்காவின் ஒரு தலைவலி முடிவுக்கு வந்தது. 1975 ஏப்ரல் 30ம் திகதி வியட்கொங் படைகள் அதாவது வடக்கு வியட்நாம் தென்வியட் நாம் தலைநகரான சைகோனை கைப்பற்றின. எனவே சைகோனை (ஹோசிமின் சிட்டி) விட்டு அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. அமெரிக்காவின் கடைசி இராணுவ ஹெலிகொப்டர் வெளியேறிய சமயத்தில் ஏறக்குறைய சைகோனை வியட்கொங் படையினர் கைப்பற்றியிருந்தனர். ஆப்கானில் அப்படி ஒரு விஷயம் நடைபெறவில்லை என்பதில் இருந்து அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அமெரிக்கா ஏன் வெளிநாடுகளில் தலையீடு செய்து, யுத்தங்களை உருவாக்குகிறது, பின்னர் பல பில்லியன் டொலர்களை இறைத்த பின்னர் தோல்வி முகத்துடன் வெளியேறுகிறது; அதன் இத்தகைய நகர்வுகளினால் எதைச் சாதித்துள்ளது என்ற கேள்விகள் நெடிய தேடல்களை வேண்டி நிற்பவை.

ஆப்கானிஸ்தானை பேரரசுகளின் மயான வெளி என்பார்கள். சமீப காலத்தை எடுத்துக் கொண்டால், சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது 1979 டிசம்பர் 24ம் திகதி படையெடுத்தது. ஏராளமான இழப்புகளை சந்தித்த ரஷ்யா தலை தப்பினால் போதும் என்ற நிலையில் ஒன்பது ஆண்டு ஆக்கிரமிப்பின் பின்னர் ஆப்கானை விட்டு  வெளியேறியது. 15,500 ரஷ்ய வீரர்கள் இந்த யுத்தத்தில் பலியாகினர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானியர் ரஷ்ய ஆக்கிரமிப்பில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நீடித்திருந்தும் எந்த இலாபமுமில்லாமல் வெளியேற வேண்டியதாயிற்று. அந் நாட்டின் நில அமைப்பு மட்டுமல்ல; அம் மக்களின் மத நம்பிக்கை, கலாசார நம்பிக்கை என்பனவும் வெளியார் அங்கே தாக்கு பிடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்பதே உண்மை. காபூல் கந்தஹார் போன்ற நகரங்களில் தான் ஆப்கானிய அரசும் அமெரிக்க படை நிர்வாகமும் செல்வாக்கு செலுத்த முடிந்ததே தவிர ஆப்கானிய கிராமங்களில் அவர்களால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை. தலிபான்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் கிராமங்களில் அவர்களால் மக்கள் அபிமானத்தை தக்க வைக்க முடிந்தது. அமெரிக்கா இந்த யுத்தத்தில் 2500 வீரர்களை இழக்க, 47 ஆயிரம் ஆப்கான் பொதுமக்கள் உயிரிழக்க வேண்டியதாயிற்று.

இருபது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு சென்றது இரட்டைக் கோபுர தாக்குதலை நடத்திய ஒஸாமா பின் லேடனைத் தேடி. லேடனை ஒப்படைக்க அன்றைய தலிபான் தலைவர் முல்லா ஒற்றைக் கண் உமர் மறுத்துவிடவே அமெரிக்கா முதலில் ஏவுகணை, விமான தாக்குதல்ளை ஆரம்பித்து பின்னர் படைகளை இறக்கியது. தலிபான்களை துரத்தியடித்து புதிய அரசிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் அமெரிக்கா அந்நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் அது கௌரவமாகவும் இருந்திருக்கும்; பெருமளவு பண விரயம், உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். இருபது வருடங்களாக ஏன் அங்கே அமெரிக்கா தங்கியிருந்தது என்பதுதான் புரியவில்லை. ஏதேனும் சாதித்ததா இக்காலப்பகுதியில் என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எனினும் காபூலுக்குத் திரும்பியுள்ள தலிபான்களிடம் சில முக்கிய மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. காபூலில் துப்பாக்கிச் சத்தம் கேட்கவில்லை. பெண்கள் ஷரியா சட்டப்படி பாடசாலை செல்லலாம், வேலைக்கு திரும்பலாம் என்று தெரிவித்திருப்பதும், ‘அமெரிக்க அடிவருடி’களை தண்டிக்காமல் விட்டிருப்பதும் முன்னாள் அமெரிக்க சார்பு அதிபர்களான அமித் கர்சாய், அப்துல்லா அப்துல்லா ஆகியோருடன் தலிபான்கள் ஆப்கானின் எதிர்கால அரசியல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, தமது நாட்டில் வேறொரு சக்தி வெளிநாடுகளுக்கு எதிராக இயங்குவதை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது என்பன காபூலுக்கு திரும்பி வந்திருப்பவர்கள் ‘பட்டுணர்ந்த’ தலிபான்களாக காணப்படுவதையே எடுத்துக் காட்டுகிறது. இம் மாற்றங்களை வெறும் நடிப்பு என ஒதுக்கிட முடியாது. தாம் விரும்பும் ஒரு இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானில் நிறுவும் அதேசமயம் உலக நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் உலக நாடுகளுடன் பிணக்கு தவிர்ப்பையும் நிதி, தொழில்நுட்ப உதவிகளையும் பெறுவதற்கு முயற்சிப்பதற்கும் முனைவது போல ஒரு தோற்றத்தைக் காண முடிகிறது.

ஆப்கானிஸ்தான் ஒரு மிகப் பழமையான நாடு. கந்தஹார் நகரமே மகாபாரத காந்தாரியின் நாடு எனக் கூறப்படுகிறது. அந்நாடு ஒரு காலத்தில் பௌத்த நாடாக விளங்கியமைக்கு பாமியன் புத்தர் சிலைகள் சான்றாக இருந்தன. இன்றைய தெளிவு அன்றைக்கு தலிபான் தலைவர்களுக்கு இருந்திருந்தால் நாம் விலைமதிப்பற்ற வரலாற்று பொக்கிஷத்தை இழந்திருக்க மாட்டோம். அது அப்படியே விடப்பட்டிருந்தால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பயன்பட்டிருக்குமே என இன்றைய தலிபான்கள் கருதவும் கூடும்.

ஆப்கானிஸ்தானை ஆப்கான் மக்கள் விரும்பும், அதன் மண்வாசனை அறிந்தவர்கள் தான் ஆள வேண்டும். யாருக்கும் தலைவலியாக புதிய தலிபான்கள் இருக்கமாட்டார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். யுத்தத்தில் அவர்கள் காட்டிய தீவிரத்தை பொருளாதார அபிவிருத்தியிலும் அவர்கள் செலுத்துவார்களானால் ஆப்கானை பொன்விளையும் பூமியாக மாற்றிக் காட்டலாம். அதற்கான சகல வளங்களும் அப்பூமியில் உள்ளது. ஷரியா சட்டத்தின் கீழ் ஆப்கானை ஆட்சி செய்தாலும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தலிபான்கள் சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கும்.

Comments