ஊற்றை மறந்த நதி | தினகரன் வாரமஞ்சரி

ஊற்றை மறந்த நதி

காலைக் கதிரவன் இருளை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு தன் பொற்கதிர்களை மெல்ல மெல்ல பூமியில் பரவவிட்டு வெளிச்சமெனும் தாரகையை ஒளிக்கீற்றுக்களாய் சிதறி கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அருண் கண்களைக் கசக்கிக்கொண்டு நித்திராதேவியிடமிருந்து விடைபெற்று கடிகாரத்தை நோட்டமிட்டான்.

மணி ஆறரையை காட்டியது. கட்டிலிலிருந்து எழும்ப மனமின்றி புரண்டு புரண்டு படுத்தான். அவனது தாய் சாவித்திரி 'மகன் விடிஞ்சிட்டு எழும்பி குளிச்சிட்டு வா, தேத்தண்ணி ஊத்துறேன்' என்று கூறிவிட்டு சென்றாள். ஆனால் அருணோ எதையோ நினைத்து வருந்தி கூரையை வெறித்துப் பார்த்தவனாக இருந்தான். அவனது மனதில் கவலைகள் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. இவனின் நிலை அறிந்தோ என்னவோ பக்கத்து வீட்டு வானொலியில் ஒலித்த 'ஆசப்பட்ட எல்லாத்தயும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா?' என்ற அம்மா பாடல் காற்றினூடாக கலந்து வந்து அவனின் செவிக்கு விருந்தாகியது.

அதை செவியுற்ற அவனது உள்ளம் உடைந்து உணர்வுகள் உறைந்து மனம் விம்மியழத் தொடங்கியது. காட்டாற்று வெள்ளம் போல கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தோட 'அம்மா என்னை மன்னிச்சிடும்மா' என அவன் உதடுகள் அவனையறியாமலே உச்சரித்தன. அவனது மனம் எனும் எண்ணப் பறவை பழைய நினைவுகளை நோக்கி சிறகடித்து பறக்கத் தொடங்கியது. 

சிதம்பரம், சாவித்திரி தம்பதிகளுக்கு ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என இரு செல்வங்கள். அருண்தான் மூத்தவன். உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான். அடுத்தவள் நிலா. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பதுமைப் பாவை அவள். பெயருக்கேற்ப நிலா முகத்துடன் வீட்டின் செல்லக்குட்டியாக துள்ளித்திரியும் கடைக்குட்டியவள். இரு பிள்ளைகளையும் அன்புடன் கூடிய அரவணைப்போடு படிப்பில் படு சுட்டிகளாகவே வளர்த்து வந்தனர்.

சிதம்பரம் தனியார் பஸ் வண்டி சாரதியாக கடமை புரிந்து குடும்ப வண்டியை இழுத்து சென்றார். இவர்களது குடும்ப வாழ்வு செல்வ செழிப்பில் இல்லாவிட்டாலும் சந்தோஷமாவே கழிந்தது.. குருவிக்கூடு போன்ற இவர்களது குடும்பத்தில் குதூகலத்திற்கு குறைவேயில்லை. வரவுக்கேற்ற செலவு செய்து கடன் இல்லாத மத்தியதர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தனர். தாம் படிக்காவிட்டாலும் தம் செல்வங்களை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் படிக்க வைத்து பதவியில் அமர வைப்பதே சிதம்பரம், சாவித்திரியின் இலட்சியமாக இருந்தது. 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருண் தனது நண்பர்களோடு சேர்ந்து பொழுதை வீட்டில் கழித்தான். அருணின் வீடு கூத்தும் கும்மாளமுமாக அல்லோலகல்லோலப்பட்டது. சாவித்திரிக்கோ இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அருணை கூப்பிட்டு 'அடே அருண் உனக்கு அறிவிருக்கா? இவனுகளோடு சேர்ந்து இப்படி கூத்தடிக்கிறியே.

அதிகம் சிரிச்சா அழ வேண்டி வரும்டா. ஏனோ தெரியல. எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு எதையோ நெனச்சு என் மனசு பிசையுதுடா' என்றதும் 'என்னம்மா ஒனக்கு பைத்தியமா? சும்மா உளறாத. லீவு நாள்ல கூட ஜொலியா இருக்க விடமாட்டியே' என்று முணுமுணுத்துக்கொண்டு சென்றதும் அவனது செல்போன் சிணுங்கியது. அதைக் காதில் வைத்த அருண் அப்படியே கற்சிலையாகிப் போனான்.

செல்போனில் வந்த செய்தி அவனது இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவது போலிருக்க கையிலிருந்த செல்போன் நழுவி தரையை முத்தமிட்டது. 'அப்பா அப்பா' என கேவிக் கேவி அழத்தொடங்கியதும் சாவித்திரியும் நண்பர்களும் பதறி ஓடிவந்தனர். சாவித்திரியோ இதயத்தை கையில் பிடித்தபடி 'ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு' என்று பதற்றத்துடன் கேட்க 'அக்ஸிடென்ட்ல அப்பா நம்மல விட்டுட்டு போய்ட்டாரும்மா' என்று கதறினான். இதைக் கேட்ட சாவித்திரியின் இதயம் சுக்குநூறாக சிதறியது. 'ஐயோ கடவுளே' என கூறிக்கொண்டு அப்படியே நிலத்தில் சரிந்தாள். 

கூத்தும் கும்மாளமுமாக இருந்த அந்த வீட்டில் சொற்ப நேரத்தில் மரண ஓலம் ஒலிக்கத்தொடங்கியது. கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் சாவித்திரி அனலில் விழுந்த புழுவாய் துடிதுடித்தாள். அளவுகடந்த அவள் கண்ணீருக்கு அணை போடமுடியாது போனது.

மனம் விட்டு அழுதால்தான் மனதிலுள்ள மனச்சுமைகளும் மனத்துயரங்களும் கண்ணீர் மழையில் கரையும் என நினைத்தாளோ என்னவோ அழுதுகொண்டே இருந்தாள். பார்ப்போர் மனம் பரிதவிக்கும் விதமாக நிலாவும் அம்மாவை கட்டி அணைத்தவாறே கதறிக்கொண்டிருந்தாள். இவர்களது கண்ணீருக்கு மத்தியில் சிதம்பரத்தின் ஈமக்கிரியைகள் நடந்து முடிந்தன. 

காலங்கள் மாதங்களை விழுங்கி ஏப்பமிட்டு சென்றன. சமுதாயம் சாவித்திரிக்கு விதவை பட்டம் சூடி அழகு பார்த்தது. சிதம்பரத்தின் பிரிவை தாங்கமுடியாத சாவித்திரியும் பிள்ளைகளும் நட்டாற்றில் விட்ட ஓடம் போல தத்தளித்தனர். எதிர்காலமே சூனியமாகி விட்டதாக நினைத்து இடிந்து போனார்கள். 

ஒருநாள் சாவித்திரி ஒரு புதுத்தெம்பு வந்தவளாக பிள்ளைகளை அழைத்து 'அருண், நிலா உங்களுக்கு நல்லதொரு எதிர்காலத்த அமச்சு தர அப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டார். அவர்ட ஆச வீணாப் போக கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டாவது உங்கள படிக்க வச்சு பதவியில உக்கார வைப்பேன். அப்பதான் அவருட ஆத்மா சாந்தியடையும்' என்று கண்ணீர் மல்க கூறிவிட்டு செயலில் இறங்கினாள். 

பிள்ளைகளின் படிப்புக்காக உதவி கேட்போம் என நினைத்தவளாக தன் தனவந்தரான அண்ணனை மலை போல் நம்பிச் சென்றாள். அவரோ கோபத்தோடு 'சாவித்திரி ஒன்னக்கென்ன பைத்தியமா? படிப்பும் மண்ணாங்கட்டியும். வயித்த கழுவவே வக்கில்ல. மகன வைத்தியனா வேற ஆக்க போறியா. அவன வேலைக்கனுப்பி சம்பாதிச்சு நிலாவ கரை சேர்க்கிற வழியப் பாரு. வக்கத்த வள்ளல் வானத்துல வாடி வீடு கட்டினானாம் அப்டிங்கற கதையாக்கிடக்கு' என்று கேலி பேசினான். அண்ணனே கதியென முழுதாக நம்பி வந்த சாவித்திரிக்கு அவரது கூற்று இடியென செவியில் இறங்கியது.
பொத்துக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு அடுத்த உறவை நாடிச்சென்றாள். உறவுகள் அனைத்தும் உதறித் தள்ளின. தட்டுத் தடுமாறி உதவி கேட்டு சென்றவளை உறவுகள் பட்டும் படாமல் சாக்கு போக்கு கூறி தட்டிக் கழித்தன. அவளது வெறுமையான உணர்வுகளில் விரக்தியும் கவலையும் ததும்பி நிற்க அவள் நடைப்பிணமாக அலைந்தாள். இறுதியில் தானே வேலைக்கு சென்று பிள்ளைகளை படிக்க வைப்பதாக மனதில் உறுதி பூண்டாள். 

அக்கம் பக்கத்தில் பண்ட பாத்திரங்கள் தேய்த்தும், துணிமணிகள் கழுவியும் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்தாள். இருப்பினும் வறுமை தன் கொக்கிகளால் வக்கிரமாகக் கவ்விக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டது. விலைவாசியின் வலைவீச்சில் விழுந்து கரைகாணும் வழிதெரியாமல் சாவித்திரி தத்தளித்தாள். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற வெறியில் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தாள். 

வருடங்கள் சில பிறந்து மடிந்து காலச்சக்கரம் கடிவாளம் இல்லாமல் உருண்டோடின. சாவித்திரி எதிர்பார்த்திருந்த அந்த இனிய நாள் விரைவிலேயே வந்தது. அவள் கனவு நனவாக மாறி பிள்ளைகளின் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.
ஆம், அருண் ஒரு வைத்தியராகவும் நிலா ஒரு ஆசிரியையுமாக வந்திறங்கினார்கள். சாவித்திரியின் உச்சி குளிர்ந்து உள்ளம் மலர்ந்து வார்த்தை பிறந்தது. 'மகனே நீ அப்பா நெனச்ச மாதிரி ஒரு டொக்டராயிட்ட. நிலாவுக்கும் வேல கெடச்சிட்டு.
இப்பதான் ஒண்ட அப்பாட ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கும்' என்று ஆரத்தழுவி மகனை கட்டியணைத்தாள். அவனோ அவளின் பேச்சை அசட்டை செய்து 'சும்மா இரும்மா,
எப்ப பாத்தாலும் அப்பா அப்பா எண்டு அப்பா புராணம் பாடுறத முதல்ல நிறுத்தும்மா' என்று உதாசீனமாக பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். அவளுக்கு அவனது பேச்சும் நடத்தையும் புதிதாகத் தோன்றியது.

அதைக்கேட்ட நிலா 'ஏன் அண்ணா அப்படி சொல்லுறீங்க. அம்மா சொல்றது உண்மதானே. அம்மாவும் அப்பாவும் இல்லாட்டி நாம இந்த நெலமைக்கு வந்திரிக்க முடியுமா?' என நியாயம் பேச அருண் நன்றி கெட்டவனாக சீறினான். 'நாம கஷ்டப்பட்டு படிச்சதாலயும் நம்மட்ட திறமையும் கெட்டித்தனமும் இருக்கிறதாலதான் நமக்கு பதவி கெடச்சிருக்கு. அதவிட்டுட்டு உளராத' என்று வார்த்தை பிழம்புகளை கொட்டினான். அவனின் வார்த்தைகள் சாவித்திரியின் இதயத்தில் சம்மட்டியாக உருமாறி ஓங்கியடித்தது போன்று வலித்தது. அதனை காட்டிக்கொள்ளாமல் மௌனியாக இருந்துவிட்டாள். வைத்தியனாக வந்திருக்கும் அருணின் நடத்தைகளிலும் செயல்களிலும் பல மாற்றங்கள் அவளுக்குப் புதிதாகத் தெரிந்தன. அருண் ஏன் இப்படி மாறிவிட்டான் என நினைத்து உருகி உருகி சதா மனம் நொந்து போனாள். அவளது பேதை மனதில் பல கேள்விகள் விடை தெரியாத வினாக்களாக தோன்றி மறைந்தன. 
காலம் என்ற செடியில் மாதம் என்னும் சில மலர்கள் மலர்ந்து உதிர்ந்தன. ஒருநாள் அருண் சாவித்திரியிடம் தயங்கியவனாக வந்து கூறிய செய்தி அவளது உள்ளத்தை உலுக்கி மின்சாரத்தால் தாக்குண்டவள் போலானாள். '

அம்மா நா யூனிவெர்சிட்டில படிக்கிற நேரம் என் பிரெண்டுட தங்கச்சிய உயிருக்குயிரா காதலிச்சன். அவ பெயர் விஜி. அவ பணக்கார குடும்பத்த சேர்ந்த பெண் என்கிறதால எங்கட காதலுக்கு அவங்கட வீட்டுல பலத்த எதிர்ப்பு.
அவள்ட அழகையும் அதையும் தாண்டி சொத்து சுகங்களையும் இழக்க நா விரும்பல. அதால நாங்க போன மாதமே பதிவுத் திருமணம் செஞ்சுகிட்டோம்' என்று சொல்லிக்கொண்டே போக சாவித்திரிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட 'அருண் என்னடா உளறுகிறாய்.
காதல் கல்யாணம் என்னால நம்பவே முடியல. என் வயித்தில பொறந்த அருணா நீ? நா எவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன ஆளாக்கினேன்.

என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாம ஏன்டா இப்படி ஒரு முடிவுக்கு வந்தாய்? அதுவும் சொத்து சொகத்துக்கு மயங்கி. சீ!' என்று அழுகையை அடக்கிக்கொண்டு சீறினாள். 'அம்மா என் வாழ்க்கைய பத்தி நான்தானே முடிவெடுக்கணும். நாங்க வீடு வாங்கியிருக்கிறோம். தனிக்குடித்தனம் போகப் போறோம். நீ உன் வேலயப் பாரு ஒனக்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் போதுமா?' என்றதும் சாவித்திரி அதிர்ந்து போனாள். ' பணத்துக்காகவா உன்ன படிக்க வச்சன். நன்றிகெட்டவனா பேசாத.
சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். உன் பொண்டாட்டிய இங்க கூட்டிட்டு வா.நாம எல்லோரும் ஒரே வீட்டுல ஒன்றா வாழ்வோம்' என்று மகனை பிரிய முடியாதவளாக கெஞ்சிக்கேட்டாள்.

'விஜி படிச்சவ. எவ்வளவு பெரிய கோடீஸ்வரி. அவ இங்க வந்து இந்த கிராமத்துல படிப்பறிவில்லாத நாகரிகம் தெரியாத உன்னோட இந்த குடிசைல ஒரு காலமும் இருக்க மாட்டா.

இது பத்தி அவ என்னோட ஏற்கனவே பேசியிருக்கா' என்று கூறிவிட்டு தாயின் கெஞ்சுதல்களுக்கு காது கொடுக்காமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டான். 
சாவித்திரிக்கு மகனின் நிலையை பார்க்க ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. சிறகு முளைத்த பறவை போல சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியவுடனே தாயை மதிக்காமல் புறக்கணித்துவிட்டானே என்ற கவலை அவள் மனதில் சுமையாகிவிட்டது. கணவன் கனிவும் கண்டிப்புமாக வளர்த்த மகன் இப்படி திசைமாறிவிட்டான் என நினைத்து நினைத்து கண்ணீர் விட்டாள். 

காலமெனும் பரந்த வானில் வருடமெனும் சில நட்சத்திரங்கள் மின்னி மறைந்தன. நிலா அவள் விரும்பிய வாழ்வில் வேரூன்றி ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டாள். நிலாவின் வீட்டிலேயே சாவித்திரி அருணின் நினைவுகளோடு காலத்தை கடத்தினாள்.
அருணோ தாயை வந்து பார்ப்பதேயில்லை. ஓரிரு மாதங்கள் பணம் அனுப்பியதோடு நாளடைவில் அதுவும் நின்று போனது. அருணோ அழகு மனைவியின் மயக்கத்திலும் சொகுசு வாழ்வின் கிறக்கத்திலும் மிதந்தான். 

ஒருநாள் நிலா தாயின் மனச்சுமைகளை இறக்கி வைக்கும் நோக்குடன் அருணின் வீட்டை தேடிப்பிடித்து அம்மாவை அழைத்துச்சென்றாள். சூரியனை கண்ட தாமரை போல மகனைக் கண்ட தாய் பூரித்து போய் கட்டியணைக்கும் ஆவலில் ஓடோடிச் சென்றாள்.

அருணோ 'ஏம்மா இங்க வந்தீங்க. என்ன அவமானப்படுத்தவா வந்தீங்க. பணமேதும் தேவை என்றா சொல்லியனுப்பி இருக்கலாமே. அவட கண்ணுல பட முதல் வீட்டுக்கு போங்க.' என்று அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.

சாவித்திரி கவலையை காட்டிக்கொள்ளாமல் 'உன்னையும் என் மருமகளையும் ஒருக்கா பாத்துட்டு போகலாம்னு வந்தேன். எங்க என் மருமக ' என்று அங்குமிங்கும் கண்களை உருட்டினாள். 'அவ பியூட்டி பார்லர் போயிருக்கா. வீட்டுல இல்ல. வர நேரமாகும்' என்று சொல்லிமுடியுமுன் உள்ளறையிலிருந்து 'என்னங்க நம்ம பப்பி கத்திட்டே இருக்கு. அதுக்கு பிஸ்கட் போடாம யாரோட பேசிட்டு இருக்கீங்க' என்று உள்ளே இருந்து ஒரு பெண் குரல் வர அருண் திடுக்கிட்டுப் போனான். அவர்கள் இருவரும் மௌனிகளாய் வெளியேறினர். அந்நிகழ்ச்சியே மேலும் துன்பத்தை கொடுத்து சாவித்திரியை பிரமை பிடித்தவளாக்கிவிட்டது. அதன்பின் அவள் யாருடனும் பேசாது மனநிலை பாதிக்கப்பட்டவள் போலானாள். எந்த வைத்தியம் செய்தும் பலனில்லை. 

காலங்கள் வருடங்களை உண்டு கொழுத்தன. சாவித்திரி மகனின் நினைவுகளோடு கூரையின் விட்டத்தையே வெறித்துப் பார்த்தவளாக இருந்தபோது நிலா பதறி ஓடி வந்து 'அம்மா, அண்ணாவுக்கு ரெண்டு கிட்னியும் பழுதாகிட்டாம். ஒரு கெழமைக்குள்ள AB10 கிட்னி தேவையாம். இல்லாட்டி உயிருக்கே ஆபத்தாம்.

அண்ணாட பொண்டாட்டிக்கு AB10 கிட்னி இருந்தும் அவ கொடுக்க மறுத்து அண்ணனோட வாக்குவாதப்பட்டு எவனோடயோ ஓடிப் போய்ட்டாளாம். பாவம் அண்ணா இப்போ தனியா இருந்து ஹொஸ்பிடல்ல கஷ்டப்படுரானாம் என்டு என் ப்ரென்ட் நிரூஜா சொன்னா' என்று கூறி முடிக்க பலகாலங்களாக பிரமை பிடித்தவளாக இருந்த சாவித்திரியின் உதடுகள் பேச ஆரம்பித்தன. 'ஐயோ என் மகனே. உன்னை நா சாக விடமாட்டேன். நான் செத்தாலும் பரவாயில்லை என் கிட்னியை உனக்கு தந்து உன்ன நான் வாழ வைப்பேன்' என்று கூறியவாறு மயங்கிச் சரிந்தாள். 

நிலாவும் அவளின் கணவனும் பதற்றத்துடன் மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறையின் வாசலில் நின்று கொண்டிருக்க உள்ளே இருந்து வந்த டொக்டர் 'ஒப்ரேசன் சக்ஷஸ். ஒன்றுக்கும் பயப்படாதீங்க. ஒங்க அம்மாவின் கிட்னி அருணுக்கு கச்சிதமாக பொருந்திட்டு.

தாயும் மகனும் சுகதேகியாக இருக்காங்க. இனி அவங்க உயிருக்கு எந்த ஆபத்துமில்ல. அவங்கள கவனமா பாத்துகோங்க' என்று கூறியதும் நிலா நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். சில தினங்களிலே இருவரையும் அழைத்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தாள். 
வீடு வந்த அருண் கண்களை மூடிக்கொண்டு தாய்க்கு செய்த துரோகத்தையும் அநியாயத்தையும் நினைத்து தேம்பி தேம்பி அழுதான்.

அவனுக்கு கண்களை மூடினால் கடந்தகால கறைகளும் கண்களை திறந்தால் நிகழ்கால நிஜங்களும் நிழற்படமாக ஓடியது. தாயை கட்டியணைத்தவாறே 'அம்மா நா பாவிம்மா. ஏன் என்ன பிழைக்க வச்சீங்க. உங்களுக்கு செய்த துரோகத்துக்கு கடவுள் எனக்கு தந்த தண்டனைம்மா இது.

பெத்து வளர்த்து கஷ்டப்பட்டு ஆளாக்கிய ஒங்கள உதாசீனப்படுத்திட்டு கோடீஸ்வரி என்கிறதால அவள்ட பின்னால போய் மதிமயங்கி கெடந்ததுக்கு எனக்கிந்த தண்டனை போதாதும்மா. என்ன சாக விட்டிருக்கலாமே.

ஏனம்மா உயிர் குடுத்தீங்க' என்று குமுறியழுதான். மகனின் கண்ணீரை துடைத்தவாறு 'அருண் அப்படிச் சொல்லாத. பழசெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடு' என்று கூறி கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினாள்.

'எனக்கு மறு உயிர் குடுத்ததே நீதானம்மா. இனி நா உன்ன விட்டு பிரியவே மாட்டேன். சாகும்வரைக்கும் உன் கூடவே இருப்பேன்' என்று நெஞ்சுருக கூறி தாயின் கரங்களை கண்ணீரால் அபிஷேகம் செய்தான். 

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அவனை சாவித்திரி தேநீரோடு பலகாரம் கொண்டு வந்து மேசை மீது டக் என்று வைத்த ஒலி அவனை நிகழ்காலத்துக்கு மீட்டது.

' மகன் அருண் உனக்கு பிடிச்ச பனங்கா பணியாரம் செஞ்சு வச்சிருக்கேன். சுடச் சுட தேத்தண்ணியோட ருசியாருக்கும்' என்று மகனின் தலையை வருடியவாறு 'நேத்து நா சொன்ன விசயத்த பத்தி யோசிச்சியா மகன்? பழசெல்லாம் நீ மறந்துட்டு புது வாழ்க்கை நீ வாழனும்டா. நிலா அவட ப்ரென்ட் ஒருத்திய ஒனக்கு பேசி முடிவாக்கியிருக்கா.
அவட குடும்பத்துக்கும் பூரண சம்மதமாம். எனக்கு அந்தப் பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு. படித்த பண்பான பெண்ணாம். நீ என்ன சொல்றா?' என்று கேட்க 'அம்மா இனி நீ சொல்றதுதான் எண்ட வேதவாக்கு.

நீ எடுக்குற எந்த முடிவுக்கும் பூரண சம்மதம்' என்றதும் தாயின் உள்ளம் பூரிப்படைய நிலாவும் அகமகிழ்ந்து போக அப்போதுதான் அங்கு வந்த நிலாவின் கணவர் 'மச்சான், ஹனிமூன் எங்க போறதா உத்தேசம்? நாங்களும் வரலாமா?' என்று கேலி பேச அனைவரின் கொல் என்ற சிரிப்பொலி அவ்வீட்டை அதிரவைத்தது. இனி என்ன! அந்த வீட்டில் என்றுமே சந்தோஷம்தான். 

பரீட் இக்பால்
யாழ்ப்பாணம்

Comments