சோகம காட்டுலயம் குடியிருப்பாளர்களுக்கு விடிவு; புதிய வீடுகளில் குடியேறுகிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

சோகம காட்டுலயம் குடியிருப்பாளர்களுக்கு விடிவு; புதிய வீடுகளில் குடியேறுகிறார்கள்

கண்டி மாவட்டம் கம்பளை  உடபலாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட புஸ்ஸலாவ சோகம கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு காட்டுலயம் என அழைக்கப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகியது.

இதற்கு முன்பும் பலமுறை இந்த குடியிருப்புகள் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 2017 ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கஃசரஸ்வதி மத்திய கல்லூரியில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதகாலமாக அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.

பாடசாலை நிர்வாகம் பாடசாலை கட்டிடத்தை மீளப்பெற்றதால் சோகம தோட்டத்தில் உள்ள சிறிய விளையாட்டு மைதானம் ஒன்றில் தற்காலிக குடில்களை அமைத்து 20 குடும்பங்கள் அகதி வாழ்வை தொடர்ந்தன. பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் மழை குறைந்ததும் மீண்டும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்குள் குடி புகுந்தனர்.
இந்த காட்டு லயம் குடியிருப்புக்கு உகந்ததல்ல. அனர்தத்திற்கு உள்ளாகும் இடம் என கண்டி  அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்கு உள்ளான இந்த சோகம தோட்ட காட்டு லயத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு என 20 வீடுகள் 7 பேச் காணியில் தலா பத்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கும் பணி தொடங்கியது.  பாதிக்கப்பட்டவர்களும் விடிவு வந்துவிட்டதாக மகிழ்ந்தனர். எனினும் அமைக்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள் முழுதாக இடம்பெறாது இடைநடுவில் கைவிடப்பட்டது.

இவ் வீடுகளுக்கு மின்சாரம் நீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை எமது தினகரன்  வாரமஞ்சரி மலையகப்பகுதியில் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு.நீர் மின்சாரம் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

மலைக் காலங்களில் குடியிருப்புக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் இருந்து கற்பாறைகளும் மண்மேடுகளும் சரிந்து வரும் அபாயத்துக்கு மத்தியில் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். வெயில் காலங்களிலும் பெரும் கற்பாறைகள் சரிந்து வரும்.
இந்த காட்டுலயம் மலையடிவாரத்தில் உள்ளது. இப்பகுதி மலை காடாக உள்ளதால் உட்பகுதியில் ஏற்படும் மண்சரிவுகள் வெளியில் தெரிவதில்லை. வீடு கட்டும் பணிகள் நிறைவடைந்தாலும். நீர் மற்றும் மின்சாரம்  இன்மையால் இந்த புதிய வீடுகளுக்கு இவர்கள் குடிபோகாது இருந்தனர். தற்போது பலர்குடிபோய் உள்ளனர். காட்டு லயம் என பெயர் வர காரணமாக அமைந்தது. அது காட்டில் இருப்பதால்தான்.

புதிய வீடுகளுக்கு மின்சார, குடிநீர் வசதி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஜீவன் தொண்டமானுக்கு வாழ்த்து சொல்வோம்!

தகவலும் படங்களும்:  ஆர். நவராஜா

Comments