பேதம் மறந்து கட்சிகள் இணைய வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பேதம் மறந்து கட்சிகள் இணைய வேண்டும்

கொரோனாவுக்கு எதிரான ஒரே நம்பத்தகுந்து ஆயுதம் தடுப்பூசி மருந்து மட்டுமே என்பது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அறுபது முதல் எழுபது சதவீத தடுப்பூசி ஏற்றல் நடைபெற்றுள்ள நாடுகளிலும் அடுத்தஅலை ஏற்படவே செய்கிறது. இரண்டு ஊசி மருந்துகளை ஏற்றியவர்களுக்கு நோய் வருகிறது. மரணிக்கவும் செய்கிறார்கள் வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றல் நடைபெற்ற இஸ்ரவேல் தற்போது தமது குடிமக்களுக்கு மூன்றாவது ஊசியை ஏற்றி வருகிறது. டெல்டா வைரஸ் அந்நாட்டில் வேகமாக பரவி வருவதே இதற்குக் காரணம்.

பெருவர்த்தகரான ராஜா மகேந்திரன், நேர்மையான ஜனநாயக அரசியல்வாதியான மங்கள சமரவீர உட்பட முக்கிய புள்ளிகளும், நமக்கு நெருக்கமானவர்களும், அயலவர்களும் கூட, ஊசியேற்றிய பின்னரும், மரணத்தைத் தழுவியிருப்பதை நாம் அறிவோம். அட, இவருக்கா, கொரோனாவில் இறந்துவிட்டாரா? எனத் தலையில் கை வைத்துக் கொள்கிறோம். பலராலும் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று குழம்பியும் போகிறார்கள். இரண்டு தடுப்பு ஊசிகளை ஏற்றிக் கொண்ட பின்னரும் போதிய நோயெதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியை தொடர்ந்து பேணத் தவறினாலும், தொற்றா நோய்கள் உடலில் தீவிரமாக இருந்தாலும் பெருந்தொற்றினால் பீடிக்கப்படவும் முடியும் மரணாபத்தை எதிர்கொள்ளவும் நேரிடும் என்பதை ஒவ்வொருவரும், குறிப்பாக எமது வாசகர்கள், புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்நாடு, ஜப்பானிய குண்டு வீச்சு, 1962 புரட்சிச்சதி முயற்சி, 1971 ஜே.வி.பி கிளர்ச்சி, வடக்கில் ஆயுத கிளர்ச்சி, 1989 ஆயுத கிளர்ச்சி சுனாமி அழிவு என அழிவுகளை சந்தித்திருந்தாலும் கொவிட் அழிவைப் போல ஒரு பல்முனை அழிவுச் சக்தியை முன்னெப்பொழுதுமே இந்நாடு சந்தித்ததில்லை. எனவே இதை எதிர்கொள்ளும் எமது வழிமுறைகளும், அரண்களும் முன்னெப்பொழுதும் வகுக்கப்படாததாகவே இருக்க வேண்டும். அதுவே சரியான அணுகுமுறை. ஆனால் அப்படித்தான் இருக்கிறதா என்றால் அதற்கான பதில் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நாடு சுமார் 40 தினங்களாக மூடப்பட்ட போதும்சரி, கடந்த 20ம் திகதி முதல் தற்போது நடைபெறும் முழு அடைப்பிலும் சரி வாகனங்களைத் தாராளமாகக் தெருக்களில் காணமுடிவதோடு தேவையான பொருட்களைக் கடைகளில் வாங்கவும் முடிகிறது. யாருக்கும் வெட்கமில்லை என்று சொல்வார்கள். அதேபோல எந்தவொரு தனிமனிதனுக்கு எந்தவொரு சமூக பொறுப்புமில்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. எனவே இந்த அடைப்பு மேலும் தொடர்ந்தால் கூட சமூகம் பொறுப்பற்றதாக நடந்து கொள்ளுமானாலும், பயனேதும் விளையப் போவதில்லை. அரசியல் கட்சிகளிடமும் இப் பொறுப்பற்ற தன்மையைக் காணக் கூடியதாக இருக்கிறது. மக்கள் நலன்களுக்காகவும் சுபீட்சத்துக்காகவும் இயங்கக்கூடியவையே அரசியல் கட்சிகள். நாடு மிக மோசமான தருணத்தில், நோயற்ற வாழ்விலும் பொருளாதார வீழ்ச்சியிலும் சிக்கியிருக்கும்போது அரசுடன் கைகோர்த்து பயணிக்க வேண்டியது அனைத்துக் கட்சிகளின் கடமையாகும். 1967 ஆறுநாள் இஸ்ரேல் – அரபு யுத்தத்தின்போது எகிப்து தலைமையில் அனைத்து அரபு நாடுகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலை அழிக்க முற்பட்டபோது இஸ்ரேலில் ஆட்சி செய்த அரசு, எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த மோஷே தயானை அழைத்து பாதுகாப்பு அமைச்சை ஏற்கும்படி கேட்டுக் கொண்டது. யுத்தத்தை எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும் என அரசு சொல்லாமல் விவேகமான முடிவை எடுத்து. மோஷே தயானின் தந்திரமான காய் நகர்த்தல்களின் விளைவாக இஸ்ரேல் பிரமிக்கத்தக்க வெற்றி பெற்றது.

பகை வரும்போது அதை வெற்றிகொள்ள தம் பகை மறக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஆனால் பொதுப்பகையான கொரோனாவை வெற்றி கொள்ள ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட இன்னும் தயாரில்லை. தமது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதிலும் ஒற்றுமையைக் காண முடிவதில்லை என்பதோடு அப்படி வழங்குவது சாத்தியப்படாது என்றும் மக்கள் பிரதிநிதிகள் ‘முன்மாதிரி’ காட்டியிருக்கிறார்கள்!

கொரோனாவை அரசியலாக்க வேண்டாம் என்று அரசு எதிர்க் கட்சிகளிடம் சொல்வதும், எதிர்த் தரப்பு கொரோனாவை ‘கராணா’ வருமான வழியாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என பதிலுக்கு அரசிடம் சொல்வதும் எதையும் புதிதாக உருவாக்கி வைத்துவிடப் போவதில்லை. கொரோனா விடயத்தில் கட்சிகள் குறைகளை மட்டும் பெரிதுபடுத்திக் காட்ட முயல்கின்றனவே தவிர, ஆக்க பூர்வமான யோசனைகளை முன்வைத்து ஒத்துழைப்பு வழங்க முன்வருவதில்லை. இவ்விடயத்தில் அரசும் எதிர்த்தரப்பின் யோசனைகள் பயனுள்ளவையாக இருப்பின் அரசியல் இலாப நஷ்டம் பார்க்காமல் அவற்றை அமுல் செய்ய முன்வருமானால் அது பெரிய அரசியல் சிந்தனை மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் கொரோனாவைப் பயன்படுத்தி அரசை விமர்சிக்கும், ஏறக்குறைய, ஒவ்வொரு தருணங்களிலும், தம்மிகவின் பாணி, கங்கையில் முட்டிகளை வீசுதல், கொரோனா கரானா போன்ற சொற்களை பயன்படுத்தி வருவது அவற்றில் காணப்படும் சிந்தனை வரட்சியையும், திட்டுவதற்காகத் திட்டுவது போன்ற ஒரு தோற்றத்தையும் காண முடிகிறதே தவிர ஆக்க பூர்வமான போக்கை அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இன்றைய அடைப்பு முடிவுக்கு வந்ததும், அடைப்பின் காரணமாக தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் என்றீர்களே நடந்ததா, நாடு மேலும் வீழ்ச்சி அடைந்ததைத் தவிர என்று அரசு தரப்பினர் எதிர்த் தரப்பினரை நோக்கி கை காட்ட, உண்மையாகவே முழு அடைப்பாக இருந்திருந்தால் பலன் கிட்டித்தான் இருக்கும்; ஆனால் ஏனோதானோ என்பதாகத்தானே இந்த அடைப்பு இருந்தது என எதிர்த்தரப்பும் அரசை நோக்கிக் கை காட்ட.... அடங்காப் பெருந்தொற்றினால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் அல்லவா!

மக்களுக்கு இப்போது அவசியப்படுவது பெருந்தொற்றில் இருந்து மீட்சி. தடுப்பூசியே விஞ்ஞானபூர்வமான மீட்சியைத் தரும் என்ற நம்பிக்கையுடன் அரசு முழு வீச்சில் செயல்படுவது பாராட்டத் தக்கது. இதை இன்னும் விரைவாக நடத்தவும், அவசியமானால் மேலும் முடக்கத்துக்கு செல்லும்போது ஏற்படக் கூடிய பொருளாதார பின்னடைவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதிலும் எதிர்த் தரப்பு அரசுக்கு கை கொடுக்க, கை கோர்க்க வேண்டிய காலம் இது.

இறுதியாக ஒரு கேள்வி. கொவிட்டுக்கு எதிரான இரு பெரும் போராட்டத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள் ஏன் கடும் மௌனம் காக்கின்றன என்று தெரியவில்லை.

Comments