உள்ளத்தை அழகு செய்திடுங்கள்!! | தினகரன் வாரமஞ்சரி

உள்ளத்தை அழகு செய்திடுங்கள்!!

தன்னையே உருக்கி
தன்னைச்சூழ ஒளியமைத்து
மென்மையான மேனியால்
மெழுகாய் மனதால் எரிபவள்!

தன் இரத்தத்தைப் பாலாக்கி
பச்சிளம் மழலைச் செல்வங்களுக்கு
தன் உதிரத்தைப் பானமாக்கி
பக்குவம் அவளே பேணிடுபவள்!!

தன் வருத்தங்களை மறைத்து
இல்லத்து இன்பத்திற்காய்
இயலாது போனாலும்
இடைவிடாது உழைப்பவள்!

இரவென்ன பகலென்ன
மழையென்ன வெயிலென்ன
சுகமென்ன துக்கமென்ன
எல்லாவற்றையும் சமமாய் எதிர்கொள்பவள்!

எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
குடும்பத்துப் புன்னகைக்காய்
தன் பூமுகத்துப் புன்னகையோடு
பல கசப்புக்களை விழுங்குபவள்!

இத்தனையும் எத்தனித்து செய்தாலும்
இயலாதவள் என்றே பெயர்
எத்தனை தான் செய்தாலும்
பாராட்டுக்கள் அவளுக்கில்லை!

அவளுக்கோ அவள் உணர்வுகளுக்கோ
மதிப்பு மரியாதை இருந்ததில்லை!

இறுதி மூச்சு வரை
தன் பிறந்த உறவுகளைத் துறந்து
திருமண உறவுகளை அழகுபார்ப்பவள்!

தன் வலிகளை அலட்சியம் செய்து
தன் உறவுகளது இலட்சியம் காப்பவள்!

புனிதம் பேணி மனிதம் காத்து
தன் இலட்சியம் துறப்பவள்!

தன் வீட்டு வேலைகள் செய்து
தன் தொழிற்கடமைகள் முடித்து
வருமானமீட்டி தன்மானம் காத்து
வாழ்கையைச் சரி செய்பவள்!

இல்லாள் எனும் நல்லாள்
நலம் வாழ சுகம் காண
மனம் மகிழ உளமாற
வாழ்த்துங்கள் தினந்தோறும்!!

அவள் சுமைகளைப் பங்கெடுத்து
அவள் ஆயூளை நீட்டிவிடுங்கள்!

அன்றாடம் அன்புடன் ஆனந்தம் பேசி
அவள் உள்ளத்தை அழகு செய்திடுங்கள்!!

கவிதாயினி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா பஸ்யால

Comments