மலையகத்தில் பால் உற்பத்தி; சிறு உற்பத்தியாளர்களின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் பால் உற்பத்தி; சிறு உற்பத்தியாளர்களின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் கால்நடை வளர்ப்பு படிப்படியாக அருகி வந்துள்ள நிலையில் கால் நடை வளர்ப்பாளர்களின் எண்ணிக்கை வீதமும் குறைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை வளர்ப்புக்கான புற்தரைகள், புற்கள் அதற்கேற்ற காலநிலை அத்துடன் அனைத்து வளங்களும் நிறைந்து காணப்படும் நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட கால் நடை வளர்ப்பு தற்போது நூற்றுக்கு 90 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 2001ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒன்றுக்கு நுவரெலியா மாவட்ட கெபினட் அமைச்சராக அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் நியமனம் பெற்றிருந்தார்.

அவர் அமைச்சு பதவி வகித்த காலத்தில் மத்திய மாகாணத்தில் மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கால்நடை அபிவிருத்தி, பால் உற்பத்தி, மற்றும் பால்மா உற்பத்தி, பாலுணவு உற்பத்தி என அபிவிருத்தி கண்டிருந்தது.

பெருந்தோட்டப் பகுதிகளிலும் தொழிலாளர் குடும்பங்கள் தமது தோட்ட தொழிலுக்கு அப்பால் கால்நடை வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டு பால் உற்பத்தியிலும், சாண உரங்களை விற்பனை செய்வதிலும் பெரிதும் இலாபங்களை கண்டு நாள் மற்றும் மாத வருமானங்களில் முற்னேற்றம் கண்டிருந்தனர். அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் காலத்தின் பின் அமரர் ஆறுமுகம் தொண்டமான் கால்நடை அபிவிருத்தி அமைச்சை தன்வசம் வைத்திருந்த காலப்பகுதியிலும் கால்நடை அபிவிருத்தி கண்டிருந்தது.

இவரின் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து நல்ல இன கரவை பசு மாடுகளை இறக்குமதி செய்து கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வழங்கியிருந்தார். கால்நடை வளர்ப்பை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கடன் அடிப்படையில் மிருக வைத்தியசாலைகள் ஊடாக கால்நடைகள் வழங்கப்பட்டது, பால் பண்ணைகளும் விருத்திக்கப்பட்டது, தொழில்வாய்ப்புகளும் பெருகியது, பாலுணவு விற்பணை நிலையங்கள், பால் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டன, கறவையின பசுக்கள் வளர்ப்புக்கென பொது பட்டிகள் தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்பு ஊக்கப்படுத்தப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு கைமாறியதன் பின் மலையகத்திற்கான கால்நடை அபிவிருத்திற்கு உதவிகள் கிடைக்காத நிலையில் அதன் அபிவிருத்தி படிப்படியாக குறைந்து இன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மாகாண சபைகளில் விவசாயத்துறை,கால்நடை அபிவித்தி துறை அமைச்சு ஊடாக மத்திய மாகாணத்தில் தோட்ட மற்றும் கிராமப்புற பகுதிகளில் கால்நடை அபிவிருத்திகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

இப்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஊடாக கிடைக்க வேண்டிய உதவிகளிலும் தொய்யல் ஏற்பட்டுள்ளதுடன் உதவிகளும் சரியாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை. மறுபுறத்தில் கால்நடைகளுக்கான உணவு வகைகளின் விலையேற்றம்,மாடுகள் இறக்குமதியில் பாதகம், மிருக வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பசு மாடுகள் வளர்ப்பாளர்களின் ஆர்வம் குறைந்து இன்று நூற்றுக்கு 90% பாதிக்கப்பட்டுள்ளது. ஏதோ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரே கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று நாட்டில் பால்மாவிற்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் கால்நடை உற்பத்தியை விருத்திப்போம், பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்கப்படுத்த எத்தகைய நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அத்துடன் அரசாங்க மிருக வைத்தியசாலைகளில் மருந்துகள், வைத்திய ஊழியர்கள், உத்தியோகஸ்தர்கள், வெளிக்கள சேவையாளர்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடுகள் நிலவுகிறது.

தோட்டப்பகுதிகளில் புற்கள் வளர்க்க தரிசுநிலங்கள் வழங்குவதில்லை. மாட்டுப் பட்டிகள் அமைக்க இடங்களும் வழங்குவதில்லை. இவ்வாறாக ஏகப்பட்ட சிக்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதால் மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் பாதிப்பை கொண்டுள்ளது. மேலும் தற்சமயம் ஒரிரு பசு மாடுகளை வளர்க்கும் நபர்கள்கூட தங்களது பசு மாடுகளை சினைப்படுத்தவும் பசு மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் குணப்படுத்த தனியார் வைத்தியர்களுக்கு 5000 ரூபாய் தொடக்கம் 10.000 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது.

பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய பால் பண்ணைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய முதலீட்டுச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டார்களுக்குத் தேவையான காணி இடங்களைப் பெற்றுக்கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திக்கான ஜனாதிபதிச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டுக்கு தேவையான பாலை உற்பத்தி செய்வதற்காக மேற்படி புதிய பால் பண்ணைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது. பால் பண்ணைகளுக்கான காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை முதலீட்டுச் சபையின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அடுத்தாண்டு முதல் மூன்று மாதக்காலத்திற்குள் புதிய பால் பண்ணைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய பால் உற்பத்திக்குத் தேவையான 85சதவீதமான பால் சிறிய மற்றும் மத்தியதர உற்பத்தியாளர்களுூடாகவே பெற்றுக்கொடுக்கப்படுகிறது என்றும் அவர்களுக்கு மேலதிகமாக புதிய பால் பண்ணையாளர்கள் உருவாக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதனை நுவரெலியா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் வரவேற்கின்றனர். இதனை உடனடியாக செயல்படுத்தி சகல வளங்களும் கொண்ட மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் பசு மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூரளையூரான்

Comments