கொவிட் பேரிடரில் குளிர் காயும் எதிரணி! | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் பேரிடரில் குளிர் காயும் எதிரணி!

கொவிட் தொற்று உலக நாடுகளை பல்வேறு வகையில் புரட்டிப் போட்டிருக்கும் இன்றைய நிலையில், இலங்கையும் இதில் விதிவிலக்காக அமையவில்லை. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் முதலாவது கொவிட் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதிலிருந்து கொவிட் தொற்றுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இலங்கையும் இணைந்து கொண்டது.

கடந்த காலங்களில் பாரியளவு தொற்று நோய்களை எதிர்கொண்ட அனுபவம் உலகின் பல நாடுகளுக்கு இருந்தாலும், இதுபோன்றதொரு உலகத் தொற்றுநோய்க்கான அனுபவம் இதுவே முதல் தடவை எனக் கூற வேண்டும். அந்தளவுக்கு உலக நாடுகளை கொவிட் தொற்று சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. புதிய அனுபவம் என்பதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த வரிசையில் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையும் தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறது.

முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பின்னர் கொரோனாவின் அலையை இலங்கை தனது கடுமையான முயற்சியின் ஊடாக வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்றே கூற வேண்டும். இந்த வைரஸ் பரம்பலைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

இரண்டாவது மூன்றாவது அலைகள் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் பொதுமக்களின் அலட்சிய நடவடிக்கைகளும் காரணமாகி விட்டன என்றே கூற வேண்டும். இதில் எந்தவொரு தரப்பினரையும் ஒட்டு மொத்தமாகக் குறை கூறி விடவும் முடியாது. பொதுப் போக்குவரத்து வசதிகளில் காணப்படுகின்ற பயணிகள் நெருக்கடி போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இதற்கு ஏதுவாக அமைந்து விட்டன.

அதேநேரம், சித்திரை வருடப் பிறப்பைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற மறந்ததால் ஏற்பட்ட மூன்றாவது அலை முன்னரை விட பரவலை அதிகரித்து விட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் மக்கள் சற்றுக் கவனயீனமாக நடந்தபடி விடுமுறையைக் கொண்டாடியமை இதற்குப் பிரதான காரணமானது. அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பொதுமக்கள் உரிய சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்கத் தவறியிருந்தமை நிலைமையை மோசமாக்கியது.

மறுபக்கத்தில் ஆரம்பம் தொடக்கம் அரசாங்கம் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது. இதற்கென பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தாலும், நாட்டு மக்களை இந்தக் கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்க முழு முயற்சிகளையும் அரசு எடுத்திருந்ததை எவரும் மறுக்க முடியாது.

இலங்கைக்கு மாத்திரமன்றி உலக நாடுகளுக்கே இது விசேட அனுபவம் என்பதால் ஒரு சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டாலும் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த பிரயத்தனங்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். குறிப்பாக கொவிட்-19 இற்கான தடுப்பூசிகள் உலகில் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக அதனை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆரம்பத்தில் உலக நாடுகளிடம் உதவி கோரியிருந்த போதும் தற்பொழுது இலங்கை தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்து அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதுவரையில் 12,255,121 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 6,464,292 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்பொழுது இருக்கும் நிலையில் கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே நோய் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று கொவிட் தொற்றைத் தடுப்பது கூட்டுப் பொறுப்பாகும். இது விடயத்தில் எதிர்க் கட்சிகள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றினவா என்ற கேள்வி உள்ளது. எதிர்க் கட்சியினர் வெறுமனே அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன், அரசின் மீது குறை கண்டுபிடிப்பதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர். அது மாத்திரமன்றி சமூக ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. சமூக ஊடக பிரசாரங்களின் பின்னணியில் எதிரணியினரே உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை ஆக்கபூர்வமான யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எல்லா சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை விமர்சிப்பதைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் குறைகள் இருந்தால் அவற்றை அவை தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்காது வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் அவர் அடுக்கிச் செல்வதையே மேற்கொண்டு வருகின்றார். இதனால் சமூகங்களுக்கிடையில் குழப்பநிலையொன்றே தோற்றுவிக்கப்படுகிறது.

கொவிட் நிதியத்துக்கு தமது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே எதிர்க் கட்சியினர் முனைப்புக் காட்டுகின்றனர். குறிப்பாக அரசாங்க ஊழியர்களிடம் ஒரு மாத சம்பளம் பெறப்படவிருப்பதாக எதிர்க் கட்சியினர் விசமப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். நோய்த் தொற்றினால் பல்வேறு சிரமங்களை நாடு எதிர்கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்களை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்குவது மாத்திரமன்றி, அவர்களை தேவையற்ற விதத்தில் உருவேற்றி விடுவதாகவே இது அமைகிறது.

இதே போல, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள உயர்வுப் போராட்டமாக மாற்றுவதற்கும் எதிர்க்கட்சிகளே காரணமாக அமைந்தன. கொவிட் தொற்று பரவுவதற்கான ஆபத்துக் காணப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வீதியில் இறங்கிப் போராடியதால் நோய்த் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டதுடன், ஏற்கனவே ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் முடங்கிப் போயுள்ளன. பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகவிருந்தால் நிலைமைகளை புரிய வைத்து பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும்.

இதனை விடுத்து அனைவரையும் வீதியில் இறங்கிப் போராடுவதற்குத் தூண்டும் வகையில் கருத்துக்களை முன்வைப்பதும், நாட்டில் உள்ள மக்களை நோய்த் தொற்றின் அச்சத்துக்குள் தள்ளுவதும் எந்தளவுக்கு நியாயமானது என்பதை அவர்கள் தமக்குத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

எதிர்க் கட்சி என்றால் எடுத்ததற்கு எல்லாம் அரசாங்கத்தை எதிர்ப்பது எனப் பொருள்படாது. அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணியாகும். நோய்த் தொற்றினைக் குறைப்பதில் பொதுமக்களுக்கு பொறுப்பு இருப்பதைப் போன்று எதிரணியினருக்கும் விசேடமான பொறுப்பு உள்ளது.

கொவிட்-19 தொற்று என்பது இலங்கையை மாத்திரம் பாதித்த விடயம் அல்ல. அபிவிருத்தியடைந்த உலக நாடுகள் பலவும் இதன் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலைமை நிச்சயமாக இலங்கை அரசுக்கு சவாலான விடயமாகும். நாட்டை நீண்ட காலம் முடக்கி வைத்திருப்பது என்பது நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வாகாது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதும், சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதுமே நிரந்தரத் தீர்வாக அமையும்.

நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் முடக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்காக அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவும் எதிர்க் கட்சியினரால் விமர்சிக்கப்படுகிறது. கொவிட் சூழலால் அரசாங்கம் ஏற்கனவே சவாலுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில், கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்களிலும் மக்களைக் குழப்பி விடும் வகையில் எதிர்க் கட்சியினர் நடந்து கொள்வது ஏற்புடையதாக இருக்காது.

Comments