ஸ்டாலின் அறிவிப்பை சாதகமாக நோக்கும் இலங்கை அரசாங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஸ்டாலின் அறிவிப்பை சாதகமாக நோக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து பதினான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அகதி வாழ்க்கை தற்போது ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதென்றே கூற வேண்டியுள்ளது. ஆனாலும் கடந்த கால யுத்த சூழலின் போது அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளிலேயே தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு திரும்பி வந்து வாழ்வதற்கு விருப்பமற்றவர்களாகவே உள்ளனர்.

இடம்பெயர்ந்த தமிழர்களில் அதிகமானோர் மேற்கு நாடுகளில் நிரந்தரமாக வாழ்வதற்கான அந்தஸ்தைப் பெற்று விட்டனர். சொற்ப தொகையினர் மாத்திரமே இன்னமும் அந்த நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களும் தாயகத்துக்கு திரும்பி வரப் போவதில்லை.

ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருந்து இந்தியாவுக்குச் சென்றுள்ள தமிழ் அகதிகளின் நிலைமை அவ்வாறானதல்ல. அவர்களுக்கு இந்தியாவில் இன்னும் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கவில்லை. அகதிகள் என்ற நாமத்துடனேயே அவர்கள் இன்னும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதும் அடைக்கலம் அளிக்கும் நாடாக விளங்கும் இந்தியாவில் இன்னமும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் துரதிர்ஷ்ட சூழல் தொடர்ந்துதான் வருகிறது. தமிழ்நாட்டில் அகதிமுகாம் பிரதேசத்திலேயே அவர்கள் அடிப்படை வசதிகளின்றி நெடுங்காலமாக வாழ்கின்றனர்.

‘ஈழத் தமிழர்கள் விவகாரம்’ என்பது தமிழக மாநில சட்டமன்றத் தேர்தலில் மாத்திரமன்றி இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் கூட அதிகமாகப் பேசப்படும் ஒரு விடயமாகி விட்டது.

தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் இதன் பிரதிபலிப்புகளை அதிகம் காண முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் இவ்விவகாரம் மேடைகளில் பேசப்படும் உணர்ச்சிபூர்வமான விடயமாகவே இதுவரை காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.கவோ அல்லது அ.தி.மு.கவோ அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுகாலவரை ஆதரவளிக்கவில்லையென்பது இதன் அர்த்தமல்ல. அகதிகள் அன்றாட சீவனோபாயம் நடத்துவதற்கான நிவாரணங்களை மாநில அரசுகள் வழங்கியே வந்துள்ளன.

ஆனால் அன்றாட சீவனோபாயத்துக்கான உணவு நிவாரணங்களையோ, ஏனைய உதவிப் பொருட்களையோ வழங்குவதனால் மாத்திரம் இலங்கை அகதிகளின் வாழ்க்கைக்கு நிரந்தரமான அடித்தளத்தை இட்டு விடலாமென கருதுவதுதான் தவறு. தமிழகத்தின் கடந்த கால அரசுகள் வெறுமனே நிவாரணங்களை வழங்கி வந்தனவே தவிர, அந்த அகதிகள் அம்மண்ணின் நிரந்தரமாகக் காலூன்றி வாழ்வதற்கான அடித்தளத்தை இன்னுமே இடவில்லை என்பதுதான் உண்மை.

இலங்கை அகதிகள் அனுபவித்து வருகின்ற அவலங்களை இலகுவாக விபரித்து விட முடியாது. அகதிமுகாம் பிரதேசங்களில் குடிசைகளிலும் கொட்டில்களிலும் அடிப்படை வசதிகளின்றி ‘வாழ்நாள் அகதிகள்’ போன்று நெடுங்காலமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப பொருளாதாரத்துக்கான சுயதொழில் வாய்ப்புகள் எதுவுமேயின்றி எதிர்காலம் தொடர்பான அவநம்பிக்கையுடனேயே அவர்களின் வாழ்வு கழிகின்றது. 'அகதிகள்' என்ற நாமமுத்திரையுடன் இலங்கைத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையும் அங்கே உருவாகி விட்டது.

இந்த துர்ப்பாக்கிய சூழல் மாறும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பே இந்த நம்பிக்கையை அகதிகள் மத்தியில் வழங்கியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு விமோசனத்தை வழங்குவதற்கு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வு பற்றிக் குறிப்பிட்டிருந்த ஸ்டாலின், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இப்போது நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்கள் இனிமேல் ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்’ என்று அழைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருப்பதுடன், முகாம்களில் உள்ள வீடுகளைத் திருத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவிக்கையில், 'இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம் பகுதியில் வீடுகள், வீதிகள் சீரமைக்கப்படும். இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபா செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பும் வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த பொறியியல் கற்பதற்குச் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே பொறுப்பேற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

தமிழர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் அத்தனை தமிழர்களையும் காக்கும் அரசாக தி.மு.க அரசு இருக்கும். இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூபா 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூபா 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்குச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் உள்ளடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.

உண்மையில் இந்த அறிவிப்பு ஆறுதல் தரும் விடயமாக அமைந்துள்ளது. தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

'2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியிருப்பதை வரவேற்கின்றேன், தமிழ் நாட்டுக்குச் சென்ற அகதிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் எமது நாட்டுக்கு வரவேற்கிறது. யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பின் உதவியுடன் இதுவரை 3567 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் பதிவாகியிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வீடுகள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை திரும்பும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்கள் தமது வாழ்க்கையை இங்கு நிம்மதியாக வாழ முடியும்' என நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் பாராட்டியிருப்பது இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதிலும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகவே இது காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் அகதிகள் விடயத்தில் இந்த அரசாங்கத்தின் அக்கறைப் பார்வையொன்று உள்ளது என்பதும் புலப்படுகிறது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இது குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ளமைமைய நாம் அவதானிக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழகத்திலிருந்த அகதிகளை அழைத்து வருவதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தவற விடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் இது விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்து தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களின் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவது மாத்திரமன்றி, இலங்கை திரும்புவோருக்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அநேகரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறான நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் டுவிட்டர் பதவிக்குப் பதில் வழங்கும் வகையில் எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்ட கருத்தில், தமிழகத்தில் உள்ள அகதிகளை வரவேற்பதற்கு முன்னர் வடக்கில் வலிகாமம் பகுதியில் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்ந்து வருபவர்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இது அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலான கருத்தாகவே அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் அவர் பங்காளியாக இருந்து அமைச்சுப் பொறுப்பை வகித்திருந்த போது வலிகாமம் பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை என்பது தெரியாமல் போனது என்னவோ துரதிர்ஷ்டம் தான்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட நல்லாட்சி அரசாங்கம் நினைத்திருந்தால் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அகதி வாழ்க்கையை முற்றாகப் போக்கி அவர்களை மீளக்குடியமர்த்தியிருக்க முடியும். கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுத்து தற்பொழுது அரசியல் அறிக்கைகள் விடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

அதேநேரம், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சுமார் 400 குடும்பங்கள் வரையில் காணப்படுகின்றன. இவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான சகல ஒதுக்கீடுகளையும் மாவட்ட செயலகங்களுக்கு வழங்கியிருப்பதாக மீள்குடியேற்ற விடயத்துக்குப் பொறுப்பாக உள்ள கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அண்மையில் தெரிவித்திருந்தார்.

“இடம்பெயர்ந்து முகாம்களில் அன்றி சொந்த வீடுகள் இல்லாத நிலையில் உறவினர்களுடன் வாழ்ந்து வரும் பிரிவினர் காணப்படுகின்றனர். அவ்வாறான 35 ஆயிரம் குடும்பங்கள் எட்டு மாவட்டங்களில் இருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் தகவல்களை சரியாக உறுதிப்படுத்தி தேவை உடையவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பக் கூடியவர்களையும் உள்வாங்குவதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் பல தசாப்தங்களாக நாட்டில் இல்லாத அவர்கள் மீளத் திரும்பும் போது வீடுகள் மாத்திரமன்றி வாழ்வாதாரத்துக்கான வழிகளும் அவர்களுக்கு இல்லாமல் இருக்கும். இவ்வாறான நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய திட்டங்களை வகுப்பது காலத்தின் தேவையாகும்.

இலங்கை அகதிகளை தமிழகத்திலிருந்து வரவழைப்பதனால் மாத்திரம் அவர்களுக்கு நன்மை ஏற்பட்டு விடப் போவதில்லை.

Comments