தமிழக - சிங்கள உறவு மேம்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழக - சிங்கள உறவு மேம்பட வேண்டும்

தமிழகம் ஒரு நாடு அல்ல; அது இந்திய மாநிலங்களில் ஒன்று. அம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தன் முதல் நூறு நாட்களில் அம் மாநிலவாசிகளுக்கு உவப்பைத் தரக்கூடிய பல விஷயங்களை செய்து காட்டியிருக்கிறார். பல தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும் வசதி ஏற்படுத்தித் தந்திருப்பதும், நிறைவேற்றிய வாக்குறுதிகளில் ஒன்று. இவற்றில் எமக்கு முக்கியமானது, தமிழகத்தில் ஏதிலிகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மேம்பாட்டுக்காக 317 கோடி ரூபாவை ஒதுக்கி நல்வாழ்வுத் திட்டங்களை அறிவித்திருப்பதாகும். சிதிலமடைந்த வீடுகளை திருத்தவும், புது வீடுகளை அமைக்கவும், மின்சார மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்தவும், இலவச அரிசி விநியோகிக்கவும், கல்வி, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவும் இந் நிதி பயன்படுத்தப்படுமெனவும், வருடா வருடம் இந்நிதி ஒதுக்கீடு தொடரும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரமுகர்கள் மட்டுமின்றி உலகத் தமிழ் பிரமுகர்களும் இதை வாழ்த்தி வரவேற்றுள்ளனர். இதில் முக்கிய விஷயம், எமது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவும் ஸ்டாலினின் இந்நகர்வைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருப்பதுதான்.

பொதுவாக எடுத்துக் கொள்வோமானால் இலங்கை அரசு தமிழக அரசுடன் எந்தவொரு நேரடித் தொடர்பையும் பேணுவதைத் தவிர்த்தே வந்துள்ளது. யுத்த காலத்துக்கு முன்னரும் சரி பின்னரும் சரி இலங்கை அரசின் நிலைப்பாடு இவ்வாறே இருந்து வந்திருக்கிறது. நீங்கள் உங்கள் அயல் வீட்டாருடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதைத் தொடர்ச்சியாக தவிர்த்து வந்தீர்களானால் எஞ்சப் போவது, இரு வீட்டார் மத்தியிலும் அவநம்பிக்கையும், தவறான புரிதலும், அனாவசியமான முரண்பாடுகளும்தான்.

இலங்கை அரசின் இப்போக்குக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இலங்கை சுதந்திர, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அந்நாடு மற்றொரு இறையாண்மை கொண்ட நாட்டுடன் மாத்திரமே தொடர்புகளைப் பேணமுடியுமே தவிர இந்நாட்டு மாநில அரசுகளுடன் அல்ல. மாநிலங்களுடன் தொடர்புகளை பேண வேண்டுமானால் அதை அந்நாட்டு அரசு ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருக்குமே தவிர நேரடியாக அம்மாநில அரசுடன் அல்ல என்பது இலங்கை அரசு முன்வைக்கும் காரணமாகும். இதை இராஜாங்க ரீதியாக மறுப்பதற்கில்லை.

ஆனால் இலங்கைக்கும் தமிழகத்திற்குமான தொடர்பை இராஜாங்க விதிமுறைகளுக்குள் அடக்கி, பத்தோடு பதினொன்றாக கருதுவது புத்தி பூர்வமானதாக இல்லை. இந்தியாவுடனான இலங்கையின் உறவு பாரம்பரியமானது. சரித்திர காலம் சார்ந்தது என்பது உண்மை. இந் நெருக்கமான உறவில் நெருடல்கள் உள்ளன என்றால் அது தமிழகம் தொடர்பிலானது தான். தமிழகத்தில் சுமார் ஏழரைக்கோடி தமிழர்கள் வாழ்வதும் அவர்களின் தொப்புள் கொடி உறவாக இலங்கைத் தமிழர்களும் மலையகத்தமிழர்களும் இந்நாட்டில் வாழ்வதும் இலங்கை பெரும்பான்மைச் சமூக அரசியல்வாதிகளினால் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் சோழர்கால படையெடுப்புகளை மனதில் வைத்து இந்தியாவை அல்லது தமிழகத்தை சந்தேகக் கண் கொண்டுநோக்குவதும் தமிழகத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் சிங்கள சமூகத்தை தமிழர்களின் எதிரிபோல சித்தரிப்பதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகவே இருக்கின்றன. யுத்த காலத்தில் இரு தரப்பு உறவும் மேலும் பாதிப்புக்குள்ளானது.

ஆனால், தமிழகத்துக்கும் இலங்கைக்குமான உறவுகள் மென்மேலும் சுமுகமடையும் பட்சத்தில் அது சுற்றுலா, வணிகம், கைத்தொழில் வளர்ச்சி, கூட்டு வர்த்தக முயற்சிகள், கல்வி, திரைப்படத்துறை எனப் பலதரப்பட்ட துறைகளில் வளர்ச்சியும், நிபுணத்துவ பரிமாற்றங்களும் நிகழ்வதற்கான தளமாக அமையும். ஆனால் இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தி வருவது கற்பனையான சந்தேகங்களும் அதன் விளைவான புரிந்துணர்வற்ற தன்மையுமே.

ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான சிங்களவர்கள் தமிழகம் செல்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் அங்கு தாமரையிலைத் தண்ணீரைப் போல இருந்து விட்டே நாடு திரும்புகிறார்கள். ஏனெனில் அவர்களின் சிறு பராயம் முதல் தமிழகத் தமிழர்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் புகட்டப்படுவதில்லை. தீபாவளி, பொங்கல் போன்ற வருடா வருடம் வந்து செல்லும் பண்டிகைகள் தொடர்பில் கூட சிங்கள சமூகம் பற்றிய அவர்களின் புரிதலும் அறிவும் எதிர்மறையானதாகவே உள்ளது. இலங்கை உப தூதரகம் ஒன்று சென்னையில் இருந்தாலும் தமிழர் பொதுப் புத்தியில் இலங்கை மற்றும் சிங்கள மக்கள் தொடர்பாக ஒரு தெளிவை ஏற்படுத்தும் வகையில் போதிய செயற்பாடுகளை அத் தூதரகம் மேற்கொண்டிருப்பதாக தெரியவில்லை.

தமிழக ஊடகவியலாளர்களை இலங்கைக்கு வரவழைத்து இலங்கை மற்றும் சிங்கள சமூகம் தொடர்பான தமிழக நம்பிக்கைகளில் உண்மை கிடையாது என்பதை உணர்த்துவதும், இலங்கை ஊடகவியலாளர்களுடன் உறவை ஏற்படுத்துவதும் பெருமளவில் அவநம்பிக்கைகளைப் போக்கி, ஆரோக்கியமான உறவை மேம்படுத்த உதவும் இதேபோல சிங்கள ஊடகவியலாளர்களை தமிழகம் அழைத்துச் சென்று, சிங்கள பொதுப் புத்தியில் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான தகவல்களில் எந்த உண்மையும் கிடையாது என்பதை புரிய வைக்கலாம்.

ஆனால் இத்தகைய ஆக்கபூர்வமான விடயங்களில் இரு நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகம் வாழ் தமிழர்கள் சிங்கள சமூகம் தொடர்பாக சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் சிங்கள சமூகம் தமிழகத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் தமக்கு அரசியல் ரீதியான இலாபத்தை அளிப்பதாகவும், இவர்கள் மத்தியில் புரிந்துணர்வு மேம்படும் பட்சத்தில் அது தமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் இரு தரப்பிலும் கருதுவதே இத் தவறான புரிதல்கள் தொடர்வதற்கான பிரதான காரணமாக இருக்கலாம்.

இலங்கையின் பாரம்பரிய இனவாத அடிப்படையிலான அரசியல் சிந்தனையில் இருந்து விலகி மாற்று வழியில் யோசித்து வரக் கூடியவரான அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ ஸ்டாலினைப் பாராட்டியிருப்பதும், அனேகமாக தமிழக அரசின் ஒரு செயற்பாட்டை சிங்கள அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகப் பாராட்டிய முதல் சந்தர்ப்பமாக இருக்கலாம்.

தமிழர், சிங்களவர் என இரு சமூகங்களையும் முட்டி மோதும் காளைகளாக பேணுவதன் மூலம் கட்சி ரீதியான மற்றும் தேர்தல் ரீதியான இலாபங்களை அறுவடை செய்யலாம் என்பதே இரு தரப்பு அரசியல்வாதிகளின் சிந்தனையாக இருந்து வந்திருக்கிறது.

உண்மையைச் சொல்வதனால், இப்போக்கால் அரசியல்வாதிகள் மட்டுமே பயனடைகின்றனர். ஆனால் இரு தரப்பினர் இடையே நல்லெண்ணமும் புரிந்துணர்வும் ஏற்படுமானால் இலங்கை பொருளாதார ரீதியாக அடையக்கூடிய இலாபங்கள் மிக மிக அதிகம்.

இள இரத்தம் பயமறியாது. நாமல் ராஜபக்‌ஷ தமிழக அரசுடன் ஆக்கபூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களை உடைத்தெறிய முன்வருவாரானால் என்றென்றும் பேசப்படும் தலைவராக காலம் அவரை முன்நிறுத்தும்.

Comments