நேசம் | தினகரன் வாரமஞ்சரி

நேசம்

நாம் இழந்ததை இன்னொருவர்
இழந்திடக்கூடாது எனும்
ஆகப்பெரும் வேண்டுதலில்
ஆரம்பமாகிறது இழப்பின்
வலியென்பது
நீயில்லாது போன போதும்
இந்த வாழ்வில் நானென்பது
இலவு காத்த கிளியாக
உன் நினைவுகளை
பத்திரப்படுத்திக் கொண்டிருப்பவனே
காயம்பட்டு கரை சேர்ந்துவிட்டாலும்
கடந்த பாதையின் ஏதோவொரு
மூலையில் முழுதாய்
அப்பிக் கிடக்கும்
உனை அகற்றுவதென்பது
இயலாத காரியமெனக்கு
வார்த்தை இடைவெளிகளில்
வந்து விழும் அர்த்தமற்ற
சொற்களாக எனக்குள்
வந்து வாழ்ந்து எனை
உயிருடன் கொன்று காணாமல்
போகிறது சில உறவுகள்
இந்த உலகின் ஆபத்தான
அனைத்தையும் தடை
செய்து விடுகிறார்கள்
ஒன்றை தவிர..
அதன் பெயர்: நேசம்

Comments