இலங்கை-இந்திய நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கான அடித்தளம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-இந்திய நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கான அடித்தளம்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் பலம், செல்வாக்கு மிக்க நாடாக எமது அயல் நாடான இந்தியா காணப்படுகிறது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உட்கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் பலம் இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் சக்திமிக்கதாகவே விளங்குகிறது.

பூகோள ரீதியில் மிகவும் அண்மித்த நாடாகவும் இலங்கையின் 'பிக் பிரதர்' என்ற நிலையிலும் காணப்படும் இந்தியாவுடன் இலங்கை எப்பொழுதும் வலுவான உறவைப் பேணி வருகிறது. கலாசார ரீதியிலான பிணைப்புகள் அதிகம் இருப்பதால், இலங்கைக்கு நெருக்கடி வேளைகளில் எப்பொழுதும் கைகொடுக்கும் நாடாகவும் இந்தியா விளங்கி வருகிறது.
கடந்த யுத்தகாலமாக இருந்தாலும், சுனாமி பேரனர்த்தம் மற்றும் தற்பொழுது எதிர்கொண்டுள்ள கொவிட் தொற்று சூழல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் உடனடியான உதவிக்கு வரும் நாடாக இந்தியா காணப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அணிசேரா கொள்கையாக இருக்கின்ற போதும் இந்தியாவுடனான உறவுகள் என்றென்றும் பேணப்பட்டு வருகின்றன. இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஒருவரைத் தெரிவு செய்திருந்தது.
சர்வதேச உறவுகளைப் பலப்படுத்துவதில் நன்கு அனுபம் வாய்ந்தவரான முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை அந்தஸ்துள்ள முதலாவது உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொட, கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தனது கடமைகளைப் பெறுப்பேற்றார்.

அரசியல் ரீதியாக அவர் கொண்டுள்ள அனுபவம் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில விடயங்களில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கசப்பான அனுபவங்கள் இருந்தாலும், மிலிந்த மொரகொடவின் நியமனம் இவை அனைத்தையும் சீர் செய்து இரு நாட்டு உறவுகளையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பையும் தோற்றுவித்துள்ளது.

மத வழிபாடுகளுடன் ஆரம்பமான பதவியேற்பு விழாவில் திருமதி ஜெனிபர் மொரகொட மற்றும் உயர்ஸ்தானிகராலய பணியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கும், இலங்கை - இந்திய உறவுகளை புதியதொரு உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு குழுவாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை மிலிந்த மொரகொட வலியுறுத்தினார். இதற்கு மேலதிகமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களின் குறியீட்டுக்  கட்டமைப்பொன்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் 'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு வியூகம் 2021/ 2023' என்ற தனது கொள்கைக் கட்டமைப்பையும் அவர் உயர்ஸ்தானிகராலய பணியாளர்களிடம் வெளியிட்டார்.

நம்பிக்கை, ஒழுக்கமான நடத்தை, தியாகம் மற்றும் முழுமையான புரிதல் என முறையே சர்வதேச  உறவுகளின் நவீன சூழலில் விளக்கப்படக் கூடிய பாலி கெனனின் வியாகபஜ்ஜ சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சத்த, சீல, சாக மற்றும் பன்னா ஆகிய 'சதர சம்பத' அல்லது நான்கு சாதனைகளை இந்த கொள்கைக் கட்டமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அரசியல் மட்டத்திலான ஈடுபாடுகளை அதிகரித்து இருதரப்பு உறவுகளை மூலோபாய நிலைக்குக் கொண்டு செல்தல் இதில் முதலாவது நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்கடி உயர்மட்ட விஜயங்களின் ஊடாக பரஸ்பர மற்றும் பிராந்திய மட்ட ஒத்துழைப்பை மேம்படுத்தல், பாராளுமன்ற இராஜதந்திர ஒத்துழைப்பை மேம்படுத்தல், இலங்கையின் மாகாண சபைகள் மற்றும் இந்திய பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களை அதிகரித்தல், நீண்ட காலமாக இழுபட்டு வரும் அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்த ஆணைக்குழுவொன்றை அடிக்கடி கூட்டுதல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள், மூலோபாய மட்ட மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விஸ்தரித்தல், மற்றும் கலாசாரம், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட இன்னோரன்ன துறைகளில் இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தல், பொது இராஜதந்திர முயற்சிகளின் ஊடாக இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியாவில் மேம்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரதான நோக்கங்களை மிலிந்த மொரகொட தனது இந்தக் கொள்கைத் திட்டத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயங்கள் அனைத்தையும் இணைத்து செயற்படுவதற்கான திட்டங்களையும் அவர் வகுத்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இரு நாட்டுக்குமான உறவுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகளும் அவற்றை நிறைவேற்றுவதற்கான இலக்குகளும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு இதன் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக முனைய விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் புதிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவின் அனுபவம் இரு நாட்டு உறவுகளை சுமுக நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மிலிந்த மொரகொட கடந்த காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் கடமையாற்றிய அனுபவம் மிக்க அரசியல்வாதியாவார். அவருடைய இந்தப் புதிய நியமனம் சர்வதேச உறவுகளில் நாட்டை மற்றுமொரு மட்டத்துக்கு உயர்த்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

பி.ஹர்ஷன்

Comments