கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

‘நான் மாடக் கூடல்’ எனப் பெயர் கொண்ட ‘தூங்கா நகர’மாகிய தமிழக மதுரையில், 1500 ஆண்டுகளுக்கு முன், திருஞான சம்பந்த மூர்த்தி என்ற சைவ சமய நாயன்மார்களில் ஒருவர் நிறுவிய சைவ மடத்தின் 292 வது பீடாதிபதியாகத் துலங்கியவர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாய் அடிகளார்.

அன்னார் பிறந்த மண் ‘குட்டி இங்கிலாந்து நுவரெலியா! இது பலரும் அறியாப் பேருண்மை! ஆரம்பத்தில், இளம்பருவத்தில், ஒரு நல்ல ஊடகவியலாளர் (1970) என்னும், இங்கல்ல, தமிழ்நாடு.

இந்த மாமனிதரை என் பேனா அறிய வந்தது, முஸ்லிம் சமூகத்தவர் வழிகாட்டி நூலான ‘அல் –குர்ஆன்’ வசனங்களை மனப்பாடம் செய்து மேடைகளில் ஒலித்த பொழுது!

அதிலும் அந்தத் திருமறை நூலின் தோற்றுவாய் எனப்படும் “ஃபாத்திஹா சூரா” வை அப்படியே ஒப்புவித்து அசத்தியது!

தொடர்ந்து ஒலி நாடா வழி, ஓர் இஸ்லாமிய கீதத்தை இவர் கணீர்க்குரலில் பாடுவதை கேட்டு மெய்சிலிர்த்தேன்.

முகம்மது நபி(ஸல்) அவர்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை வர்ணிக்கும் பாடல் அது! காயல்பட்டினத்து “காயல் ஆர்.எஸ். இளவரசு ‘கற்பனையில் நினைத்தாலே கதிகலங்குது” என்று ஆரம்பித்து இயற்றிய உணர்ச்சி பூர்வமான கீதம்.

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ஆப்த நண்பனான இவரது பாடலில் அவரது தாக்கம் இருந்தது.

மத நல்லிணக்க உணர்வுகளை ஒரு சைவ ஆதீனத் தலைவர் உணர்த்திய முறைக்கு ஈடும் இல்லை. இணையுமில்லை.

மற்றுமொரு சம்பவம்:

சைவத்திற்கே அவமானத்தையும் அபகீர்த்தியையும் உண்டு பண்ணிய ஒரு சில்மிச நித்தியானந்தாவுக்கு ஆரம்பத்தில் அன்பும் ஆதரவுக்கரமும் நீட்டி (2012) பின்பு கையைச் சுட்டுக் கொண்ட அடிகளார், மதுரை மாநகரிலிருந்தே ஆசாமியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் துரத்தி ‘கைலாச மலை’க்கு அனுப்பி சைவ உலகத்தைக் காத்தது!

மதுரை ஆதீனமாகப் (31) ஆண்டுகள் பொறுப்பிலிருந்த அருணகிரி அடிகளார் சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி மேம்படவும் மத நல்லிணக்கத்திற்காகவும் அரும்பாடுபட்ட அற்புத மனிதராகத் திகழ்கிறார். அவரை இழந்த பெரும் சோகத்தில் இன, மத, பேதமின்றி அனைவருமே ஆழ்ந்துள்ளனர்.

விசேடமாக முஸ்லிம் சமூக மக்கள், எதிர்வரும் காலங்களில் ‘மீலாத்’ மேடைகளில் (மாநபிகளாரைப் போற்றி நடத்தும் விழா) ஒரு வெற்றிடம் உண்டாகி விட்டதை உணர்கின்றனர்.

மறைவு : 2021- ஆகஸ்ட் 13ம் நாள். வெள்ளியிரவு 77ஆம் அகவை.

நம் எழுதுகோலும் பணிந்து தன் அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்கிறது- சிறு தாமதத்தில் மன்னிக்கவும்.

இனிப்பு-1

நம் நாட்டில் இன்றும் சரி, அன்றும் சரி, தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் “சொல்லின் செல்வர்” எனச் சொல்லிப் பெருமைப்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரே ஒருவரே உள்ளார்!

இது என் துணிவுக்கணிப்பு!

அதுவும், அகவை 94லில் ‘ராஜநடை’ நடந்து கொண்டு, ‘செல்லையா ராஜதுரை’ எனப் பெயர் பெற்றவராக.

உடனே, அபிமானிகள் தேனகத்தை நினைத்து, “அண்ணன் எங்கே? ஆனைப்பந்தியிலா? மோர்சாப்பிட்டியிலா? புளியந்தீவிலா” என என்னைப் பிய்த்து எடுப்பீர்கள்.

வேண்டாம்! ஏமாற வேண்டாம். அண்ணர், தன் பிறந்த மண்ணையே மறந்து துறந்து தமிழக சென்னை வாசம்! ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அடிமட்டத் தொண்டனாக அங்கே, ஆனந்த வாழ்க்கை!

அந்தத் தமிழ் உணர்வு மகா நதியைப் பற்றிய ஒரு நீண்ட சிறப்பான கட்டுரையை நமது மூத்த ‘தினகரன்’ வாரமஞ்சரியில் பொறுப்பாசிரியர் பிரசுரிக்கச் செய்திருந்தார். இதே மாதத்தின் முதல்வாரத்தில் 27ஆம் பக்கத்தில் (08.08.2021) கட்டுரை எழுதியவரோ ஓர் ஊடக ஜாம்பவானின் வாரிசு! நீட்டி முழக்காமல் சொல்லி விடுகிறேன். அமரர் எஸ்.டி. சிவநாயகத்தின் மைந்தர், எஸ்.டி.எஸ். உதயநாயகம் கொழும்பு ஸ்ரீ சத்திய சாய்பாபா மத்திய நிலையத்தலைவர்.

ஒரு முழுப்பக்கக் கட்டுரை அது. பல தகவல்கள் விடுபட்டிருக்கக் கூடிய வாய்ப்புண்டு.

அந்தவகையில், ‘சொல்லின் செல்வர்’ ராஜதுரையாரின் அக்கால வாழ்க்கையின் உணர்ச்சி கொப்புளிக்கும் ஒரு சிறு பக்கத்தை இங்கே இனிப்பாகத் தருகின்றேன்.

அவரின் இளமைக் காலத்தில் மட்டக்களப்புத் தேனகத்தில் முஸ்லிம் நண்பர்கள் அதிகம். (தற்சமயம் சாணக்கியன் ராசமாணிக்கம் நா. உ. க்கு இருப்பது போன்று!)

மூவர் முக்கியமானவர்கள். காயல் பட்டினம் முகம்மது யூசுப் ஒருவர். மட். மத்திய கல்லூரியில் இவர் கற்ற சமயம் நாடக அரங்கேற்றங்களில் ஆர்வம் அதிகம். அவருக்குப் பக்கபலம் நம் சொல்லின் செல்வர். இரண்டாமவர், ‘பித்தன்’ ஷா என்கிற எழுத்து ஆளுமை. (சமீபத்தில் நூற்றாண்டு வைபவம் நடந்தது) அவரது பிரச்சினையான கதை ஒன்றை, தான் ஆரம்பித்த ‘லங்கா முரசு’ சஞ்சிகையில் துணிந்து வெளியிட்டனர்!

மூன்றாமவரான ‘அன்புதாசன்’ என்கிற அப்துல் காதல் முகம்மது ஹனிஃபாவும் ஓர் எழுத்து ஆளுமையே! கிழமை தோறும் கசப்பையும் இனிப்பையும் முதலில் பிடித்து முகநூலில் பளிச்சிடவைக்கும் முதுசம், அநுராதபுர ஸாஹிரா ஓய்வு நிலை அதிபர் அன்பு ஜவஹர்ஷாவின் தந்தையார்! இந்த அன்புதாசனுடன் சொல்லின் செல்வருக்கு ‘சுதந்திரன்’ காலத்திலிருந்தே நெருங்கிய நட்பு. மட்டக்களப்பு வன்னியார் வீதியில் அன்புதாசன் தன் துணைவி, மூன்று ஆண்பிள்ளைகளுடன் வாழ்ந்த காலத்தில் குடும்பங்களின் உறவும் நெருக்கமாக இருந்தது.

அச்சமயம் அன்புதாசன் வசதி படைத்தவராக இருக்கவில்லை. சொல்லின் செல்வர் தந்தையோ, ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் அருகில் கடைவைத்து முதலாளி நிலை! ஏழை – பணக்காரன் வித்தியாசம் இரு குடும்பத்தாரையும் வித்தியாசம் இரு குடும்பத்தாரையும் பிரித்து வைக்கவில்லை. நட்பும் அப்படியே.

1957- டிசம்பர் குளிர் மாதத்தில் ஒருநாள், அன்பு தாசன் சுகவீனமுற்று, நடமாட முடியாத நிலையில், துணைவியையும் மூத்த மகனார் ஜவஹர்ஷாவையும் (அப்போது வயது 07) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சொல்லின் செல்வர் இராசதுரையார் இல்லத்திற்குச் சென்று வலி நிவாரணத் தைலம் அல்லது களிம்பு வாங்கி வரப்பணித்தார். அவர்கள் முதல்வர் இல்லம் நோக்கிப் பறக்க, அன்புதாசனின் ‘உயிர்ப்பறவை’யும் சிறகடித்துப் பறந்துவிட்டது!

அதே நேரம் மழை கொட்ட, வௌ்ளமும் பெருக்கெடுக்க, அல்லோல கல்லோலம்!

உற்றார் உறவினர் வர இயலாதபடி போக்குவரத்தும் முடக்கம்.

‘அன்பான நண்பனின் மைய்யித்தை பொறுப்பெடுக்கிறார் மட்டுநர் முதல்வர்!

இன்று போல் அன்று ஓட்டமாவடி மஜ்மாநகருக்கு ‘ஜனாஸா’ செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை!

மிகவும் சிறப்பாக, ‘அன்பு தாசன்’ என்ற அன்பு நண்பனின் நல்லடக்கமானது மட்டக்களப்பு முஸ்லிம் மையவாடியில் செய்யப்பட்டது. உற்றதொரு தமிழ் நண்பனின் உபயத்தால்!

இதுவே அன்று தேனகத்தில் நிலவிய தமிழ் – முஸ்லிம் உறவு. அதற்கு உதாரபுருசராக இப்பொழுது 94ஆம் அகவையில் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் சொல்லின் செல்வர். அவர் இன்னுமின்னும் நீடுவாழ்வாராக ஆமீன்!

இனிப்பு-2

கிழக்கிலங்கையில் படைப்பிலக்கிய வட்டாரத்தில் ஒரு ‘வாயில்லாப் பூச்சி!’ “ஆர். எம். நெளஷாத்” என்ற பெயரில் ‘தீரன்’ என்பதையும் ஒட்டி அழகு பார்க்கிறார்.

பெரும்பாலானோர் அணுகிப் பார்க்காத அல்லது முயன்று தோற்ற ஒரு பிரபல தமிழகப் பதிப்புக் கூடாரத்தில் ‘காலச் சுவடு’ தலையை நுழைத்து (ஒரு நாவல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்)

‘நட்டுமை’ (2009) ‘சொல்வதெழுதல் – 90 (2013) என இரு நாவல்களையும், ‘வெள்ளி விரல்’ (2011) சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.

எனினும் அதற்கு முன் தொட்டது படைப்பிலக்கியமன்று வரிக்குதிரை சவாரி! மன்னிக்கவும் புதுக்கவிதை!

இவரை, 80களிலேயே நெருங்கிப் பழகிய ஒருகவிஞர் கல்முனையில் பாவலராகப் பரிணமித்துக் கொண்டிருந்தார்.

அவர் பஸில் காரியப்பர். கிழக்கின் ஒப்பற்ற கவி ஆளுமை. கொழும்பு ஆசிரியத் தொழின் போது என் ஆத்மார்த்த நண்பன் அந்தக் கவிமகனார் இந்தத் தீரனாரை அப்பொழுது எப்படிப் பாடியிருக்கிறார் என்பதை முதலில் சுவையுங்கள்.

“மண்ணின் மடியுள் மறைவாய் வாழ்ந்திருந்தாய் பாதாள அக்கினியுள் பக்குவங்கள் பெற்றாய் உள்ளொளியைப் பெற்றே உலகைத் தரிசிக்கும் ஒரு வாழ்வை விரும்பித் தவம் இருந்தாய் இம்மனிதர் ஆழத்தில் இருளில் உன்னை அடையாளம் கண்டார்கள்...” இப்பொழுது இதையும் சுவையுங்கள்: “முப்பது ஆண்டு யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று.

அந்த யுத்த காலத்தில் அப்பாவித்தனமாக அலைந்து திரிந்தவர்களின் கோலங்களைக் கண்டு மனம் பேதலித்த நிலையில் உளநோயின் விளிம்பில் நிற்கும் என்னைப் போன்ற ஒரு மனிதன் என்ன செய்யலாம்...? ஒன்றில் தற்கொலை புரியலாம். அல்லது ஏதேனும் எழுதலாம். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்.!”

உண்மையே! அதனாலேயே ஒரு தனித்துவப் படைப்பாளியை நாம் பெற்றோம். ஆனாலும் கூட, எழுதத் தீர்மானித்தவர் செய்த வேலை, ஒரு கவிதைச் சிற்றிதழை “தூது”என 1983ல் ஆரம்பித்ததுதான்.

இதுவும் என் நண்பன் பாவலர் பஸீல் காரியப்பர் ஆசிகளுடன், அவர் ஆலோசகராக இருந்த ‘புகவம்’ அமைப்பினர் அனுசரணையில், கல்முனை ஆதம், எஸ். எம்.எம். றஃபீக் இருவரையும் துணை ஆசிரியர்களாக வரித்து வந்ததே. அதுவும் பதினாறு இதழ்கள் மட்டுமே.

இதன் பின்னர், யுத்த சூழ்நிலையில், இராணுவக் கெடுபிடிகளால் மொடாத் தூக்கம்போட்டவர், பத்தாண்டுகளுக்கு மேல் பேனாவைத்தொடாமல், பின் கவிதைப் பக்கம் பார்க்காமல் கதைகளில் கருத்துச் செலுத்தி எட்டுக் கதைகளை எழுதும் வல்லமை பெற்று, ‘வல்லமை தாராயோ’ என்று பொருத்தமான பெயர் சூட்டி 2000ல் ஒரு தொகுப்பு வெளியீட்டிருக்கிறார். இதைக் கூடப் பதிப்பிக்க, பாவலர் பஸீல் காரியப்பரும் ‘புகவம்’ அமைப்பினரும் உந்து சக்திகளாக இருந்துள்ளனர்.

இடையில் ‘மித்திரன்’ இதழில் ஆறேழு கதைகள் எழுதியிருக்கிறார். அவை அவரது “வெள்ளி விரல்” (2011) “தீ ரதம்” (2017) தொகுப்புகளிலும் இடம்பெறாதது. என் கணிப்பில் இவர் மொத்தமாக சுமார் 33.34 கதைகள் எழுதியதோடு, மறுபடியும் மொடாத் தூக்கம் போடப் போய் விட்டார் என்றே பதிவிடவேண்டியதுள்ளது.

ஆனாலும் அதிசயத்திலும் அதிசயம்! எழுதியவற்றுள் கிட்டத் தட்ட முக்கால்வாசி கதைகள் இங்கும் தமிழகத்திலும் பல அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பரிசுகள் பெற்றிருப்பது.

இலங்கையில் இந்தளவு தொகைகதைகளுக்கு பரிசு பெற்ற தீரன், இந்தத் தீரன் ஆர்.எம். நௌஷாத் ஒருவரே! நல்ல இனிப்பு!

மேலும், கவிதை நூற்களும் வெளியிடாமல் இல்லை. ‘அபாயா’ (2015) ‘ஆழித் தாயே, அழித்தாயே (2017) ‘குறு-நெல்’ குறுங்காவியம் (2017) ஆகியனவும், இடைக்கிடை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் நாடகங்கள் பலவும் இந்த மனிதர் வழங்கிவிட்டு.

இப்பொழுது மருதூர் (சாய்ந்தமருது) பழைய மார்க்கட் பாதையில் நுழைந்ததுமே இருக்கிற இல்லத்தில் முகநூலில் மூழ்கிக் கிடக்கும் கசப்புச் செய்தியை இந்த இனிப்பில் நான் கலந்தே ஆக வேண்டியுள்ளது. மன்னிக்கவும். “வல்லமை தாராயோ இவருக்கு இறைவா” எனப் படைத்தவனிடன் கோரி நிற்கிறேன். நீங்களும் இணைவீர்களா?

Comments