மலையகத்தில் கொரோனா தீவிரமடைவதற்கு மது பாவனையும் முக்கிய காரணம் | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் கொரோனா தீவிரமடைவதற்கு மது பாவனையும் முக்கிய காரணம்

நாட்டில் கொவிட் 19 டெல்டா தொற்றுகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இதேவேளை தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் தொய்வின்றி இடம்பெறவே செய்கின்றது. எனினும் இயல்பு நிலை இன்னும் வருவதாய் இல்லை. பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்துப் பிரயத்தனங்களையும் எடுத்தே வருகிறது.

பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் அரசாங்கம் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இந்த யதார்த்தத்தை மக்கள் சரியாக புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. பொதுமக்களின் அலட்சிய போக்கு காரணமாகவே பெருந்தொற்றுக்களின் கொடூரம் உரம் பெற்று காணப்படுகின்றது. சுய பாதுகாப்புக்கான பொறுப்புக் கூறலை பொதுமக்கள் ஏற்காதவரை இந்த அச்சுறுத்தல் தொடரவே போகின்றது. அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் பயன் தருவது பொது மக்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலே அமையும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. தனி நபர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இதன் மூலம் தன்னைச் சார்ந்திருக்கும் குடும்பம், நாடு எல்லாவற்றையும் பாதுகாப்பதற்கான தமது பங்களிப்பினை உறுதிசெய்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த தனிநபர் பாதுகாப்புக்கான அறிவுறுத்தல்களை அப்படியே பின்பற்றுவோர் மிகவும் குறைவு. இதனாலேயே நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது. தற்போது மலையக பகுதிகளும் பெருந்தொற்றின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இங்கு காணப்படும் பெளதிக அமைவு எந்த தொற்று என்றாலும் பட்டென பற்றிக் கொள்ள ஏதுவாகவே அமைந்திருக்கின்றது. இங்கு தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைத்து வருவதால் அச்சம் எற்படவே செய்கின்றது. சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் அநேக இடங்களில் கேள்விக் குறியாகியுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களும் அணிந்தும் இதை முழுமையாக பயன்படுத்தாதவர்களும் இங்கு ஏராளமாகவே உலாவருகிறார்கள். அச்சுறுத்தல்களோ எச்சரிக்கைகளோ எடுபடுவதாக இல்லை.

இவ்வாறானவர்கள் சிறிதும் தயக்கமின்றி ஒன்றுகூடும் இடங்களில் ஒன்றாக மது விற்பனை நிலையங்கள் காணப்படுவது கவனத்துக்குரியது. இந்த மதுப்பிரியர்கள் தாங்கள் எவ்வளவு சுலபமாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கப் போகிறோாம் என்பதை உணராதவர்களாக காணப்படுகிறார்கள். உரைத்தாலும் காது கொடுக்க விரும்பாத மது ஆர்வலர்கள்.

வைத்திய நிபுணர்களோ புகைத்தல் மதுபாவனை மூலம் 14 சத வீதத்திலிருந்து 16 சதவீதம் வரையில் கொரோனா டெல்டா உயிர்க் கொல்லி தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். விழிப்புணர்வு பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையை இந்த மதுபானச் சாலைகள் தோற்றவித்துள்ளன. ஏனெனில் நாட்டிலேயே ஆகக் கூடுதலான மது விற்பனை நிலையங்களை கொண்டுள்ள பிரதேசங்களை உள்ளடக்கியதாக மலையகமே காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நாவலப்பிட்டி ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் அதிகமாக காணப்படும் அனைத்து இடங்களையும் மதுபான விற்பனை நிலையங்கள் ஆக்கிரமித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, கந்தப்பளை, தலவாக்கலை, பசுமலை (ஹோல்புறூக்), மன்ராசி, அக்கரபத்தனை, டயகம, லிந்துலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஹட்டன், கொட்டகலை போன்ற இடங்களில் பல மது விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.

இதுதவிர சட்ட விரோத மது விற்பனைக் கூடங்கள் சந்திக்குச் சந்தி தோட்டத்துக்குத் தோட்டம் மலிந்து காணப்படவே செய்கின்றன. சட்டத்தின் கண்களில் சாதுர்யமாக மண்ணைத் தூவிவிட்டு இவை செயல்படுகின்றன. தற்போதைய முடக்க நிலையால் அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாராயம் பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் சன நடமாட்டத்துக்குக் குறைவில்லை. சம்பளம் போடும் நாட்களில் நிரம்பி வழியும். பாதுகாப்பு கவசங்கள், சுகாதார இடைவெளி எல்லாமே துச்சம் தான்.

இதுதவிர சட்ட விரோத மது விற்பனைக் கூடங்கள் சந்திக்குச் சந்தி தோட்டத்துக்குத் தோட்டம் மலிந்து காணப்படவே செய்கின்றன. சட்டத்தின் கண்களில் சாதுர்யமாக மண்ணைத் தூவிவிட்டு இவை செயல்படுகின்றன. இதுபற்றி மலையகத் தலைமைகள் வாய் திறப்பதாக இல்லை. ஏதோவொரு வகையில் சில தலைமைகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மது விற்பனை நிலையங்களோடு தொடா்பு இருக்கவே செய்கிறது.

தோட்டத் தொழிலாளியின் தன்மானத்தை விட பணம்தான் இங்கு செல்வாக்கு செலுத்துகிறது. தொழிலாளர் குடும்பங்கள் பலவற்றின் பொருளாதாரம் மதுபான நிலையங்களுக்கே தாரை வார்க்கப்படுகின்றன. இதனால் வறுமைப் பிடியிலிருந்து மீட்சிப் பெறுவதற்கு மார்க்கமே இல்லை என்று ஆகின்றது.

இவ்வாறான குடும்பங்களில் இருந்தே இளம் சிறார்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். எனவே தான் பெருந்தோட்ட மக்களை ஆட்டிப் படைக்கும் வறுமை நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இந்த மதுபான நிலையங்கள் கொள்ளப்படுகின்றன.

தற்போது கோரத்தாண்டவம் ஆடும் கொவிட் 19 தொற்று டெல்டா வைரஸ் தொற்றால் பீடிக்கப்படுவோர் சத்தான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆலோசனைகள் சுட்டுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஊட்டம் நிறைந்த உணவுகள் அவசியமாகின்றன. ஆனால் பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் பல குடும்பங்களை பொறுத்தவரை வீட்டில் சந்தோஷமான சமாச்சாரங்கள் ஏதும் நடந்தால் மட்டுமே சத்தான சாப்பாடு என்னும் நிலைமையே காணப்படுகிறது.

எனவே இங்கு நோய் வராமலே தடுப்பதற்கான வேலைத் திட்டங்களே தேவையாக உள்ளது. குறிப்பாக குடும்பத் தலைவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது முக்கியமாகின்றது. குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அந்தக் குடும்பம் முழுவதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட வேண்டி நேரிடும். தவிர, தனிமைப்படுத்தல் போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதான வீட்டு வசதியின்மையால் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடும். எனவேதான் ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பு குறித்து போதிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இன்றைய நிலையில் வைரஸ் உருமாறி வெவ்வேறு வடிவங்களில் வீரியம் பெற்று பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. எனவே எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் விதித்துள்ள சகாதார விதி முறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக தற்போது தோட்ட நிர்வாகங்களாலும் ட்ரஸ்ட் நிறுவனத்தாலும் கையாளப்படும் பெருந்தோட்ட சுகாதார சேவையை உடனடியாகவே தேசிய பொது சுகாதார சேவையின் கீழ் கொண்டு வந்தாக வேண்டியுள்ளது. அதனுடன் மலையக பிரதேசங்களில் அளவுக்கு அதிகமாக செறிந்து இயங்கும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு ஆவன செய்வது நல்லது. வந்தபின் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதைவிட வருமுன் காத்துக் கொள்வதே காத்திரமாக இருக்கும் என்பதை பெருந்தோட்ட மக்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.

இந்த இக்கட்டான வேளையிலாவது மலையக தலைமைகள் யதார்த்தபூர்வமாக சிந்தித்து பிரச்சினைகளைக் கையாள முன்வருவது காலத்தின கட்டாயம். தற்போது முக்கியமானவைகளாக இனம் காணப்பட்டுள்ள மலையக சுகாதார மேம்பாடு மதுபானச் சாலைகள் மூடப்படுதல் ஆகிய இரு விடயங்களை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்வு பெற்றுத் தருவார்களாயின் வரவேற்கலாம். மலையகத்தில் கொரோனா தீவிரமடைவதற்கு மதுபாவனையும் முக்கிய காரணம்

பன்.பாலா

Comments