சிங்கள சமூக ஆதரவின்றி தமிழருக்குத் தீர்வில்லை | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

சிங்கள சமூக ஆதரவின்றி தமிழருக்குத் தீர்வில்லை

சமீபத்தில் முன்னாள் நிதியமைச்சரும் தமிழர் விவகாரத்தில் ஒரு மென்மைப்போக்கைக் கடைப்பிடித்த வருமான மங்களசமரவீர தீவிர கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து பாராளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டாலும் அரசியல் விமர்சனத்தை அவர் நிறுத்தவில்லை.ஜோன் கொத்தலாவலை முன்னாள் இலங்கைப் பிரதமருக்குப் பின்னர் இலங்கை அரசியலின் பேசாப் பொருளை எல்லாம் பேசியவர். பெற்றோரையும் ஆசிரியர்களையும் காலில் விழுந்து வணங்குங்கள். அரசியல்வாதிகளை அல்ல என்று கூறும் தைரியம் அவருக்கு இருந்தது.

எனினும் மங்கள சமரவீரவின் மறைவை இலங்கைத் தமிழ் ஊடகங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. தமிழர் பிரச்சினையின் நியாயத்தை நன்குணர்ந்திருந்த அவர் அதிகார பரவலுடன் கூடிய ஒரு தீர்வை விரும்பினார்.

ஆனால் இலங்கைத் தமிழர்கள் அவரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அறியவில்லை. யாரோ ஒரு சிங்களவர் என அவரை ஒதுக்கிவிட முடியாது. மங்கள போன்ற நியாயத்தின் பக்கம் நிற்கும் அரசியல் பிரமுகர்களை அலட்சியமாக எடுத்துக் கொள்வதால்தான், தமிழர் தொடர்பான விவகாரங்களில் அறிவு கொண்டவர்களும், மென்மையான போக்கை அனுசரிப்பவர்களும் நியாய வாதங்களை முன்வைக்கக் கூடியவர்களும் தமிழர்களுக்காக வெளிப்படையாகப் பேசினால் அது தமக்கு சாதகமற்ற சூழல்களை உருவாக்கும் என்பதற்காக மௌனம் காத்து விடுகின்றனர். மேலும்இத்தகையோரை தமிழ் சமூகமும் தொடர்ந்தும் புறக்கணித்துத்தான் வந்திருக்கிறது. தோழர் வாசுதேவ நாணயக்கார தமிழ் சமூகத்துக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர். எனவே சிங்கள வாக்காளர் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு நியாயத்தைக் கொண்டிருக்கிறது. தேர்தல்களில் அவருக்கு ஆயிரம், 1500 வாக்குகளே விழுந்தன. எனினும் வாசுவை தமிழர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சடர்டே ரிவியூ’ என்றொரு ஆங்கில பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியராக கடமையாற்றியவர் ஒரு சிங்கள கனவான். பெயர் மேர்வின் டி சில்வா. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். இதனால் அரசின், அதிகாரிகளின், படையினரின் எதிர்ப்புகளை அவர் சமாளிக்க வேண்டியிருந்தாலும் தன் கொள்கையை அவர் கைவிடவில்லை. எனினும் தமிழ் சமூகம் அவருடன் இருக்கவில்லை. அவரை எத்தனை தமிழர்கள் அறிவார்கள் என்பதே கேள்விக்குறிதான். தோழர் வாசுதேவ நாணயக்கார கொள்கையளவில் அதே பழைய மனிதராகவேதான் இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கடந்த வாரம் இலங்கையின் புகழ்பெற்ற ‘ஜிப்ஸிஸ்’ இசைக்குழுவின் தலைவரும் பிரபல பாடகரும் இலங்கையின் அரசியலை விமர்சித்து துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவருமான சிங்களப் பாடகர் சுனில் பெரேரா தன் 69வது வயதில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி மரணமானார். தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. சகோரதத்துவத்துக்காக குரல் எழுப்பியவர் அவர். இப்படிப் பல தமிழர்களுக்காக பேசியவர்கள் மற்றும் பேசக் கூடியவர்களை தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை. இத்தகையோருக்கு முக்கியத்துவமளித்து அவர்களை தமிழ் சமூக சூழலுக்குக் கொண்டு செல்ல வேண்டியது தமிழ் ஊடகங்களின் கடமை. அவை அதைச் செய்வதில்லை. தமிழ் சமூகத்தின் இப் பாராமுகம் காரணமாக நியாயமாகப் பேசக் கூடிய சிங்களவர்கள் வாயை மூடிக் கொள்கிறார்கள்.

தமிழர் பிரச்சினைகளை – அரசியல் உரிமைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய தகுதி படைத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ்க் காங்கிரசும் மட்டுமே என்றும் மேலதிகமாக இந்தியாவும் சர்வதேசமும் இவர்களுக்காக வந்து பேசி பிரச்சினையை முடித்து வைக்கும் என்றும் உண்மையாகவே தமிழ்ச் சமூகம் நம்புகிறதா? அவ்வாறு நம்பச் செய்து அரசியல் அறுவடை செய்யலாம் இக் கட்சிகள் கருதுகின்றனவா? இதற்கான பதிலை தமிழ்ச் சமூகத்திடமே விட்டு விடுவோம்.

உண்மையைச் சொல்வதானால், தமிழர் விவகாரத்தில் யாரும் எந்த மெஜிக்கும் செய்துவிட முடியாது. அதற்கான காலமும் கடந்து விட்டது. அருமையான சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போய்விட்டன. மேலும் சிங்கள இனவாதம் சட்டென பற்றிக் கொள்ளும் தீக்குச்சியாகவே இன்றைக்கும் ஜீவனுடன் உள்ளது. இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தலைமைகள் வெறுமனே வெறுப்பரசியல் பேசி தொடர்ந்தும் தமிழர்களை கொம்பு சீவி வைத்திருந்து தேர்தல் பலன்களை அறுவடை செய்யப் போகிறார்களா? அல்லது தமிழ்ச் சமூகம் தொடர்பாக சிங்களவர் மத்தியில் மாறிவரும் கருத்துருவாக்கங்களுக்கு இசைவானதும் அதை மேலும் விருத்தி செய்வது போலவும் சிங்கள மக்களின் நம்பிக்கையை வளர்ப்பது போன்ற கருத்துகளை வெளியிடுவார்களா? என்ற கேள்விக்கு தமிழ் அரசியல்வாதிகள் பதில் சொல்லியாக வேண்டும்.

தமிழர்களுக்கு மேலும் அரசியல் உரிமை வழங்கப்படுவதே நியாயம் அதை அவர்கள் துஷ்பிரயோகம் செய்யமாட்டார்கள். பல விடயங்களில் அவர்களுக்கு தேசிய ரீதியான சிந்தனை

உள்ளது. ஆக்க பூர்வமான கருத்துகளை அவர்கள் முன் வைக்கிறார்கள். பிளவுபடாத ஒரு நாட்டுக்குள் போதுமான அரசியல் உரிமைகள் வழங்கப்படுவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டைத் தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வை சிங்கள மக்கள் மத்தியிலும்

பௌத்த பிக்குமார் மத்தியில் ஏற்படுத்த முடியுமானால் அதுவே பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும். சிங்களவர்கள் தமிழர் பிரச்சினை தொடர்பாக தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் அப்படித்தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சிங்களவர்களுக்கு புரியும் வகையில் உண்மை நிலையை எப்படி எடுத்துச் சொல்வது என்பது பற்றி தமிழ்த் தலைமைகள் யோசிக்க வேண்டும். தமிழர்களை சிங்களவர்களிடமிருந்து அப்புறப்படுத்தி ஒரு தீவாக வைத்திருப்பது தமிழ்த் தலைமை அரசியலுக்கு வேண்டுமானால் இலாபகரமான அமையலாம். தமிழ் மக்களுக்கு அல்ல.

Comments