கினியாவில் ஆட்சிக் கவிழ்ப்பும் இராணுவத்தின் போலி ஜனநாயக முகமும் | தினகரன் வாரமஞ்சரி

கினியாவில் ஆட்சிக் கவிழ்ப்பும் இராணுவத்தின் போலி ஜனநாயக முகமும்

உலக ஒழுங்கானது இராணுவ மற்றும் கிளர்ச்சி படைகளின் ஆட்சிகளை அரவணைத்து பயணிக்கும் சமிக்ஞைகளையே அண்மைய சர்வதேச அரசியல் தலைப்பு செய்திகள் வெளிப்படுத்தி வருகின்றன. அண்மையில் ஆப்கானிஸ்தானில் சர்வதேச அங்கீகாரம் பெற்றிருந்த அரசாங்கத்தை வன்முறை மூலம் அகற்றி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது சர்வதேச நாடுகள் பரவலாக விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த போதிலும் செயற்பாட்டு தளத்தில் தலிபான்களுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித எதிர்ப்பு நடிவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. குறிப்பாக, தலிபான்களை எதிர்த்து போரிட்ட வடக்கு கூட்டணி படைக்கும் எவ்வித ஆதரவினையும் உலக நாடுகள் வழங்கியிருக்கவில்லை. இது தலிபான்களை சர்வதேசம் முழுமையாக புறக்கணிக்காமையையே வெளிப்படுத்தியது. இவ்வரிசையிலேயே தற்போது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகிய கினியா நாட்டின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இக்கட்டுரை கினியா இராணுவ ஆட்சியின் பின்னரான அரசியலை தேடுவதாவே உருவாக்கப்பட்டுள்ளது.

1958ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும், 2010ஆம் ஆண்டு முதலேயே கினியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று ஆட்சியமைக்கப்பட்டது. முதல் தேர்தலில் Rally of the Guinean People' என்ற கட்சியைச் சேர்ந்த ஆல்பா காண்டே அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த வருடம் (2020) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மூன்றாவது முறையாக அவரது தலைமையிலான கினியாவின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 05.09.2021 அன்று, கினியா தலைநகர் கொனார்கியிலுள்ள அதிபர் மாளிகைக்கு வெளியில் பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, அரசுத் தொலைக்காட்சியைக் கைப்பற்றிய இராணுவ தளபதி மமாடி டௌம்பௌயா(Mamady Doumbouya) அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. எனது தலைமையிலான தேசிய மேம்பாட்டுக்குழு, கினியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் எனவும் ஒற்றைத் தலைவரின் ஆணைக்குக் கீழ் மொத்த நாடும் செயல்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்.

கினியாவின் ஆட்சி கவிழ்ப்பின் அரசியலை அணுகுவதற்கு முன்னர், ஆட்சியிலிருந்த ஆல்பா காண்டே மற்றும் ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ள இராணுவ தளபதி மமாடி டௌம்பௌயா பற்றிய புரிதலும் அவசியமாகிறது.

முதலாவது, இன்று கினியா இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆல்பா காண்டே “கினியாவின் மண்டேலா" என்று விவரிக்கப்பட்டார். பல தசாப்தங்களாக அவர் பல கினிய சர்வாதிகாரிகளை சத்தமாக விமர்சித்தார். இது அவரை பிரெஞ்சு நாடுகடத்தலுக்கு கட்டாயப்படுத்தியது. 2010இல் அவர் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியானார். கனிம வளங்களை கொண்டுள்ள போதிலும் ஊழல் நிறைந்த ஆட்சிகளால் வறிய நிலையில் காணப்பட்ட கினியாவை நிலையான ஜனநாயகமாக மாற்றுவதாக காண்டே உறுதியளித்தார்.

அவ்வாறு செய்ய, அவர் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோரை கினியா நலன்சார் ஆலோசகர்களாக பின்பற்றினார். இது இவரை மேற்குக்கு அதிக நம்பிக்கைக்குரிய தலைவராக காட்சிப்படுத்தியது. ஆனால் காண்டே விரைவில் தனது பெரிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிறைய மற்றும் விரைவாக பொருளாதார மாற்றம் தேவை என்று உணர்ந்தார். அதிகாரத்துவ சிவப்பு நாடாவின் வேகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வாக்காளர்களின் விருப்பத்தேர்வின் அளவில் முதலீடாகவும் வரையறுக்கப்பட்ட மேற்கத்திய நிதி உதவிக்காக காத்திருப்பதை விட, அவர் சீனாவுக்கு திரும்பினார். அதன் கொம்யூனிச தலைமையால் பெரிய தொகை, வேகமாக பகிர முடியும் என்றும் நம்பினார்.

இரண்டாவது, கொந்தளிப்பான மேற்கு ஆப்பிரிக்க மாநிலத்தில் அதிகாரத்தை தனது பிடியில் வைத்திருக்க உதவுவதற்காக கினியா ஜனாதிபதியை தூக்கியெறிந்த இளம் கவர்ச்சியான சிப்பாய், கேணல் மமாடி டௌம்பௌயா முன்னாள் பிரெஞ்சு தளபதி ஆவார். ஜனாதிபதி ஆல்பா காண்டேவின் கீழ் பரவலான ஊழல், மனித உரிமைகளை புறக்கணித்தல் மற்றும் பொருளாதார முறைகேடு ஆகியவற்றின் காரணமாக இராணுவத்திற்கு ஆட்சியை கைப்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கூறியுள்ளார்.

ஆட்சியை கைப்பற்றிய பின்னரான முதலாவது ஊடக அறிவிப்பையும் மமாடி டௌம்பௌயா பிரான்ஸ் ஊடகத்திலேயே வெளிப்படுத்தியதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பின்னணியில் கினியாவின் ஆட்சி கவிழ்ப்பும் இராணுவ ஆட்சி உருவாக பூகோள அரசியல் போட்டிக்களத்தையும் உள்வாங்கியுள்ளதை அறிய முடிகிறது. எனவே கினியாவில் இராணுவ ஆட்சி கைப்பற்றப்பட்ட பின்னணியிலுள்ள பூகோள அரசியல் விடயங்களை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.

ஒன்று, கினியா ஆட்சிக்கவிழ்ப்பு அமெரிக்க- − சீன போட்டியின் விளைவுகளில் ஒன்றாகவே அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, கினியாவில் இராணுவ ஆட்சி உருவான செய்தி பரவியதும், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்குசார் நிலைப்பாட்டுடையவர்கள் மமாடி டௌம்பௌயாவின் செயல்களைக் கண்டனம் செய்தனர். அதேநேரம், இராணுவம் ஜனநாயகத்திற்கு திரும்பும் என்று அவர் கூறியதை வரவேற்றிருந்தனர். இது மேற்கு கினியாவின் ஆட்சி கவிழ்ப்பை எதிர்க்கவில்லை என்பதையே உறுதி செய்தது. மாறாக உலக அரசியலில் இதுவரை இராணுவ ஆட்சிகளை வரவேற்று வந்த சீனா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சீன செய்தித் தொடர்பாளர் வொங் வென்பின், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதி முயற்சிகளை சீனா எதிர்க்கிறது மற்றும் ஜனாதிபதி காண்டேவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கான வலுவான காரணம் கினியா ஜனாதிபதியுடன் சீனா அதிகம் நட்பை பாராட்டியிருந்தமை ஆகும். மேற்கினதும் சீனாவினதும் முரணான கருத்துநிலைகள் கினியாவின் ஆட்சி கவிழ்ப்பில் காணப்பட்டுள்ள பூகோள அரசியல் போட்டியை உறுதிசெய்வதுடன், மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப மென்வலு அரசியலுக்குள் நகரும் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை மாற்றமும் வெளிப்படுத்தப்படுகிறது.

இரண்டு, கினியாவில் ஆயுத முனையில் ஜனநாயக ஆட்சியாளர் சிறைபிடிக்கப்பட்டு இராணுவ ஆட்சி நிறுவப்பட்ட போதிலும் இராணுவ தளபதி உருவாக உள்ள இராணுவ ஆட்சிக்கு ஜனநாயகத்தின் போலி முகத்தையே முன்வைக்கின்றார். இது அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கில் வீரியம் பெற்றுள்ள ஜனநாயகத்தின் போலியை இராணுவ ஆட்சியளார்களும் தொடர வழி ஏற்படுத்தியுள்ளது. கேணல் மமாடி டௌம்பௌயா முன்னாள் பிரெஞ்சு தளபதி என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் போலி வடிவங்களில் அதிகம் பரிச்சியப்பட்டவர் என்ற அடிப்படையிலேயே, இராணுவ ஆட்சி அறிவிப்பில் ஜனநாயகத்தை முன்னிறுத்தி, தனது தலைமையிலான தேசிய மேம்பாட்டுக்குழு, கினியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் எனும் கருத்தை பதிவு செய்துள்ளார். இவ்அறிவுப்பை இன்றைய சர்வதேச சக்திகளின் எதிர்ப்பிலிருந்து பாதுகாப்பதற்கான அரணாக முன்னிறுத்தியுள்ளார்.

மூன்று, கினியாவில் இடம்பெற்றுள்ள இராணுவ ஆட்சி கினியா மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவே சர்வதேச செய்திகள் சொல்கின்றன. குறிப்பாக மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றி நீண்டகாலம் ஆட்சி புரியும் ஆல்பா காண்டேவின் ஆட்சியை கினியா மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை செய்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாட்சி மாற்றம் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக, ஆல்பா காண்டேவின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தும் மூன்றாவது முறையாகச் சர்ச்சைக்குரிய வகையில் அதிபர் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையிலேயே, அவரைக் கைதுசெய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதாகக் கினியா இராணுவம் அறிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சியினர் பலரும் வீதியில் இறங்கிக் கொண்டாடி வருவதாகத் தெரிகிறது. மேலும், பொதுமக்களில் பலரும் இராணுவத்தின் பக்கம் நின்று, ஆல்பா வீழ்த்தப்பட்டிருப்பதைக் கொண்டாடிவருவதாகச் சொல்லப்படுகிறது. இது இராணுவ ஆட்சிக்கான அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்ற செய்தியை முதன்மைப்படுத்துகிறது.

நான்கு, உலக சமாதானத்தை நிலைநாட்ட நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சர்வதேச நிறுவனங்களும் இராணுவ ஆட்சிக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்ற தவறி வருகின்றன. கினியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இராணுவ புரட்சிக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் எதிர்வினையாக, கினியாவின் நிலைமையை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்கின்றேன். துப்பாக்கியின் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் மற்றும் ஜனாதிபதி ஆல்பா காண்டேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறேன் என்று டுவிட்டர் தளத்தில் ட்வீட் செய்ததுடன் கடந்து சென்றார். இது மாறிவரும் உலக ஒழுங்கின் ஆட்சி முறை மாற்றங்களை சர்வதேச நிறுவனங்களும் நிதானமாக ஏற்றுக்கொள்கின்றன என்ற ஆருடத்தையே ஆதரிக்கிறது.

எனவே, பூகோள அரசியல் போட்டிக்குள் கினியாவின் அரசியல் சிக்குண்டதன் சாட்சியமாகவே ஆட்சி கவிழ்ப்பு அவதானிக்கப்படுகிறது. மேலும் மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் வெளிப்படையான இராணுவ ஆட்சிகளும் ஜனநாயக முகத்துடன் சமூக ஜனநாயக இராணுவ ஆட்சி என்ற புதிய சித்தாந்தத்துடன் உருவாக உள்ளமைக்கான முன்களமாகவே கினியா ஆட்சி கவிழ்ப்பும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்

Comments