ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நாளன்றே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லர, இலங்கை தொடர்பில் தனது

அவதானிப்புகளை முன்வைக்கவுள்ளார்.

46/1 பிரேரணைக்கு அமைய அவருடைய இந்த அவதானிப்புகள் அமையும். மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 பக்கங்களைக் கொண்ட பதிலை கொழும்பிலுள்ள ஐ.நா அமைப்பின் தலைவரிடம் ஏற்கனவே கையளித்துள்ளார்.

பிரேரணையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு முடியும் தறுவாயில் உள்ள விடயங்கள் பற்றிய விளக்கத்தை வழங்கும் விதமாக அந்த அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையின் பிரதிகள் கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் ஜெனீவாவில் உள்ள இராஜதந்திர சமூகங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம் மற்றும் நிலைமாற்றுகால நீதிக்கான செயற்பாடுகள், பொறுப்புக் கூறல் போன்ற பல்வேறு விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் கொவிட் தொற்றுநோய் சூழலுக்கு மத்தியிலும் மனித உரிமை விடயங்களில் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

'உள்நாட்டில் பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சர்வதேச ரீதியில் சாட்சிகளைச் சேகரிப்பதற்கான கட்டமைப்பை இலங்கை நிராகரிக்கிறது. குறிப்பிட்ட நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் இணக்கம் இல்லாமல் பொறுப்புக் கூறல் பொறிமுறை மற்றும் அவை தொடர்பாக முன்னெடுக்கப்படக் கூடிய அரசியல் மயப்பட்டவையாகவே அமையும் என்பதுடன், மனித உரிமை நோக்கங்களின் அடிப்படையில் சரியானதை இதன் ஊடாக அடைய முடியாது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'மேலும், கொவிட் -19 தொற்றுநோய் உட்பட ஆக்கபூர்வமான மனிதாபிமான செயல்முறைகளுக்கு நிதி ஆதாரங்கள் மிகவும் தேவைப்படும் சூழ்நிலையில், ஜெனீவாவில் மற்றொரு அரசியல் உள்நோக்க முயற்சிக்கு நிதி செலவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது. உலகின் ஏனயை சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சர்வதேசத்தின் கவனம் குவிக்கப்பட வேண்டிய சூழல் இல்லையென நம்புகிறது' என்றும் இலங்கை அரசாங்கம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வதற்காக விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழு பல்வேறு தரப்பினரின் சாட்சியங்களைப் பதிவு செய்து வருவதுடன், இந்த ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது.

ஏற்கனவே இதன் இடைக்கால அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கடந்த ஜுலை மாதம் கையளிக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த கருத்துக்களும் இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் காணாமல் போனோர் அலுவலகம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து தரவுகளைச் சேகரித்து அடுத்த கட்டத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே நாளைய தினம் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலங்கை எதிர்கொள்கிறது.

சர்வதேச உறவுகளைக் கையாள்வதில் அனுபவம் மிக்கவரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருப்பது இலங்கை அரசுக்கு ஒரு பலமாக இருக்குமென்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எனவே இம்முறை ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

'மேலும், கொவிட் -19 தொற்றுநோய் உட்பட ஆக்கபூர்வமான மனிதாபிமான செயல்முறைகளுக்கு நிதி ஆதாரங்கள் மிகவும் தேவைப்படும் சூழ்நிலையில், ஜெனீவாவில் மற்றொரு அரசியல் உள்நோக்க முயற்சிக்கு நிதி செலவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது. உலகின் ஏனயை சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சர்வதேசத்தின் கவனம் குவிக்கப்பட வேண்டிய சூழல் இல்லையென நம்புகிறது' என்றும் இலங்கை அரசாங்கம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைத் தெளிவுபடுத்துவதில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிளவுபடும் நிலை ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் வகையில் கடிதத்தை அனுப்பும் விடயத்தில் இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தமது நிலைப்பாட்டை கடிதம் மூலம் அனுப்பி வைத்தன. இதில் தமிழரசுக் கட்சி இணைந்து கொள்ளவில்லை.

இது கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமைந்து விட்டது. கொவிட்-19 சூழ்நிலையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு சிரமப்பட்டிருக்கும் நிலையில், வழமையான பாணியில் சர்வதேசத்தைக் காண்பித்து அரசியல் செய்யும் முயற்சியிலேயே தமிழ் அரசியல்வாதிகள் பலரும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டிருப்பின் அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதற்காக தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இருந்த போதும் இதற்கு சர்வதேசம் மாத்திரம்தான் தீர்வா என்பதை அவர்கள் தமக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மூன்றாவது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. இதுவரை காலத்தில் தொடர்ச்சியாக ஐ.நாவிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகள் எதனையும் அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த வேளையில் கூட சர்வதேசத்தின் தலையீட்டுடன் அவர்களால் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இவ்வாறான பின்னணியில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் செப்டெம்பர் மாதமும் மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் ஓங்கிக் குரல் கொடுப்பதும், பின்னர் அது பற்றிப் போசாமல் இருப்பதும் வழமையாகிப் போய் விட்டது. இந்த நிலைமையை மாற்றி அன்றாடம் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்புடன் செயற்பட அவர்கள் முன்வர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் உண்மையான வேண்டுகோளாக உள்ளது.

பி.ஹர்ஷன்

Comments