சாமானியனின் மனசாட்சியாகத் திகழ்ந்த சுனில் பெரேரா என்ற மகா கலைஞன் | தினகரன் வாரமஞ்சரி

சாமானியனின் மனசாட்சியாகத் திகழ்ந்த சுனில் பெரேரா என்ற மகா கலைஞன்

போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டு இலங்கைக்கு வந்ததும் கரையோரப் பகுதிகைளக் கைப்பற்றி ஒல்லாந்தரிடம் தோல்வியடையும் வரை ஆட்சி செய்ததும் நாம் அறிந்த விடயங்கள். அவர்களது சருமநிறம், நடையுடை பாவனைகள், உணவு பழக்க வழக்கங்கள் இலங்கையரை ஆச்சரியப்படுத்தின. எனவே சில பழக்க வழக்கங்களை அவர்களிடமிருந்து நம்மவர்கள் கற்று கொண்டனர். தோரணங்கள் அமைப்பது, விளக்கு அலங்காரங்கள், விருந்து நடைமுறைகள், ருசியான மாமிச உணவு தயாரிப்பு முறைகள் என்பன அவர்களிடமிருந்து நம்மிடம் வந்தவைதான்.

அவர்களிடமிருந்து சிங்கள சமூகம் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், பைலா பாடல் இசையும் கப்பிரிஞ்ஞா நடனமும்தான். இதை சிங்கள பைலா இசை வடிவமாகத் தந்தவர் வொலி பெஸ்டியன் என்ற பறங்கியர். அவரைத் தொடர்ந்து எம்.எல். பெர்ணான்டோ பைலா சக்கரவரத்தி எனப் புகழ் பெற்றார். எம்.எஸ். பெர்ணான்டோ பைலா இசை மேடைகளில் பெரும்புகழ்பெறவும் பல சிங்கள இசைக் குழுக்கள் தெற்கிலும், ஏ.ஏ. மனோகரன், பரமேஸ் – கோணேஸ் என்போர் தமிழில் பொப்பாடகர்களாகவும் தோன்றினர். அறுபதுகளை இவ் வகையில் பொற்காலம் எனலாம்.

மொறட்டுவையிலும் பல இசைக்குழுக்கள் தோன்றின. திருமண வீடுகளில் தெரு முனைகளிலும் இவர்கள் பைலா பாடல்களையும் பொப்பாடல்களயும் இசைத்தனர். இடையே, ஸ்பானிய மெக்சிகன் இசைப் பின்னணி கொண்ட புதிய பாணி பாடல்களும் வந்தன. ரேடியோ சிலோனையும் திரையரங்குகளையும் விட்டால் வேறு பொழுது போக்கு இல்லாத நிலையில் இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கு பெருங் கூட்டம் கூடியது. அறுபதுகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் வாய்ப்புகள் காணப்பட்டதால் ஆங்கிலப் பாடல்களை இசைக்கும் இசைக் குழுக்களுக்கு சுற்றுலா ஹோட்டல்களில், இரவு கிளப்புகளில் வாய்ப்புகள் கிட்டின. இவ் வகையில் கே லோர்ட்ஸ், ஸ்பீட்ஃபயர்ஸ், ஜெட்லைனர்ஸ் போன்ற இசைக்குழுக்கள் கொழும்பில் பிரபல்யம் பெற்றன. மினோன் எண்ட் ஜெட்லைனர் என்ற இசைக்குழு பெரும்புகழ் பெற்று பின்னர் இந்தியா, சிங்கப்பூர், ஹொஸ்னெஸ் எனப் பல நாடுகளில் அக்குழு நிகழ்ச்சிகளை நடத்தியது.

இக் காலப்பகுதியில் தோன்றிய ஒரு சிறு இசைக்குழுதான் ஜிப்ஸீஸ் ஓய்வுபெற்ற இராணுவ வீரரான என்டன் பெரேரா ஒரு இசைப் பிரியர். மொறட்டுவையை சேர்ந்தவர். மொறட்டுவை ஒரு சிறிய மீன்பிடிக் கிராமம். போர்த்துக்கேயர் இங்குதான் தமது கப்பல்களை பழுதுபார்த்தனர். ஒல்லாந்தர் காலத்தில் மரத்தாலான கப்பல்களை கட்டும் தொழிலும் இங்கேயே நடைபெற்றது. மரங்களே இல்லாத ஒரு கடற்கரைப் பகுதியில் முழு இலங்கைக்கும் மரத்தளவாடங்களைத் தயாரித்து அனுப்பும் தச்சுத் தொழில் செழித்து வளர்ந்தது எப்படி என்பதற்கான பதில் போர்த்துக்கேயரில் இருந்து ஆரம்பிக்கிறது.

எனவே இது கத்தோலிக்கரும் பறங்கியரும் வாழும் பகுதியாக மாறிப்போனதால் கூடவே இசையும், பாடலும், நடனமும் கொண்டாட்டமும் நிறைந்த பகுதியாகவும் விளங்கியது. பல சிங்கள இசைக்குழுக்கள் மொறட்டுவையில் பிறந்தவைதான். தாம் மொறட்டுவையைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதில் இந்த பாடகர்களுக்கு ஒரு தனிப்பெருமை. ஒரு சிங்கள பைலா பாடலில் ‘நாங்கள் பாடியதும் மூடிக் கிடக்கும் பாழடைந்த வீட்டுக் கதவுகள் எல்லாம் தானே திறந்து கொள்ளும்’ என்ற வரிகள் மொறட்டுவையின் இசை பாரம்பரியம் பற்றிப் பேசும்.

என்டர் பெரேராவுக்கு பத்து குழந்தைகள். அவர்களில் ஒருவர் சுனில் பெரேரா. 1971இல் என்டல் ஜிப்சீஸ் குழுவை ஆரம்பித்தார். சுனிலுடன் அவரது சகோதரர்களான நிஹால், லால், நிமால், பியால் ஆகியோரும் இணைந்து ஜிப்ஸீஸ் குழுவை நடத்தினர். தந்தை என்டர் பெரேரா தன் சகோதரர் கிறிஸ்டி பெரேராவுடன் சேர்ந்து ‘உஸ்வத்த’ என்ற பெயரில் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். குளுகோரச ஜுஜுப்ஸ் என்ற இனிப்பும் பண்டம் உஸ்வத்தையின் மிக வெற்றிகரமான தயாரிப்பு. இன்று பெரிய நிறுவனமாக வளர்ந்து கிளை பரப்பியிருந்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜிப்ஸீஸ் குழுவோ அல்லது சுனில் பெரேராவோ உஸ்வத்த நிறுவனத்தோடு தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டதில்லை. எனவே சுனிலோ அல்லது அவரது குடும்பமோ அந் நிறுவனத்தின் பங்குதாரர் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

சுனில் 1952செப்டம்பர் 14ம் திகதி மொறட்டுவையில் பிறந்தார். இயற்பெயர் ஐவர் சில்வெஸ்டர் சுனில் பெரரேரா. மொறட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியிலும் பின்னர் பம்பலப்பிட்டி பீட்டர்ஸ் கல்லூரியிலும் சுனில் கல்வி பயின்றார். இயல்பிலேயே இசையில் அதிக நாட்டம் என்பதால் க.பொ.த சாதாரண தரத்துக்கு அப்பால் செல்ல முடியவில்லை. எனவே இசை அவரை சிறந்த கிட்டார் கலைஞராக உருவாக்கியது. பாட்டு எழுதுவதும் இசை அமைப்பதும் கைவரப் பெற்றது. இயற்கையாகவே எவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக் குரல் அவருடைது. பைலா மற்றும் பொப்பாடல்கள் கைவரப்பெற்றன. எந்தப் பாடலையும் ஒப்பேற்றிவிடக் கூடிய சாரீரம் இயற்கையாகவே அமைந்தது என்றால், அவர் கற்பனையில் உதித்த பாடல்களும் ஏனைய பாடகர்களின் பாடல்களைவிட தனித்துவம் கொண்டு விளங்கின.

சுனில் 1981ம் ஆண்டு கீதா குலதுங்க என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சஜித், கயான் என இரு மகன்மார். ரெஹானா, மனிஷா என இரு மகள்மார். தந்தை என்டன் பெரேரா தன் மகன் சுனில் மருத்துவராக வேண்டுமென கனவு கண்டாலும் தனித்துவம் கொண்ட சிங்களப் பாடகராக இறுதிவரை தனி இராச்சியமே நடத்தினார். குருமிட்டோ, நோனே மகே சுதுநோனே, எதுனுதெஹி, அங்கள் ஜோன்சன், ஓகே ஒஜாயே, பிட்டி கொட்டபன் நோனே, ஐடோன்ட் நோவை, கொத்தமல்லி, சிங்னோரே என்பன அவரது குரலில் முத்திரை பதித்தன. அரசியல் கேலி, கிண்டல் நிறைந்த சில பாடல்களை – சிவ்னோரே, ஐ டோன்ட் நோ வை –அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் ஒலி, ஒளி பரப்புவதைத் தவிர்த்தன. கடந்த ஆறாம் திகதி கொவிட் நிமோனியா காரணமாக அவர் மரணமடைந்தபோது சிங்கள சமூகம் ஒரு வொலி பெஸ்டியானையும், எம்.எஸ்.பெர்ணான்டோவையும் மறுபடியும் இழந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் அவர்கள் இருவரும் பைலா இசையை மென்மேலும் வளப்படுத்தியவர்கள் மட்டுமே. சுனில் பெரேரா அதையும் தாண்டி, சமூக மற்றும் அரசியல் குறித்தும் பாடினார். பேசினார்.

சுனிலின் விசேஷம், அவர் இனம் மதம் கடந்து சிந்திக்கக் கூடியவராக இருந்ததுதான். சாதாரண மனிதன் இலங்கை அரசியல் குறித்து என்ன நினைக்கிறானோ அதையே அவரும் நினைத்ததும் அதை அரசியல் நையாண்டியாகக் காட்சிப் படுத்தியதும் அவரைத் தனித்துவப்படுத்திக் காட்டியது.

தமிழகத்தில் அவரை யாருடன் ஒப்பிடலாம் என்றால், மறைந்த நகைச்சுவை நடிகரும் அரசியல் விமர்சகருமான சோவுடன் தான் ஒப்பிடலாம். சிவாஜி கணேசன் நடித்த தங்கப் பதக்கம் திரைப்படத்தில் அன்றைய கலைஞர் ஆட்சியை சோ கலாய்த்துத் தள்ளியிருப்பார். முகம்மதுபின் துக்ளக் போன்ற அவரது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அரசியல் கிண்டல் நகைச்சுவை தாராளமாகவே இடம்பெற்றிருக்கும். துக்ளக் பத்திரிகையிலும் அதையே அவர் வெற்றிகரமாகக் கையாண்டார். இப் பண்புகளை சுனிலின் பாடல்களிலும் வீடியோவிலும் நாம் கண்டோம்.

‘சிங்னோரே’ பாடலில் கபட அரசியல்வாதியாக வரும் சுனில், தேர்தலில் தோற்றுப் போகிறார். இந்த மக்களுக்கு எவ்வளவோ செய்தும் என்னைத் தோற்கடித்து விட்டார்களே எனப் புலம்புவதுதான் பாடல். ப்ளேஷ் பெக்கில் அவர் மந்திரியாக இருந்தபோது எப்படி எல்லாம் கூத்தடித்தார் என்பது காட்டப்படும். இப்பாடல் மக்கள் மத்தியில் கடும் வரவேற்பைப் பெற்றபோதும் பல அரசியல்வாதிகள் தம்மைக் குறிப்பதாகக் கருதி நொந்து போனார்கள்.

‘ஐ டோன்ட் நோவை’ பாடலும் இதே ரகம்தான். அரசியலில் இப்படி எல்லாம் நடக்கிறதே ஏன் என்றுதான் புரியவில்லை என்பதுதான் பாடலின் அடி நாதம். இது ஒரு செம அரசியல் நையாண்டிப் பாடல். இப்படி ஒரு பாடலை ஏனைய பாடகர்களும் எழுதி இசையமைத்து வீடியோவாக எடுத்திருக்கலாம் தான். ஆனால் அந்த நெஞ்சுறுதி இவரிடம் மட்டுமே இருந்தது. இதுதான் ஏனையோரிடமிருந்து சுனிலை வித்தியாசப்படுத்திக் காட்டவும் செய்தது.

இவருக்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை வெளிப்படையாகவும் சொன்னார். மிகுந்த நேர்மையும், லஞ்ச ஊழலில் ஆர்வமற்ற வருமான சுனில் பாராளுமன்றம் சென்றிருந்தால் சாமானியனின் மனச் சாட்சியாக வீற்றிருந்திருக்க முடியும்.

சுனிலின் பாடல்கள் சிங்கள சமூகத்தில் என்றென்றும் வாழும் என்பதில் ஐயமில்லை. அவரது அரசியல் பார்வை சாமானியனிடமிருந்து நீங்கப் போவதில்லை. ஒருவர் மறைந்ததும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என்றால் அது சுனிலின் மறைவுதான் ஏனெனில் சாமானியரின் எண்ணங்களை அவர் பிரதிபலித்தார்!

அருள் சத்தியநாதன்

Comments