நியூசீலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்புக் கூறுவது? | தினகரன் வாரமஞ்சரி

நியூசீலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்புக் கூறுவது?

கடந்த செப்டெம்பர் 3ம் திகதி பகல்வேளையில் முழு உலகிற்கும் பரவியது ஒரு செய்தி. எல்லா ஊடகங்களும் பிரேக்கிங் நியூசாக வெளியிட்ட செய்தி நியூசீலாந்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் பற்றியதாகும். அது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தி உலகின் ஏனைய நாடுகளின் மக்களை விட இலங்கை மக்களுக்கு முக்கியமான செய்தியானது, ஏனெனில் அந்தக் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர். இந்தக் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 32 வயதுடையவர் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவன் காத்தான்குடியைச் சேர்ந்தவன் என்றும், அவனது தாய் இன்னமும் காத்தான்குடியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அஹமட் ஆதில் முஹம்மது சம்சுதீன் என இனங்காணப்பட்ட இந்நபர், தனது 22 வயதில் அதாவது 2011ம் ஆண்டில் மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து வெளியேறி நியூசீலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளான். அங்கு இரண்டு வருடங்களைக் கடத்திய பின்னர் இந்நபர் தனக்கு நியூசீலாந்தில் அகதி அந்தஸ்து வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளான். இந்தக் கோரிக்கைக்கு பதிலாக நியுசிலாந்து அரசாங்கம் இந்நபரின் அகதி அந்தஸ்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் விசாரித்துள்ளது. இதன்போது தான் தமிழர் என்றும், இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவன் கூறியுள்ளான்.

தேவையற்ற விசாரணைகளுக்கு அடிக்கடி உள்ளாவதாகக் கூறியுள்ள அவன், தனது உடம்பில் உள்ள வடுக்களைக் காட்டி, இக்காயங்கள் சிறுபான்மையினராக தான் நாட்டில் முகங்கொடுத்த துன்பங்களுக்கான சிறந்த உதாரணங்கள் என்றும் கூறியுள்ளான். தான் உளவியல ரீதியாகப் பாதிக்கப்பட்டதற்கான வைத்தியர் ஒருவரின் சான்றிதழையும் நியூசீலாந்து அதிகாரிகளிடம் காட்டியுள்ளதோடு, அந்த வைத்திய சான்றிதழுக்கு அமைய அந்நபர் “அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வினால் அவதிப்படுகின்ற, கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மற்றும் பாதிப்புக்களுக்கு உள்ளான இளைஞன்” என அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். ஆனால் இவ்வாறான சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டு இது போன்ற இளைஞர்களுக்கு அகதி அந்தஸ்தினை வழங்க முயலும் அதிகாரிகள் இனிமேல் இருமுறை சிந்திக்க வேண்டும் என்பதை இந்நபரின் பிற்காலச் செயற்பாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

எவ்வாறாயினும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக தானும் தனது தந்தையும் கடும் இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்ததாகவும் அவன் கூறியுள்ளான். எனவே இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்த நியூசீலாந்து அதிகாரிகள் 2013ம் ஆண்டில் அவனுக்கு அந்நாட்டில் அகதி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். உண்மையைக் கூறப் போனால் நியூசீலாந்து அதன் பின்னர் முகங்கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது. அதற்கான காரணம் அகதி அந்தஸ்து கிடைத்ததன் பின்னரே அவனது உண்மையான முகம் தெரிய வந்தது.

பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக அனேக நாடுகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்துவர், நியூசீலாந்திலும் அவ்வாறேதான் நடந்து கொண்டனர். அதற்குப் புறம்பாக அவர்கள் சில நபர்கள் தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தது அந்நபர்களின் நடத்தைகளில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை அவதானித்ததன் பின்னராகும்.

அவ்வாறே சமூக ஊடகங்களில் இந்நபர் வெளியிட்ட சில அடிப்படைவாத கருத்துக்களை அடுத்தே இந்நபர் தொடர்பிலும் நியூசீலாந்து பொலிஸார் தமது விசேட கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருந்தனர். நியூசீலாந்து பொலிஸார் அதனை 2016ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்நபர் தனது முகநூல் பக்கத்தின் மூலம் அடிப்படைவாத கருத்துக்களை சமூகமயப்படுத்த முயற்சிப்பது தெளிவாகியிருந்ததோடு, இறுதியில் 2017ம் ஆண்டில் இந்நபரைக் கைது செய்ய நியூசீலாந்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். முதலில் இவ்விளைஞர் தனது சமூக ஊடகக் கணக்கின் ஊடாக போராட்டக் காட்சிகளைப் பிரசாரப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதேபோன்று அவ்வாறான வீடியோக்களில் அடிப்படைவாத கருத்துக்கள் அடங்கியிருந்தன. பின்னர் அவன் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக ஊடகங்களின் ஊடாக பிரசாரம் செய்துள்ளான்.

2016 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இது தொடர்பில் நியூசீலாந்து பொலிஸாரின் எச்சரிக்கைக்கு உள்ளான இந்நபர் பின்னர் பொலிஸாரிடம் மன்னிப்புக் கேட்டு தனது சமூக ஊடக கணக்குகளைச் செயலிழக்கவும் செய்துள்ளார். எனினும் அவன் மீண்டும் ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மீண்டும் தனது சமூக ஊடகங்களைச் செயற்படுத்தியுள்ளான். இது தொடர்பில் தொடர்ச்சியாக அவனைத் தாம் எச்சரித்து வந்ததாக நியூசீலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் 2017ம் ஆண்டில் இவனுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பொலிஸார் அவனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஒன்லேண்டில் வைத்துத் தான் ஐஸ். எஸ் அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியா செல்வதற்கு எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்திருந்துள்ளான். இதனையடுத்து அவன் தொடர்பில் அவதானத்துடன் இருந்த நியூசீலாந்து பொலிஸார் அவனை ஒக்லேண்ட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அந்நேரம் அவன் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டை மாத்திரமே வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அவனைக் கைது செய்ததன் பின்னர் பொலிஸார் அவனது வீட்டைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் அதன் போது படுக்கையறைக் கட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் மேலும் சில சட்டவிரோதமானவை எனக் கருதக்கூடிய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

எவ்வாறாயினும், அவன் மீண்டும் விடுவிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்து வந்துள்ளன. அவன் பிணையில் வெளிவந்த முதல் நாளிலேயே இணையத்தளத்தின் ஊடாக இராணுவ சீருடையினை விலைக்கு வாங்குவதற்கு முயற்சி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவன் கத்தி ஒன்றையும் விலைக்கு வாங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் 2018ம் ஆண்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவனை மீண்டும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவன் நியூசீலாந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, “பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முயற்சிப்பதை அவ்வாறான செயலில் ஈடுபடுவதோடு ஒரு போதும் ஒப்பிட முடியாது” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனடிப்படையில் அவன் மீண்டும் விடுவிக்கப்பட்ட போதிலும் அவனை மிகவும் உன்னிப்பாக அவதானிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நியூசீலாந்தின் க்ரைஸ்ட்சர்ச்சில் வைத்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் சில நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் கூட நடவடிக்கை மேற்கொண்டிருந்தாக அறிக்கைகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் இந்நபரைப் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கண்காணிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டிருந்ததோடு, அவன் இரண்டு சந்தர்ப்பங்களில் கூர்மையான கத்திகளை விலைக்கு வாங்கியிருப்பதையும் பொலிஸார் அறிந்து கொண்டனர். எனினும் கடந்த 3ம் திகதி வெள்ளிக்கிழமை அவன் அந்நாட்டு க்ளேன் ஈட்ன் பகுதி பள்ளிவாசலிலிருந்து வெளியேறி சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் நுழைந்ததுடன் அங்கிருந்த சாதாரண பொது மக்கள் ஆறு பேரை கத்தியால் குத்தியுள்ளான்.

அவ்வாறு அவன் தாக்குதலை மேற்கொண்டு ஒரு நிமிடம் கடப்பதற்குள் பொலிஸார் அவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவனை கொன்றனர். எவ்வாறாயினும் அந்நேரத்திற்குள் அவனது கத்திக் குத்துக்கு இலக்கான ஆறு பேரில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் எந்த நேரத்தில், எந்த இடத்தில் தோன்றும் என அனுமானிக்க முடியாது. எனவே நாட்டிற்கு, இனத்திற்கு அல்லது சமயத்திற்கு பாகுபாடு காட்டுவதை விடுத்து, அடிப்படைவாதம், பயங்காரவாதத்தை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதே அவசியமானதாகும்.

குடியேறியவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக அவர்களது நாட்டை அவமதிக்காதீர்கள்

நாம் பிறந்த நாட்டை எமது “தாய் நாடு” என அழைக்கிறோம். எமது உள்ளத்தில் எமது தாய்க்கு எவ்வாறான மதிப்பும் மரியாதையும் உள்ளதோ, எமது தாய் நாடு தொடர்பிலும் அவ்வாறான உணர்வே இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இளைஞருக்காக எமது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எமது உள்ளங்களில் ஏற்படும் கௌரவமான உணர்வு இதற்கு வழங்கப்படக் கூடிய சிறந்த உதாரணமாகும். அதேபோன்று எவரேனும் ஒருவரின் செயற்பாடுகளின் காரணமாக எமது நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது உள்ளங்களில் சோகமான, கவலையான உணர்வுகள் தோன்றுவதும் எமது தாய் நாடு தொடர்பில் எமது உள்ளத்தில் இருக்கும் கௌரவத்தின் காரணமாகவேயாகும்.

எனவே நியூசீலாந்து சம்பவத்தையடுத்து எமது நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்ட போது நாம் அனைவரு தாங்கிக் கொள்ள முடியாத வேதனைக்குள்ளானோம். கவலைகளுக்குள்ளானோம். காரணம் எமது நாட்டின் கௌரவத்திற்கு ஏதோ ஒரு வகையில் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காகவாகும். எனினும் அந்தச் சம்பவம் இடம்பெற்று ஓரிரு மணிநேரத்தின் பின்னர் “இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயற்பாடு என்பதால் எந்த ஒரு நாட்டிற்கோ, இனத்திற்கோ அல்லது சமயத்தின் மீதோ எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது” என நியூசீலாந்து பிரதமர் ஜஸிந்தா அர்டன் கூறியிருந்தார்.

உண்மையிலேயே நியூசீலாந்து பிரதமரின் அந்த அறிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அந்நாட்டுப் பிரதமர் கூறியவாறு, இந்த தனிநபரின் பயங்காரவாத தாக்குதல் காரணமாக அவன் வாழ்ந்த நாட்டையோ அல்லது அவன் சார்ந்த இனத்தையோ அல்லது அவனது மதத்தையோ குற்றம் கூறக் முடியாது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், நியூசீலாந்து பிரதமர் தனது அறிக்கையில் குறித்த நபர் இதற்கு முன்னர் வாழ்ந்த நாடு தொடர்பில் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை என்பதுதான்.

எவராவது ஒருவர் அகதி நிலைக்கு உள்ளாவது தான் வாழ்ந்த நாட்டின் மீதான உரிமையினைக் இழந்த பின்பாகும். தனக்கு தனது தாய் நாட்டில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் வேறொரு நாட்டில் வாழ்வதற்கான உரிமையினை வழங்குமாறு கோருவது “அகதி நிலை” என இலகுவாக அடையாளப்படுத்த முடியும். அவ்வாறான அகதி அந்தஸ்தை ஏதேனும் ஒரு நாடு எவரேனும் ஒருவருக்கு கேட்ட உடனேயே வழங்கி விடுவதில்லை. அதற்காக அந்நபர் அந்நாடு ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு, நேர்முகப்பரீட்சையிலும் தோன்ற வேண்டும்.

எனவே எவரேனும் ஒருவர் தனது தாய் நாட்டை அவமானப்படுத்தி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைந்து அகதி அந்தஸ்தை கோருவாராக இருந்தால், அந்த நாடுகள் அவ்வாறானவர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்குமாக இருந்தால், அவ்வாறான நபர்கள் பின்னர் மேற்கொள்ளும் அடிப்படைவாத அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அந்நபரின் சொந்த நாட்டை தொடர்புபடுத்திப் பேசுவதில் எவ்வித நியாயமும் இல்லை. அகதி அந்தஸ்தை வழங்கும் முன்னர் உண்மையை நன்றாகத் தேடிப் பார்த்திருக்க வேண்டும்.

டிரோனி வேவலகே
தமிழில் - எம்.எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments