பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் கடந்தகால கசப்பான அனுபவங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் கடந்தகால கசப்பான அனுபவங்கள்

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. முன்னைய நல்லாட்சிக் காலத்தில் மந்தகதியிலாயினும் நடந்து கொண்டிருந்தது. எனினும் நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் 19, டெல்டா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொதுவாகவே சகல துறைகளுமே முடங்கி கிடக்கின்றன. இதில் மலையகத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அடக்கம்.

அந்த வகையில் இந்தப் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் மீண்டும் எப்பொழுது ஆரம்பமாகும் என்று எதிர்வுகூற இயலாத நிலைமையே காணப்படுகின்றது. இலங்கை அரசின் நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த பல வீடுகள் முழுமைப் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றன. வேறு சில வீடுகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் உள்ளன. ஆட்சி மாற்றம் காரணமாக ஏற்பட்ட தடங்கல். புதிய ஆட்சியும் இதனை முடுக்கிவிட முனைந்தாலும் பெருந்தொற்றுப் பரவலால் தடைப்பட்டுப் போயுள்ளமையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதே போலவே இந்திய அரசின் நிதியுதவியுடனான 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணியும் அரையும் குறையுமாக நின்று போயுள்ளது. இந்தப் பின்புலத்தில் மீண்டும் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் மீளவும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் எந்த அம்சத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய அரசு மேலும் 10000 வீடுகளை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது இலங்கை அரசின் உதவியுடனான நிர்மாணப்பனிகள் முழுமைடையாத வீடுகள் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டு பூரணத்துவமடையாத வீடுகள் அல்லது புதிதாகவே வீடுகள் கட்டப்படுதல் என்று இதில் எந்த விடயம் முதலில் கையில் எடுக்கப்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. கடந்தகால பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் யாவும் சரியான திட்டமிடலும் வினைத்திறன்மிக்க முகாமைத்துவமும் இல்லாத காரணங்களாலேயே இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டன என்பதை மறுப்பதற்கு இல்லை.

குறிப்பாக இந்திய அரசு வழங்கியிருந்த 4000 வீடுகளை அமைக்கும் பணி 2010 இதற்குப் பின் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் எப்போதோ நிறைவடைந்திருக்கும். எனினும் இ.தொ.கா. தாமே 4000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் உரித்தாளிகள் என தம்பட்டம் அடித்துக் கொண்டது. இத்திட்டத்தின்படி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் இவ்வீடுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இ.தொ.கா.சில இடங்களைத் துப்புரவு செய்யும் பணிகளையும் மேற்கொண்டது. ஆனால் இ.தொ.கா. இதனை தமது செலவாக்கினைத் தக்கவைத்துக் கொள்ளவும் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தவும் தவறவில்லை. தவிர, இந்திய அரசாங்கம் இத்திட்டத்தின். முழு ஏகபோகத்தையும் இ.தொ.கா.விடம் தாரைவார்த்துக் கொடுக்கத் தயாராயிருக்கவில்லை.

இதன் காரணமாக இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இ.தொ.கா. முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததாக தெரிகிறது. அதேநேரம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலைய செயற்பாடுகளே இத்திட்டம் அமுலுக்கு வரத் தடையாக இருந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிதியம் தான்தோன்றித் தனமாக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக மலையக வீடமைப்புக் கொள்கையில் பாரிய ஏமாற்றங்களையே சந்திக்க நேர்ந்தது என்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.

ஆரம்பத்தில் வீடு மற்றும் சமூக நலன்புரி நிலையம் என்று அழைக்கப்பட்ட இவ்வமைப்பு 2000 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பதினொரு பேர் அங்கத்தினர்களாக இருந்தனர். தோட்டக் கம்பனிகள் சார்பில் ஐவரும் அமைச்சுக்களின் சார்பில் நால்வரும் தொழிற்சங்கங்களின் சார்பில் இருவரும் அடங்குவர். சில பொய்யான வாக்குறுதிகளை இந்நிதியம் மக்களுக்கு வழங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக் கடன் பத்திரம் என்ற பெயரில் ஒன்றைத் தயாரித்து 15 வருடங்களுக்குப் பிறகு வீடும் காணியும் இம்மக்களுக்குச் சொந்தமாகும் என்று உத்தரவாதம் தந்து ஊழியர் சேமலாப நிதிப் பணத்தைப் பயன்படுத்தியது.

ஆனால் குறிப்பிட்டபடி இம்மக்களுக்குப் சுகாதாரமான வீடோ 20 பேர்ச் காணியோ வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத சின்னச் சின்ன வீடுகளே அமைக்கப்பட்டன. இதற்காக 5 இலிருந்து 7 பேர்ச் வரையான காணியே பெறப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் தமக்குரிய பொறுப்பினை நிறைவேற்ற என்றுமே முன்வந்ததில்லை. நட்டம் என்ற பல்லவியோடு நழுவிக்கொள்வதே வழக்கம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புத் தொடர்பான சட்டம் 1889 ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது. எனினும் 1941ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பிரகாரம் தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் வாழும்பட்சத்தில் அவருக்குத் தனியான அறை வழங்கப்பட்ட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. தவிர 12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் மட்டுமே அவர்களுடன் சேர்ந்து வாழமுடியும் என்னும் விதியும் காணப்படுகிறது. இதனடிப்படையிலேயே வரிசைக் கிரமமான வீடமைப்பு முறை தொடர்ந்து இந்த லயக் காம்பிராக்களிலேயே இன்னும் 56 சத வீதமானோர் வாழ்கிறார்கள்.

10 சதவீதமானோர் திருத்தப்பட்ட லயக் காம்பிராக்களில் குடியிருந்து வருகிறார்கள். இந்நாட்டு அரசாங்கங்களைவிட சர்வதேச அமைப்புக்களே பெருந்தோட்டத்துறையில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதில் பாரிய பங்களிப்பினை வழங்கி வந்திருக்கின்றன. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் எண்ணக் கருவில் தேர்தல் தொகுதிக்கு 100 வீடுகள் என்னும் தனித்தனி வீட்டுத்திட்டம் கூட அவரின் மறைவுக்குப் பின்னால் தொடரப்படாமலே போனது.

இதேநேரம் நெதர்லாந்து நோர்வே அரசாங்கங்கள் வழங்கியிருந்த நிதியிலிருந்து 24 கோடி தோட்ட மக்களின் சுய உதவி வீடமைப்புத் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்டும் அந்தப் பணம் முறையாகக் கையாளப்படாமலே போயுள்ளது. 1950 களிலேயே சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் பெருந்தோட்டத்துறையில் காணப்படும் இருப்பிட வசதியின்மை பற்றிய அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அந்த அவல நிலையிலிருந்து மலையக சமூகம் இன்னும் முழுமையாக விடுபட முடியாமலே உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

ஐ.நா. மனித உரிமை சாசனம் காணி, வீடு கட்டுவதற்குப் போதுமான வசதி அவற்றுக்கான மக்களுக்கு உள்ள சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுகிறது.

ஆனால் அந்தப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை, அதனை மலையக மக்கள் விடயத்தில் கவனத்துக்கு எடுக்காமலே இருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவியுடன் கட்டப்பட்ட 25,000 வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் கூட உரிய முறையில் இன்னும் வழங்கப்படவில்லை. இதேபோல வட்டியுடன் மீள் செலுத்தப்பட்ட கடனுதவி மூலம் கட்டிக்கொள்ளப்பட்ட வீடுகளுக்கும் முறையான உறுதிப்பத்திரங்கள் விநியோகிக்கப் படாமலே இருக்கின்றன. பெருந்தோட்டங்களைக் காலத்துக்குக் காலம் கையாளும் அரசு, தனியார்துறை நிர்வாகங்கள தோட்ட வீடமைப்பு விடயத்தில் விசேட கவனமேதும் செலுத்தியதில்லை.

தோட்டக் குடியிருப்புகள் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் வருவதால் உள்ளூராட்சி அமைப்புகளின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் உள்வாங்கப்படவும் வாய்ப்பில்லை.

எனவேதான் சொந்தக் காணியில் தனி வீடுகள் என்னும் கொள்கையை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். எனினும் வழமைபோவே இழுத்தடிப்புகள் குறைபாடுகள் குறைகாணல்கள் என்று இம்முறையும் பாரிய தடங்கல் ஏற்படவே செய்துள்ளது. போதாக்குறைக்கு கொவிட் டெல்டா தொற்று வேறு முடக்கிப்போட்டு வதை செய்கின்றது.

எது எப்படியாயினும் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட்ட வேண்டும் என்பதே பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

பன்.பாலா

 

Comments