உயிர் கறுத்த தேன்கள்...!! | தினகரன் வாரமஞ்சரி

உயிர் கறுத்த தேன்கள்...!!

பச்சையாய் மயிலொன்று
பறந்தங்கு வருமென்று
பசுமையாய் மலையங்கு
ஒருயன்னல் நிலைநின்று!
குளவியின் குடில்மேலே
நீலமே கூரையாய்
வளைவியின் நிலைமேலே
நாடியே நாரையாய்!
சுற்றமாய்த் தவமிருக்கும்
ஒற்றைத்தாள் வரவுக்காய்
நற்றவம் புரிந்திருக்கும்
மற்றைநாள் விடிவுக்காய்
பச்சைமயில் கூட
சொச்சசுகம் தீர்க்கும்
இச்சைகளை எங்கே
பச்சைமயில் தீர்க்கும்?!
குடில்கூட நெடில் இல்லை
துயில்கொள்ள தடில் இல்லை
மடிமீது மயில் இல்லை
பிடிசோறு குடல் இல்லை!
முன்பனியும் செங்கனியும்
முத்தமிழின் மென்கனியா?
எங்களவர் மண்களெல்லாம்
ரத்தினமும் தங்கமையா!
மலைத்தொடரின் கலைக்கடலில்
சிலைவடிக்கும் மழைமுகிலும்
தலைநனைத்த அலைநதியில்
அலைநனைத்த வளர்மதியும்
விலைகொடுக்கும் இலையெல்லாம்
தலைகொடுத்து நிலைத்தெடுப்போம்
மலைகொடுத்த விலையெல்லாம்
உலைகொதிக்க நிலைக்கலையே!!
கம்பனிகளங்கே
சிம்பனியிலாடும்
பின்பனியிலெங்கள்
பிஞ்சுகளே மாளும் !!
‘இந்தியர்கள்’ என்பார்
‘மலையக’மு மென்பார்
சந்தியிலே நாங்கள்
சந்ததியோ வீண்கள்!!
சொத்துகளும் இல்லை
சுகமெதுவும் தரல்லை
எங்களுக்காய்க் கொண்டுவந்த
சங்கமதும் தொல்லை!!
வந்தவரே நாங்கள்!
சொந்தமெவர் நீங்கள்?
இலைபறித்து வலைபொறுத்து
உயிர்கறுத்த தேன்கள்!!!!

பானு

 

Comments