கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

‘தேனகம்’ என் ஆசை ஆசையாக எனது பேனா அழைத்துப் பழக்கப்பட்ட  கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் ‘தொடரி’ (ரயில்) வழி கால்  மிதித்ததும் ‘காத்த நகர்’ (காத்தான்குடி) அபிமானிகள் பலர் வரிசையாக  நினைவலைகளில் நீந்துவார்கள். கண்ணியமிக்க ஊர் அது!  

தமிழகக் காயல்பட்டின முஸ்லிம் வணிகர்கள் கால் பதித்து  வணிகவளம் பெறச் செய்ததோடு ஆன்மிகப்பலமும் வழங்கி ஆத்ம திருப்தி கண்டமை என்  இளம் வயதில் அறிந்தவன்.  

இப்பொழுது இந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அந்தக் ‘காத்தநக’ருக்கு நடப்பதும் நடந்திருப்பதும் என்ன?  

எப்படியோ, எவ்வாறோ ஏற்பட்ட வழி கேட்டால் மொத்த ‘ஊர் மனைக்கும்  உலகப் பார்வையில் கரும்புள்ளிகள்! ஒரு சில அறிவு சூன்யங்களின்  ஈனச்செயல்களால் நொந்து போய், நொடித்துப்போய் செய்வதறியாதிருக்கிறார்கள்.  ஊர்ப் பெருமக்கள்.  

ஒரு தறுதலையின் (ஸஹ்ரான்) பிரச்சினை முடிந்தும்  முடியாததுமாய், நீறுபூத்த நெருப்பாய் இருக்கும் சமயம் ஊர் விட்டு ஊர்  சுற்றித் திரிந்த ஆதில் என்பவன் களங்கப்படுத்துவிட்டு காலியாகி  இருக்கிறான்.  

உணவகத்தில் உண்ணவும் பருகவும் வந்த அப்பாவி மனிதர்களைக்  காயங்களுக்குள்ளாக்கிக் களிப்படையவா அவன் பின்பற்றிய மார்க்கம் கட்டளை  இட்டிருக்கிறது?  

காத்தான்குடி பள்ளிவாசல்களைப் பரிபாலிக்கும் சம்ளேனமும்,  அவ்வூர் ஜம் இய்யத்துல் உலமாக்கிளையும் விடுத்துள்ள அறிக்கையில் சில  உண்மைகள் வெளிச்சமிடப்பட்டுள்ளன.

*இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது  குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில்,  கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக  வெளியில் தான் வாழ்ந்தனர். குறிப்பாக ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட  குறிப்பிட்ட பயங்கரவாதி சிறிய வயதிலேயே ஊரை விட்டு வெளியேறியவர்.

உள்ளூர்  சமூக தொடர்பறுந்தவராகவே அவர் இருந்தார் என்றும் அறிகிறோம். இந்தப்  பின்னணியை மையப்படுத்தி இந்நாட்டின் ஒரு இனத்தைக் கொச்சைப்படுத்துவதையும்  ஓர் ஊரின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதையும் பொறுப்பு  வாய்ந்த சிவில், மார்க்க அமைப்புக்கள் என்ற வகையில் நாம் கவலையுடன்  விசனத்துடன் நோக்குகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில்,  கல்முனை ‘வஃபா ஃபாறூக்’ என்ற அறிவுஜீவி- அரசியலிலும் இலக்கியத்திலும்  ஈடுபாடுள்ள ஒரு மூத்தவர் வழங்கியிருந்த ஒரு கருத்தும், ஆயிரத்தில் ஒரு  வார்த்தையாகப்பட்டது.  

இனிப்பு-1

உன்னதமான மனிதர்கள் பிறந்த எந்த மண்ணினும்  அக்கிரமக்காரர்களும் அநியாயக்காரர்களும் பிறப்பதும் வாழ்வதும் சகஜம்,  காத்தான்குடியும் விதி விலக்கல்ல. அந்த மக்களின் விடா முயற்சியும்  அவர்களின் சகவாழ்வு மனநிலையும் இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் சகல இன  மக்களுடனும் இரண்டறக்கலந்து வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் உந்துதலை  வழங்கியிருந்தது.  

சிங்கள மக்கள் மட்டுமே வாழும் மஹிஇயங்கனை போன்ற  பிரதேசங்களிலும் கூட, அவர்களுடன் அன்பொழுகப் பேசிப் பழகி, அவர்கள் சுக  துக்கங்களில் பங்கெடுத்து வர்த்தகத்திலும் ஈடுபட்டு சகவாழ்வுக்கு  முன்னுதாரணமாக இன்று வரை வாழ்பவர்கள் காத்தான்குடி சீதேவிகள்.  

அந்த மண்ணின் இயல்புக்கு எதிரான முற்று முழுதான மனநிலையைத்  தான் ஸஹரானும் ஆதிலும் பிரதிபலித்தார்களே தவிர அந்த அருமைமிகு, அன்பு மிகு,  பூமியின் குணாதிசயங்களை அல்ல. நிச்சயமாக இந்த இரண்டு இளசுகளும்  காத்தான்குடியின் அடையாளங்களல்ல”  

அறிவுஜீவி வஃபாஃபாறூக் வழங்கியுள்ள இந்த வார்த்தைகளுக்குப் பிறகு என் பேனா முனைப்பதிய எதுவுமில்லை!  

காத்தநகராகிய காத்தான்குடியின் கசப்பை  விழுங்க வைத்த கையோடு அங்கிருந்து கிடைக்கும் அருமையான ‘ஓர் இனிப்பையும்  அபிமானிகளிடம் பகிர்ந்து பரவசமடைய விரும்புகிறேன்.  

உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்களுக்குள் நட்பையும்  நல்லெண்ணத்தையும், நானாவித உதவி ஒத்தாசைகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு  வழியைப் பின்பற்றுகின்றன.  

தங்கள் மண்ணின் அறிவுஜீவிகளையும், அரசியலும் வரலாறும் கைவரப்  பெற்றவர்களையும் பிரதிநிதிகளாக (தூதர்) ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்புவர்  ஆட்சியாளர்கள்.  

அந்தவகையில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள்,  புகழ்பெற்ற பிரமுகர்கள் தேர்வுபெறுவர். அவர்களுக்கு  உறுதுணையாக இருந்து சேவைபுரிய, வெளிநாட்டு அமைச்சக சேவையில் நியமனம்  பெற்றவர்களும் அனுபவத்தின் அடிப்படையில், அதே சமயத்தில் போட்டிப் பரீட்சை  ஒன்றில் தேர்வாகிச் செல்வர்.

அப்படி பல்வேறு பொறுப்பான பதவிகளில்  பணிபுரியும் ஒரு கால கட்டத்தில்–  
‘கௌன்செலர்’ – ‘அம்பாசடர்’ (Courncellor – Ambassador) எனப்  பெரிய பெயர்கள் வந்தடையும். அழகிய தமிழில் "கௌரவத் தூதர்" என நாம்  அழைக்கலாம்.  

தற்சமயம் பலரது பேசு பொருளாகிப் போன அதே காத்தான்குடி, தனது   மண்ணின் மைந்தர் ஒருவரைக் கௌரவமிக்க தூதராக்கி அழகு பார்க்கிறது.  பெருமை  கொள்கிறது.  

அதுவும் நேற்றோ இன்றோ அன்று ஆண்டுகள் பல.

அவர், வேர்விலைக் கல்விக் கலாசாலை நளீமிய்யாவின் ஒரு தயாரிப்பு.  

நல்ல தமிழ் இலக்கிய ஆர்வலர். வானொலியிலும் இலக்கிய இதயம்  லழங்கியவர். ஆன்மிக சீலர். இன- மத நல்லிணக்க நாயகன். கடந்த ஜூன் 16ல்  காலஞ்சென்ற தன்னருமை ஆசிரியத் தந்தையார் பெயருடன் அவரை அறிமுகம்  செய்வதென்றால், ஓமர்லெவ்வை அமீர் அஜ்வாத் அன்னாரைக் கண்ட துண்டா, கேட்டதுண்டா?  

நான் கண்டது கேட்டது சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில்.  

இனிப்பு-2

என் நூலொன்றின் வெளியீட்டு விழாவை, காயல்பட்டினம்  சதக்கத்துல்லா, கீழக்கரை றிஃபாய் அருமைத் தம்பிமார்கள் கோலாகலமாக நடத்திய  பொழுது அவரை சிறப்பு அதிதியாக்கி எனக்கும்  சபையினருக்கும் அறிமுகம்  செய்தார்கள்.  

அப்பொழுது அவர் இலங்கை அரசுப் பிரதிநிதியாக சென்னையில் சேவைபுரிந்த துணைத் தூதுவர்.  

ஒரு வழக்கறிஞராக, 1998ல் வாழ்க்கையில் வெற்றி காண ஆரம்பித்த அவர், தன் கடின உழைப்பால் எட்டமுடியாத ஏணியில் ஏறி உச்சம் தொட்டவர்.  
சவூதி அரேபிய ரியாத், சுவிஸ் ஜெனீவா, என்றெல்லாம் அரசபணி  புரிந்து, தமிழ்நாட்டிலும், சிங்கார சிங்கப்பூரிலும் ‘சிங்கக்கொடி’  நாட்டிப் புகழடைந்தவர்.  

இப்பொழுதோ, இதை நான் இனிப்பாக வழங்கும் நேரத்தில், அறபு மண்ணில் ஓமன் (OMAN) ஏமன் (Yemen) இரு தேசங்களின் இலங்கைத் தூதுவர்!  
இப்படி ஏககாலத்தில் இரு நாட்டுக்கும் ஒரு முஸ்லிம் தூதுவரை  இலங்கை அரசு நியமிப்பதும், அவர் அழகுற நிறைவேற்றுவதும் அபூர்வத்திலும்  அபூர்வம்!  

நாமெல்லாம் பெருமைப்படும்படியாக – விசேடமாக காத்தான்குடி மக்கள் பெருமைப்படும்படியாக –  இலக்கிய, ஆன்மிகர், ஓ. எல். அமீர் அஜ்வாத் திகழ்கிறார்.  

இரண்டாண்டுகளுக்கு முன் (2019) Diplomacy Award எனப்படும் “ஆசியாவின் சிறந்த இராஜ தந்திரி” விருதினை ஊடக இதழ் ஒன்றின் மூலம் (ASIA ONE பெற்றுக் கொண்டவர் என்பதை அறிகையில் என் பேனை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது.  

இதையும் விட என்ன பெருமை வேண்டும் காத்தநகர் (காத்தான்குடி) பெருமக்களுக்கு!  
கசப்பு வில்லைகளைக் கண்டு கொள்ளாதீர்கள் இனிப்பை மட்டும் சுவையுங்கள் தேனகத்தோரே...!  

அந்த "முண்டாசுக்கவி", முடங்கிக் கிடக்கத்   தெரியாதவன். முடக்கம் என்பதைத் துச்சமாக மதித்தவன். இன்றிருந்தால் இந்தக்  கிருமி முடக்கம் அவனை ஒன்றும் செய்திராது . வீட்டுக்குள்ளேயே வீராப்புக்  கவிதைகள் பாடி பல நூலை எழுதியிருப்பான்.

இன்று, சரியாக அவனை நாம் இழந்து ஒரு நூற்றாண்டு பறந்தோடிவிட்டது.  

இனிப்பு-3

1921 செப்டெம்பர் 11ல் (நேற்றையப் பொழுது) மீளா உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவன் நினைத்தது ஒரு முஸ்லிம் அரசனை!

ரொம்பவே அதிசயமான உண்மைச் செய்தி!  
“அன்பனே! நீலகண்டபிரம்மசாரி! அமானுல்லா கானைப்பற்றி நன்றாகவே நான் கட்டுரையொன்று எழுதி ஆகவேண்டும். நாளைக்கு அச்சுகோர்க்கக் கொடுக்க வேண்டும். தவறாமல் எடுத்துப்போ!”  

இன்றைய நாட்களில் பெரும்பாலானோர் உச்சரித்துக் கொண்டிருக்கிற ஒரு நாடு ஆப்கானிஸ்தான். அந்தத் ‘தலிபானின்’ அன்றைய (1921) அரசனே அமானுல்லாகான்
  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஏடாகூடமாக நின்று, இதே ‘தலிபான்’ பாணியில்  போரிட்டுக் கொண்டிருந்தவனை போற்றிப் புகழ்ந்து எழுத நினைத்திருந்தான்  எங்கள் ‘முண்டாசுக்கவி’! கடைசியில், காலைப் பொழுதில் காலன் வசம் போய்ச்  சேர்ந்திருந்தான்.  

இன்றைய ஞாயிறு பொழுதில் என் பேனா முனை, அவனது முஸ்லிம் நேசத்தையே நினைத்து நெகிழ்கிறது.  

* “.... முஹம்மது நபி மகா சுந்தர புருசர் மகா சூரர். மகா ஞானி மகா பண்டிதர் மகா லௌகீற தந்திரி...”  

* “இந்தியாவின் பெருமைக்கும் சிறப்புக்கும், இத்தேச ஜனங்களில்  பெரும்பாலானோர் இந்துக்கள், முகம்மதியர் (முஸ்லிம்கள்) என இரு  பகுதிப்பட்டு நிற்பது பெரும் தடையாக இருப்பதை ஒளித்துப் பிரயோஜனமில்லை.  விரோதங்களை நீக்கி இரண்டு பேருக்குமே சகோதரப்பான்மையும், சினேக  உணர்ச்சியும் ஏற்படுத்துவது தேசாபிமானிகளின் முக்கியக் கடமையாகும்.”  

இந்த –வைரவரிகள் நமக்கும் பொருந்துமே! அந்த முற்போக்குச்  சிந்தனைகளை வழங்கிய முண்டாசுக் கவிஞனின் நூற்றாண்டு நினைவுத் தினத்தை  அஞ்சலித்து நெகிழும் பேனா எனது...

(இங்கு  வழங்கப்பட்டுள்ள படம், இன்று சிங்கப்பூரில், தமிழ் நெஞ்சர்,  சீருடையார்புரம், அ. முகம்மது பிலால் முனைப்புடன் ஏற்பாடு செய்து நடத்தும்  பாரதியார் நினைவு நூற்றாண்டு கருத்தரங்குக்கு அழைப்பு விடுக்கிறது. நன்றி  பகிர்வோம்.)  

மட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு இனிப்பு!  
நீண்ட ஆய்வுக் கட்டுரையே எழுதிவிடலாம். இங்கே இரண்டொரு பந்திகள்:

மட்டக்களப்புத் தேனகத்திற்கும் ‘சேரநாடு’ என்றழைக்கப்பட்ட கேரள மலையாளப்பகுதிக்கும் பல்வேறுபட்ட தொடர்புகள் பண்டைக்காலந்தொட்டே!  

இருபகுதி மொழிவழக்கிலும் நிறைய ஒற்றுமைகள் ‘உலுவா அரிசி’ – ‘உலுவா அரசி’ என்று வெந்தயத்தைத் தமிழ் அம்மாக்களும் முஸ்லிம் உம்மாக்களும் சொல்வர். கேரளத்திலும் என்ன, ‘உலுவா’வே தான்!  

‘ஆவலாதி’ என்று இன்னொன்று இது மலையாளக்கரையோரத்தில் ‘அலவலாதி’.

*
‘குஞ்சச்சன்’ (தந்தையின் உடன் பிறப்பு இளையவன்), இரண்டு இடங்களிலும் ஒன்றே! ஒன்றே!

*
இப்படி – இன்னும் பலவற்றை வெளிச்சமிட ஆய்வுக் கட்டுரையே பொருத்தம். இங்கே ஒரு சிறிய இனிப்புத் துண்டு! 
 

Comments