காலம் கைகூடுமா? | தினகரன் வாரமஞ்சரி

காலம் கைகூடுமா?

இலண்டன் புறநகர் ஒன்றில் தனது மகனுடன் வாழ்ந்துவரும் எழுபத்திமூன்று வயது கடந்த சாம்பசிவம், முக கவசம் அணிந்து,கைகளுக்கு கையுறைகள் போட்டுக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு மெதுவாக நடந்துகொண்டிருந்தார். இலங்கையில் கரவட்டியை சேர்ந்தவர்.

இலங்கை வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி துளசியுடனும் ஒரே மகனான மகேஸ்வரனுடனும் வாழ்ந்தவர்.மகனை ஊரிலேயே நன்றாக படிக்க வைத்துவிட்டு, அவனின் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் நிமித்தம் மகனை பாதுகாப்பது பெரும்பாடாகப் போகவே அவனை அரும்பாடுபட்டு லண்டனுக்கு 2002 ம் ஆண்டு அனுப்பி வைத்தார். லண்டனில் சாம்பசிவத்தின் மைத்துனர் குமாரவேல் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

அவரிடமே மகேஸ்வரனை அனுப்பி வைத்தார் சாம்பசிவம். மகேஸ்வரனும் லண்டன் வந்து மாமாவின் தயவில் உயர்தரத்தில் சேர்ந்து படித்து பின்னர் பட்டப் படிப்பும் முடித்து நல்ல வேலையிலும் சேர்ந்தபின்னர் அவனுக்கு திருமண வயதும் வந்தது.மாமாவின் மகள் சுஜிதாவை எல்லோரும் சேர்ந்து மகேஸ்வரனுக்கு கட்டிவைக்க விரும்பினர்.

அதன்படி நாள்குறித்து தமிழ் நாட்டில் திருமணம் நடந்தது. சாம்பசிவம், துளசி மற்றும் சில உறவினர்கள் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார்கள்.

உறவுகள் ஆசியுடன் திருமணம் இனிதாக நடந்தேறியது. 2010 ம் ஆண்டு திருமணம் நடந்தது . 2015 ம் ஆண்டில் மனைவியுடனும் நாலுவயது நிரம்பிய தினேஷ் என்ற மகனுடனும் ஒரு வயது கடந்த மகள் தீபாவுடனும் புதிய வீடு வாங்கி தனிக்குடித்தனம் சென்றான். மாமா குமாரவேல் வீட்டில் இருக்கும் வரைக்கும் அவனுக்கு பெரிய கஷ்டங்கள் தெரியவில்லை. ஆனால் இப்போது தனியே வந்தபின் கஷ்டங்கள் படிப்படியாக தெரியவந்தது. குழந்தைகள் இருவருடனும் சுசிதா மிகவும் சிரமப்படுவதை பார்த்து மகேஸ்வரன் மனம் வருந்தினான்.

மாமனார் வீடும் சற்று தொலைவில் இருந்ததால் அவர்களும் அவசரத்திற்கு வந்துபோக முடியாத நிலையில் இருந்தார்கள்.மேலும் அவர்களுக்கும் வயது போய்விட்டதால் தனது குடும்பத்திற்கு உதவி ஒத்துழைப்பு செய்ய முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். இதற்கு ஒரே தீர்வு ஊரிலிருந்து தனது தாய், தகப்பனை லண்டனுக்கு வரவழைப்பதுதான். தனக்கு உதவியாக இருப்பார்கள் என்பதையும் தாண்டி அவர்களும் அங்கு இவ்வளவுகாலமும் தனியே இருந்து,போர்க் காலங்களிலும்,போர் முடிந்த பின்னரும் பல துன்பங்களை அடைந்துவிட்டார்கள்.

தன்னுடன் இருந்தால் அவர்களுக்கும் நல்ல ஆறுதலும்,மகிழ்ச்சியும் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே அவன் அவர்களை லண்டனுக்கு அழைக்க இருந்தான். தனது முடிவை மனைவி சுஜிதாவுக்குச் சொன்னதும் அவள் சம்மதம் தெரிவித்திருந்தாள். எல்லாம் நல்லபடியாக நடக்க மகேஸ்வரன் தனது பெற்றோரை 2017 ம் ஆண்டு லண்டனுக்கு வரவழைத்துக்கொண்டான்.

சாம்பசிவம் மிக அமைதியான மனிதர்.மனைவி துளசியும் அவரைப்போல் சாந்தமானவர்தான்.வந்த முதல் வருடம் எல்லோரும் மிக சந்தோசமாக நன்றாகத்தான் இருந்தார்கள்.பேரப்பிள்ளைகளை பார்த்த பாட்டாவும், பாட்டியும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

அவர்களில் பாசத்துடன் இருந்தார்கள்.பேரன் தினேசை பக்கத்தில் உள்ள சிறுவர் முன்பள்ளிக்கு சிலவேளைகளில் கூட்டி செல்வதும்,பின்னர் திரும்ப கூட்டி வருவதும் சாம்பசிவத்தாருக்கு சந்தோசத்தை கொடுத்தது.இது சுசிதாவுக்கும் சற்று உதவியாகவே இருந்தது. மாமியாரும் சமையல் வேலைகளில் அவளுக்கு உதவுவது ஆறுதலாக இருந்தது.சில வேளைகளில் அவரே சமையல் செய்வதும் அவளின் சுமையை குறைக்க உதவியது.நாட்கள் நகரும்போது வயது முதிர்ச்சியால் சில வேளைகளில் வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் போய்விட்டது.

காலில் முட்டுவாதம் வந்து நடக்கவே கஷ்டப்பட்டார் சாம்பசிவம். அடிக்கடி அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை இருந்தது.

பெற்ற தகப்பன் என்ற வகையில் மகேஸ்வரன் அவரை அன்போடும், அக்கறையோடும் பார்த்துக்கொண்டாலும் மருமகள் சுஜிதா சற்று வெறுப்போடும்,புறுபுறுக்கத் தொடங்கினாள்.இதனால் வீட்டில் இருந்த சந்தோசம் குறையத் தொடங்கியது. அடிக்கடி மகேஸ்வரனுக்கும் சுஜிதாவுக்குமிடையில் சச்சரவு வரத் தொடங்கியது. சாம்பசிவத்தாரும், துளசியும் மனமுடைந்து செய்வதறயாது இருந்தார்கள்.

வீணாக தங்களால் தன் மகனின் குடும்பத்துக்குள் பிரச்சினை வரவேண்டாமே என்று நினைத்து, தங்களை நாட்டுக்கு அனுப்பிவிடும்படி மகனை இருவருமே கேட்டுக்கொண்டார்கள்.

மகேஸ்வரனுக்கோ அவர்களை அனுப்ப விருப்பமில்லை. அவர்களின் அந்திமக்காலம் தன்னுடன்தான் கழிய வேண்டும் என்று ஒரு மகனாக தன் விருப்பத்தை அவர்களிடம் சொன்னான். ஆனால் அவர்களோ, அதற்கு இணங்கவில்லை. தங்களை அனுப்பிவிட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார்கள். மகேஸ்வரன் எவ்வளவோ சொல்லியும் சாம்பசிவம் பிடிவாதமாக இருந்தார். அவன் சுஜிதாவை கொண்டும் அவர்களின்

முடிவை மாற்றிவிட முயற்சி பண்ணினான். அதுவும் கைகூடவில்லை.ச ரி,பார்க்கலாம் என்று இருந்த வேளையில்தான் கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பரவத்தொடங்கியது.. சீனாவில்உருவாகிய இந்த விசக்கிருமி இன்று இருநூறு நாடுகளுக்கு பரவி,உலகையே முடக்கிவிட்டது. நாட்டுக்கு நாடு ஆயிரக்கணக்கில் தொற்றுக்கு ஆளாகி இறந்துபோனார்கள். இதனால் பல நாடுகள் முடக்கத்தை ஏற்படுத்தின.

விமான நிலையங்கள் மூடப்பட்டன.லண்டனிலும் இந்த வைரஸ் தொற்று மிக அதிகமாக இருந்தது.இதன் காரணமாக தனிமைப்படுத்தலை அரசு கொண்டுவந்தது. பாடசாலைகளை மூடியது.பொதுப் போக்குவரத்து குறைக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளின்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாதுஎன்ற தடை வந்தது. இதனால் சாம்பசிவம், துளசி இருவரின் நாடு திரும்பும் பயணமும் தள்ளிப்போனது.

அரசுப் பணிகள்,வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் என்று சகலதும் முடக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

மகேஸ்வரனும் வீட்டிலிருந்தே பணிசெய்ய அனுமதிக்கப்பட்டான். அவன் வீட்டில் இருப்பதால் மனைவி சுஜிதாவின் சுமைகள் குறைக்கப்பட்டன.

தன் பெற்றோர் மீது மனைவிக்கு இருந்த வெறுப்பையும், அவள் போக்கையும் அவன் அறிந்திருந்தான்.

தாயோடு சேர்ந்துகொண்டு தன் பிள்ளைகளும் இப்போது பாட்டா, பாட்டியை சட்டை செய்யாமல் இருந்தது அவனுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்தது.

வயது முதிர்ந்த தனது அப்பாவையும், அம்மாவையும் மேலும் கஷ்டப்படுத்தக்கூடாது என்றே தனக்கு இ‌ஷ்டமில்லாதபோதும் அவர்களை கரவெட்டிக்கு திருப்பி அனுப்ப சம்மதித்தான். அதனிடையில் இந்த கொரோனா கிருமியின் ஆட்டம் பெரும் பீதியைக் கிளப்பிவிட, அவர்களை நாட்டுக்கு அனுப்பும் விடயம் காலவரையறையின்றி பின்போடப்பட்டது. சரி, இப்போ சாம்பசிவம் என்ன ஆனார் என்று பார்ப்போம்.

முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே நடைப்பயிற்சிக்கு சென்ற அவர், தான் வழக்கமாக செல்லும் எல்லைவரை சென்று மீண்டும் திரும்பி வீடு நோக்கி மெதுவாக தனது நடையை தொடர்ந்தார். அவருக்கு தெரியும் வீட்டை அடைந்ததும் மருமகள் எரிச்சலுடன் புறுபுறுப்பாள்."வீட்டுக்குள் இருக்காமல் ஏன் வெளியில் போய் வருகிறார்.

கொரோனா தொற்று அதிவேகமாக பரவும் நிலையில், வீட்டில் சிறுபிள்ளைகள் இரண்டுபேர் இருக்கத்தக்கதாக வெளியில் செல்வது இவருக்கு இப்போ அவசியம்தானா? சொல்லுற பேச்சை கேட்காது, தனது பிடிவாதத்திற்கு அல்லவோ நடக்கிறார்". '

இப்படியெல்லாம் மருமகள் தன்னைக்குறித்து பேசுவாள் என்பதையும் அவர் அறிவார். என்ன செய்வது அவரால் ஒரே இடத்தில் இருக்க முடியாதே. மூட்டுவாதம் முடக்கிவிடும்.

அதனால் கொஞ்சதூரம் நடந்தால் நல்லது என்றே அவர் நடக்க செல்வது. அதேநேரம் தற்போதைய சூழ்நிலை தெரியாமல் இருப்பவரும் அல்ல.

கொரோனா வைரசின் பயங்கரத்தை அறிந்தே இருந்தார். பாதுகாப்புக்காக கையுறை,முகக்கவசம் அணிந்தும், பாதையில் நடக்கும்போது மற்றவர்களுக்கு பக்கம் செல்லாமல் இரண்டு மீற்றர் இடைவெளி விட்டே நடப்பார்.

எது எப்படி இருந்தாலும் ஒரு மனிதனுக்கு சாவு என்பது தவிர்க்க முடியாததுதானே.பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு கட்டாயம் இருந்துதானே ஆகும்.

அது எப்போது என்பதை இறைவன் முடிவு செய்கிறான் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. மரணம் வரும்போது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள அவர் மனது தயாராக இருந்தது. உலகில் இலட்சோப லட்சம் மக்கள் கொரோனாவினால் இறந்துவிட்டார்கள் இன்னும் இறக்க இருக்கிறார்கள்.எது நடந்தாலும் நடக்கட்டும். வருவது வரட்டும் என்ற மனத் தைரியத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சாம்பசிவம். அவர் மனதில், எல்லாம் கடந்து சென்று, தானும்,மனைவி துளசியும் கரவட்டி செல்ல காலம் கைகூட வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தது.

கோவிலூர் செல்வராஜன்

Comments