அஷ்ரப் எனும் அரசியல் ஆளுமை | தினகரன் வாரமஞ்சரி

அஷ்ரப் எனும் அரசியல் ஆளுமை

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் முஹம்மத் ஹுசைன் விதானை, மதீனா உம்மாஹ் தம்பதியின் மகனாக 1948 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஒரேமகனாக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திலும், பின்னர் இடைநிலைக்கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி பாடசாலை, அலெக்ஸாண்ட்ரியா கல்லூரியிலும் கற்ற முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப். பின்னர் 1975 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். பின் சட்டமாணி, சட்ட முதுமாணிப் பட்டங்களை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1995 இல் அமைச்சராக இருக்கும் போதே சட்டமுதுமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார்.

பேரியல் இஸ்மாயில் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மர்ஹும் அஷ்ரபுக்கு அமான் அஷ்ரப் எனும் ஓர் ஆண் மகனும் உண்டு.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், தனது அரசியல் வாழ்வை ஈழத்தின் தந்தை என்றழைக்கப்படும் தந்தை செல்வாவை முன்மாதிரியாகக் கொண்டு ஆரம்பித்தார்.

1976 இல் பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசலில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் பற்றி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதித்த போது, இது பற்றிப் பேசிய ஒரேயொருவரான தந்தை செல்வாவை மர்ஹும் அஷ்ரப் வியந்து பாராட்டிப் பேசினார்.

1977 இல் தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடாத்தும் பொறுப்பை அ.அமிர்தலிங்கம் ஏற்றார். இவர், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை (MULF) ஆரம்பித்து, அ. அமிர்தலிங்கத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் மேடைகளில் அ.அமிர்தலிங்கத்துடன் இணைந்து முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஷ்ரப் தமிழ் ஈழத்துக்காக வேகத்துடன் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டார். இவ்வேளையில்தான் 'அண்ணன் அமிர்தலிங்கத்தால் தமிழ் ஈழத்தை உருவாக்க முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதைச் செய்வான்' என பகிரங்கமாக அறிவித்தார்.

பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கல்முனை, சம்மாந்துறை, புத்தளம், மூதூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் 'சூரியன்' சின்னத்தில் களமிறக்கப்பட்டனர். இதில் மர்ஹும் அஷ்ரப் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று, நாட்டின் வரலாற்றில் தமிழ்க்கட்சி ஒன்று இரண்டாம் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றது. ஆயினும், இந்த கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை வேறு கோணத்தில் மர்ஹும் அஷ்ரப் நோக்கினார். அஷ்ரபினுடைய தமிழ் ஈழத்தின் மீதான விருப்பம் மற்றும் தமிழ், முஸ்லிம் அரசியல் இலட்சியத்தை பகிரும் விருப்பத்துக்கு அப்பால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறு அபிலாஷைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர் உணர்ந்தார்.

1981 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களை மட்டும் போட்டியிட வைத்தது. அத்தேர்தலில் முஸ்லிம்களையும் இணைக்க மர்ஹும் அஷ்ரப் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டது. இதனால், மர்ஹும் அஷ்ரப் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து முற்றாக விலகி, தனித்துச் செல்ல தீர்மானித்தார்.

தமிழ், சிங்கள அரசியலிலிருந்து வேறுபட்ட சுயாதீனமான அரசியல் தேவைப்பாடு முஸ்லிம்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்த மர்ஹும் அஷ்ரப், அஹமட்டுடன் கூட்டுச் சேர்ந்து, 1981 செப்டம்பர் 21 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை காத்தான்குடியில் ஆரம்பித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஆரம்பத்தில் அரசியல் பிரச்சினைகளை விட, அதிகமாக சமூக கலாசார விடயங்களில் அக்கறை கொண்ட கிழக்கு மாகாண அமைப்பாகவே செயற்பட்டது.

1985ஆம் ஆண்டு கல்முனை - காரைதீவு, தமிழ் – முஸ்லிம் இனமுரண்பாடுகள் மர்ஹும் அஷ்ரப்பை பாதித்ததனால் கொழும்பு நோக்கி குடிபெயர்ந்தார். இந்த கொழும்பு நோக்கிய நகர்வு அவரது அரசியலின் மைல்கல்லாக அமைந்தது. இவரது அரசியல் முயற்சிகளுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அடங்கலாக முஸ்லிம்கள் பலர் ஒத்துழைப்பு நல்கினர். இவ்வேளையிலே அஷ்ரபின் அறிமுகம் ஹக்கீமுக்கு எற்பட்டது.

கிழக்குக்கு அப்பாலும் முஸ்லிம் காங்கிரஸ் விரிந்து செல்ல வேண்டிய தேவைப்பாடையும் இனங்கண்ட மர்ஹும் அஷ்ரப், 1986 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் புஞ்சிபொரளையில் நாடளாவிய கட்சி மாநாடொன்றை கூட்டி, முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமையை அஹமத்லெப்பையிடம் இருந்து பொறுப்பேற்றார். அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அகில இலங்கை ரீதியிலான கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, கட்சியின் நோக்கங்களை மீளமைத்து யாப்பை திருத்தி எழுதி, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரச்சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 1988 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியது. இத்தேர்தலில் வடக்கு – கிழக்கில் 17 இடங்களையும், மேற்கு, வட மேற்கு, மத்திய, தென் மாகாணங்களில் 12 இடங்களையும் கைப்பற்றியது. வட கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் முறையே 9,3,5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட இக்கட்சியின் அமோக வெற்றி மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு பெரும் உந்துசக்தி அளித்தது. முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் தலைமையிலான வட கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்கு பிரதான எதிர்க்கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி விளங்கியது.

பின்னர் 1988 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஆர். பிரேமதாஸவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. அதன் பின்னர், 1989 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, மாவட்ட ரீதியாக மூன்று ஆசனங்களும் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றுமாக நான்கு ஆசனங்களைப் பெற்றது. இதில், அம்பாறை மாவட்டத்தில் இருந்து அஷ்ரப், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஹிஸ்புல்லாஹ், வன்னியில் இருந்து அபூபக்கர் ஆகியோர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் மும்மொழி பேச்சுத் திறனாலும், துணிச்சல் நிறைந்த உரைகளாலும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தார் மர்ஹும் அஷ்ரப்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவாகி, அங்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்த போது, பேச ஆரம்பித்த மர்ஹும் அஷ்ரப், 'பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக இந்த உயர்ந்த சபையிலே பேச வாய்ப்புக் கிடைத்த முதல் முஸ்லிம்...' என்று பேச ஆரம்பித்த போது பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் தலைவர்கள் கூச்சலிட்டு பேச முடியாமல் தடுத்தனர். அப்போது சபாநாயகராக இருந்த மர்ஹும் எம்.எச் முஹம்மத், சபையை அமைதிப்படுத்தி, மீண்டும் பேச வாய்ப்பளித்தார். அப்போதும் அஷ்ரப், 'பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக இந்த உயர்ந்த சபையிலே பேச வாய்ப்புக் கிடைத்த முதல் முஸ்லிம்...' என்று பேச திரும்பவும் கூச்சலிட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், 'அவர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம். அவரைப் பேச விடுங்கள்' என்று கூறிய போது, அஷ்ரப் மீண்டும் பேச ஆரம்பித்தார். '

பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக இந்த உயர்ந்த சபையிலே பேச வாய்ப்புக் கிடைத்த முதல் முஸ்லிம் கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு உரையாற்ற கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என்று கூறிய போது அனைவரும் வாயடைத்துப் போயினர். சபையும் அமைதியானது. அந்தவேளையில் ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற தேசிய கட்சிகள் மூலம்தான் முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினர். சபையில் அனைவரும் மர்ஹும் அஷ்ரப் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறப்போகிறார் என்றே கூச்சலிட்டனர். மிகுந்த சாணக்கியமும் சமர்த்தியமும் ஆற்றலும் மும்மொழி புலமையும் மிக்கவர்தான் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்.

1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மே தின நிகழ்வில் ஜனாதிபதி அமரர் பிரேமதாச உயிரிழந்தார். இதன் காரணமாக 1994இல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அஷ்ரப் சந்திரிக்காவுடன் 1994 இல் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டார். இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கில் சொந்த சின்னத்திலும், வேறு மாகாணங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அக்கட்சியினுடைய சின்னத்திலும் போட்டியிட்டது.

இத்தேர்தலில் பொது ஜன முன்னணி 105 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 94 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், ஒரு தேசியப்பட்டியல் அங்கத்தவரையும் பெற்றது. இத்தேர்தல் மூலமாகவே ரவுப் ஹகீம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக விளங்கியது. மர்ஹும் அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஹிஸ்புல்லாவும், அபூபக்கரும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ரவூப்ஹக்கீம் குழுக்களின் தவிசாளராக நியமனம் செய்யப்பட்டார். மர்ஹும் அஷ்ரப் இளைஞர்களுக்கு துறைமுக அதிகார சபையிலும் பல்வேறு திணைக்களங்களிலும் வேலைவாய்ப்புக்களை வழங்கினார்.

அரசியல் மட்டுமல்லது, கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இவர், 'நான் எனும் நீ' எனும் கவிதை நூலையும் எழுதி, அதனை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இந்தியாவில் இருந்து கவிக்கோ அப்துல் ரஹ்மானை அழைத்து வெளியிட்டார். அவருக்கு பொற்கிழி, பொன்னாடை வழங்கிக் கௌரவித்தார். அந்நூலில் அவரது மரணம் பற்றி கவிதை எழுதப்பட்டிருந்தது பற்றி அவரது மறைவுக்குப் பிறகு பலரும் சிலாகித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப், சாதாரண மனிதன் முதல் உயர்ந்த இடத்திலுள்ளோர் என யார் வந்து நூல் வௌியீட்டு விழாவுக்கு அழைத்தாலும் செல்வார். சன்மானமும் வழங்குவார். அவ் விழாவில் உரையாற்றும் போது அரசியல் பேசமாட்டார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு முஸ்லிம் மாணவர்கள் தயங்கினர். இதேபோல தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கிடையில் உருவான பிணக்குகளும் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்தும் மாணவர்கள் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. இதனை உணர்ந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவக்கைகளை முன்னெடுத்தார். பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் 1995 ஒக்டோபர் 23 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது இலங்கையின் ஒரு முன்னணிப் பல்கலைக்கழகமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் திகழ்கின்றது. இன்னுமொரு மைல்கல் என்னவென்றால், இப்பல்கலைக்கழகத்திலே கற்று, பேராசிரியராகி, தற்போது அப்பல்கலைக்கழகத்திலே உபவேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரது இந்த நியமனம் மூலம் மர்ஹும் அஷ்ரபின் கனவு நனவாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இலங்கையிலுள்ள வேறு இன மக்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி, தேசிய நீரோட்டத்தில் அரசியல் பயணத்தைக் கொண்டு செல்வதற்காக 1998இல் மற்றுமொரு அரசியல் கூட்டணியை நிறுவுவதற்காக கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இக்கட்சியானது தேசிய ஐக்கிய கூட்டமைப்பு எனும் பெயரில் புறாச் சின்னத்துடன் தேர்தல் ஆணையாளரினால் 1999 ஆகஸ்ட் 23 இல் பதிவு செய்யப்பட்டது. 'ஒவ்வொரு குடிமகனும் இலங்கைத் தாய்நாட்டுக்குத் தேவை. எல்லா குடிமகன்களுக்கும் தேவை ஒரே இலங்கை' எனும் தொனிப்பொருளில் 2012 இல் ஒற்றுமை நிறைந்த இலங்கையை உருவாக்குவதாக இருந்தது. ஆயினும், அஷ்ரபின் மரணத்திற்குப்பின்னர் ஹக்கீம், பேரியல் ஆகிய இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அது இடம்பெறவில்லை.

2000ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ - 17 ரக ஹெலிக்கொப்டரில் செப்டம்பர் 16 அன்று அம்பாறை நோக்கி பயணித்த போது, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் வைத்து விமானம் விபத்துக்குள்ளானதில் எம்.எச்.எம்.அஷ்ரப் உயிரிழந்தார். பயணித்த அனைவரும் அதில் உயிரிழந்தனர்.

மர்ஹும் அஷ்ரப் பற்றிய நூல்கள் குறைந்தது பத்து நூல்களாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அவரது மறைவுக்குப் பின் ஒரு நூல் கூட அவரைப் பற்றி வெளிவரவில்லை. இதனை அவரது கட்சியோ, கட்சி அங்கத்தவர்களோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டாயம் செய்திருக்க வேண்டும். யாருமே அக்கறை எடுத்துச் செய்யவில்லை. அனைவரும் அலட்சியமாக இருக்கின்றனர். அஷ்ரபைப் பற்றி அறிய வேண்டுமானால் அவர் எழுதிய 'நான் எனும் நீ' எனும் கவிதை நூல் மட்டுமே உள்ளது. எனவே, அவரது பாராளுமன்ற உரைகள், அவரது பொக்கிஷங்கள் போன்றவை பதிப்பாக வெளிவருவதன் மூலமே அதனை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். இனியாவது இச் செயற்பாட்டை முன்னெடுப்பார்களா?

அஷ்ரப் மறைந்த நேரத்தில் ஊரே கண்ணீர் வடித்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் இன, மத, சாதி பாராது அனைத்து மக்களும் கலந்து கொண்டமை ஏனைய இனத்தவர்களும் அவர் மீது வைத்திருந்த மரியாதையைக் காட்டியது.

எம்.எஸ்.எம்.ஸாகிர்

Comments