புதிய வாழ்வியல் தொற்றைத் தடுக்கும் | தினகரன் வாரமஞ்சரி

புதிய வாழ்வியல் தொற்றைத் தடுக்கும்

உலகம் ஏராளமான தொற்று நோய்களைப் பார்த்துள்ளது. அவை ஏற்படுத்திய பேரழிவுகளை வரலாறு பதிவும் செய்துள்ளது. ஆனால் கொவிட் பெருந்தொற்றைப் போல ஒன்றை மனித குலம் இதற்கு முன்னர் சந்தித்திருக்க முடியாது. ஏனெனில் இத் தொற்று நாடுகளையும் மனிதர்களையும் இரு தலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத் தள்ளி விடுவதே இதன் விசேடத் தன்மை. தொற்று பரவாமல் தடுக்கவும் வேண்டும், தனி மனித மற்றும் நாட்டின் பொருளாதார நிலை சரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்பது இலேசுப்பட்டதல்ல, கையாள்வதற்கு. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே கை கண்ட உபாயம் முடக்கம் தான் என்றால், பாதிக்கப்படும் தனிமனிதனின் பொருளாதாரத்தை சீர் செய்வது எப்படி என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இத் தொற்று உலக பொருளாதாரக் கட்டமைப்பின் அடித்தளத்தையே தகர்க்கக் கூடியதாக இருப்பதால் தான் இப்படி ஒரு பிரச்சினையை இதற்கு முன் உலகம் சந்தித்தது இல்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஏற்கனவே பொருளாதார ரீதியான பல பிரச்சினைகளைக் கொண்ட இலங்கை தற்போது மூன்றாவது அலையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் இது எவ்வளவு தூரம் தனிமனித மற்றும் நாட்டின் வருமான வழிகளை அடைத்து திக்கு முக்காடச் செய்திருக்கிறது என்பதையும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாம் மற்றுமொரு தனிமைப்படுத்தல் ஊரடங்குக்குச் சென்று இன்றுடன் 30 நாட்களாகின்றன. இது ஓரளவுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக கையாளப்பட்ட போதிலும் தொற்றின் தீவிரமும் மரண எண்ணிக்கைகளும் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பாகங்களிலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 93 சதவீதமான தொற்றின் மாதிரிகள் டெல்டா வைரசுகளாகவே அறியப்பட்டிருப்பது, மக்கள் மிகமிக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே புலப்படுத்துகின்றது.

இந்த அடைப்பு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய திறந்து விடுதலை அரசு செய்யுமானால் ஏராளுமானோருக்கு அது ஆறுதல் அளிப்பதாக இருக்கும். நாட்டின் மொத்த சனத்தொகையை எடுத்துக் கொள்வோமானால், பெரும்பான்மையானோர் சுய தொழில்களையும் தினசரி வருமானத்தை நம்பி வாழ்பவர்களாகவுமே உள்ளனர். அரசு ஊழியர்களைத் தவிர ஏனைய மாதச் சம்பளக்காரர்களும் வருமானக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

தனிமனித வருமான பாதிப்பு என்பது சமூக ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடியது. ஒருவரது வருமானம் தடைப்படும் போது அவர் தன் குடும்பத்தை வாழவைக்க ஏதேனும் செய்யத்தான் வேண்டும். அது சட்டத்துக்கு புறம்பானதாக அமையும் போது சமூக அமைதி சீர்குலைவுக்கு வழி செய்வதோடு சமூக நெருக்கடியையும் தோற்றுவிக்கிறது. இதனால்தான் தளர்வுகளுடன் கூடிய இந்த ஒரு மாதகால அடைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்படுவது அவசியம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

நாம் இருதலைக் கொள்ளி எறும்பாக இருப்பதால் ஏதேனும் ஒரு பக்கத்து கொள்ளியைத் தாண்டி சென்றேயாக வேண்டும். அதாவது, அடைப்பை விட்டு வெளியே வந்தாக வேண்டும். வெளியே வந்தால் காத்திருப்பது மிக விரைவாகப் பரவக் கூடிய டெல்டா வைரஸ் அல்லது இன்னும் வீரியம் கொண்டிருக்கும் புதிய திரிபுகள். எனவே நாம் வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுக வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். சமூக வாழ்க்கையை மேற்கொள்ளும் அதேசமயம் தனிமையிலும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தாமரை இலைத் தண்ணீர் போன்றதொரு வாழ்க்கை. இதை மிகச் சரியாகக் கடைபிடித்தால் மாத்திரமே விமோசனம் கிட்ட முடியும். துறவற வாழ்வை மனதில் இருத்தி லௌகீக வாழ்வில் நீடித்திருப்பது முறையான வாழ்க்கை என்று இந்திய தத்துவஞானம் சொல்லும். இதைத்தான் நாமும் உலக மாந்தரும் இனி பின்பற்றியாக வேண்டும்.

புதிய வாழ்க்கை முறையை கற்றுக்கொள்வதன் மூலம் மாத்திரமே நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மத்தியகால ஐரோப்பாவில் மக்களின் வாழ்க்கை முறையில் காணப்பட்ட குறைபாடுகளே, அவர்களின் மூட நம்பிக்கைகளே எலிகளின் பெருக்கத்துக்கும் அதன் மூலம் பிளேக் நோய் வேகமாகப் பரவி கோடிக்கணக்கானோரை பலி கொள்ளவும் காரணமாயின. ஐரோப்பியர் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதற்கும், அதனால் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சி புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் பிளேக் நோய் மறைமுக் காரணமாக இருந்திருக்கலாம். இந்தியாவில் கோடிக்கணக்கானோரை அம்மை கொன்றொழித்தது.

எனவே தொற்று பரவாமல் இருக்க பல வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டன. தடுப்பு மருந்து பாவனைக்கு வரும்வரையில் தடுப்பு முறைகளே அம்மைப் பரவலைக் குறைக்க உதவின. ஐரோப்பியரின் வளர்ச்சிக்கு அவர்களின் துன்ப துயரங்களே காரணமானது போல கொவிட் தொற்றும் நாடுகளில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பொருளாதார பாதுகாப்பு முறைகள், தினசரி வாழ்க்கை முறையில் உருவாகவுள்ள புதிய பழக்க வழக்கங்கள். சிந்தனை மாற்றங்கள், மூட நம்பிக்கைகள் வழக்கொழிதல் என்பனவற்றுக்குக் காரணமாகலாம்.

எனவே நாட்டை 2019 மார்ச்சுக்கு நகர்த்த வேண்டுமானால் அதற்கு தடுப்பூசி செய்யக்கூடிய பங்களிப்பு கொஞ்சமானதே. கொவிட் வைரஸ் மட்டுமல்ல, இன்னும் பல கொடிய கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்ல வேண்டுமானால் முதல் கவசமாகத் திகழுப் போவது நமது பழக்க வழக்கங்களே என்பதை மறந்துவிடலாகாது. 2019க்கு திரும்பிச் செல்லலாம். ஆனால் அன்று நாம் கைக்கொண்டிருந்த பழக்க வழக்கங்களுடன் அல்ல. இந்த அடைப்பு நீக்கப்பட்டவுடன், எல்லாம் முடிந்து விட்டது என்ற சிந்தனையுடன் ஆட்டம், பாட்டம் கும்மாளம் என வாழ்க்கையை மறுபடி ஆரம்பித்தோமானால் நான்காம் அலையை நோக்கி விரைகிறோம் என்பதே அதன் உண்மையான பொருளாகிவிடும் என்பதை மறந்து விடலாகாது.

பையில் கிருமி நாசினி, முகக்கவசம், சமூகத்தில் முடிந்தவரை இடைவெளியிட்டு நடமாடுதல் சலவை செய்யப்பட்ட ஆடைகளை தினமும் அணிதல் என்பன எமது வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். திருமணம், சடங்குகள் திருவிழாக்கள், ஒன்றுகூடல் தொடர்பில் பரவலான சிந்தனை மாற்றத்தை நாம் ஏற்படுத்தியே ஆக வேண்டும்.

Comments