உலக அரசியல் போக்குக்கு ஏற்ற ஆட்சியை தலிபான்களால் உருவாக்க முடியுமா? | தினகரன் வாரமஞ்சரி

உலக அரசியல் போக்குக்கு ஏற்ற ஆட்சியை தலிபான்களால் உருவாக்க முடியுமா?

சர்வதேச அரசியலில் சூடான விவாதத்தை தலிபான்களின் புதிய அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலிபான் அரசாங்கத்தின் அமைச்சரவை தெரிவு மற்றும் புதிய அரசாங்கத்தின் பெண்கள் தொடர்பான விதிகளும் அதிக விவாதங்களை உருவாக்கி உள்ளன. அதற்கான காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதம் மீதான தலிபான்களின் நடவடிக்கை அமைகிறது. இதே நேரம் சீனா, தலிபான்களை அங்கீகரித்த போதும் மேற்கு நாடுகளிடம் அங்கீகாரம் எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டுரையும் தலிபான்களால் உலக அரசியல் இருப்போடு சேர்ந்து போகும் ஆட்சியை உருவாக்க முடியுமா என்பதை தேடுவதாகவே அமைந்துள்ளது.

ஆகஸ்ட்- 15ஆம் திகதி காபூலைக் கைப்பற்றிய தலிபான்கள், மேற்கத்திய ஆதரவு ஜனாதிபதியை நீக்கி, ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதில் வெற்றி கண்டது. அதிலிருந்து ஒரு அரசாங்கத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் -07ஆம் திகதி தலிபான்கள் குழுவின் மறைந்த நிறுவனர் முல்லா உமரின் நெருங்கிய உதவியாளர் முகமது ஹசன் அகுந்தை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பிரதமராக நியமித்து, தலிபான்கள் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர். தலிபான்களின் அரசாங்கம் பற்றிய விபரத்தை வெளியிட்ட தலிபான்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், “இஸ்லாமிய எமிரேட் தேவையான அரசாங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு தற்காலிக அமைச்சரவை நியமித்து அறிவிக்க முடிவு செய்தது. மீதமுள்ள பதவிகள் கவனமாக விவாதிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். தலிபான்களின் இடைக்கால அரசாங்க அறிவிப்பானது, தலிபான்கள் இயக்கம் கிளர்ச்சியிலிருந்து நிறுவனமயப்பட்ட ஆட்சிக்கு மாறும் போக்கையே வெளிப்படுத்துகிறது.

தேசிய அரசுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதில் சர்வதேச உறவுகள் தவிர்க்க முடியாத காரணியாகும். சர்வதேச உறவுகளை பலப்படுத்தலானது ஆட்சியாளர்களையும் அவர்களது இராஜதந்திர செயற்பாடுகளையும் சார்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான்களின் அரசாங்கத்திற்கான சர்வதேச அங்கீகாரம் குழப்பகரமாக காணப்படுகிறது. தலிபான்களின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒபைதுல்லா பஹீர், “சர்வதேச அங்கீகாரத்திற்கான எந்த நகர்வுகளையும் தலிபான்கள் செய்யவில்லை" என்றார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்புப் படைகள் தலிபான்களால் அறிவிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டனர். தலிபான்களின் அரசாங்கத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கக்கூடாதென்ற கோரிக்கைக்கான காரணங்களை அறிந்து கொள்ளல் அவசியமாகும்.

முதலாவது, தலிபான்களின் பெண்கள் தொடர்பான நிலைப்பாடே, தலிபான்களின் அரசாங்கத்துக்கான பிரதான தடையாகவும் எதிர்ப்பாகவும் முன்வைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படும் செய்தியாக தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளே காணப்படுகிறது. மேற்கின் விருப்புகளில் இயங்கும் ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படும் தலிபான்களின் ஆட்சியில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், யதார்த்தத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பெயரால் தலிபான்கன் பெண்களுக்கு எதிராக சில கடுமையான கட்டுப்பாடுகளையே விதித்துள்ளனர். அதன் சாட்சியமாகவே புதிய அரசாங்கத்தில் பெண்கள் யாரும் அதிகாரத்தில் இல்லை.

இரண்டாவது, தலிபான்களின் புதிய அரசாங்க உறுப்பினர்கள் மேற்கு நாடுகளால் நிராகரிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தலிபான்களின் அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியலில் தீவிரவாத போக்குடையவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த குழுவில் செயல்படும் பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுந்த் உட்பட பல உறுப்பினர்கள் மேற்கினால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரதமர் முல்லா முகமது ஹசன் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை பட்டியலில் உள்ளார். மேலும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹக்கானி, 20 வருட போரின் போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

மூன்றாவது, தலிபான்கள் பின்பற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பெயரிலான கொடுமையான சட்டங்கள் சர்வதேசத்திலிருந்து தலிபான்களை வேறுபடுத்துவதாக உள்ளது. புதிய தலிபான்கள் அரசாங்கத்தின் பிரதமர் முகமது ஹசன் அகுந்த்தின் அறிக்கையும் அதன் இருப்பையே உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர்- 07ஆம் திகதி பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை நிலைநாட்ட புதிய அரசு செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான விமர்சனங்களில் மேற்குசார் ஊடகங்களின் பிரசாரங்களே முதன்மையானவையாக உள்ளன.. அமெரிக்க தலைமையிலான மேற்கு நீண்டகாலமாகவே ஊடக பிரச்சாரங்களூடாக எதிர்த்தரப்பை மலினப்படுத்தும் உத்தியை முதன்மையாய் கொண்டு செயற்படுகின்றது. இதனூடாவே இவர்கள் போலிகளை பரப்பி உலக ஆதிக்கத்தை நிலைப்படுத்தினார்கள். இன்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி என்பது அமெரிக்காவின் தோல்வியாக விமர்சிக்கப்படும் சூழலில் அதனை மறைப்பதற்கு தலிபான்களை ஒடுக்குமுறை சக்தியாக மேற்குசார் ஊடகங்கள் அதிக பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. மேலும், தலிபான்களுடன் சீனா ஏற்படுத்தும் உறவும் மேற்கு ஊடகங்கள் தலிபான்களுக்கு எதிரான பிரச்சாரங்களை பலப்படுத்த உந்துதலாக உள்ளது. தலிபான்கள் மீதான எதிர்ப்புவாதங்களை கடந்து சர்வதேச அங்கீகாரத்துக்கான வாய்ப்புக்களையும் தலிபான்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒன்று, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி உருவாக்கப்பட்டமையை ஆக்கிரமிப்பாக கடந்து செல்ல முடியாது. 2020ஆம் ஆண்டு டோகா அமைதி ஒப்பந்தத்தினூடாகவே தலிபான்களுக்கான அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. 20ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தியவர்களுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு சென்று அவர்களுடன் இணைந்து கையெழுத்திடுகையில் அமெரிக்கா அவர்களை பயங்கரவாதிகள் என்ற நிலையிலிருந்து கடந்து ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ளும் தகுதி உடையவர்களாக அங்கீகரித்துள்ளார்கள் என்பதுவே உறுதியாகிறது. இதன்விளைவாகவே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த போதும் எவ்வித எதிர்ப்புகளுமின்றி தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றினார்கள். அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ள போது ஏற்பட்டுள்ள இவ்வாட்சி மாற்றத்தை அமெரிக்கா வெளிப்படையாக அங்கீகரிக்காத போதிலும் மறுதலையாய் நிராகரிக்கவில்லை என்ற செய்தியையும் வழங்கியுள்ளதை அவதானிக்கலாம். டோகா ஒப்பந்தத்தினை முன்னிறுத்தி, சர்வதேச தடைகளில் இருந்து தலிபான் உறுப்பினர்களை அகற்றுவதாக அமெரிக்கா உறுதியளித்த நிலையிலும் உள்துறை அமைச்சர் ஹக்கானியை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் பென்டகன் அறிவித்துள்ளமை அவர்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் ஈடுபாட்டை தக்கவைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது தெளிவாகிறது.

இரண்டு, பனிப்போருக்கு பின்னர் அமெரிக்க தலைமையிலான ஒரு துருவ அரசியல் ஒழுங்கில் பயணிக்கும் உலக நாடுகள், அமெரிக்காவின் நலனுடனேயே தமது தேசிய நலனையும் இணைத்து பழக்கப்பட்டு விட்டது. அச்சிந்தனையிலேயே தலிபான்களையும் சர்வதேச பரப்பில் இணைத்து கொள்ள மேற்கு நாடுகள் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றன. சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நேரடியாக தலிபான் அரசை அங்கீகரித்துள்ள போதிலும் மற்றைய நாடுகள் தலிபான்களை நிராகரிக்கவில்லை. இதன் வெளிப்பாடே வடக்கு கூட்டணி தலிபான்களை எதிர்த்து போரிட்ட போதிலும் எந்தவொரு சர்வதேச சக்திகளும் வடக்கு கூட்டணிக்கான ஆதரவை வழங்கி இருக்கவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுச்செயலளரும், அமெரிக்கா தலிபான்களின் ஆட்சியை அவதானிப்பதாக தெரிவித்துள்ளாரே தவிர எச்சந்தர்ப்பத்திலும் நிராகரிப்பதாக கருத்துரைக்கவில்லை. இது காலப்போக்கில் தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையே ஏற்படுத்துகிறது.

மூன்றாவது, தலிபான்கள் கடந்த 20ஆண்டு நெருக்கடியான காலப்பகுதிக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து அனுபவங்களை பெற்றிருப்பார்கள். இவ்வனுபவம் நிச்சயம் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தலிபான்களுக்கு உந்துதலாக இருக்குமென நம்பப்படுகிறது. தலிபான்களின் இடைக்கால அரசாங்கமாய் தற்போதைய அரசாங்கத்தை அறிவித்திருப்பதும் முதிர்ச்சியான அரசியல் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது. குறிப்பாக தலிபான்கள் நீண்டகாலம் போராளிகளாகவே அனுபவமுடையவர்கள் என்ற ரீதியில் ஆட்சி நிர்வாக கட்டமைப்புக்குள் மாறுவதற்கான சூழலை உருவாக்கும் நிலைமாறுகாலமாகவே இக்காலத்தை கருதுகிறார்கள். இந்நிலைமாறு காலத்திற்குரிய அரசாங்கமாகவே இடைக்கால அரசாங்கத்தை வடிவமைத்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய முஜாஹித், ‘தற்போதைய அமைச்சரவை ஒரு காபந்து அரசாங்கமாகும். அந்த குழு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்களை அழைத்துச் செல்ல முயற்சிக்கும்" என்று வலியுறுத்தினார். இக்கூற்று தலிபான்களின் ஆரோக்கியமான மாற்றத்தையே உறுதி செய்கிறது.

நான்காவது, உலக நாடுகளின் தலிபான்களுடனான உரையாடல்களும் டோகாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளும் தலிபான் ஆட்சிக்கான சர்வதேச அங்கீகாரத்துக்கான முகாந்திரமாகவே தெரிகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் அயல்நாடான இந்தியா தலிபான்களுடன் பலகட்ட பேச்சுக்களை நிகழ்த்தியுள்ளதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பேச்சுக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது மட்டுமல்லாமல் அரசியல் பொருளாதார உறவையும் பலப்படுத்தும் நோக்கு நிலையிலேயே அதிகம் நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்க புலனாய்வு துறையின் தலைவர் தலிபான்களின் தலைமையுடன் மேற்கொண்ட சந்திப்பு, தலிபான்கள் தொடர்பிலான அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளிங்டன் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோரின் முரண்பாடற்ற அறிக்கைகளை அவதானித்தால் தவிர்க்க முடியாது தலிபான்களை அங்கீகரிப்பதற்கான புறச்சூழல் வளர்ந்துள்ளதையே அவதானிக்ககூடியதாக உள்ளது.

ஐந்தாவது, சீனா அதிகம் மென் அதிகாரத்தையே விரும்பும் தேசமாகும். சீனாவின் ஆதிக்கம் என்பது பொருளாதார முதலீடுகளை மையப்படுத்தி இருப்பதனால், தனது முதலீட்டு அரசுகளில் மென் அதிகாரத்தையே அதிகம் அக்கறை கொள்கின்றது. இந்நிலையில் தலிபான்களுடன் சீனா ஏற்படுத்தும் நெருக்கம் தலிபான்களின் அரசாங்கம் மென் அதிகாரத்தை நோக்கி நகர்த்த வாய்ப்பு காணப்படுவதையே காட்டுகின்றது. தலிபான்-, சீன நெருக்கமே தலிபான்களுக்கான இன்றைய சர்வதேச நெருக்கடிக்கு ஒரு காரணமாக அமைகின்ற போதிலும், மாறும் உலக ஒழுங்கில் சீனாவின் ஆதரவுடன் தலிபான்களுக்கான சர்வதேச அங்கீகாரம் வலுப்படும் என நம்பப்படுகிறது.

எனவே, தலிபான்களின் சர்வதேச அங்கீகாரத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட போதும் மாறிவரும் உலக ஒழுங்கு தலிபான்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும். தலிபான்களின் தற்காலிக ஆட்சிக்கான அறிவிப்பு மாறும் உலக ஒழுங்கின் இயல்பாக அவதானிக்கபப்படுகிறது. அதில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தலிபான்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி இருப்பதனாலும், எதிர்கால உலக ஒழுங்கு சீனாவை மையப்படுத்தி நகரக்கூடியதென்ற வாதங்கள் மேலெழுவதனாலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடந்து உலகத்தோடு இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலிபான்களுக்கு தவிர்க்க முடியாததாக அமையலாம்.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்

Comments