தடுப்பூசி பெறாதிருப்பது ஆபத்தானது | தினகரன் வாரமஞ்சரி

தடுப்பூசி பெறாதிருப்பது ஆபத்தானது

கொவிட் 19 தொற்று பரவுதலின் தற்போதைய நிலைமை, தடுப்பூசியின் முக்கியத்துவம், கரும்பூஞ்சை பதிவாகியுள்ளமை, மக்கள் முன்பாக உள்ள பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் 'தினகரன் வார மஞ்சரி'க்கு அளித்த விஷேட பேட்டி

கேள்வி: நாட்டில் ஒரு மாத காலமாகத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ளதோடு கொவிட் 19 தவிர்ப்புக்கான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கின்றன. இந்த சூழலில் இத்தொற்றுக்குள்ளாகின்றவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது குறித்து சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில் : ஆம். இற்றைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் தினமும் 4000 -முதல் 5000 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாகப் பதிவாகினர். தற்போது அந்த எண்ணிக்கை அரைவாசியாகக் குறைவடைந்திருக்கின்றது. கடந்த இரு வாரங்களுக்கு முற்பட்ட காலத்துடன் ஒப்பிடும் போது இது நல்ல நிலைமையாகும். என்றாலும் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாவது அலை ஏற்பட்டது. அச்சமயம் ஒரு நாள் கூட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை. தினமும் ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான் பதிவாகினர்.

ஆனால் தற்போது தினமும் 2000 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியுள்ள போதிலும் நிலைமை இன்னும் நல்ல நிலையை அடையவில்லை. அத்தோடு இத்தொற்று காரணமான மரணங்களும் சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் 200 க்கும் மேற்பட்டதாகக் காணப்பட்டது. தற்போது அது 110 முதல் - 130 என்ற அளவுக்கு குறைவடைந்திருக்கின்றது. ஆனால் கடந்த காலங்களில் இம்மரணங்கள் நாளாந்தம் ஒரிண்டாகவே பதிவாகியிருந்தன. தற்போது 100 க்கு மேல் தினமும் மரணங்கள் பதிவாகின்றன.

அதனால் தற்போதைய நிலையை அடிப்படையாகக் கொண்டு எல்லா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி இயல்பு நிலையை ஏற்படுத்தினால் இத்தொற்று நிச்சயம் மீண்டும் தீவிர நிலையை அடையும். என்றாலும் நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைக்க முடியாது. நடமாட்ட மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தான் வேண்டும்.

ஆனால் அவற்றைக் கட்டம் கட்டமாக மேற்கொள்வதே ஆரோக்கியமானது. அதனையே நாம் சிபாரிசு செய்கின்றோம்.

கேள்வி: தற்போது இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணமாக எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்: தடுப்பூசி பெற்றுக்கொண்டதால் இத்தொற்று பரவாது என்றில்லை. தடுப்பூசி பெற்றிருந்தாலும் இத்தொற்றுக்கு உள்ளாகலாம். அதனை ஏனையவர்களுக்கு பரப்பவும் முடியும். தற்போது இத்தொற்றுக்கு உள்ளானவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கை குறைவடைவதற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கும் தொற்று தவிர்ப்புக்கான ஏனைய கட்டுப்பாடுகளும் தான் காரணம். இக்கட்டுப்பாட்டு ஏற்பாடுகளால் மக்களின் நடமாட்டம் பெரிதும் குறைவடைந்தமை தொற்றின் பரவுதலுக்கு பெருந்தடையாக அமைந்துள்ளது. குறிப்பாக சந்தைகள், பல்பொருள் அங்காடி நிலையங்கள், மீன் விற்பனை சந்தைகள் போன்றவாறான இடங்களிலும் கூட மக்கள் கூட்டமாக இருப்பதில்லை. இதன் பிரதிபலனாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது.

அதேநேரம் இத்தடுப்பூசியின் பிரதிபலனாக உடலில் நோயெதிப்பு சக்தி அதிகரிக்கும். இத்தொற்றுக்கு உள்ளானவரிடமிருந்து வைரஸ் தாக்கம் அதிகளவில் வெளிப்படாது. இது நோய் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை ஒரளவு குறைக்கும். ஆனால் முற்றாகக் கட்டுப்பாட்டு நிலையை அடையாது.

தொற்றுக்குள்ளானால் ஏற்படும் சிக்கல்களையும் உயிராபத்து அச்சுறுத்தலையும் தவிர்க்கவேயன்றி தொற்றுக்கு உள்ளாவதைத் தவிர்க்க இத்தடுப்பூசி வழங்கப்படவில்லை. அதனால் இத்தடுப்பூசியை சகலரும் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் இற்றை வரையும் 10.7 மில்லியன் மக்களுக்கு இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: தற்போதைய சூழலில் பெண்கள் கருத்தரிப்பதை ஒரு வருட காலம் தாமதப்படுத்துமாறு மருத்துவ நிபுணரொருவர் கூறியுள்ளமை தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: இவ்வாறு குறிப்பிட்டிருப்பவர் இந்நாட்டிலுள்ள சிரேஷ்ட பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ நிபுணராவார். அவர் நியாயமான காரணத்திற்காகவே அவ்வாறு கூறியுள்ளார். கர்ப்ப காலத்தில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படலாம். தடுப்பூசி பெற்றாலும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறனவர்களுக்கு ஒரளவுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் தான் தற்போதைய சூழலில் முடிந்தால் கருத்தரிப்பதை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டார். அவர் குடும்ப வாழ்வை தாமதப்படுத்துமாறு கூறவில்லை. அதாவது மழை பெய்யும் போது வெளியே செல்வதென்றால் குடையுடனாவது செல்ல வேண்டும். இல்லாவிடில் பொறுமையாக இருந்து மழை விட்ட பின்னர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர் கூறியுள்ளார். இதனைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இன்னும் சிலர் தவறாக விமர்சனமும் செய்கின்றனர். அம்மருத்துவ நிபுணர் கூறியதில் எவ்வித தவறும் இல்லை.

கேள்வி: இத்தடுப்பூசிக்கு எதிராக ஒரு சிலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனரே?

பதில்: எமது கராப்பிடிய வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் இத்தடுப்பூசிக்கு எதிராகத் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் இந்த மருத்துவரைத் தவிர இந்நாட்டில் எந்தவொரு மருத்துவருமே அவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை. அத்தோடு உலகில் வேறெங்காவது மருத்துவர்கள் அவ்வாறு கூறியிருப்பதாகவும் நாமறியவில்லை. அதனால் இம்மருத்துவரின் கூற்றை நம்புவதா? அல்லது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்களதும் கூற்றை நம்புவதா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் 5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை திரட்ட இத்தடுப்பூசி பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டு சிலர் தடுப்பூசி பெறாதிருப்பதாக அறியமுடிகிறது. ஆனால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இது நாட்டில் முக்கிய நபர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் தடுப்பூசியல்ல. அத்தோடு இது இலங்கையருக்கு மாத்திரம் வழங்கப்படும் தடுப்பூசியுமல்ல. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் கூட இத்தடுப்பூசியைத் தம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்றன.

அவ்வாறான மறைமுக நோக்கம் இருந்தால் அந்நாடுகள் இத்தடுப்பூசியை வழங்குமா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறான கட்டுக்கதைகளை நம்பி ஏமாறுவதால் இரண்டு அபாயங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். ஒன்று எமது உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்ள நேரிடும். மற்றையது இந்நோயைத் தம் வீடுகளில் இருப்பவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் பரப்புபவர்களாகி விடுவோம். அதனால் இந்த இரண்டு அபாயங்களையும் தவிர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் இத்தடுப்பூசியைத் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: இத்தடுப்பூசி பெற்றுக்கொள்வதால் பாலியல் பலவீனங்களுக்கு முகம் கொடுக்கலாமெனக் கருதி இந்நாட்டில் 20 - முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோர் அதனைப் பெறுவதில் ஆர்வமற்று இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: இதுவும் ஏற்கனவே கூறிய கட்டுக்கதைகளைப் போன்ற ஒன்று தான். இது தொடர்பில் எந்தவொரு மருத்துவரும் அறிவியல் ரீதியாகக் குறிப்பிடவில்லை. பாலியல் பலவீனம் என்பது வெளிப்படையாக நிரூபிக்க முடியாத ஒன்று. அதனால் சாத்திரம் கூறுபவர்கள் கையைப் பிடித்து கூறும் விடயங்களைப் போன்று நிரூபிக்க முடியாத விடயங்கள் தொடர்பில் தான் இவ்வாறான கதைகளைத் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் கூறுகின்றனர். இது தடுப்பூசிக்கு எதிரான பொய் வதந்தியேயன்றி வேறில்லை. பாலியல் பலவீனம் என்பது எல்லா வயது மட்டத்தினர் மத்தியிலும் வெவ்வேறு மட்டங்களில் காணப்படக்கூடியதாகும். அதனைத் இத்தடுப்பூசி பெறுவதன் விளைவு எனக் கருதலாகாது. ஆகவே இவ்வாறான பொய் வதந்திகளை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

கேள்வி: பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நோய்க்கு உள்ளாகியுள்ள பாடசாலைப் பிள்ளைகளுக்கு முதலில் இத்தடுப்பூசியை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இன்னும் தகவல்களைத் திரட்டிய பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். அத்தோடு பாடசாலைப் பிள்ளைகளுக்கு எந்த தடுப்பூசியை வழங்குவது என்பது தொடர்பிலும் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கேள்வி: தற்போது நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் கரும்பூஞ்சை நோய் பதிவாவதாக கூறப்படுகின்றதே?

பதில்: கரும் பூஞ்சை என்பது சாதாரணமாக சுற்றுச்சூழலில் காணப்படக்கூடிய ஒன்றாகும். உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமடைந்திருந்தால் தான் இந்நோய் நிலை ஏற்படுமேயொழிய, சாதாரண உடல் நிலையைக் கொண்டிருப்பவருக்கு ஏற்படாது.

குறிப்பாக நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், தீவிர சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து நோயெதிர்ப்பு சக்திக்காக மருந்து பாவிப்பவர்கள், புற்று நோயாளர்கள் போன்றவாறானவர்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் மிக அதிகம். அவ்வாறனவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டாலும் அதிக சிக்கல்கள் ஏற்படும்.

என்றாலும் இத்தொற்று ஏற்படும் சகலருக்கும் கரும்பூஞ்சை ஏற்படும் என்றில்லை. அது தொற்றிப் பரவக்கூடிய நோயுமல்ல. ஆனால் உயிராபத்து மிக்க நோய். இந்நோய் ஏற்படும் இடங்களுக்கு ஏற்ப நோயறிகுறிகள் வேறுபடும். அவற்றை கண்டறிவதும் சிரமமான காரியம். அதாவது நுரையீரல், மூளை, மூக்கு, கண் என்றபடி இந்நோய் ஏற்படலாம். அவற்றுக்கு ஏற்ப அதற்கான அறிகுறிகளும் வேறுபடும்.

அதனால் உடலில் நோயெதிப்பு சக்தி குறைவடைந்துள்ளவர்கள் குப்பை கூழங்களுக்கு அருகிலும், உக்கி அழியக்கூடிய பொருட்கள் காணப்படும் இடங்களுக்கும் செல்வதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறான இடங்களில் காணப்படும் இந்நோய்கிருமி காற்றின் ஊடாக உடலினுள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அதனால் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களால் தான் இந்நோயை சரியாக அடையாளம் காணலாம். கொவிட் 19 தொற்றை பி.சி.ஆர் பரிசோதனை செய்யாது உறுதிப்படுத்த முடியாதது போன்றுதான் கரும்பூஞ்சையுமாகும். இந்நோய் நிலை அவ்வப்போது பதிவான போதிலும் தற்போது விரல் விட்டெண்ணக்கூடிய ஒருசில கொவிட் 19 தொற்றாளர்கள் மத்தியிலேயே பதிவாகியுள்ளன.

கேள்வி: நிறைவாக நீங்கள் மக்களுக்கு கூறும் அறிவுரைகள் யாவை?

பதில்: கொவிட் 19 தொற்று பரவுதலுக்கு சில விடயங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அவற்றில் ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து, மக்கள் சமூக இடைவெளி தொடர்பில் கவனயீனமாக நடந்துகொள்ளும் ரயில், பஸ் தரிப்பிடங்கள், சந்தைகள், அங்காடி நிலையங்கள், பூங்காக்கள், மரண வீடுகள், திருமண வைபவங்கள், விருந்துபசார வைபவங்கள் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். அதனால் பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சாதனங்களில் நெரிசலாகப் பயணத்தை மேற்கொள்ளலாகாது.

ஆசனத்திற்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்பட வேண்டும். இல்லாவிடில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏனைய இடங்களிலும் கடைப்பிடிக்கப்படும் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் பிரயோசனமற்றதாகி விடும்.

அத்தோடு நெரிசலாகப் பயணங்களை மேற்கொள்வதன் ஆபத்தை மக்களும் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது. அதேநேரம் எல்லா இடங்களிலும் முகக்கவசத்தை அணிந்து கொள்வதிலும் சமூக இடைவெளியைப் பேணிக் கொள்வதிலும் உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இன்னும் சொற்ப காலம் பொறுமை காப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

இவை தொடர்பில் கவனயீனமாகவும் அலட்சியப் போக்குடனும் நடந்து கொண்டால் மீண்டும் இத்தொற்று தீவிரமடைவதையும் நாட்டை முடக்குவதையும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தற்போது நாட்டில் காணப்படுவது கொவிட் 19 தொற்றின் டெல்டா திரிபாகும். ஆனால் எதிர்காலத்தில் என்ன என்ன திரிபுகள் வெளிப்படுமோ தெரியவில்லை. அதனால் முன்னவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது இன்றியமையாத விடயமாகும்.

அத்தோடு இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி பெற வேண்டியவராக இருந்தும் இற்றைவரையும் பெற்றிராதவர்கள் அதனை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீடுகளில் இருக்கும் நோயாளர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இத்தடுப்பூசியைப் கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும். முதுமையும் நோயாளராக இருப்பதும் இத்தடுப்பூசியைப் பெறாதிருப்பதற்கான காரணங்கள் அல்ல. தடுப்பூசி பெறாதிருப்பது அவற்றை விடவும் ஆபத்தானதாகும். தற்போதைய சூழலில் இவை அனைத்தும் இன்றியமையாத விடயங்களாகும்.

பேட்டி கண்டவர்
மர்லின் மரிக்கார்

Comments