நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கையின் கம்சாஜினி | தினகரன் வாரமஞ்சரி

நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கையின் கம்சாஜினி

இலங்கையில் பிறந்த யுவதியொருவர் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமது நாட்டில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். அவர் கம்சி குணரத்தினம் என அழைக்கப்படும் கம்சாஜினி குணரத்தினம் ஆவார். அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர்கள். 1991 ம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அகதிகளாக நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

நோர்வே நாட்டுக்கு கம்சி வரும் போது அவருக்கு முன்று வயதாகும் அவர் நோர்வேயிலேயே கல்வி கற்றார். அவரின் பெற்றோர் வடக்கு நோர்வே பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தினார்கள். பின்னர் கம்சியின் பெற்றோர் நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தார்கள். கம்சிக்கும் அவரது சகோதரனுக்கும் அங்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது.

ஒஸ்லோவில் தமிழ் மொழியில் கல்வி கற்ற அவர் பின்னர் தமிழ் இளைஞர்கள் அமைப்பொன்றின் அங்கத்தவரானார். அவ்வேளையில் ஒஸ்லோவின் மேயராக இருந்த ரேமண்ட் ஜோன்சனை சந்திக்கும் வாய்ப்பு அந்த இளைஞர் அமைப்பின் மூலம் கிட்டியது.

அவர் இந்த உற்சாகமான பெண்ணுக்கு அரசியலில் ஈடுபட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். நோர்வே அரசியலுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவருக்கு மீண்டும் இலங்கைக்கு வர சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது. பல்கலைக்கழகத்தில் சமூக புவியியல் விஞ்ஞானத்தை பயின்ற அவர் 2018 ஆம் கம்சாஜினி என்னும் தனது பெயரை கம்சி என மாற்றிக்கொண்டார். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதியாக அவ்வேளையில் அவர் விளங்கினார்.

கம்சி பிறப்பிலிருந்தே பயங்கரமான அனுபவங்களுக்கு முகம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைத்த பலம் பொருந்திய பெண்ணாவார்.

அவர் அதனை செயல் மூலம் நிரூபித்தது 2011 ஆம் ஆண்டில் சவால்மிக்க அனுபவத்துக்கு முகம் கொடுத்ததன் மூலமாகும். அது அவ்வாண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி அவர் ஓட்டோயாவில் உள்ள தீவொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம் ஒன்றில் தொழிலாளர்கள் இளைஞர் லீக்கின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சந்தர்ப்பத்திலாகும், அங்கு அவர் ஏனையோரு டன் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது அந்திரோஸ் பேரிங் பிரேவிக் என்னும் நோர்வே பயங்கரவாதி ஒருவரால் முகாமில் கலந்து கொண்டவர்களை இலக்குவைத்து குண்டொன்று வெடிக்கச் செய்யப்பட்டது. அதில் 68 பேர் மரணமடைந்தார்கள். அந்த ஆபத்தான வேளையிலும் சரியாக சிந்தித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள குண்டு வெடித்து துண்டுகள் சிதறும் தறுவாயிலும் 500 மீட்டர் நீளம் கொண்ட டைரிப்ஜோடன் வாவியை துணிகரமாக நீந்தி உயிர் தப்பினார்.

அரசியல் வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னோக்கி வரும்போது கம்சி உலகுக்கே முக்கியமான செய்திகளை அழுத்தமாகச் சொல்லும் அளவிற்கு வலுவானவராக மாறியிருந்தார். சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில் மக்கள் ஐரோப்பாவை நோக்கி இடம்பெயர்ந்த போது அது ஐரோப்பாவுக்கு பிரச்சினையாக இருந்தாலும் கம்சி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அப்பாவி மக்களின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். மெல்ல மெல்ல நோர்வே அரசியலில் முன்னேறிய கம்சி முதலில்2007 ஆம் ஆண்டு ஒஸ்லோ நகர கவுன்சிலில் அங்கத்தவராக நியமனம் பெற்றார்.

2015 அக்டோபர் 15ஆம் திகதி ஓஸ்லோவின் துணை மேயரான கம்சி அந்நாட்டின் தொழிற்கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டார். சமூக ஜனநாயக அரசியல் நடைமுறையை பின்பற்றிய அவர் தொழிலாளர் இளைஞர் லீக்கில் அனைவரும் பாராட்ட தக்க விதத்தில் பணிகளை மேற்கொண்டார். இவ்வருட பொதுத் தேர்தலுக்காக தொழிலாளர் கட்சியின் ஓஸ்லோ நகருக்காக முன்வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் தொழி ற்கட்சியின் பெயர்ப்பட்டியலில் அவரது பெயர் ,இரண்டாவது இடத்தில் இருக்கும் அளவிற்கு அவர் அந்நாட்டின் தொழிற்கட்சியினதும் மக்களினதும் ஆதரவைப் பெற்றிருந்தார். இறுதியில் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திலும் தனக்கான ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். கம்சி குணரத்னம் பயணித்த தூரம் அதிகமாகும்., அவர் சிலவேளை இலங்கையிலிருந்து கவலையோடு வெளியேறி இருக்கலாம் ஆனாலும் இன்று அவர் இலங்கைக்கு புகழ் தேடித் தந்துள்ளார். சிலவேளை அவர் இலங்கையில் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு இடம் அவருக்கு கிடைத்திருக்காது என்பதை கூறாமல் இருக்க முடியாது.

அதனால் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் அனைத்தையும் வாழ்க்கையின் பலமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு கம்சியை நல்ல உதாரணமாக கூறலாம்.

டிரோனி வேவலகே
தமிழில்: வீ.ஆர்.வயலட்

 

Comments