பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தேவை நிரந்தர தீர்வேயன்றி தற்காலிக நிவாரணங்களல்ல | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தேவை நிரந்தர தீர்வேயன்றி தற்காலிக நிவாரணங்களல்ல

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. அத்துடன் அது கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட ஒன்றுமல்ல. மாறாக நீண்டகாலமாக பொருளாதாரத்தில் நிலவிவரும் கட்டமைப்பு சார்ந்த பலவீனங்கள் காரணமாக பொருளாதார சமநிலை குலைந்ததன் காரணமாக உருவாகிய ஒன்றாகும்.

அத்துடன் அந்த பலவீனங்களை அடையாளங்கண்ட பின்னரும் அவற்றிற்குரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்த காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே தவறியமையும் மிக முக்கிய காரணங்களாகும்.

இலங்கைப் பொருளாதாரம் தொடர்ச்சியாகவே இரட்டைப் பற்றாக்குறைகளை எதிர்நோக்கி வருகிறது. ஒருபுறம் அரசாங்க வரவு செலவுத்திட்டம் தொடர்ச்சியாகப் பற்றாக்குறையினை எதிர்நோக்கியுள்ளது. மறுபுறம் நாட்டின் சென்மதி நிலுவை நடைமுறைக்கணக்கு தொடர்ச்சியாகப் பற்றாக்குறை நிலையில் காணப்படுகிறது. ஒரு நாடு தனது இயலுமைக்கு அப்பால் நுகர்வுச்செலவு உட்பட அதிகமாக செலவு செய்யுமாயின் அதற்குத் தேவையான வளங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும். எனவேதான் இலங்கையின் சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்கு நிலுவை குறைநிலையில் உள்ளது. இலங்கை தான் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருள்கள் சேவைகளின் பெறுமதியை விடக் கூடுதலாக செலவுகளை மேற்கொள்கிறது. நீண்டகாலமாகவே இந்நிலைமை தொடர்கிறது.

நாட்டின் மொத்தச் செலவீடுகளில் கணிசமான பங்கினை அரசாங்கச் செலவினங்கள் எடுக்கின்றன. அரசாங்க வருவாய்களை விட அதன் செலவினங்கள் தொடர்ச்சியாக உயர்வாக உள்ளமையினால் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை தொடர்ச்சியாக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. அதனைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை.

பொதுவாக செலவீடுகளைக் குறைப்பதன் மூலமும் அரசாங்க வருவாய்களை அதிகரிப்பதன் மூலமும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைக் குறைக்க முயற்சிக்கலாம். இலங்கையில் செலவீடுகளைக் குறைப்பதன் மூலம் அதற்குத் தீர்வுகாண முயற்சிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு செலவீடுகளைக் குறைக்க முயற்சிக்கும் போது அடிவாங்கிய துறைகளாக கல்வி, சுகாதாரம் சமூகநல மேம்பாட்டுச் செலவுகள் போன்றனவே காணப்பட்டன. மாறாக பாதுகாப்பு, அரச நிருவாகம் போன்ற அதிக நிதியை செலவிடும் துறைகள் மீது வெட்டுகள் விழுவது இல்லை. சர்வதேச நிதி நிறுவனங்களாகிய உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்றன இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் போது செலவுகளை முன்னுரிமைப்படுத்துமாறும் அவற்றைக் குறைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்குகின்றன. குறிப்பாக, தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி அரசாங்க செலவீட்டில் குறிப்பிடத்தக்களவு பணத்தை வீண் விரயம் செய்யும் அரசதுறை தொழில் முயற்சிகளை மறுசீரமைக்குமாறு அல்லது தனியார் மயப்படுத்துமாறு அவை கூறுகின்றன.

அதேபோல் சுமார் பதினைந்து இலட்சம் சேவையாளரைக் கொண்ட அரசாங்கத்துறையின் அளவு இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு சார்பளவில் பெரிதாக உள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே அரசாங்கத்தறையின் பருமனும் அதிகரித்த செலவீடுகளும் பேரினப் பொருளாதார சமமின்மையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறலாம். இச்சமமின்மை நாட்டின் பொருளாதார வளர்ச்சி பணவீக்கம் வட்டிவீதம் மற்றும் நாணய மாற்று வீதம் என்பவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

அரசாங்க செலவீடுகளில் காணப்படும் அதிகரிப்புகள் நாட்டின் பணக்கொள்கையைக் கையாள்வதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. அதிகரித்துச் செல்லும் அரசாங்க செலவினங்கள் மற்றும் குறைவான அரசிறைவருவாய் சேகரிப்புகள் காரணமாக ஏற்படும் பலவீனமான அரசிறை முகாமைத்துவம் தொடர்ச்சியாக வரவு செலவுத்திட்டத்தில் காணப்படும் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய தொடர்ச்சியாகக் கடன் பெறும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. இத்தகைய படுகடன்கள் படிப்படியாக அதிகரித்து உயர் கடன்களுடன் கூடிய நிலையற்ற தன்மைக்கு இட்டுச்சென்றுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில் இந்த நிலைமை தொடர்ந்து நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டபோது அவ்வப்போது பதவியிலிருந்த அரசாங்கங்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் முகமாக 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் மீட்பு உதவியை நாடியுள்ளன. பதினாறு தடவைகள் அந்நிறுவனம் பேரினப்பொருளாதார நிலைப்படுத்தலுக்காக இலங்கைக்குத் தேவையான நிதி வசதிகளையும் தொழினுட்ப ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. 16 தடவைகள் சர்வதேச நாணய நிறுவனத்தின் உதவிகளைப் பெற்ற பின்பும் தற்போதும் அதே பிரச்சினை இலங்கையில் தீவிரமாகியுள்ளதென்றால் அந்நிறுவனத்தின் ஆலோசனைகளில் உள்ள குறைபாடுகளே அதற்குக் காரணம்.

எனவே இம்முறை நாம் அந்நிறுவனத்தின் உதவியை நாடப்போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நெருக்கடிகள் ஏற்படும்போது அதிலிருந்து மீட்சிபெற சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடிய இலங்கை அரசாங்கங்கள் நெருக்கடியிலிருந்து அப்போதைக்கு வெளிவந்த பின்னர் அந்நிறுவனம் பரிந்துரைத்த பேரினப்பொருளாதாரக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கோள்வதில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என அதுபற்றி ஆய்வு செய்யும் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இறுதியாக 2016 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் (Extended Fund Facility) குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பூர்த்தி செய்வது இலங்கையின் பேரினப்பொருளியல் உறுதிப்பாட்டைப் பேண அவசியமானதென கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதார ஆய்வு நிறுவனமொன்றின் அண்மைய ஆய்வறிக்கை கூறுகிறது. புதிதாக ஒப்பந்தங்களைச் செய்யாமல் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி செயற்படுமாறு ஆலோசனை கூறப்படுகிறது. அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தை நாடாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு அதனை நிலைப்படுத்தவல்ல வேலைத்திட்டத்தை இலங்கை மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து வெளிப்படுத்த வேண்டுமென இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் கரிசனையுள்ள ஆய்வாளர்களும் கல்விமான்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

2016 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட கடன் ஒப்பந்தம் பின்வரும் இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தது. வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கட்டமைப்பு ரீதியில் அரசாங்க வருவாய்களை அதிகரித்தல் தொடர்ச்சியாக அந்நியச் செலாவணி கையிருப்புகள் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைத் தடுத்து நிறுத்தி எதிர்த்திசைக்குத் திருப்புதல். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச பொதுப்படுகடன் அளவைக் குறைத்தல், இலங்கை கடன் அழுத்தத்திற்கு (debt distress) ஆளாகும் இடர்நேர்வைக் குறைத்தல். அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்தல், அரசதுறை தொழில் முயற்சிகளின் நடவடிக்கைகளை முன்னேற்றுதல், நெகிழ்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் முறைமை ஒன்றை நோக்கி நகர்தல் அத்துடன் நெகிழ்தன்மைவாய்ந்த நாணயமாற்றுவீத முறைமையினை நடைமுறைப்படுத்தல். இத்தகைய இலக்குகளை அடைவதன் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய பேண்தகு வளர்ச்சியை அடைய முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

அரசிறை ஒருங்கிணைப்பு (fiscal consolidation) வருவாய் திரட்டுதல் (revenue mobilization) பொதுநிதி முகாமைத்துவச் சீர்திருத்தம் (public finance management reform) அரசதுறை தொழில் முயற்சிகளின் சீர்திருத்தம் (state enterprise reform) பணக்கொள்கையின் வினைத்திறனை மேம்படுத்தலும் நாணயமாற்றுவீத நெகிழ்தன்மையை பேணலும் (enhance monetary policy effectiveness and maintaining exchange rate flexibility) சர்வதேச வர்த்தகம் முதலீடு என்பவற்றை ஊக்குவித்தல் (supporting trade and investment) ஆகிய ஆறு நடவடிக்கைகள் ஊடாக மேற்படி குறிக்கோள்களை அடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மேற்படி நடவடிக்கைகள் வலுவிழந்தன என்றாலும் மேலே அடையாளங்காணப்பட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகள் இன்னமும் அப்படியே காணப்படுகின்றன, அல்லது அதைவிட மோசமான நிலையினை அடைந்துள்ளன. இன்றைய சூழ்நிலையில் மேற்படி பிரச்சினைகளோடு பொருளாதாரத்தை மீள நிலைப்படுத்துவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்றாக பொதுப்படுகடன் மீள் கட்டமைப்புச் செய்வதையும் உள்ளடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரினாலென்ன அல்லாவிட்டலென்ன மேற்படி பிரச்சினைகள் தாமாகத் தீரப்போவதில்லை அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குரிய நிரந்தரத் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் அதற்கு தகுதிவாய்ந்த அறிஞர்களினதும் அதிகாரிகளினதும் ஆலோசனைகளுக்கு செவிமடுக்க வேண்டும்.

அல்லாவிட்டால் பொருளாதாரத்தை அரித்துத் தின்று கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மேலும் மோசமடைந்து மீளமுடியாத அபாயத்திற்குள் நாட்டைத் தள்ளிவிடும்.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments