வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றேன் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றேன்

எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள்.

என்கிறார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். தான் அமைச்சராக இருக்கின்ற போதிலும் சில கூட்டுப் பொறுப்புக்களும் வரையறைகளும் தனக்கு இருப்பதை கடற்றொழிலாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்ைக தெரிவித்தார். நேர்காணல் முழுமையாக...

கடற்றொழில் அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். குறித்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக திருப்தியடைகின்றீர்களா?


இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமாக இருந்தால் திட்டமிட்டவாறு செயற்பட முடியவில்லை என்பதையிட்டு வேதனையோடே இருக்கின்றேன். சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகத்தான், குறித்த காலப் பகுதி நகர்ந்து கொண்டு இருக்கின்றது.

உலக போக்கினையே மாற்றியமைத்திருக்கின்ற கொரோனா பரவல், நாம் ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்று சில மாதங்களுக்குள்ளேயே இலங்கைக்குள்ளும் ஊடுருவி தன்னுடைய கைவரிசையைக் காண்பித்துக் கொண்டிக்கின்றது. அதன்பின்னராக காலப் பகுதியானது, கொரோனாவை எதிர்கொள்ளவது மற்றும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது போன்றவை தொடர்பான சிந்தனைகளுடனே பெருமளவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அதற்கு இடையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினாலும் கடற்றொழில் செயற்பாடுகள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது எம்மிடம் காணப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதற்காக அபிவிருத்தித் திட்டங்கள் எதுவுமே செய்யவில்லை என்றும் அர்த்தம் கொள்ள முடியாது. கிருந்த என்ற இடத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. களப்புத் திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்பு நீர்நிலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டங்கட்டமாக வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று நீர் வேளாண்மை தொடர்பிலும் கூடிய கரிசனை செலுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நன்னீரில் மீன், இறால், நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் கணிசமான வெற்றியினை பெற்றிருக்கிறோம். கடலட்டைப் வளர்ப்பிற்கு பொருத்தமான இடங்களாக வடக்கின் பல்வேறு கடல் பிரதேசங்கள் விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய தொழில் முறைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கடலட்டைப் பண்ணைகள் வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்றன.

நான் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்கின்ற போது வடக்கில் சுமார் 50 கடலட்டைப் பண்ணைகளே காணப்பட்டன. ஆனால் தற்போது 500 இற்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கான பண்ணைகள் அமைக்கப்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தளவு வேகமாக தற்போது வடக்கில் பண்ணைகள் உருவாகுவற்குக் காரணம் மக்கள் மத்தியில் கடலட்டைப் பண்ணை அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணவர்வாகவும். குறித்த தெளிவினை மக்களுக்கு ஏற்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

இவ்வாறு, கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, எதிர்கொள்ளகின்ற சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன.

வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் பெருக்கம் தொடர்பாக பெருமிதமடைகின்றீர்கள். ஆனால், குறித்த பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் போதிய கவனம் செலுத்தாமல் பண்ணை வளர்ப்புக்களுடன் மாத்திரம் முடங்கிக் கொள்கின்றீர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றதே.?

பண்ணைகளை உருவாக்குவதனால் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருளாதார நன்மைகள் தொடர்பாக அறியாதவர்களின் கருத்தாகத்தான் இவ்வாறான விமர்சனங்களை நான் பார்க்கின்றேன்.

எங்களுடைய பிரதேசத்தில் காணப்படுகின்ற வாய்ப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்துவன் மூலமே நிலைபேறான பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு எற்படுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் தூதுவர் என்னை வந்து சந்தித்திருந்தார். அப்போது பண்ணை வளர்ப்பு முறைகள், பருவ கால மீன் வளர்ப்பு, நன்னீர் வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை மூலம் பங்களாதேஷ் எய்திய அடைவுகள் தொடர்பாக தெரிவித்த அவர், தமது நாட்டில் இருப்பதை விட அதிகமான நீர்நிலைகள் இலங்கையில் இருக்கின்ற போதிலும், அவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது என்ற விடயத்தினை சுட்டிக் காட்டியிருந்தார்.

அவருடைய கருத்தை நானும் புரிந்து கொள்கின்றேன் - ஏற்றுக்கொள்கின்றேன். உதாரணத்திற்கு கடலட்டையை பார்ப்பீர்களேயானால், இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேசச் சந்தையில் நல்ல வரவேற்புக் காணப்படுகின்றது. அதேவேளை, குறித்த கடலட்டைகளை வளர்ப்பதற்கு பொருத்தமான இடமாக வடக்கின் பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டும் இருக்கின்றன.

ஆனால், நான் பொறுப்பேற்கும் வரையில் சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. எமது கடற்றொழிலாளர்களில் பெருமளவானவர்கள் பாரம்பரிய தொழில்முறைகளைப் பயன்படுத்தி சிறு கடல்களில் தொழிலை மேற்கொண்டு தங்களது ஜீவனோபாயத்தை நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்குப் போதுமான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

அவ்வாறானவர்களுக்கு, கடலட்டை தொடர்பாக எடுத்துரைத்து, அவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து நிலையான பொருளாதா வழிவகைகளை ஏற்படுத்தி வருகின்றேன். இந்தச் செயற்பாடுகளை யாராவது விமர்சிப்பார்களாக இருந்தால், அதுதொடர்பாக நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

அதேவேளை, ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாகவும் முயற்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றோம் பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பது, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை செயற்படுத்துவது மற்றும் வாழைச்சேனை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வது போன்ற பல்வேறு விடங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தற்போதைய சூழல் காரணமாக வேலைகள் மிகவும் மந்தகதியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் நான் நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த விடயத்தில் என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு விடயத்தினை தெரிவிக்க வேண்டும். ஆசிய வங்கியின் நிதிப் பங்களிப்புடன் வடக்கில் உருவாக்கப்பட இருந்த பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகள், கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வினைத்திறன் இன்மை காரணமாக கைநழுவிப் போயிருக்கின்றது. அதனை மீளப் பெறுவதற்கும் எம்மால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேபோன்றுதான், மயிலிட்டித் துறைமுகமும் கடந்த ஆட்சியாளர்களினால் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து புனரமைக்கப்பட்டமையினால் இன்றுவரை குறித்த துறைமுகத்தினால் எமது கடற்றொழிலாளர்கள் சரியான பலனைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதுதொடர்பாகவும் நான் கவனம் செலுத்தி வருகின்றேன்.

மயிலிட்டித் துறைமுகம் அமைக்கப்பட்டதனால் வடக்கு கடற்றொழிலாளர்கள் சரியான பலனை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகின்றீரக்ள். அதனை கொஞ்சம் தெளிவாக கூறமுடியுமா?

அரசியல் அடைவுகளுக்காக அவசர அவசரமாக கடந்த ஆட்சியாளர்களால் மயிலிட்டித் துறைமுகம் அமைக்கப்பட்டிருந்தது. அது புனரமைக்கப்படுகின்ற போது பிரதேசக் கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் சரியான முறையில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பது ஒன்று.

அடுத்ததாக, புனரமைப்புப் பணிகள் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமான வகையில் திட்டமிடப்படவில்லை. புனரமைக்கப்பட்டு சில வருடங்களே கடந்துள்ள நிலையில், இறங்கு துறையின் நீளத்தினை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைப்பது மாத்திரமல்ல, சாதாரணமாக ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில்கூட அதன் புனரமைப்பு வேலைகள் திட்டமிடப்படவில்லை.

எல்லாவற்றையும்விட முக்கியம், குறித்த மயிலிட்டித் துறைமுகத்தினை பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில் உபகரணங்களும் தொழில் அறிவும் போதுமானளவு பிரதேசக் கடற்றொழிலாளர்களிடம் இல்லை. சரியான வேலைத் திட்டமாக இருந்திருக்குமானால், மயிலிட்டித் துறைமுகத்தின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதே, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக இருக்கின்றவர்களை தெரிவு செய்து, தொழில் பயிற்சிகளை வழங்குவதுடன் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடுவதற்காக படகுகள் உட்பட்ட தொழில் உபகரணங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான பயிற்சிகளை ஆர்வம் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கு கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அவை விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு கடற்றொழிலாளர்கள் உங்கள் மீது அதிருப்தியடைந்திருப்பதாக தெரிகின்றது. இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?

இந்த விடயத்தில் வடக்குக் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்கள் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதாரச் சிக்கல்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். அவை தொடர்பாக இந்தியத் தரப்பினருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதுடன் பாதிப்புக்களுக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றேன். எமது கோரிக்கைகளில் இருக்கின்ற விடயங்களை இந்தியத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் எமது கடற்றொழிலாளர்களையோ அல்லது என்னையோ திருப்திப்படுத்தும் வகையில் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இருப்பினும், எமது கடல் வளங்களை அழிப்பதுடன் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை முழுமையாக நிறுத்துவதற்கான முயற்சிகளில் நான் மனம் சோரவில்லை என்பதை எமது கடற்றொழிலாளர்களுக்கு கூறவிரும்புகின்றேன்.

அடுத்ததாக, இந்த விடயத்தில் கடற்றொழிலாளர்கள் என் மீது அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். நான் கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தினை புரிந்து கொள்ளுகின்றேன் - அவர்களின் உணர்வுகளை மதிக்கின்றேன்.எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள். நான் அமைச்சராக இருக்கின்ற போதிலும் சில கூட்டுப் பொறுப்புக்களும் வரையறைகளும் இருக்கின்றன என்பதையும் எமது கடற்றொழிலாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்தியத் தரப்பினால் காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால், எல்லை தாண்டி வருகின்றவர்களை கைது செய்து சரியான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பதுதானே உங்களின் மீதான குற்றச்சாட்டாக இருக்கின்றது?

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் என்பது தனியே, கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடாக மாத்திரம் பார்க்க முடியாது. இவ்விடயத்தில் இரண்டு நாடுகள் சம்மந்தப்பட்டடிருக்கின்றன. மறுதரப்பிலே சம்மந்தப்பட்டிருப்பது, இந்தப் பிராந்தியத்தில் பலம் பொருந்திய நாடாக இருக்கின்ற இந்தியா. இந்தப் பிராந்தியத்திலே கேந்திர முக்கியத்துவம் உள்ள அமைவிடத்தில் இருக்கின்ற சிறிய நாடாக இலங்கை இருக்கின்றது. எனவே இந்த விவகாரத்தினை இராஜதந்திர ரீதியாகவே கையாள வேண்டியிருக்கின்றது. எமது தீர்மானங்கள் பூகோள அரசியல் போட்டியில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாத வகையில் எமது தீர்மானங்களும் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

எனவேதான், ஏற்கனவே நான் கூறியது போன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்று, இந்திய அரசுடன் கலந்துரையாடி இராஜதந்திர ரீதியாக இந்த விவகாரத்தினை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.

அதேவேளை, கடற்படையினரின் கண்காணிப்பும், சட்ட ரீதியான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இருந்தாலும், இந்தியக் கடற்றொழிலாளர்களின் ஜீவனோபாயத் தொழிலாக இது காணப்படுவதனால், அவர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் எமது பிரதேசத்தில் தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்று கருதுகின்றீர்கள்?

எமது கடல் வளத்தினை அழிக்கின்ற சட்ட விரோதச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு இந்தியாவின் தமிழகத்தினை சேர்ந்த அப்பாவிக் கடற்றொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. எமது கடலில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடிக்கின்ற படகுகளில் பெரும்பானவற்றின் உரிமையாளர்களாக அரசியல் செல்வாக்குமிக்க முதலாளிமார் பலர் காணப்படுகின்றனர். அப்பாவி தொழிலாளர்களின் பாரம்பரிய தொழில் முறைகளை அழித்து, தங்களுடைய ரோலர்களின் தொழிலாளர்களாக வாழும் வாழ்க்கை முறைக்கு பணம் படைத்த முதலாளிமாரினால் அப்பாவி மக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிளுள் நுழைந்து சட்டவிரோதமாக மீன்களைப் பிடித்துச் செல்லாது விட்டால், வீட்டில் உள்ளவர்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்ற நிலையிலேயே அப்பாவிக் கடற்றொழிலாளர்கள் எமது பிரதேசத்தினுள் நுழைகின்றனர்.

எனவே இந்தப் பிரச்சினையை சட்டங்களின் ஊடாக நிரந்தரமாக தீர்க்க முடியாது. ஆழ்கடல் தொழில் போன்ற மாற்றுத் தொழில் ஏற்பாடுகளே நிரந்தமாக தீர்வினைப் பெற்றுத் தரக்கூடியது என்று நம்புகின்றேன். இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியத் தரப்பிலும் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது.

கடந்த சில வாரங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் ஒரே பரபரப்பாக இருக்கின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இவ்வாறான கூத்துக்களை நான் கண்டுகொள்வதில்லை. இவ்வாறானவர்களுக்கு கொள்கையும் இல்லை வேலைத் திட்டங்களும் இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதை மாத்திரமே நோக்கமாக கொண்டவர்கள்.

அந்த நோக்கத்திற்கான சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கூத்துக்களில் ஈடுபடுகின்றார்கள்.

இவர்கள் அனுப்பிய கடிங்கள் எவையும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை, ஆணையாளர் நாயகத்தின் உரையின் போது, தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களை, தாங்கள் சார்ந்த சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றவர்களாக ஏனையவர்களால் மதிக்கப்பட வேண்டும். ஆனால் எமது அரசியல் தரப்புக்களின் சிறுபிள்ளைத்தனங்கள் ஏனையவர்கள் கண்டுகொள்ளாத நிலையினைத்தான் உருவாக்கியிருக்கின்றது.இவைதொடர்பாக எமது மத்தியில் இருக்கின்ற ஊடகங்களும் மக்களும் புரிந்து கொள்ளும் வரையில் இவ்வாறான கூத்துக்கள் அரங்கேறுவதை தடுக்க முடியாது.

அ.கனகசூரியர்

Comments