தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்.01வரை நீடிப்பு | தினகரன் வாரமஞ்சரி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்.01வரை நீடிப்பு

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் காணொளி மூலம் கூடிய கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட ஜனாதிபதி செயலணி அமர்வில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் டெல்டா திரிபு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் கடந்த மாதம் 20ம் திகதி தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடி உள்ள நிலையில், விசேட மருத்துவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.அந் நிலையில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பயனை உச்ச அளவில் பெற்றுக் கொள்வதானால் அதனை மேலும் நீடிப்பது சிறந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறக்க உள்ளதையடுத்து மேலும் மூன்று மாதங்களுக்கு கடுமையான சட்ட திட்டங்களின் கீழ் நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலிற்கான ஊரடங்கு சட்டம் கடந்த மாதம் 31ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த நிலையில் அதற்கான காலம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதற்கிணங்க கடந்த 13ஆம் திகதி அந்த கால நீடிப்பு நிறைவு பெறவிருந்ததையடுத்து 11ஆம் திகதி கூடிய ஜனாதிபதி செயலணி அமர்வில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து 13ஆம் திகதி நிறைவுபெறவிருந்த தனிமைப்படுத்தலிற்கான ஊரடங்குச் சட்டத்தை.21ஆம் திகதிவரை நீடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும் ஜனாதிபதி செயலணி மூலம் நியமிக்கப்பட்ட விசேட குழு மற்றும் சுகாதாரத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் தீர்மானித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Comments