பெருந்தோட்டங்களில் ஒப்பந்த வேலை செய்வோர் எளிதாக முன்னேறக் கூடியவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களில் ஒப்பந்த வேலை செய்வோர் எளிதாக முன்னேறக் கூடியவர்கள்

புசல்லாவையில் அமைந்துள்ள பெரிய தேயிலைத் தோட்டங்களில் சோகமயும் ஒன்று. மூன்று டிவிஷன்களைக் கொண்ட பரந்த தோட்டம். இங்கு தொழிலாளியாக வேலை செய்யும் சிவசுப்பிரமணியம் ஒரு முயற்சியாளர். உழைப்பாளி. சோகம தோட்டத்தில் தேயிலை மலைகளை ஒப்பந்த (கொன்ட்ரக்ட்) அடிப்படையில் பொறுப்பு எடுத்து கவ்வாத்து வெட்டுதல், புல் வெட்டுதல், சமன் செய்தல், மரம் வெட்டுதல் போன்றவற்றை செய்து கொடுப்பது இவர் வழக்கம்.

தோட்டப்பகுதியில் தேயிலைச் செடிகளை வெட்டுவதற்கு தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுவதே கவ்வாத்து கத்தி என அழைக்கப்படுகிறது. கவ்வாத்து கத்தி ஒரு மரத்தின் கிளை இரண்டாகப் பிரியும் இடத்தை கவட்டை என்போம். தேயிலை உண்மையில் ஒரு செடி அல்ல. அது ஒரு மரம். அதன் கிளைகளை அவ்வப்போது சீவி விடுவதால்தான் அது ஒரு புதராக காட்சி தருகிறது. இப்படி கவட்டைகளை சீவி விடுவதால்தான் அதற்கான கத்தி கவட்டைக் கத்தி என்றும் சுருக்கமாக கவ்வாத்து கத்தி என்றும் பெயர் பெற்றது. தேயிலை வளர்ப்பில் கவ்வாத்து கத்தி முக்கிய அம்சம். தேயிலைக்கு முன் இங்கு கோப்பி பயிரிடப்பட்ட போது அதன் கிளைகளை வெட்டுவதற்காக முனை வளைந்த ஒரு கத்தி உபயோகிக்கப்பட்டது. கோப்பி யுகம் முடிந்த பின்னரும் அக்கத்தி நம் அனைவரது வீட்டு சமையல் அறைகளிலும் கோப்பிக் கத்தி என்ற பெயரில் இருக்கிறது.

தேயிலை மலைகளைத் துப்புரவு செய்யும் இந்த வேலை வெள்ளைக்காரர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. தொழிலாளர்கள் இதை “கொந்தரப்பு“ என்றே அழைக்கிறார்கள். தேயிலைத் தோட்ட வேலைகளில் அவை ஒழுங்காக நடைக்கிறதா என்பதை கண்காணிப்பவரே கங்காணி. சுப்பர்வைசர். எல்லா வேலைகளையும் கண்காணிக்கும் இவர்கள் கொந்தராத்து வேலை நடக்கிறதா என்பதை கண்காணிப்பதில்லையாம். கையில் அரிவாளுடன் வேலை செய்பவர்களை கண்காணிப்பது ஆபத்தான வேலை என அவர்கள் கருதியிருக்கலாம். ஆனாலும் கொந்தராப்பு கங்காணி என்ற ஒருவர் இருந்திருக்கிறார்.

தற்போது ஒரு ஏக்கர் கவ்வாத்து வெட்ட ஆளுக்கு 760 ரூபா அடிப்படையில் ஒப்பந்த பேருக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் தீர்மானிக்கப்படும். பாலசுப்பிரமணியம் இந்த அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு ஒப்பந்த வேலைகளை செய்து கொடுப்பதைப் போலவே பலரும் தமது வழமையான வேலை நேரம் போக மிகுதி நேரத்தில் கவ்வாத்து வெட்டுகிறார்கள்.

ஒரு மலையை சிவசுப்பிரமணியம் பொறுப்பெடுத்தால் தன்னுடன் மூன்று நான்கு பேரை சேர்த்துக் கொள்வார். முதலில் கவ்வாத்து சாமிக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள். காயங்கள் ஏற்படாமல் வேலை முடிய வேண்டும் என்பதுதான் இப் படையலுக்குக் காரணம். பயம் தான் கடவுளையும் மரங்களையும் படைத்திருக்க வேண்டும். ஒரு ஒப்பந்தத்தை மூன்று பேர் சேர்ந்து ஐந்து நாளில் செய்து முடித்தால் கிடைத்த மொத்த பணத்தையும் சரிசமமாய் பிரித்துக் கொள்வார்கள்.

கவ்வாத்து வெட்டுதலிலும் மேல் வெட்டு, அடி வெட்டு என இரண்டு வெட்டுகள் உள்ளன. பருமனான கிளையை அறுத்து விடுவது கொஞ்சம் மெனக்கட வேண்டிய வேலை. இது அடி வெட்டு. கவ்வாத்து மலையைப் பொறுப்பெடுத்தவர்தான் வேலையை அடி வெட்டுடன் ஆரம்பிப்பது சம்பிரதாயம். மேல் என்பது சிறிய கிளைகளை வெட்டி தழைக்க விடுவதாகும்.

இவ்வாறான ஒப்பந்தங்களை ஏற்று வேலை செய்பவர்கள் அதே தோட்டத்தில் வேலை செய்பவர்கள்தான். மேலதிக தொழிலாக செய்வதால் இது உபரி வருமானமாக அமைந்தது. இவர்களிடம் ஆடு, மாடுகளும் இருக்கும். உழைப்பின் ருசி கண்டவர்கள்தான் கொந்தராத்து வேலைக்கு வருவார்கள். இவர்கள் தான் பின்னர் தோட்டத்திலேயே சிறிய பலசரக்கு கடைகளைத் திறந்தார்கள். பக்கத்து நகரங்களில் சிறு கடைகளை நடத்தி படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினார்கள். பின்னர் நாவலப்பிட்டி, கண்டி, கொழும்பு என நகரங்களையும் பெரு வர்த்தகர்களாக மாறிப் போனார்கள்.

உழைப்பும் ஊக்கமும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இந்த ஒப்பந்தக்காரர்கள் ஒரு நல்ல உதாரணம்.

வாழ்க்கையில் உயர்தரமான வாழ்க்கை வாழ விரும்பியவர்களே இரண்டு, மூன்று ஏக்கர் தேயிலை மலைகளை கொந்தராக்கு எடுத்து புல் வெட்டி துப்பரவு செய்வதில் ஈடுபடுவர். தேயிலை மலையை கொந்தராக்கு எடுத்த காலகட்டத்தில் புல்வெட்டுவது சிரமமாக இருந்தாலும் காலப்போக்கில் அது எளிதாக மாறிவிட்டது.

ஒரு ஏக்கர் புல் வெட்ட ஆரம்ப காலத்தில் 40 மணித்தியாலம் எடுத்திருந்தால் வருடங்கள் செல்ல இரண்டு மணித்தியாலங்கள் கூட தேவைப்படாது. இப்படி மலையை 20, 30 வருடங்களுக்கு மேல் கவ்வாத்து வெட்டுபவர் ஓய்வு பெற்ற பின்னரும் ஒப்பந்த வேலையை விடுவது கிடையாது. தற்போது தனது பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். அதே தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கங்காணி, கிளார்க் தொழில்களை இத்தகையோரின் பிள்ளைகள் மேற்கொள்கின்றனர்.

தெல்தோட்டை நவராஜா

Comments