சர்வதேச ஆதரவுடன் பயணிப்பதில் இலங்கை வெளிப்படுத்திய நாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச ஆதரவுடன் பயணிப்பதில் இலங்கை வெளிப்படுத்திய நாட்டம்

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள புவியியல் ரீதியான அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களைக் கூர்மையாகக் கவனத்தில் கொண்டு சர்வதேச சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என்பதைக் காண்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகள் தற்போது அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

மேலைத்தேய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதில் அரசாங்கம் காண்பித்து வரும் அக்கறையின் ஒரு அங்கமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நியூயோர்க் விஜயம் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்ச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டொரு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டொனியோ குட்டரெஸுடன் நடத்திய சந்திப்பு மற்றும் ஏனைய உலக நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் என்பன இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.

இரு தரப்புச் சந்திப்புகளுக்கு அப்பால், ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையானது தற்பொழுது நிலவுகின்ற சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு ஏற்ற விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக அமைந்திருப்பதையும் காண முடிகிறது. குறிப்பாக தற்போதைய சூழலில் உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதற்கான தேவையை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கொரேனா பெருந்தொற்று அதிகரிப்புக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். உலக நாடுகள் யாவும் கொரோனா தொற்று சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இன்றைய நிலையில், ஜனாதிபதியின் இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கொவிட்- 19 தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களைப் பறிமாறிக் கொள்ளவும், சிறந்த முறையில் நாடுகளை மீளக்கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்குவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது எனக் கூறியிருந்தார்.

“கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் மற்றும் சிகிச்சை முறைமைகளை அறிமுகப்படுத்துவதில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேகமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளை மிகவும் பாராட்டுகிறேன். ஆபத்துமிக்க புதிய வைரஸ் திரிபுகள் பரவலடைவதைத் தடுப்பதற்கான தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்ளல் போன்றன தொடர்பில் காணப்படும் சவால்களை உடன் வெற்றி கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அடையாளம் காணப்படல் வேண்டும்” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.

'2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது. பயங்கரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றி கொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.
கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும், பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னணியில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என்று ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக் கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும்.

இனப் பாகுபாடு,  மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, என்னுடைய அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார்.

எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெற முடியுமென்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. இலங்கையின் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினது அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாமல் நியாயமான முறையில் கருதி, அவர்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையுடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாக இருக்கின்றது' என ஜனாதிபதி தனது உரையில் மேலும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதேவேளை, ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாகவும், அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.

நீண்ட காலமாகத் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்புக் காவலில் இருந்ததைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஐ.நா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை என்றும் போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிவில் அமைப்புகளுடன் இணைந்து தான் செயற்படும் விதம் தொடர்பிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள் நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென மீண்டுமொருமுறை எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப் போவதில்லை என்பதைத் தன்னால் உறுதிபடத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரை மற்றும் உயர்மட்டச் சந்திப்புக்களுக்கு அப்பால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள் அதிகமாகப் பேசப்படும் விடயமாக உள்ளது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் பங்களிப்பு அவசியம் என்பது இதன் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் அரசாங்கம் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது என்பதும் புலப்பட்டுள்ளது. உண்மையில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

நாட்டின் மீதும், இங்குள்ள தமது உறவுகள் மீதும் உண்மையில் அக்கறை உடையவர்களாயின் நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கும், அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி விடுத்துள்ள இந்த அழைப்பை ஏற்று புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் இலங்கை அரசுடன் கலந்துரையாடலுக்குச் செல்ல வேண்டும் என்பது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜனாதிபதியின் இந்த அழைப்பை உலகத் தமிழர் பேரவை (குளோபல் தமிழ் போரம்) வரவேற்றுள்ள போதும், தமது அமைப்பு உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர்ந்து வாழ் தமிழர் அமைப்புக்களைத் தடை செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள நிலையில், எவ்வாறு இலங்கை  அரசுடன் பேச்சுக்களை நடத்துவது எனக் கேள்வியெழுப்பியுள்ளது. இருந்தபோதும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது தொடர்பில் அந்த அமைப்பு சாதகமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது.

தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாக உள்ளது. இதனை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர் தரப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கு முன்வர வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோள் ஆகும்.

Comments