ஐ.நா. செயலாளரின் உரையும் ‘தீண்டத்தகாதோர்’ சமூகமும் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா. செயலாளரின் உரையும் ‘தீண்டத்தகாதோர்’ சமூகமும்

மனிதர்கள் தாம் சிறந்த நாட்டை, சிறந்த பரம்பரையை, உயர்ந்த கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது சமுதாய மற்றும் நாடுகள் என்ற ரீதியாகவோ தமது வளங்களையும், தம்மிடமுள்ள அன்பையும் கருணையையும் அவற்றுக்காக ஏங்கி நிற்போருடன் பகிர்ந்து கொள்ளத் தவறினால் இதற்கு முன்னர் சந்தித்திராத பெரும் நெருக்கடியை உலகம் சந்திக்க நேரிடும். தனி மனிதர்களும், சமூகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க் ஐ.நா. மன்றத்தின் 76வது பொதுச் சபை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு நெற்றியடியாக உரை நிகழ்த்திய பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்த கருத்துகளைத் தொகுத்து சுருக்கமாகப் பார்த்தால் இதுதான் அவர் சொல்ல வந்த விஷயம் என்பது புரியும்.

அவர் தனது உரையில் எடுத்துக் கொண்டது மூன்று முக்கியமான விஷயங்களை. முதலாவது கொவிட் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய விளைவுகள். இரண்டாவது சூழல் மாசு. உலகளாவிய ரீதியாக குறித்த காலப்பகுதிக்குள் அது கட்டுப்படுத்தப்படாது விடப்படுமானால் மனித இருப்பையே கேள்விக் குறியாக்கக் கூடிய படுமோசமான பதில் விளைவுகள். மூன்றாவது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசு ஆட்சிக்கு வந்திருப்பதால் அந்நாட்டு மக்களுக்கும் அயல் பிராந்தியத்துக்கும் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள்.

இவ்வாறான நிலையை உலகம் முன்னெப்பொழுதுமே சந்தித்ததில்லை என்று தனது உரையில் குறிப்பிட்டிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர், விஞ்ஞானமும் மனித உரிமைகளும் பாதிப்புகளை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறியிருப்பதோடு, பாதிப்புகளுக்கும் தேவைகளுக்கும் உள்ளாகியுள்ள பெருமளவிலான மக்களுக்கும் உதவுவதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் எழுந்திருப்பதாகவும் இம் மக்களுக்கு சரியான சமயத்தில் உதவிகள் சென்று சேராவிட்டாலோ அல்லது மிகக் கொஞ்சமான உதவிகள் செய்யப்படுமானாலும் உலகளாவிய ஸ்திரநிலை பாதிப்பு அடையும் என்று தனது உரையில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘கொவிட் பெருந்தொற்று 4.6 மில்லியன் மக்களை அழித்திருப்பதோடு 228 மில்லியன் மக்களைத் தொற்றுக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில் உலகெங்கும் 5.7 பில்லியன் மக்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்க நாடுகளை எடுத்துக் கொண்டால் இதுவரை இரண்டு சதவீதமானோருக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் காலாவதியான, உபயோகிக்கப்படாத தடுப்பூசி குப்பிகள் குப்பையில் கொட்டப்படுவதையும் பார்க்கிறோம். மிகக் குறுகிய காலத்தில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வசதியை பகிர்ந்து கொள்வதற்கான அரசியல் திறன் அற்ற தன்மை, சுயநலம், நம்பிக்கையின்மை என்பன இச்சாதனையை மழுங்கடிக்கிறது. இது மிகவும் கீழ்மையானது’ என்று அந்தோனியோ குட்டரஸ் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஆபிரிக்காவுக்கு கிடைக்காமலிக்கும் சூழலை ‘சுய தடுப்பூசி தேசியவாதம்’ என சிம்பாப்வே அதிபர் அமர்சன் மங்காக்வா வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிகளை தத்தமது நாட்டு மக்களுக்கு மாத்திரம் இரண்டல்ல; மூன்றாவதையும் ஏற்றும் நாடுகளையே தடுப்பூசி தேசியவாதம் என்ற பெயரில் அழைக்கும் இவர், இது தொடருமானால் அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கிறார். அதாவது எதிர்கால உலகம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள்; ஏற்றிக் கொள்ளாதவர்கள் என இரு பிரிவினரைக் கொண்டதாக இருக்குமானால் நாடுகளிடையே மிகுந்த பிரச்சினைகளையும், பயங்கரவாதம் எழுச்சி பெறுவதற்கும் வழிவகுக்கும். எனவே தடுப்பூசி ஏற்றலில் ஒரு சமநிலை பேணப்படுவது கட்டாயம் என்பது இவர் கூறவந்த பொருளாகும்.

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் வழமையாக அனுவாயுத பரவல், பயங்கரவாதம், வறுமை தொடர்பாக பேசப்படுவதே வழமை. இம்முறை பொரும்பாலான உலகத் தலைவர்கள் கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றியே தமது உரைகளில் குறிப்பிட்டுள்ளனர். எமது ஜனாதிபதியும் தமது உரையில் உலக பயங்கரவாதம் உலகளாவிய சவாலாக இருப்பதையும் சர்வதேச ஒத்துழைப்போடு அது முறியடிக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியதோடு ரசாயன பசளை பாவனையைத் தவிர்க்கும் இலங்கை அரசின் கொள்கையையும், சூழல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையின் பங்களிப்பு பற்றியும் பிரஸ்தாபித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்றும், தடுப்பூசி பாவனையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினையோடு தொடர்புபடுவதையே ஐ.நா. பேரவையில் ஆற்றப்பட்ட உரைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆப்கானிஸ்தான் அரசை ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதும் அங்கு வாழும் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுதலும் வெவ்வேறாகப் பார்க்கப்பட வேண்டியவை. உள்நாட்டு மோதல்களினால் சீர் குலைந்திருக்கும் ஈராக் மற்றும் சிரிய மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதும், உலக வல்லரசுகளின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் அந்நாடுகளின் சமாதானத்தை உருவாக்க வேண்டியதும் ஐ.நா.வின் சவால் மிக்க பொறுப்புகளாகும்.

இதே சமயம் உலக வழங்கலாக தான் 500 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை மேலதிகமான ஒதுக்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதோடு 2022 காலப்பகுதி வரை 1.1 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படுமென்றும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சீனா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளும் உலகளாவிய தடுப்பூசி தொகுப்புக்கு தமது பங்களிப்பை அறிவிக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அகலமாகிவரும் சூழலில் மற்றுமொரு தடுப்பூசி ஏற்றத் தாழ்வும் வந்துவிடக் கூடாது. எதிர்காலத்தில் உலகளாவிய மட்டத்தில் மற்றுமொரு தீண்டத்தகாதோர் சமூகம் உருவாவதைத் தடுக்க உலகத் தலைவர்கள் இப்போதே திட்டமிட்ட ரீதியாக செயற்பட்டாக வேண்டும். கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாத ‘தீண்டத்தகாதோர்’ உள்ளவரை இந்த உலகம் பிரச்சினை மிக்கதாகவே இருக்கப் போகிறது.

கொவிட் பொருந்தொற்று பேரழிவையும் நீண்ட கால பொருளாதார நெருக்கடிகளையும் உருவாக்கியிருப்பதால் நாடுகள் அவற்றில் இருந்து துரிதமாக மீண்டு வருவதற்கு தமது பாரம்பரிய சிந்தனைகள் மற்றும் அரசியல் முறைமைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இலங்கையை எடுத்துக் கொள்வோமானால் இன்றைய மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்து மீட்சி பெறுவதற்கு உள்நாட்டில் இன ரீதியான வேற்றுமைகள் காணப்பட வேண்டும். சிங்களவன், தமிழன், முஸ்லிம் என்ற பாகுபாடுகளைப் பேணியபடி பொருளாதார மீட்சியை எட்ட முடியுமா என்பது சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். தமிழர்கள் கோருவது தனிநாடு அல்ல; அதிகார பரவலாக்கலைத்தான். பொருளாதார மீட்சியோடு இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இலங்கைப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்ற முடியும். ஆனால் அதற்கு முன்னர் அச் சமூகத்தை திருப்திபடுத்தும் வகையில் இலங்கை அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தினகரன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Comments