பெருந்தோட்ட குடும்பங்களுக்கும் பகிரப்படும் காணி கிடைக்குமா? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட குடும்பங்களுக்கும் பகிரப்படும் காணி கிடைக்குமா?

பெருந்தோட்டக் காணிகள் சிலவற்றை அரசு சுவீகரித்து அதில் பாற்பண்ணைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அதே நேரம் பால் உற்பத்தியையும் அதிகரிக்க இயலும் என்பதே அந்த ஏற்பாட்டுக்கான அடிப்படை வாதம். பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இத்தகவல் மலையக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தனியார் பொறுப்பில் இருக்கும் பெருந்தோட்டக் காணிகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பெற்க வேண்டும் என்பதில் மலையக அரசியல் கட்சிகள் ஏகோபித்த கருத்தையே கொண்டுள்ளன. இன்று பெருந்தோட்டக் காணிகள் காடுகளாக்கப்பட்டு அதன் அழிவு அண்மித்து வருகின்றது. அதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் தனியாா் கம்பனிகளிடம் இல்லை. மலையக தொழிற்சங்கங்கள் உருப்படியான யோசனைகள் எதனையும் முன்வைப்பதாய் இல்லை. ஆனால் ஏதாவது தேவை என்றால் அக்காணிகளை விற்கவோ சுவீகரிக்கவோ சம்பந்தப்பட்ட தரப்புகள் தயங்குவது கிடையாது.

இவ்வாறான ஒரு சம்பவம் கண்டியில் இடம்பெற இ.தொ.கா பிரமுகர் துணை நின்றதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. பெருந்தோட்டக் காணிகளை அரசு சுவீகரித்து அதனை தோட்ட மக்களுக்குப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று உரத்தத் தொனியில் குரல் எழுப்பிக்கொண்டு உள்ளரங்கமாக அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்த மலையக கட்சிகள் உறுதுணை நிற்பதாக ஏலவே குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அரசாங்கம் தோட்டக் காணிகளை மீளவும் பொறுப்பேற்க வேண்டும் என்ற சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கோரிக்கை உள்நோக்கம் கொண்டதா எனும் சந்தேகமும் இல்லாமல் இல்லை.

ஏனெனில் பெருந்தோட்டங்களை அரசாங்கமே கையேற்க வேண்டும். அதனை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும் என்று சில இராஜாங்க அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள். இவர்களில் காஞ்சன விஜயசேகரவும் ஒருவர்.

பதுளை மாவட்டத்தில் மட்டும் 2178 ஏக்கர் தேயிலைக் காணிகள் கைவிடப்பட்டுள்ளன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் சூழ்நிலையில் வாழும் சிங்கள கிராமவாசிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அமைச்சா் நிமல் சிறிபால டிசில்வா அண்மையில் யோசனையொன்றை முன் வைத்திருந்தார். இவ்வாறான கருத்துக்களை பார்க்கும்போது பெருந்தோட்டங்களில் வாழும் இலட்சக்கணக்கான தோட்ட மக்களுக்கு இக்காணிகளில் பாத்தியதையோ உரிமையோ இல்லையோ என்று யோசிக்க வேண்டியுள்ளது.

தற்போது அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரத்தின்படி பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. குறிப்பாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தின் கீழ்வரும் பெருந்தோட்டக் காணிகள் கடந்த காலங்களில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. தற்போதும் அப்படியான ஒரு முயற்சி எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பால் உற்பத்தி, தனியார் முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு, விவசாய அபிவிருத்தி என்ற போர்வையில் சுவீகரிக்கப்படும் இக்காணிகளால் தோட்ட மக்களுக்கு எவ்வாறான அனுகூலங்கள் கிடைக்கப் போகின்றன என்பதே கேள்வி.

தற்போதைய அமைச்சரவைப் பத்திரத்தின்படி மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம் மற்றும் மவுன்ட்ஜின் தோட்டங்களில் 811 ஏக்கரும், தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ்வெலி தோட்டங்களில் இருந்து 350 ஏக்கரும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி விட்டது. கடந்த ஆட்சியின் போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவே செய்தன. உதாரணத்துக்கு, தெல்தோட்டை விட்டில்வேலி தோட்டம். இது தவிர சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்காக பெருந்தோட்டக் காணிகளைக் கையகப்படுத்த மைத்திரி ரணில் ஆட்சி முயற்சித்தமையும் ஞாபகம் வருகின்றது.

எப்படியோ பெருந்தோட்டக் காணிகளை இலக்கு வைத்து சூட்சுமமான ஒரு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இக்காணிகள் யாவும் அரசுக்குச் சொந்தமானவை. இவற்றை 99 வருடகால குத்தகைக்கே பெருந்தோட்டக் கம்பணிகள் கையேற்றுள்ளன. இக்காணிகளை கம்பனிகள் தமது எண்ணம் போல கைமாற்றவோ விற்றுப் பணமாக்கவோ நியாயப்படி முடியாது.

ஆனால் அப்படியா நடக்கின்றது? தோட்டக் காணிகளை தமது தேவைப்படி கையாள்கின்றது கம்பனித்தரப்பு. இங்குள்ள வளங்களைச் சூறையாடுகின்றன என்று குறறச்சாட்டுக்கள் ஏராளம். இதேவேளை அரசாங்கம் தாராளமாகவே பெருந்தோட்டக் காணிகளை கையேற்பது கடந்த பல வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் நிகழ்வு. அரச தேவைக்காகவும் தனிப்பட்ட அரசியல் பிரமுகர்களின் அவசியத்துக்காகவும் இக்காணிகள் மீதே முதற்பார்வை விழுகின்றமை வழமையாகிவிட்ட சங்கதி.

இவ்வாறன கபளீகரங்கள் இத்துறையை வங்குரோத்து நிலைமைக்கு வலிந்து தள்ளிவிடவே செய்கின்றது. அதிலிருந்து இதனை மீட்கக்கூடிய அடையாளங்கள் எதுவுமே தென்படவில்லை. குறைந்தபட்சம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் கூட வருவதாக காணோம். கம்பனித் தரப்பு இதுபற்றிக் கவலைப்படுவதாக இல்லை. இங்கு தேயிலைத் தொழிலையே தஞ்சமென நம்பியிருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களும் இதனை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

அண்மைக்காலமாக நகர்ப்புறங்களை அண்மித்த தோட்டக் காணிகள் அரசியல்வாதிகளின் அவசியம் கருதி அபகரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் உணர்த்துகின்றன. இதேநேரம் தரிசு நிலங்களிலும் கைவிடப்பட்டக் காணிகளிலும் காடு வளர்ப்பை மேற்கொள்ள கடந்த அரசாங்கம் ஆலோசித்திருந்தது. யதார்த்தம் இப்படி இருக்கையில் மலையக கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது தெரியுமா?

நல்லாட்சிக் காலத்தில் தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்பட்டபோது இ.தொ.கா. எகிறி குதித்து கூப்பாடு போடவே செய்தது. அப்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி அடக்கி வாசித்தது. நியாயப்படுத்தும் வகையில் பேசியது. இப்பொழுது தோட்டக் காணிகள் தனியாருக்கு வழங்கப்பட போவதை தமிழ் முற்போக்கு கூட்டணி தாவிக் குதித்து தண்டோரா போடுகிறது. இ.தொ.கா அடக்கி வாசிக்கிறது. ஆசுவாசப் படுத்துகிறது. அபிவிருத்திப் பணிகளுக்காக சுவீகரிக்கப்படும் காணிகளில் மலையக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டுமாம். என்ன வேடிக்கை.

பொதுவாக மலையக கட்சிகள் எழுப்பம் குரல்கள் மக்கள் அபிலாஷைகளின் தொனியல்ல.

அத்தனையும் அரசியல் பம்மாத்து. அவ்வளவுதான். நடப்பதை எல்லாம் பார்க்கும்போது சங்கடமே மேலோங்குகின்றது. இன்று பெருந்தோட்டத் துறையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனைத் தடுப்பதற்கு எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படுவதாக இல்லை. எனவே தொழிலாளாகள் இடப்பெயர்வு தடுக்க முடியாத நிகழ்வாகி வருகின்றது. இது ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் ஏற்பாடோ என்னும் ஐயம் எழாமல் இல்லை.

மலையகம் என்னும் தேசிய அந்தஸ்துக்கான வலிமையைக் குறைப்பதாகவே புலம்பெயர்வுகள் அமையும். நிலம் எமது அடையாளம் என்னும் அங்கீகாரம் தடைப்படலாம். பெருந்தோட்ட சமூகம் நிலவுடைமைச் சமூகமாக மாறும் கனவு மெய்ப்படாமலே போகலாம். அதனைச் சரிசெய்து கொள்வதற்கு மலையகக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

பன்.பாலா

Comments