மத நல்லுறவில் அலட்சியம் வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

மத நல்லுறவில் அலட்சியம் வேண்டாம்

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து மீண்டுமொருமுறை ஏதேனும் ஒரு வகையிலான தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தகவல் கிடைத்திருப்பதாகவும் குருவானவர்கள் போல ஆடையணிந்து வரக் கூடியவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீர்கள் சிலர் போபிட்டிய, வத்தளை, வெலிகம்பிட்டிய, றாகமை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் கத்தோலிக்க ஆலயங்களுக்கு தகவல் தெரிவித்து சென்றமை தொடர்பான செய்தி சில தினங்களுக்கு முன் வெளியாகி, நாடெங்குமுள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவர்களை பீதிக்குள்ளாக்கியது. உடனடியாக அவர்களின் சந்தேகம் யார் பேரில் திரும்பியிருக்கும் என்பதை யூகிப்பது சிரமமான ஒன்றுமல்ல.

ஆலயங்களுக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலக்கிக் கொள்ளப்பட்டதும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கடற்படைத் தளபதி ஏற்பட்ட குழப்ப நிலைக்காக மன்னிப்பு கேட்டதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதை 'உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற தகவல்' என வர்ணித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று இச்செய்தியை நிராகரித்ததும் ஆறுதலைத் தருவதாக உள்ளது.

மதங்கள் மக்களை நெறிப்படுத்தும் அன்பு அறவழியில் இட்டுச் சென்று மக்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநிறுத்தும் என்பதொல்லாம் உண்மைதான் என்றாலும் அனைத்துக்கும் மறுபக்கம் - கறுப்புப் பக்கம் - உண்டு என்பதுபோல மதங்கள் தவறானவர் கையைச் சென்றடைந்து அவர்களால் தமது இச்சைப்படி கையாளப்படும் போது கொடுவாளாக மாறுவதுண்டு என்பதை வரலாற்று ஏடுகளில் நாம் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறோம். பண்டைய காலம் முதல் ஆளும் தரப்புகள் மதங்களைத் தமது வெற்றிக்கான ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளன.

மதக் கலவரங்கள் நிகழும் நாடுகளின் உட்கட்டமைப்பு அரசியலை ஆய்வோமானால் மதவாதிகளுக்கு சாவி கொடுத்து இயக்கி இருப்பது அரசியல் கரங்கள் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் வட மாநிலங்களில் அவ்வப்போது நிகழும் மதக் கலவரங்களின் பின்னால் திட்டமிட்ட அரசியல் முனைப்புகள் இருந்துள்ளன என்பதற்கு இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முதல் குஜராத் மற்றும் மும்​பை இந்து – முஸ்லிம் இனக்கலவரங்கள் வரை சான்றுகள் உள்ளன. இலங்கையின் ஒரே ஆறுதல், 1915 பௌத்த - இஸ்லாமிய மதக் கலவரம் கண்டியை மையப்படுத்தி நிகழ்ந்ததன் பின்னர் மதக் கலவரம் ஒன்று நிகழவில்லை என்பதும் நடைபெற்றவை அனைத்தும் இனக் கலவரங்களேயாகும் என்பதும் தான். இக் கலவரங்கள் அனைத்துமே சாதாரண மக்கள் தாமே வெறிகொண்டு ஈடுபட்டவை அல்ல என்பதும் அரசியல்வாதிகளினால் கட்சி நலன் சார்ந்த இலக்குகளை அடையும் பொருட்டு அரசியல் காடையவர்களைத் தூண்டிவிட்டு நடத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983 ஆடிக் கலவரம் அவ்வளவு கொடூரமாக அரங்கேறியதற்கு ஆளும் அரசினாலேயே அது தூண்டிவிடப்பட்டு வேடிக்கை பார்க்கப்பட்ட ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

1915 கண்டி மதக்கலவரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கான முகாந்திரங்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட்டு வந்து கலவரமாக உருவெடுத்தது. கண்டி பிரதேசத்தில் வர்த்தக ரீதியாக முஸ்லிம் சமூகமே அக்காலத்தில் செல்வாக்கு செலுத்தி வந்தமையும் படித்த, செல்வந்த சிங்களக் குடும்பங்களுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது என்பதும் வரலாறு.

ஆனால் முஸ்லிம் - கிறிஸ்தவ மோதல் ஒன்று நிகழ்வதற்கும், ஆலயத்தில் வழிபட வந்தவர்களை கொடூரமாகத் தாக்கி அழிக்கும் வகையில் அது நிகழ்வதற்கும் பின்னணியில் எந்தவிதமான மத வெறுப்பு, மதக் குரோத அல்லது கிறிஸ்தவர்களினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களோ இல்லை என்பதுதான் ஏனைய இன அல்லது மதக் கலவரங்களுக்கும் இதற்கும் இடையிலான பெரிய வித்தியாசமாகும். இம் மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகங்கள் மத்தியிலும் காடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற பின்னணியிலும் கூட மதக் கலவரம் ஒன்று நிகழவில்லை என்பது முக்கியமான விடயம். உண்மையாகவே மதரீதியான மோதல் நிலை இல்லாததாலேயே பழிவாங்கும் மோதல் நிகழவில்லை. மேலும் இக் கொலை வெறித் தாக்குதல் செய்தியை அறிந்த எல்லா மட்டத்து இஸ்லாமியரும் வெட்கமும் கலவரநிலையும் அடைந்தார்கள் என்பதை அவர்களின் கூற்றுகள் வெளிப்படுத்தின.

இப்போதும் கூட 'ஐஎஸ்' எனப் பொதுவாக அறியப்படுகின்ற அதிதீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீண்டும் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்ற வாதத்தில் இருக்கக் கூடிய முகாந்திரங்கள் மிகவும் குறைவு. உலகளவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சிதறியும் வலுவிழந்தும் போயுள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும் நிகழும் ஆயுத மோதல்களும் உலக அரசியலை மையப்படுத்தியதாக உள்ளனவே தவிர மதங்களை மையப்படுத்தியவை அல்ல.

நியூசிலாந்தில் ஒரு இலங்கை இஸ்லாமிய இளைஞர் வாடிக்கையாளர்களை கத்தியால் குத்திய சம்பவத்தை சிலர் உதாரணம் காட்டலாம். அத்தகைய உதிரியான சம்பவங்கள் இங்கு மட்டுமல்ல உலகின் எந்தப் பாகத்திலும் நடைபெறலாம் என்பதோடு நியூசிலாந்து பொலிசார் அவரை அடையாளம் கண்டு பின் தொடர்ந்தும் வந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தக் கண்காணிப்புதான் இங்கும் அவசியம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் களையப்படாத சில மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. அவற்றைத்தான் கத்தோலிக்க தலைமைப் பீடம் சுட்டிக் காட்டி வருகிறது. தாக்குதல் நிகழப்போகிறது என்ற உறுதியான தகவல் கிட்டிய பின்னரும் பொலிஸ் தலைமை பீடம் ஏன் அசந்தமாக நடந்து கொண்டது என்பதற்கு இன்றுவரை விடை இல்லை என்பதால், அடிப்படையற்ற, உறுதி செய்யப்படாத அல்லது ஒரு மாதிரி ஒத்திகை என்ற அடிப்படையில் தாக்குதல் நிகழலாம் என்பதை ஒரு உண்மையைச் சொல்வது போலச் சொன்னது கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகங்கள் மத்தியில் பேரச்சத்தையும் இஸ்லாமிய சமூகத்தின் பால் சந்தேக பார்வையை ஏற்படுத்தத்தானே செய்யும்! மாதிரி ஒத்திகை என்றால் அதை முன்கூட்டியே கத்தோலிக்க தலைமை பீடத்திடம் அறிவித்திருக்கலாம்.

நாட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. எனினும் எந்தவொரு இன மற்றும் மத மோதல்களுக்கான வாய்ப்பும் இப்போது இல்லை என்று உறுதியாகவே சொல்லாம். அனைத்து இன, மத சமூகங்களும் தத்தமது வரையறைகளை அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் மதம் சார்ந்த சமூகங்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளும் நகர்வுகளும் ஏற்பட்டு விடாமல் முன்னெச்சரிக்கையுடன் அரசு அதிகாரிகளும் பொறுப்பானவர்களும் நடந்து கொள்வது மிக மிக முக்கியம் என்பதை இங்கே அழுத்தமாகத் தினகரன் குறிப்பிட விரும்புகிறது. ஏனெனில், சந்தேகம் தீராத வியாதியல்லவா.

Comments