பல்துறை ஆளுமையாளர் மாத்தளை கார்த்திகேசு | தினகரன் வாரமஞ்சரி

பல்துறை ஆளுமையாளர் மாத்தளை கார்த்திகேசு

மலையகக் கலை இலக்கியப் பாரம்பரியத்தில் வேரூன்றித் தழைத்து நின்ற பல்துறை ஆளுமையாளர் மாத்தளை கார்த்திகேசு. 1939 ஜனவரி முதலாம் திகதி (01.01.1939) மாத்தளையில் பிறந்தவர்.

கல்லூரிக் காலங்களிலேயே பாடசாலை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவருக்குள் ஒரு அரங்கியல் கலைஞன் உருவாகித் தோற்றம் காட்டத் தொடங்கியுள்ளான்! அதன் வெளிப்பாடாகவே கல்லூரி விழாவுக்காக 'பணமா பாசமா' என்னும் ஒரு நாடகப் பிரதியை எழுதி ஆசிரியர்களின் உதவியுடன் அதை மேடையேற்றி அதில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கவும் செய்துள்ளார்.

1956ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய காத்திரமான தனித்துவ மாற்றம் ஏறத்தாழ நான்காண்டுகளின் பின் மலையகத்திலும் தோன்றி வளரத்தொடங்கியது. மலையகம், மலையகப் பாட்டாளி மக்கள் என்னும் பிரதேச அடையாளங்களை முக்கியப்படுத்தும் மலையக இலக்கியம் ஒரு இயக்கமாக மேற்கிளம்பிய காலமாக நாம் 60க்குப் பிந்திய காலங்களைக் கூறலாம்.

மலையக எழுத்துக்கள் பிரசித்தம் பெற்ற அறுபதுகளை ஒட்டிய காலங்களில் மாத்தளை கார்த்திகேசுவும் வீரகேசரி, தினகரன் போன்ற தேசிய பத்திரிகைகளில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். கொழும்பு நோக்கிய நகர்வும் நிகழ்ந்துள்ளது.

கொழும்பின் நாடக மன்றமான கவின் கலை மன்றத்தில் இணைந்து செயற்பட்ட கார்த்திகேசுவை கொழும்பின் நாடக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் கவின் கலைமன்றத் தலைவரும் நாடக நெறியாளருமான அமரர் ஜே.பி. றொபட் .

கவின் கலை மன்றம் மூலமாக ஜெ.பி.றொபட் நெறியாள்கையில் இவர் எழுதித் தயாரித்த நாடகங்கள் கொழும்பில் மேடையேற்றம் கண்டபோது ஒரு முப்பதாண்டு கால வரலாற்றை கண்ட கொழும்பின் நாடக உலகு கார்த்திகேசுவை திரும்பிப் பார்த்தது. கவனத்திலும் கொண்டது.

கொழும்பை மையமாகக் கொண்டியங்கிய நாடக உலகை எழுபதுகளில் சலசலக்க வைத்தவர் கார்த்திகேசு. கவின் கலை மன்ற நாடகங்களான 'பலே பிரடியூசர்' மற்றும் 'வெண்ணிலா' போன்ற நாடகங்களில், இவரை மேடையேற்றி நடிக்க வைத்தவர் ஜே.பி.றொபட்.

1971 இவர் எழுதிய 'தீர்ப்பு' என்னும் நாடகப் பிரதி நெறியாளர் சுஹைர் ஹமீடின் ஆலோசனைகளுடன் அந்தனி ஜீவாவின் நெறிப்படுத்தலுடன் கொழும்பில் மேடையேறியது. இந்த இணைவு ஏனோ ஒத்துப்போகவில்லை. எடுபடவும் இல்லை! மாறாக மாத்தளையின் கார்த்திகேசுவையும் கொழும்பின் அந்தனி ஜீவாவையும் கலையுலகின் வடக்கு தெற்காக மாற்றிவிட்டிருந்தது.

2012ல் குமரன் வெளியிட்ட அந்தனி ஜீவாவின் 'தலைநகரில் தமிழ் நாடக அரங்கு' என்னும் நூலிலும் கார்த்திகேசுவை பற்றி ஒருவரியேனும் குறிப்பிடாதது இத்த முறிவினை உறுதிப்படுத்தியது.

கவின் கலைமன்றத்தினூடாக ஜே.பி.றொபட் மேடையேற்றிய நாடகங்கள் பெருமை பெற்றன. இருவருக்கும் பிரபல்யம் தந்தன.

1972 காலங்கள் அழிவதில்லை

1974 களங்கம்

1975 போராட்டம்

1976 ஒரு சக்கரம் சுழல்கிறது.

போன்ற நாடகங்கள் பலமுறை பல இடங்களில் மேடையேற்றப்பட்டன. காலங்கள் அழுவதில்லை நாடகம் 15 தடவைகள் மேடையேற்றப்பட்டதுடன் நாடகாசிரியருக்குப் பிரபல்யத்தையும் பெரும் புகழையும் ஈட்டித் தந்துள்ளது.

காலங்கள் அழிவதில்லை நாடகம் 1974ல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் வண.பிதா தனிநாயகம் அடிகளார் தலைமையில் பேராசிரியர்களான கைலாசபதி –சிவத்தம்பி முன்னிலையில் மேடையேறும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டதுடன் இம் மூன்று பேராசான்களின் பாராட்டுக்களையும் மலையக எழுச்சியின் நாயகர்களான இரா. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன் ஆகியோரின் பாராட்டையும் பெற்றது.

இலங்கை மத்திய வங்கி நடாத்திய நாடகப் போட்டியிலும் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் சிறந்த நாடகத்துக்கான பரிசையும் சிறந்த நடிப்பு, சிறந்த நாடகப் பிரதி, சிறந்த நெறியாள்கை போன்ற பரிசுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடக் கூடியது.

கார்த்திகேசு எழுதி ஜே.பி. றொபட் இயக்கிய பல நாடகங்கள் கவின் கலை மன்றத்தால் மேடையேற்றப்பட்டன. கலாசாராப் பேரவையின் தேசிய நாடக விழாப் போட்டிகளில் பரிசில்களையும் பாராட்டுதல்களையும் பெற்று இவர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளன.

இந்த இணைவின் இறுக்கமே இவ்விருவரையும் சினிமாத்துறை வரை இழுத்துச் சென்றுள்ளது.

இலங்கையின் தமிழ்த் திரைப்படத்துறை சாண் ஏறி முழம் சறுக்கி மூச்சுத்திணறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவ்விருவரும் அதற்குள் பிரவேசித்தனர்.

கார்த்திகேசுவின் திரைக்கதை வசனத்துடன் ஜே.பி.றொபட் இயக்கத்தில் எம்.எஸ். செல்வராஜா இசையமைப்பில் உருவாகத் தொடங்கிய திரைப்படம் 'அவள் ஒரு ஜீவ நதி' இலங்கைத் திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்ற டீன் குமார், பரீனாலை விஜயராஜா, சிங்கள நடிகை அனுஷா ஆகியோருடன் கே.எஸ். பாலச்சந்திரன், கார்த்திகேசு ஏகாம்பரம், சிதம்பரம் திருச் செந்தூரன் போன்றோர் நடித்தனர்.

பலவிதமான சிரமங்கள், தடங்கல்களுக்கு மத்தியில் எண்பதுகளின் இறுதியில் திரைக்கு வந்தது 'அவள் ஒரு ஜீவ நதி'

மாத்தளை கார்த்திகேசுவின் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம் 'தோல்விகளே வெற்றிக்கான தூண்கள்' என்ற உணர்வினை மட்டுமே அவருக்குத் தந்தது என்றாலும் தயாரிப்பாளரான அவருக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம், குடும்பவாழ்வுச் சிக்கல்கள் மனச்சோர்வு இத்தியாதிகள்...

வேறொருவராக இருந்திருந்தால் இந்தச் சினிமா நாடகச் சமாசாரங்களே வேண்டாம் என்று ஒதுங்கியோ ஓய்ந்தோ போயிருக்கலாம். ஆனால் கார்த்தியோ எத்தனை அகப்பலம் கொண்டவராக இருந்திருக்கின்றார்! இந்தப் பண நஷ்டம் மனக் கஷ்டம் அனைத்தும் இதனால் பெற்றுக்கொண்ட அனுபவத்துக்கு ஈடாகுமா என்று தன்னைத்தானே சமாளித்துக் கொண்டு இந்த கலை இலக்கிய உலகத்தையே சுற்றிவரத் தன்னை தயார்படுத்திக் கொண்டவர்.

இது போன்ற ஒரு சிலரின் கலை இலக்கியப் பணிகளே பிந்திவரும் இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவும் உதாரணங்களாகவும் திகழ்கின்றன.

தன்னுடைய புகழ் பெற்ற நாடகமான 'காலங்கள் அழிவதில்லை' மேடை நாடகத்தை தொலைக்காட்சிக்காக வடிவமைத்து 'காலங்கள்' என்னும் பெயரில் தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டு ரூபவாஹினியில் ஏழு வார தொடர் நாடகமாக ஒளிபரப்புச் செய்தார். ஒரு சக்தி மிக்க வெகுஜனத் தொடர்பு சாதனமான தொலைக்காட்சியூடாக மலையகத் தேயிலைத் தோட்ட மக்களின் சோகமும் வறுமையும் மிக்க வாழ்வு யதார்த்தபூர்வமாகவும் மண் வாசணையுடனும் காட்சிப்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது. திரைப்படக் கூட்டுத்தாபனம் ரூபவாஹினியுடன் இணைந்து நடத்திய திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி வகுப்புக்கள் வாரத்துக்கொரு நாள் என ஆறுமாதங்கள் போல் நடந்தது. வாரம் தவறாமல் இப் பயிற்சி வகுப்புக்களில் பங்கு பற்றியதுடன் விரிவுரையாளர்களின் நன்மதிப்புடன் பயிற்சிப் பட்டறைக்கான சிறப்புச் சான்றிதழும் பெற்றவர் இவர்.

பயிற்சி வகுப்புக்கள் முடிந்த பின் கூட்டுத்தாபனம் நடத்திய திரைக் கதை வசனப் போட்டியில் பங்கு பற்றித் தனது 'சுட்டும் சுடர்' பிரதிக்கு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். (1981)'குடும்பம் ஒரு கலைக் கதம்பம்' என்ற நாடகம் இலங்கையின் சுதந்திரப் பொன்விழாவினையொட்டி இவர் எழுதிய மலையக விவரணச் சித்திரம் மூன்று வாரத் தொடராக 'காமன் கூத்து'க் கலை நிகழ்வு போன்றவைகளும் ரூபவாஹினி ஒளிபரப்பிய படைப்புக்கள்.

மேடை நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்ற கலையுலக ஈடுபாடுகளுக்கப்பாலான இவருடைய இலக்கியப் பணிகள் மறக்கப்படாதவை மறக்க முடியாதவை. மாத்தளையில் மாணவர் மன்றம், இளைஞர் மன்றம், வள்ளுவர் மன்றம், சைவ மகாசபை, மகாத்மா காந்தி சபை போன்ற மனித நல அமைப்புக்களுடன் இணைந்து இயங்கியவர். சலிப்புறாத தனது செயற்பாடுகள் மூலம் முக்கியத்துவம் கொண்டவர்.

தெளிவத்தை ஜோசப்

Comments