வல்லரசு அதிகாரத்திலிருந்து நழுவிச் செல்கிறதா அமெரிக்கா? | தினகரன் வாரமஞ்சரி

வல்லரசு அதிகாரத்திலிருந்து நழுவிச் செல்கிறதா அமெரிக்கா?

ஒற்றைமைய உலக ஒழுங்கின் வல்லரசு அதிகாரத்திலிருந்து அமெரிக்கா நழுவிச்செல்கிறதா என்பதுவே கோவிட்க்கு பின்னரான சர்வதேச அரசியலின் விவாதப்பொருளாக காணப்படுகிறது. அமெரிக்கா வல்லாதிக்க சக்தியாய் இருப்பை பேணுவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போதிலும் அதனை சீர்செய்வதிலும் மதிநுட்பமான இராஜீக நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றது என்பதும் மறுக்க முடியாததாகவே காணப்படுகின்றது. எனினும் ரஷ்யா தொடர்ச்சியாக மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் கூட்டுக்களை பலவீனப்படுத்துவதிலும் சிதைப்பதிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனோர் நகர்வாகவே நேட்டோ நாடாகிய துருக்கியுடன் ரஷ்யா ஏற்படுத்தி கொள்ளும் உறவும் அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் பலப்படும் ரஷ்ய-, துருக்கி உறவினால் ஏற்படும் சர்வதேச அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 29அன்று ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகனுக்கும் இடையில் 18 மாதங்களுக்கு பிறகு ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட் சோச்சியில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. ரஷ்யாவும் துருக்கியும் வரலாற்று ரீதியாக சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. அவர்கள் சிரியா, லிபியா, காகசஸ் மற்றும் பால்கன் ஆகிய நாடுகளில் எதிரெதிர் தரப்பினரை ஆதரிக்கின்றனர். இருப்பினும், துருக்கி ரஷ்யாவுடன் ஆழமான இராணுவ, பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே, ரஷ்யாவும் துருக்கியும் புவிசார் அரசியல் வேறுபாடுகள் வர்த்தகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளன. நீண்டதொரு இடைவெளிக்கு பின்னராக இடம்பெறும் ரஷ்ய -துருக்கி தலைவர்களின் சந்திப்பு சர்வதேச ரீதியாக அதீக கவனத்தை பெற்றுள்ளது. எனினும், மூன்று மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்தத் தலைவரும் எந்த விரிவான அறிக்கையையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு பிந்தைய ஒரு சூடான பரிமாற்றத்தில், புடின் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்தார். மற்றும் வருகையை 'பயனுள்ளது மற்றும் விளக்கமானது' என்று அழைத்ததுடன், 'நாங்கள் தொடர்பில் இருப்போம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். எர்டோகன் ட்விட்டரில் பேச்சுவார்த்தைகளை 'ஆக்கபூர்வமானது ' என்று குறிப்பிட்டுள்ளார். இவையே சந்திப்பின் முடிவுகளை வெளிப்படுத்தும் செய்திகளாக இருநாட்டு தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் தாக்கங்களை தேடுவதற்கு முன்னர் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக பைடன்- ஏர்டோகன் விவகாரம் காணப்படுகிறது. அதாவது, துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற நேட்டோ தலைவர்களின் மாநாட்டிற்கு பின்னர் சீரமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடருக்காக நியூயோர்க் சென்ற ஏர்டோகன் அங்கு பைடனுனான சந்திப்பை கோரியிருந்தார். எனினும் பைடன் ஏர்டோகனுடன் சந்திக்க மறுத்திருந்தார். இதனால் ஏமாற்றம் மற்றும் கோபமடைந்த எர்டோகன் நியூ​ேயார்க்கில் இருந்து புறப்படுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களிடம், 'ஜனாதிபதி ஜோ பைடனுடனான உறவுகள் சரியாகத் தொடங்கவில்லை. துருக்கியின் தலைமையின் 19 ஆண்டுகளில் முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளுடன் நன்றாக வேலை செய்ய முடிந்தது. ஆனால் இதுவரை பைடனுடன் இல்லை' என்று கூறினார். இதன் பின்னணியிலேயே ஏர்டோகன் -புடின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே, ரஷ்யா- துருக்கி உறவை தனித்து இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பலப்படுத்தலாக கடந்து சென்றுவிடமுடியாது. ரஷ்யாவும் துருக்கியும் வரலாற்று ரீதியாக சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. எனினும் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய நலன்களின் மீது பொதுவான அடிப்படையைக் கண்டறிந்தே பேச்சுவார்த்தை களத்தில் இணைந்துள்ளன.

முதலாவது, ரஷ்யா, -துருக்கி தலைவர்களது சந்திப்பு அமெரிக்காவிற்கு எதிரான வியூகமாகவே முதன்மை பெறுகிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடாக காணப்படுகின்ற போதிலும் துருக்கியின் சந்திப்புக்கான அழைப்பை பைடன் மறுதலித்த சூழலில் அதற்கான எதிர் நடவடிக்கையாகவே புடினுடனான சந்திப்பை ஏர்டோகன் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்க கண்ணோட்டத்தில், துருக்கி நேட்டோவின் முக்கியமான உறுப்பினர் மற்றும் அத்தியாவசிய நேட்டோ இராணுவ தளங்களின் களமாகும். ஏனெனில் துருக்கி ஐரோப்பிய- ஆசிய அரசியல் கலாசாரத்தை கொண்ட நாடென்ற அடிப்படையில், அமெரிக்கா தற்போது சீனாவிற்கு எதிராக கட்டமைக்கும் பாதுகாப்பு கூட்டாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படும் இந்தோ_-பசுபிக்கை மையப்படுத்திய நேட்டோ -02 கூட்டிலும் இதன் வகிபாகம் முக்கியமானதாகும். இந்நிலையில் துருக்கி அமெரிக்காவின் எதிர்க்கூட்டாளியாகிய ரஷ்யாவுடன் உறவை பலப்படுத்துவது அமெரிக்காவிற்கு எதிரான வியூகமாகவே அவதானிக்கப்படுகிறது. ஒக்டோபர் 30-−31களில் இத்தாலியின் ரோமில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பைடன்- ஏர்டோகன் சந்திப்பை அமெரிக்கா விரைந்து ஏற்படுத்தியுள்ளமையும் அமெரிக்காவிற்கு துருக்கியின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகிறது.

இரண்டாவது, ரஷ்யா -துருக்கி உறவு பலப்படுவது அமெரிக்காவின் பிடியிலிருந்து பரந்த அளவில் துருக்கி வெளியேறுகின்றமையையும், சர்வதேச மட்டத்தில் ரஷ்யாவின் ஈடுபாட்டுடன் அதிகமாக நெருங்குவதனையும் உறுதி செய்கின்றது. துருக்கி ரஷ்யாவிடம் இருந்து இரண்டாவது தொகுதி எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது. அமெரிக்க வெளியுறவு தொடர்பான செனட் குழு, துருக்கியின் புதிய பாதுகாப்பு அமைப்பு கொள்வனவுகள் அமெரிக்காவின் எதிரிகள் தடைச்சட்டத்தின் கீழ் புதிய தடைகளை உருவாக்கும் என்று எச்சரித்தது. இருப்பினும், எர்டோகன் அமெரிக்காவின் எதிர்ப்பை உதாசீனம் செய்துள்ளார். எர்டோகன் அமெரிக்க ஒளிபரப்பான சி.பி.எஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், 'துருக்கி தனது பாதுகாப்பு அமைப்புகள் குறித்து சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும். எதிர்காலத்தில் நாங்கள் எந்த வகையான பாதுகாப்பு அமைப்புகளை எந்த நாட்டிலிருந்து எந்த மட்டத்தில் பெறுகிறோம் என்பதில் யாரும் தலையிட முடியாது. இதுபோன்ற முடிவுகளை நாங்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கலிப் தலாய் அமெரிக்க-, துருக்கி நெருக்கடி நிலை பற்றி அல் ஜசீராவிற்கு கருத்து தெரிவிக்கையில், 'துருக்கி எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது ஒரு பாதுகாப்பு அமைப்பை வாங்குவதாக மட்டும் அமெரிக்காவால் பார்க்கப்படவில்லை. மாறாக இது துருக்கியின் புவிசார் அரசியல் அடையாளத்தின் வெளிப்பாடாக மேற்குலகில் இருந்து ரஷ்யா மற்றும் சீனாவுக்கு நெருக்கமாக நகர்கிறது என்றும் கருதப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது, துருக்கி பிராந்திய ரீதியிலான பாதுகாப்பையும் அமைதியையும் ரஷ்யாவுடனான சந்திப்பூடாகவும் உறுதி செய்ய முனைந்துள்ளது. மேற்காசிய பிராந்திய அமைதியை கட்டமைப்பதில் ரஷ்ய-, துருக்கி தலைவர்களது உரையாடல் கனதியான தாக்கம் செலுத்தக்கூடியதாகும். சிரிய அரசாங்கத்தின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா உள்ளது. அதே நேரத்தில் துருக்கி ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்ய போராடிய குழுக்களையும் ஆதரிக்கிறது. இந்நிலையில், புடின்- எர்டோகன் உரையாடலிலும் சிரியா விடயமே வெளித்தோற்றத்தில் முதன்மைப்படுத்தப்பட்டது. மூன்று மணிநேர உரையாடல் பரப்பை வெளிவிடாத போதிலும், ஊடகங்கள் அறியப்பட்ட ஆரம்ப உரையாடல்களில் ரஷ்யா -துருக்கி உறவை கட்டமைப்பதில் சிரியாவின் தாக்கம் தொடர்பிலேயே உரையாடப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யா -துருக்கி உறவை பலப்படுத்துவது தொடர்பான உரையாடலில், ​​இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்து நேர்மறையாக வளர்கின்றன என்று புடின் சுட்டிக்காட்டினார். எர்டோகன் அந்த உணர்வை எதிரொலித்து, 'ஒவ்வொரு நாளும் பலப்படுத்துவதன் மூலம் எங்கள் துருக்கிய -ரஷ்ய உறவுகளைத் தொடர்வதில் பெரும் நன்மை இருக்கிறது' என்று நம்புவதாகக் கூறினார். மேலும், 'சிரியா தொடர்பாக நாங்கள் ஒன்றாக எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டின் அமைதி துருக்கி மற்றும் ரஷ்யா இடையேயான உறவைப் பொறுத்தது' என்று தெரிவித்துள்ளார். அத்துடன் புடினுடனான சந்திப்புக்கு முன்னதாகவே துருக்கி,- சிரியா விவகாரத்தில் துருக்கியின் பிரதான எதிர்த்தரப்பான குர்து மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரச சலுகையை ஏர்டோகன் அறிவித்துள்ளார். இது ஏர்டோகன் ரஷ்சியா-, சிரியா உறவை கையாள்வதற்கான முன்முயற்சியாகவே அவதானிக்கப்படுகிறது. அதனை மேலும் வலுச்சேர்ப்பதாகவே புடின்-, ஏர்டோகனின் உரையாடலும் அமையப்பெற்றுள்ளது.

எனவே ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய இரு நாட்டுத்தலைவர்களின் சந்திப்பும் ஊடகங்களில் வெளிவிடாத இரகசிய உரையாடல்களும் அமெரிக்காவின் பிராந்திய அதிகாரத்திற்கான மேலுமொரு நெருக்கீட்டை வழங்கும் செய்தியாகவே காணப்படுகிறது. எனினும் இச்சந்திப்பிலும் சில வரையறைகள் காணப்பட்டதாகவே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சந்திப்பை யூரேசியா திட்டத்தின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் ரேச்சல் எல்லேஹாஸ், அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் எர்டோகன் பகிரங்கமாக ரஷ்யாவிற்கு நெருக்கமாக செல்ல முயன்றதற்கான அறிகுறியாகும் எனக்குறிப்பிடும் அதேவேளை 'துருக்கி மற்றும் ரஷ்யாவின் நீண்டகால இலக்குகளைப் பொறுத்தவரை பெரும் வேறுபாடு இருப்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர்கள் குறுகிய கால நலன்களை முன்னெடுத்து வருகின்றனர்.' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்கு நெருக்கீடுகளை வழங்கும் தரப்புக்களின் பலவீனத்துக்குள்ளால் அமெரிக்கா தொடர்ச்சியாக தனது இருப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதென்ற மேற்கு அரசறிவியலாளர்களின் கருத்தும் முழுமையாக மறுதலிக்க முடியாத விடயமாகவே காணப்படுகிறது.

பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments