சலுகைகளுடன் கூடிய சந்தைப்பங்கினை இழப்பது இன்றைய சூழலில் தற்கொலைக்கு சமமானது | தினகரன் வாரமஞ்சரி

சலுகைகளுடன் கூடிய சந்தைப்பங்கினை இழப்பது இன்றைய சூழலில் தற்கொலைக்கு சமமானது

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தாம் வழங்கியுள்ள சலுகைகளை விலக்கிக் கொள்ளுமாயின் அதன் காரணமாக இழக்கப்படும் சந்தைப்பங்கினை சீனாவாலோ அல்லது இந்தியாவினாலோ நிச்சயமாக இலங்கைக்கு வழங்க முடியாது

இலங்கை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அனுபவித்துவரும் ஜீ எஸ் பி சலுகைகளை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிய முக்கியமானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அவசியமான உள்ளீட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு களநிலவரங்களை ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்து அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சியினரையும் வேறு தொடர்புடைய தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது.

கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இலங்கைக்கு மேற்படி சலுகைகளைத் தொடர்ந்தும் வழங்கவேண்டும் என்று 15 பிரதிநிதிகள் மாத்திரமே ஆதரவு தெரிவித்திருந்தனர். அறுநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகள் அதனை நீடிக்கக் கூடாது என வாக்களித்திருந்தனர்.

இதன் அடுத்த கட்டமாகவே ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான இவ்விஜயம் அமைந்துள்ளது. எடுத்தோம் கவிழ்த்தோம் என தீர்மானங்களை எடுக்காமல் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையொன்றிற்கு அமைவாக அதன்வழியே சென்று வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தீர்மானம் எடுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறையின் ஒரு அங்கமாகவே இவ்விஜயத்தை நாம் கருத முடியும். இக்குழுவினருடனான சந்திப்பின்போது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இலங்கைக்கான இச்சலுகையை நீக்கவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் அறியவருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சிலவற்றிற்கு முன்னரே குறித்துரைக்கப்பட்ட தகுதிவிதிகளின் கீழ் முன்னுரிமைத் தெரிவின் அடிப்படையில் இறக்குமதித் தீர்வைகளை நீக்கியோ அல்லது குறைத்தோ இறக்குமதிகளின் அளவை நிர்ணயிப்பதன் மூலமோ குறைந்த செலவில் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளை திறந்துவிடுவதே இந்த முறைமையின் அடிப்படை அம்சமாகும்.

இதன்படி சலுகைபெறும் ஒரு நாடு தனது போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் அதிக சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளில் அனுபவிக்கின்றன. ஒரு நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள இச்சலுகைகள் நீக்கப்பட்டால் அந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என அர்த்தமில்லை. மாறாக ஏனைய நாடுகளின் ஏற்றுமதிகளுடன் போட்டியிட்டே சந்தைப்பங்கினைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சலுகைகளின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் தற்போது முழுமையான தீர்வைகளைச் செலுத்தியே ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இறக்குமதி செய்யப்பட வேண்டிவரும்.

இதன்போது குறைந்த செலவில் வினைத்திறனாக உற்பத்தி செய்யும் நாடுகள் சந்தையை இலகுவில் கைப்பற்றி விடலாம். முன்னர் 2011 காலப்பகுதியில் இலங்கைக்கான ஜீ எஸ் பி சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியபோது இலங்கை அதுவரைகாலமும் சலுகைகளின் கீழ் ஏற்றுமதி செய்துவந்த கடல் உணவுப் பொருள்களின் சந்தையை மாலைதீவுகள் இலகுவாகக் கைப்பற்றிவிட்டமையை இங்கு உதாரணமாகக் காட்ட முடியும்.

அதேபோல இலங்கையின் முன்னணி ஆடைத்தயாரிப்பு நிறுவனங்கள் தமது ஏற்றுமதி விலைகளை குறைப்பதன் மூலமே தமது சந்தைப்பங்குகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளில் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகள் மாத்திரமின்றி ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட வேறுசில நாடுகளும் ஜீ எஸ் பி சலுகைகளை முன்னுரிமைத் தெரிவின் அடிப்படையில் வழங்கி வருகின்றன.

இவையாவும் இறக்குமதி செய்யும் நாடுகளால் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளாகும். எனவே சலுகைகளைப் பெறுவதற்கான தகுதிவிதிகள் பற்றியோ இவை நீக்கப்படுவதற்கான நடைமுறைகள் பற்றியோ சலுகையைப்பெற்று ஏற்றுமதி செய்யும் நாடுகள் தார்மீக ரீதியில் விமர்சிக்க முடியாது. ஏலவே நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிவிதிகளைப் பூர்த்தி செய்து சலுகைகளைப் பெற்றுக்கொள்வதா இல்லையா என்பதை மட்டுமே அவை தீர்மானிக்க முடியும். இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விளையாட்டு விதிகளின் கீழ் போட்டிகள் இடம்பெறுவதைப் போன்றதாகும். போட்டியின் விதிமுறைகளை போட்டியாளர்கள் தீர்மானிக்க முடியாது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இச்சலுகை நீக்கப்பட்டபோது பெற்ற முன் அனுபவம் ஏற்கெனவே உள்ளது. இச்சலுகை நீக்கப்பட்டதால் இலங்கையின் ஏற்றுமதிகளில் எற்பட்ட பாதிப்புகள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் உள்நாட்டுப் பணியாளர்களின் தொழில்வாய்ப்புகள் பாதிக்கப்பட்ட விதங்கள் பற்றிய விளக்கமான புள்ளிவிபரங்கள் நாட்டில் உண்டு. நாடு கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டுள்ள புறச்சூழலில் தற்போது பெற்று அனுபவித்து வரும் இச்சலுகைகளை இழக்க நேரிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த காய்தல் உவத்தல் அற்ற ரீதியில் அதிகாரிகளும் அரசுசார் நிபுணர்களும் அரசியல்வாதிகளும் சரியான தகவல்களையும் எதிர்வு கூறல்களையும் பெற்றிருப்பார்கள் என நம்புவோம்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய ஒன்றியம் எந்தளவு முக்கியமானதொரு வர்த்தகப் பங்காளி என்பது சிறு குழந்தைக்கும் நன்கு புரியும். உலகில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய வர்த்தகப்பங்காளி ஐரோப்பிய ஒன்றியமாகும். 2020ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த ஏற்றுமதிகளில் 25 சதவீதமானவை அமெரிக்காவால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. 23 சதவீதமானவற்றை ஐரோப்பிய ஒன்றியம் கொள்வனவு செய்திருந்தது.

தற்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அதன் 9 சதவீத பங்கினையும் உள்ளடக்குவோமாயின் இலங்கையின் ஏற்றுமதிகளில் 32 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறது. எனவே இலங்கையின் ஏற்றுமதிகளில் 57 சதவீதமானவை இலங்கை அடிப்படையில் முரண்பட்டு வெறுப்புடன் நோக்கும் மேற்குலக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை. இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா இப்பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு இலங்கையிடமிருந்து எதனையும் கொள்வனவு செய்யவில்லை என்பதையும் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களில் இருந்தே புரிந்துகொள்ள இயலும்.

அதேவேளை இலங்கையின் இறக்குமதிகளில் வெறும் 9 சதவீதம் மாத்திரமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. சீனாவிடமிருந்து மொத்த இறக்குமதிகளில் 22 சதவீதமும் இந்தியாவிடமிருந்து 19 சதவீதமும் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே இலங்கைக்கு இறக்குமதி வழங்கும் நாடுகளைவிட அதன் ஏற்றுமதிப் பங்காளர்கள் குறித்தே அதிக கரிசனை கொள்ளவேண்டும். ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தாம் வழங்கியுள்ள சலுகைகளை விலக்கிக் கொள்ளுமாயின் அதன் காரணமாக இழக்கப்படும் சந்தைப்பங்கினை சீனாவாலோ அல்லது இந்தியாவினாலோ நிச்சயமாக இலங்கைக்கு வழங்க முடியாது.

அதுவும் தற்போது இலங்கை கைக்கொள்ள உத்தேசிக்கும் இறக்குமதிப் பதிலீட்டுத் தேசியவாதக் கொள்கைகளை அது தீவிரமாக கையாளும் பட்சத்தில் நிலைமைகள் மேலும் மோசமடையலாம். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தான இலங்கையின் இறக்குமதிகள் பற்றிய கொள்கை நடைமுறைகள் குறித்த தமது விசனத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே அறிக்கையொன்றின் மூலம் பகிரங்கப்படுத்தியது நினைவிருக்கலாம். அதில் வர்த்தகம் என்பது ஒருவழிப் பாதையல்ல என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இன்றைய உலகில் சந்தைகளைப்பெறுவது என்பது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததும் மிகக் கடினமானதுமான ஒன்றாகும். எனவே ஒவ்வொெரு நாடும் தாம் ஏற்கனவே பெற்றுள்ள சந்தைப்பங்கினை இழந்துவிடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். அதிலும் குறிப்பான சலுகைகளுடன் கூடிய சந்தைப்பங்கினை இழப்பதென்பது இன்றைய சூழலில் தற்கொலைக்கு சமமானதாகும்.

ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்ற இலங்கையின் போட்டி நாடுகள் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. வருகை தந்துள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு சலுகை நீக்கத்தைப் பரிந்துரைக்குமாயின் இலங்கைப் பொருளாதாரத்தில் அது மோசமான தாக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாதவாறு ஏற்படுத்தும். ஏற்றுமதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீடுகள் உள்வருகை குறைவடைந்து வெளிநாட்டிலிருந்தான இலங்கையர்களின் பணவனுப்பல்களும் வற்றிப்போய் இலங்கையின் டொலர் கையிருப்புகள் கரைந்து போயுள்ள நிலையில் ஜீ எஸ் பி சலுகைகளும் நீக்கப்படுமாயின் அது நாட்டிற்கு விழும் பலத்த அடியாகவே அமையும். வெறும் வாய்ச்சவடால்களால் இலங்கையால் இந்நிலைமையை சமாளிக்க முடியாது. புத்திசாதுரியத்தடன் காய்நகர்த்தினால் மட்டுமே இலங்கையினால் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். மாறாக நம்மைத்தவிர மற்றெல்லோரும் முட்டாள்கள் என்ற நினைப்பில் செயற்பட்டால் இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments