தமிழர் அரசியலில் மீண்டும் உருவெடுத்துள்ள பனிப்போர்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் அரசியலில் மீண்டும் உருவெடுத்துள்ள பனிப்போர்!

மூன்று தசாப்தத்துக்கு மேலாக நீடித்த யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்னும் தாமதமே தொடர்கின்றது. அம்மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற போதும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னோடியாக இன்னுமே ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.

மாறாக, அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தமக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மேலும் ஆழமாக்கி ஒருவரை ஒருவர் விமர்சித்து சொந்த விருப்புவெறுப்புகளின் பேரில் அரசியல் செய்வதையே பார்க்கக் கூடியதாக உள்ளது.

இதற்கு சிறந்ததொரு உதாரணமாக ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை விடயம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமையைக் குறிப்பிட முடியும். இவ்விவகாரமானது தமிழர் தரப்பு அரசியலில் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக இருந்தாலும், இதுபோன்று ஒவ்வொரு விடயத்துக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளே காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் இலக்கு வைத்தே அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு அரசியல் செய்து வருகின்றன. ஒரு தனிநபரை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவரை விமர்சிப்பதும், அவருடைய செயற்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதுமே வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் செயற்பாடாக உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலிலும் குறித்த அரசியல்வாதியை தவறாக சித்திரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருக்காத நிலையில், தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் ஒரு நபரை விமர்சிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தையே பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் உள்ள பல குடும்பங்கள் இன்னமும் தமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றன. இது தவிரவும், தற்போதைய கொவிட் தொற்றுநோய் சூழலில் தமிழ் மக்களின் நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.

இருந்த போதும் அந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியோ அல்லது அவர்களின் பொருளாதார நிலைமைகள் பற்றியோ பெரிதும் அலட்டிக் கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள் பலர், தொடர்ந்தும் தமக்கிடையிலான முரண்பாட்டு அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்று செல்வாக்குத் தேடுவதையே செய்து வருகின்றனர்.

இந்த அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைவதற்கு ஒரு சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை எதுவும் இதுவரை வெற்றியளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் மற்றுமொரு புதிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை தொகுதி ரீதியாகவும், தேசியப் பட்டியல் ஊடாகவும் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களை இயன்றவரை ஒன்றிணைத்து தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை முன்னெடுக்கச் செய்யும் நோக்கில் பொது வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி கி.நோயெல் இம்மானுவேல், தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மதத் தலைவர்களின் கையொப்பங்களுடன் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும் போது, அவற்றைத் தீர்த்து வைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக் கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற் கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கி வருகிறோம்.

வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்ற வரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாள வேண்டும் என விரும்புகிறோம்’ என அந்த ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகள் இதற்கு முன்னரும் எடுக்கப்பட்டமையை நாம் மறந்து விடக் கூடாது. குறிப்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் பின்னர் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்கள் முயற்சித்தன. இதன் ஆரம்ப கட்டமான கூட்டங்கள் இரண்டும் நடத்தப்பட்டன. இதனை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றிருந்த போதும் அதன் பின்னர் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

இருந்த போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பலமான அரசியல் கட்டமைப்பொன்றுக்கான தேவை தொடர்ந்தும் இருக்கின்ற போதும், தமிழ் அரசியல்வாதிகள் இதன் தாற்பரியத்தை உணராது ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிராமல் ஒவ்வொரும் தமது அரசியல் போக்குக்குச் சார்பான கொள்கைகளை கையில் பிடித்துக் கொண்டே காய்களை நகர்த்தி வருகின்றனர். தேர்தல் என வரும் போது மாத்திரம் தமிழ்கட கட்சிகள் தமக்கிடையில் கூட்டை ஏற்படுத்திக் கொள்வதும் அதன் பின்னர் தனித்தனியாக ஒருவரை விமர்சித்து அரசியல் செய்வதும் ஆரோக்கியமானதாக அமையாது என்பதே மக்களின் அங்கலாய்ப்பாக உள்ளது.

பி.ஹர்ஷன்

Comments