புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அரசு நேசக்கரம் நீட்டுகின்றது | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அரசு நேசக்கரம் நீட்டுகின்றது

'வட மாகாணத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி அங்குள்ள மக்களுக்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் நிலைப்பாடு' என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் திருப்தியடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எமக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கே: நியூயோர்க்கில் நடைபெற்ற 76வது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நாட்டின் தற்போதைய நிலைமை, குறிப்பாக தொற்றுநோய் சூழலில் நாட்டின் நிலைமை மற்றும் சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், பொருளாதார நிலைமைகள் குறித்தே ஜனாதிபதி அடிப்படையில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் நாடு சுமுகமான நிலைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இதனை எதிர்பார்த்திருக்கின்றோம்.

ஜனாதிபதி தனது உரையில் உலக நாடுகள் பல தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமைகள் பற்றிய தகவல்களைச் சுட்டிக் காட்டியிருந்தார். உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியிருந்தார். ஒரே கூரையின் கீழ் எமது நாடு சில நன்மைகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாடு என்ற ரீதியில் நாம் இதனை வரவேற்கின்றோம். எனினும், சிறந்ததொரு நாளையை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

கே: ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது பற்றிய உங்களின் கருத்து?

பதில்: அரசியல் கட்சி மற்றும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்த இனத்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இது தொடர்பில் நாம் திறந்த மனதுடன் இருக்கின்றோம். 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக நாம் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திருந்தோம். பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எல்.ரி.ரி.ஈயினர் போராடிக் கொண்டிருந்த போது சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகமான கஷ்டங்களுக்கு உள்ளாகினர். எமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்தது மாத்திரமன்றி, தமிழ் மக்களும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக வடபகுதியில் உள்ள மக்களின் உயிர்களை மாத்திரம் காப்பாற்றவில்லை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டோம். வடமாகாணத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார்.

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது. நாம் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடி வேறுபாடுகளைக் களைந்து கொள்ளலாம்.

கே: வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கி இலங்கை முன்னேறும் போது அதற்கு ஐ.நா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார். இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: ஊடகங்களால் ஒரு சில விடயங்கள் குறித்த ஊதிப் பெருப்பிக்கப்பட்டாலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் நாட்டில் சமாதானமாகவும், ஒற்றுமையுடனுமே வாழ்கின்றனர். இனரீதியான வன்முறைகள் எதுவும் நாட்டில் இடம்பெறுவதில்லை. இதுவே கள நிலைமையின் உண்மையாகும். ஐ.நா செயலாளர் நாயகமும் இந்த நிலைப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டியிருந்தார்.

கே: இலங்கையை தமது சிவப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய இராச்சியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்கள்?

பதில்: கொவிட்-19 தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் வயதுப் பிரிவினரான 30 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 100 வீதமானவர்களுக்கு நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். இவற்றின் அடிப்படையில் நாம் பாதுகாப்பான சமூகமாக மாறி வருகின்றோம். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான கதவுகளைத் திறந்துள்ளோம். இது ஒக்டோபர் மாதத்திலிருந்து மேலும் பலப்படுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் நாம் ஆரம்பித்துள்ளோம். எமது மொத்த சனத்தொகையில் 60 வீதமானவர்களுக்குத் தடுப்பூசியை வழங்கினால் நாம் பாதுகாப்பானவர்களாக இருப்போம்.

கே: இலங்கை தனது சனத்தொகையில் 50 வீதமானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனை விளங்கப்படுத்த முடியுமா?

பதில்: ஆம், இதற்காகப் பாடுபட்ட அனைத்துத் துறையினருக்கும் தலைவணங்குகின்றோம். பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசிகளைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இதனை அடைய முடிந்தள்ளது. ஜனாதிபதியின் முயற்சியால் அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்தும் மருந்துகளைப் பெற முடிந்தது.

கே: சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில்: தேவையான தரப்பினருக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்கி வருகிறது. முடக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 80 பில்லியன் ரூபாய்வுக்கும் அதிகமான பணத்தை செலவு செய்துள்ளது. அரசாங்கத்தின் வருமான மட்டம் குறைவாக இருப்பதால் காலவரையறையின்றி தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்க முடியாத நிலையில் உள்ளது. அந்நிய செலாவணியின் வரவு குறைவடைந்திருப்பதும் உள்நாட்டு வருமானத்தைக் குறைத்துள்ளது. அனைத்து வழியிலான வருமான மார்க்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதாரத்தை விரைவில் திறந்து மக்களின் சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு ஏதுவான நிலைமையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

அர்ஜுன்

Comments