மலையகத்தில் நிகழப்போகும் காணி சுவீகரிப்பு; அபிவிருத்தியா? அல்லது ஆக்கிரமிப்பா? | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் நிகழப்போகும் காணி சுவீகரிப்பு; அபிவிருத்தியா? அல்லது ஆக்கிரமிப்பா?

நிலமும் மொழியும் இழக்கப்படும் போது எந்தவொரு தேசிய இனமும் தானாகவே அழிந்துவிடும் என்பார்கள்.

இன்று உலகையே அச்சத்தின் உச்சத்தில் வைத்திருக்கும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மலையகத்தின் பெருந்தோட்ட காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பலத்த சந்தேகங்களை உருவாக்கி வருகின்றது.

இலங்கையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் முஸ்லிம் மக்களின் சில எல்லைக் கிராமங்கள் மற்றும் மலையகத்திலும் பன்னெடுங்காலமாக தொடர்கின்ற காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகளானது இனங்களுக்கு இடையிலான சமூக முரண்பாடுகள், இனத்துவ மேலாதிக்க சர்ச்சைகள், நிர்வாகம் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணிகளாக கருதப்படுகிறது. எனவே காலத்துக்கு காலம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் மண் சார்ந்த, மத, மொழி கலாசாரம் மற்றும் பொருளாதார உரிமைகள் சார்ந்த உரிமை மீட்புக்காக போராட்டங்களை நடாத்துவதும் பழகிப்போன தொடர் கதைகளாகவே தொடர்கிறன.

அந்த வரிசையில் இலங்கையில் மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது 200 வருட வாழ்க்கையானது வரலாறு முழுவதுமே பல தலைமுறறைகளாக உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

அண்மையில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள அமைச்சரவை முடிவுகளின் அடிப்படையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பாற்பண்ணை அமைக்கும் முயற்சிகளுக்காக மலையகத்தின் பெருந் தோட்டங்களுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இந்த திடீர் அறிவிப்பானது மலையக அரசியல், தொழிற்சங்க மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மலைநாட்டில் தரிசு நிலங்களை அபிவிருத்தி செய்வது முக்கியமான விடயமாகும். ஆனாலும் அபிவிருத்தியின் பெயரால் பசுமையான தோட்டங்களை கபளீகரம் செய்வதும் பின்னர் இனத்துவ குடியேற்றங்களை ஏற்படுத்துவது எவ்வகையிலும் செழுமையான வெற்றிக்கு வழிவகுக்காது. காணி சுவீகரிப்பு என்ற போர்வையில் பல்லாயிரம் ஹெக்டேயர் காணிகளை பாழ்படுத்தியவர்களின் வரலாற்றோடு ஒப்பிடும்போது மீண்டும் முறையான திட்டமற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும்.

சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த பல்வேறு விவசாய திட்டங்களால் நாடு பாழாய்ப்போன உதாரணங்கள் நிறையவே உள்ளன. அந்த வகையில் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தியென்பது புவியியல் ரீதியாக காலநிலை மாற்றங்களோடும் தொடர்புடைய பண்பாகும். குறிப்பாக பசுக்களின் வளர்ப்பு பராமரிப்பு என்பன சுகாதார நெறிமுறைகளிலும் முக்கியத்துவமானது. இதில் மக்களின் தனித்துவ வாழ்வியல் கலாசாரங்களும் பிரதிபலிக்கின்றன. எனவே தேசிய மட்டத்தில் விரிவான ஆய்வுகளுக்கு பின்னரே சரியாக முடிவெடுக்க வேண்டும்.

06.09.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் விவசாய அமைச்சரின் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கையில் பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி வழங்கல் என்ற தலைப்பில் இந்த அமைச்சரவை பத்திரம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் திரவப்பால் தேவையின் 40 விகிதம் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதுடன் ஏனையவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் சுமார் 50 பில்லியன் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. எனவே பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சில யோசனைகள் இலங்கை முதலீட்டுசபை ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கான இந்த முன் மொழிவுகளின் பிரகாரம் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான ஒருசில பண்ணைகளில் தற்போது உற்பத்தி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென திட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி கெபினெட் பத்திரத்தின்படி: H.B.K.I.R.International Investment Access Agro நிறுவனத்துக்கு 700 ஏக்கரும், Pessara Logistics நிறுவனத்திற்கு 60 ஏக்கரும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு (NLDB) சொந்தமான நிக்கவெரட்டிய மற்றும் கொடுகச்சிய பண்ணைக்கு 250 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு (JEDB) சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம், மவுன்ட் ஜின் ஆகிய தோட்டங்களில் 811 ஏக்கர்கள் Farms Pride நிறுவனத்திற்கும், தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ் வெலி தோட்டங்களிலும் முறையே 200 ஏக்கர்கள் மற்றும் 150 ஏக்கர்களை Hillside Agro நிறுவனத்துக்கு வழங்குகிறது.

அரச பெருந்தோட்ட யாக்கம் (SPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) என்பன ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது JEDB விவசாய அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக அதன் தலைவராக பெருந்தோட்டதுறைக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி புவனேக அபேசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தால் பொதுவாக வட கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக மக்கள் வாழும் பகுதிகள் என்ற ரீதியான ஒப்பீடாக பார்க்கும்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு, தேசிய அபிவிருத்தி, தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொல்லியல், வனவள திணைக்களத்தின் தேவைகள், வன ஜீவராசிகளின் சரணாலயம் , மகாவலி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், புதிய குடியேற்றங்கள், மாதிரிக்கிராம வீடமைப்புகள், பௌத்த விகாரைகளின் விஸ்தரிப்பு, யுத்த வெற்றியின் நினைவு சின்னங்களை அமைப்பது, பொருளாதார வலயங்கள், சுற்றுலாத்துறை, கரையோர பாதுகாப்பு, மூலிகை பயிர்செய்கை, பாதைகள் அபிவிருத்தி போன்ற பல்வேறு தலைப்புகளில் காணிகளை அடையாளம் காண்பதும், கையகப்படுத்துவதும் அமைச்சரவை முடிவுகளை எடுப்பதும், வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற செயற்பாடுகளாகவே உள்ளன.

வட கிழக்கு பகுதிகளை மையப்படுத்தி நீண்ட காலமாக திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளால் பெரும்பான்மை இனத்துவ மேலாண்மைகள் நிலைநாட்டப்படுவதோடு பாரம்பரியமான தமிழரின் பூர்வீக தாயகம் புவியியல் ரீதியாக துண்டாடப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலைமைகள் பற்றிய பின்னணியில் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் சர்வதேச மட்டத்திலும் பல தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையக மக்கள் இலங்கையில் பூர்வீக காணி உரிமைகளை கொண்டிராத போதிலும் இரண்டு நூற்றாண்டுகளாக தாம் கட்டியெழுப்பிய பெருந்தோட்ட காணிகள் திடீர் திடீரென்று தனியாருக்கு கொடுக்கப்படுவதால் அல்லது வெளியார் வசமாவதால் மலையக மக்களின் சனத்தொகை மற்றும் இனப் பரம்பலில் ஏற்படக்கூடிய வித்தியாசங்கள், நிர்வாகம் அதிகார பரவலாக்கம் தொடர்பான காரணிகளால் பாதிக்கப்படுவார்கள்.

இலங்கையில் சமீப காலமாக அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதி செயலணிகள் தோற்றம் பெற்றுள்ளன.

வட கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளின் பின்புலத்தில் பெரும்பான்மைவாத மேலாதிக்கம், மத ரீதியான அடிப்படைவாத சித்தாந்தங்கள், மற்றும் குடியேற்றவாத வரைபுகள் அடித்தாளமாக மேலோங்கியிருந்தன என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

நாட்டின் தற்போதைய பெருந்தொற்று முடக்க நிலைமைகளிலும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் செயலணிகளை பொறுத்தவரை கீழே காணப்படுபவை முக்கியத்துவமானவையாகும். (அ) பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பையும் மற்றும் ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பும் செயலணி, (ஆ) கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கும் செயலணி,(இ)பொருளாதார மறுசீரமைப்பு வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணிகள் என்பன அதிக அதிகாரமிக்கவையக உள்ளன.

இந்த செயலணிகளில் பொருளாதார மறுசீரமைப்பு வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் மூலமாகவே மலையகத்தில் புதிதாக கால்நடை அபிவிருத்தி மற்றும் பாற்பண்ணைகளை அமைக்கும் முயற்சியில் தொழில்நுட்ப சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது.

கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை முயற்சிகள் வெற்றியளிப்பதாக அறிக்கைகள் வாயிலாக காண்பிக்கப்படும் பட்சத்தில் மேலும் பரவலாக்க முயற்சிகள் தோற்றம் பெறலாம்.

பல்வேறு செயலணிகளுக்கும் அங்கத்தவர் நியமனங்கள் செய்யப்படும் போது இன விகிதாசார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலும் 99% விகிதம் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களில் ராணுவ அதிகாரிகள், மதத் துறவிகள் மற்றும் ஏனைய சீருடை அணியும் நபர்களே உள்ளடங்குவதால் ஆணைக்குழுக்கள் செயலணிகளின் துறைகள் சார்ந்த நிபுணத்துவம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன. இன சமத்துவமின்மை காரணமாக சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள், சமூக நலன்கள், நல்லிணக்கம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிவில் கட்டமைப்புகளிலும் பாரிய இடைவெளி ஏற்படலாம். பிரதேசங்களின் எல்லைகள் அடிப்படையிலும் சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கும் எதிர்கால அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்.

எனவே மலையகத்தில் அவசரமாக முன்னெடுக்கப்படும் கால்நடை அபிவிருத்தி, பாற் பண்ணைகள், ஏனைய விவசாய திட்டங்கள், வர்த்தக வலயங்கள் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள், தெளிவூட்டல்கள், விழிப்புணர்வு செயல்பாடுகள் அவசியமாகும்.

உலகமயமாக்கல் அடிப்படையில் பொருளாதார மாற்றங்கள, சர்வதேச நுகர்வோர் கலாசாரங்கள், பிழையான நிதிக் கொள்கைகள் அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணிகளால் உள்நாட்டிலும் பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அந்த வகையில் நாட்டின் உணவுத் தேவைகள், ஏற்றுமதி இறக்குமதி சந்தையில் நெகிழ்வற்ற தன்மைகள் காணப்படுகின்றன. மக்களின் உணவு தேவைகளுக்கேற்ப உள்ளூர் விவசாய உற்பத்தி நடவடிக்கைகள் விஸ்தரிக்கபடல் வேண்டும். உப உணவு பயிர்செய்கைகள், கால்நடை வளர்ப்பு, கோழி பண்ணைகள் ஏனைய சுயதொழில் முயற்சிகள் மற்றும் கிராமிய கைத்தொழில்கள் முறையாக ஊக்குவிக்கப்படல் அத்தியாவசியமாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரை சமீபத்திய காலம்வரை தேயிலை இறப்பர் ஆகியவற்றின் ஏற்றுமதியிலேயே அதிகளவிலான அந்நிய செலவாணி பெறப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களின் நிர்வாகம் தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக்கபட்டதன் பின்னரே தேயிலைத் தொழிற்துறையில் எதிர்பார்த்த இலக்கை அடையாமல் போயுள்ளது. நிலையான கொள்கைகள் இல்லாததன் காரணமாக தேயிலை ஏற்றுமதி வருமானம் மெதுமெதுவாக வலுவிழந்து வருகிறது. தனியார் கம்பெனிகளின் முதலீட்டு சிக்கல்கள், நிர்வாகத்தில் காணப்படும் மெத்தன போக்குகள், நவீனத்துவம் உள்ளீர்க்கப்படாமை, தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமை நம்பிக்கையற்ற போக்குகள் போன்ற பல்வேறு காரணங்களால் பெருந்தோட்டத் துறையில் மாற்றங்கள் தேவைபடுகின்றன. தேயிலை பயிர்ச்செய்கை காணிகளின் பரப்பளவு குறைவடைந்துள்ளதோடு தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

1992 களில் அரசாங்கத்தின் வசமிருந்த பெருந்தோட்டங்கள் தனியார்மயப் படுத்தப்பட்டன. பிரத்தியேக அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக 22 பிராந்திய பெருந்தோட்ட கம்பெனிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. அப்போது சுமார் ஐந்து இலட்சமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் இரண்டு இலட்சம் வரை குறைந்ததுள்ளது. இதனால் தோட்டங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் அரச மற்றும் தனியார் தோட்டங்களில் குடியிருப்பவர்கள், வெளியிடங்களில் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துவிட்டது. எவ்வாறாயினும் தோட்டங்களோடு தொடர்புகளை பேணிவரும் இலட்சக் கணக்கானோர் தொகையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனவே தான் தோட்ட காணிகளை மொத்தமாக விற்கும் போதோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் சுவீகரிப்பதாலும், தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதாலும், வெளியாரை குடியேற்றம் செய்வதாலும் பெரியளவில் சமூக பிரச்சினைகள் எழுகின்றன.

மலையகத்தில் உள்ளக ரீதியில் தற்போது சுமார் 1.5 மில்லியன் (பதினைந்து இலட்சம் ) மக்கள் வாழ்கின்றனர். அதற்கேற்ப காணிகளின் கையிருப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. சராசரியாக ஒரு வீட்டில் 05 பேர் கொண்ட குடும்பம் என்று வகுத்தாலும் சுமார் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுடன் கூடிய காணிகள் தேவைப்படுகின்றன. (இலங்கையின் மொத்த சனத்தொகை அடிப்படையில் பிரதேச எல்லைகளைக் கடந்த நிலையில் வாழும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 1.5 மில்லியனை விட அதிகமாகும்) இந்த கட்டுரையின் நோக்கத்திற்கமைய தற்போதைய இனவிகிதாசார அதிகரிப்பு தொடர்பான புள்ளி விபரக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் மலையக மக்களின் தேவைக்காக சுமார் 1,85,000 வீடுகள் தேவையாகும்.

பதவியிலிருந்த அரசுகளின் கொள்கைகளின் பிரகாரம் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகளுக்கு அருகாமையில் 07 பேர்ச் காணிகளை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவது , தனி வீட்டுத்திட்டம், தொடர்மாடி வீட்டுத்திட்டம், தோட்டப்புற புதிய கிராமங்கள் மற்றும் இந்திய வீடமைப்பு திட்டங்கள் என்பவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய வேண்டும்.

மலையக மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே குடும்பங்கள் அடிப்படையில் 07 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பாக 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றுப்பட்ட அமைச்சரவை ஒப்புதலும் கிடப்பில் உள்ளது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் முந்தைய அமைச்சரவை பத்திரம் எந்தளவிற்கு நடைமுறை சாத்தியமானதென யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் நாட்டின் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் சார்பாக எவரும் இடம்பெறவில்லை. 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரை இந்திய வம்சாவளியினர் சார்பாக அமைச்சரவையில் ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கெபினெட் அமைச்சர்கள் அங்கத்துவம் வகித்து வந்துள்ளனர். ஆனாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய ஆட்சியில் கெபினெட் அமைச்சரொருவர் இல்லாதது மலையக மக்களுக்கு பாரிய பின்னடைவாகும். தோட்ட உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சரும் பிரதமரின் கட்டுபாட்டிலுள்ள பல்வேறு இலாகாக்கள் என்ற ரீதியில் ஒரு புரட்டோகோல் அடிப்படையில் கட்டுப்பட்டவராகவே பணியாற்ற வேண்டியுள்ளது.

எனவே தோட்ட உட்கட்டமைப்பு வீடமைப்பு மற்றும் ஏனைய கல்வி, பொருளாதார உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை பாராளுமன்ற கன்சல்டேடிவ் கமிட்டி, கெபினெட் சப் கமிட்டி, பட்ஜெட் அனுமதி தொடர்பான பல்வேறு நடைமுறைகளைகளிலும் தனித்தனியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பிரதமரின் வேலைப்பளு மற்றும் உடல்நிலை அடிப்படையில் ராஜாங்க அமைச்சருக்கு பல்வேறு சவால்கள் இருக்கலாம்.

மீண்டும் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். ஒரு நாடென்ற ரீதியில் இலங்கையில் பெரும்பாலான காணிகள் தனியார் வசமே உள்ளன. ஆனால் பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் முன்பு முழுவதுமாக அரசாங்கம் வசமிருந்த காணிகளில் தற்போது 80% வீதமான காணிகள் மட்டுமே அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இலங்கையில் காணி தொடர்பான சட்டங்கள் அடிப்படையில் காணி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளுக்கமைய எந்தவொரு காணியையும் தேசிய நலன் சார்ந்து கையகப்படுத்தும் அதிகாரம் அரசிடமே உள்ளது. எனவே மலையக மக்களின் வீடமைப்பு, காணி உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டில் அரசாங்கம் சரியான திசையில் இயங்க வேண்டுமெனில் மலையக அரசியல்வாதிகளின் அறிவார்ந்த திட்டமிடல் மற்றும் ராஜதந்திர அணுகுமுறைகள் அவசியமாகிறது.அரசியலில் ஒருமித்த நிரந்தர நிலைப்பாடுகள் வேண்டும்.

சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டின் காணி அதிகாரம், நில சீர்திருத்தங்கள் தொடர்பாக காலத்துக்கு காலம் நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக விளக்குவதற்கு இந்த கட்டுரையில் இடமில்லை. இதுவரை நடைமுறைக்கு வந்துள்ள காணிச் சட்டங்கள் எதுவுமே இந்திய வம்சாவளியினருக்கு எவ்வித நன்மையையும் பயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்ட காணிகள் வெளியாருக்கு பகிரப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மலையக மக்கள் அநீதிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

1942 இல் கேகாலை புளத்கோபிட்டியவில் 500 ஏக்கர் தோட்ட காணிகளை வெளியாருக்கு கொடுக்கும் நடவடிக்கைகளின் போது இடதுசாரி கட்சிகளின் துணையோடு தொழிலாளர்கள் போராடியுள்ளனர்.

1970 களில் நுவரெலியா மாவட்டத்திலும் டெவன் தோட்டத்தில் வெளியாருக்கான காணி பகிர்வை தடுக்கும் உரிமைப் போராட்டத்தில் சிவனு லெட்சுமணன் உயிரிழந்தார். இன்னும் பல போராட்டங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்திருத்தன.

1972 இல் கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்த சட்டம் காரணமாக உருவான ஜனவசம, உசவசம திட்டங்கள், காணி உச்சவரம்பு சட்டங்கள் பெருந்தோட்ட கட்டமைப்பில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

1975 களில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கை பன்முகப்படுத்தலுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் பெருந்தோட்ட நிலங்கள் பறிபோயின. கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, அவிசாவளை, எட்டியாந்தோட்டை, களுத்துறை போன்ற எல்லைப் பகுதிகளிலிருந்த தோட்ட காணிகள் பெருமளவில் சுவீகரிக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளரின் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் தமிழ் மக்கள் நிர்க்கதியாக வெளியேற வேண்டியதாயிற்று. கணிசமானவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

1982 இல் சுமார் 5,38,259 ஹெக்டேயர்களாக இருந்த பெருந்தோட்ட காணிகளின் பரப்பளவு 2002 ஆண்டளவில் 384,482 ஆக குறைந்துள்ளது. இதில் சுவர்ணபூமி, ரத்தினபூமி திட்டங்களே கூடுதலான மலையக காணிகளை உள்ளீர்த்துள்ளன.

மலையகத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை அபிவிருத்திக்காக ஜனாதிபதி செயலணியால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தோடு கடந்தகால செயற்பாடுகளை ஒப்பிட்டளவில் நோக்கும் போது நீண்டகால அரசியல் அசைவியக்கங்களின் நீண்டகால மூலோபாயங்களை புறந்தள்ளி விடமுடியாது. விவசாய அமைச்சர் இங்கே ஒரு கருவியாகவும் இருக்கலாம்.

மலையக அரசியல் முன்நகர்வுகள் அடிப்படையில் நுவரெலியா மாவட்டம் குறிப்பிட்ட சிலரது அரசியல் இலக்காக இருக்கலாம். இந்த மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 59% விகிதம் இந்திய வம்சாவளி தமிழர்களாவர். இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்பதிவு கணக்கெடுப்புகளின் போதும் நுவரெலியா மாவட்டத்திலேயே பெரும்பாலான தமிழர்கள் தங்களை இந்தியத் தமிழரென பதிவு செய்கின்றனர். இந்த இனத்துவ அடையாளமானது பல்வேறு காரணங்களால் மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறாக பதிவுகள் காரணமாகவே எண்ணிக்கை அடிப்படையில் இலங்கையின் நான்கு தேசிய இனங்களில் ஒன்றாக மலையக மக்களின் இனத்துவ அடையாளத்தை மேலும் உறுதியாக வலியுறுத்துவதற்கு வாய்ப்பாகிறது. எனவே தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுடையோர் என்ற எண்ணிக்கையில் பார்க்கும்போது இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நுவரெலியா மாவட்டமே கூடுதலான தமிழ் வாக்காளர்களை கொண்டிருக்கிறது. எனவே மறைமுக ரீதியில் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமாயின் இனப்பரம்பலில் மாற்றங்கள் ஏற்படலாம். பாராளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் விகிதாசார பிரதிநிதித்துவ தெரிவுகள் பாதிக்கப்படலாம். கிராம அலுவலர் பிரிவுகள், பிரதேச செயலாளர் பிரிவுகள், பன்முக வரவுசெலவு ஒதுக்கீடுகளில் சமத்துவமற்ற பாகுபாடுகள் அதிகரிக்கலாம். ஏற்கனவே கிடப்பிலிருக்கும் புதிய பிரதேச செயலக உருவாக்கங்கள், கல்வி சுகாதாரம், தொழில் வாய்ப்புக்கள் போன்ற பல்வேறு அடிப்படை கோரிக்கைகளும் வலுவிழந்து போகலாம். இந்த நிலைமைகள் ஊவா, சப்பிரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்களின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே பெருந்தோட்ட காணிகளை தனியாருக்கு அல்லது வெளியாருக்கு கொடுக்கும் திட்டத்தை நிறுத்தும் அசைவியக்கமானது மலையக அரசியல் இருப்பை தக்க வைப்பதிலும் ஜனநாயக முன்னெடுப்புகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதிலும் முக்கியமான காரணியாகலாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலகத்தை நுவரெலியா மக்கள் முன்னுதாரணமாக பார்க்க வேண்டும். கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னர் முதற்கட்டமாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலிருந்த வெலிஓயாவில் காணிகளை வழங்கி சில தமிழ் குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டன. பின்னர் அநுராதபுரம் எல்லையிலிருந்த ஜனகபுர, பதவிய, சிரிபுர கிராமவாசிகளுக்கு மகாவலி எச் வலயம் ஊடாக பல்லாரம் ஏக்கர் காணிகளை வழங்கி அவை முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன. பின்னர் காலப்போக்கில் விவசாய நிலங்களில் துரித குடியேற்றங்கள் காரணமாக இப்போது வெலிஓயா தனியான சிங்கள பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை உருவாக்கம் பெற்றுள்ளது. அதன் நீட்சியாகவே வன்னி மாவட்டத்தில் இப்போது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மாற்றங்களை எதிர்நோக்குகிறது.

2017ஆம் ஆண்டுக்கான வட மாகாணத்தின் புள்ளிவிபர கையேட்டில் வெலிஓயாவின் நில அளவுகள் முறையாக குறிப்பிடாமல் காலியாகவே உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏனைய கரைத்துறைபற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுகளின் மொத்த நிலப்பரப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெலிஓயாவின் தகவல்கள் சரியாக அளவிடப்படாமல் மறைக்கப்படுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பகுதியாகவிருந்த தம்பலகாமமும் இவ்வாறாகவே மாற்றம் பெற்றது. அவ்வாறான உதாரணங்கள் இன்னும் உள்ளன. கதிர்காமம் வரை வரலாற்றை தனித்தனியாக எழுதலாம்.

காமினி திசாநாயக்கா காணி, காணி அபிவிருத்தி மற்றும் துரித மகாவலி அபிவிருத்தி அமைச்சராக பதவிவகித்த போது நுவரெலியா மாவட்டத்தில் தொகுதி நிர்ணய செயற்பாடுகளில் கொத்மலை, ஹங்குரகெத்த, வலப்பனை தொகுதிகள் மற்றும் கினிகத்தேன செயலக பிரிவுகளிலும் உள்ளீடுகள் இடம்பெற்றுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் ரக்குவானை ஹேஸ் தோட்டம், பனில்கந்த கேகாலை மாவட்டத்தில் கந்தலோயா, கண்டி மாவட்டத்தில் நாகஸ்தென்ன தோட்டங்களும் விரைவில் வெளியாருக்கு பகிர்ந்து கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இடம்பெறுவதாக அறிகிறோம்.

இந்த பட்டியலில் இன்னும் நிறைய தோட்ட பிரிவுகள் உள்ளடக்கப்படலாம்.

ஏற்கனவே கண்டி மாவட்டத்தில் ஆரகம, கரந்தகொல்ல, மாபோதென்ன, நுவரெலியாவில் ரொசிட்டா தோட்டங்கள் கால்நடை அபிவிருத்தி சபைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. கண்டி, மாபோதென்ன மக்கள் தங்களது வீடுகளை நிர்மாணிப்பதில் பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. வட்டவளை மவுன்ட்ஜின் தோட்ட காணிகள் இரத்தினகல் அகழ்வுக்காக ஒதுக்கப்பட்டபோதும் இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையால் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை. மலைப் பாங்கான காணிகள், நீரோடைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் சரியாக பின்பற்றத் தவறும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம்.

தோட்டக்காணிகளில் பயிர்ச்செய்கைதிட்டம் மற்றும் வேறு வர்த்தக பயிர்களின் உற்பத்தி செய்கை திட்டங்கள் தொடர்பாகவும் கம்பெனிகள் திணைக்களங்கள் தெளிவான வழிகாட்டல்களை வெளியிடவில்லை.

புதிய பண்ணைகளில் கணிசமான எண்ணிக்கையில் மலையக இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மகிந்தானந்த கூறுகிறார். ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் குத்தகை காலத்திலும் அடுத்தகட்ட தலைமுறையாக மலையக இளைஞர்கள் பண்ணைகளில் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்ப மாட்டார்கள்.

எனவே விவசாயத்துக்காக காணிகளை கையகப்படுத்தல், தரிசுநில சுவீகரிப்பு, தேயிலை பயிர்ச் செய்கை பாழடைந்த புதர் காடுகளின் அபகரிப்பு போன்ற பல்வேறு வடிவங்களில் வரக்கூடிய திட்டங்கள், புதிய காணி சட்டங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், மறைமுக அரசியல் தலையீடுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும். அரசியல் பேதங்களை கடந்த நிபுணத்துவம் மிக்க செயற்பாட்டாளர்களினதும் புத்திஜீவிகளினதும் பங்களிப்பை பெற வேண்டும்.

மாறாக மலையகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு பசுக்களை வழங்கி பத்து இலட்சம் கறவை பசுக்களை உருவாக்கும் திட்டமொன்றை தயாரிக்கலாம். தேயிலை பயிர்ச்செய்கையில்லாத தரிசு நிலங்களிலும் புல் வளர்ப்பு, வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை, மலர் வளர்ப்பு செயற்பாடுகளில் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். சுய தொழில்களுக்காக காணி கொடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச முன் வைத்த அமைச்சரவை முடிவுகளை மீண்டும் ஆராயலாம்.

தமிழ்நாட்டில் பால் வளம் தொடர்பான தனியான அமைச்சு இயங்குகிறது. அங்கு நடைமுறையில் இருப்பதை போன்று மாடு வளர்ச்சிக்காக மானியங்கள் வழங்கும் நடைமுறைகள் இங்கேயும் பலன்களை தரும். பசு பராமரிப்பு பால் சேகரிப்பு மற்றும் பால் உற்பத்தி பண்டங்கள் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வசதிகளை இந்தியவிலிருந்து பெறலாம். சிறு கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமாக கிராமிய பொருளாதாரத்தை சீராக கட்டியெழுப்ப முடியும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நானும் கால்நடை அபிவிருத்தி சபையில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளேன். கற்றுக் கொண்ட அனுபவங்கள் வாயிலாக உலகின் வளர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளினும் முன்மாதிரிகளை மலையகத்தில் சிறப்பாக அமுல் படுத்தலாம். மலைநாட்டின் காலநிலை, மக்களின் கடின உழைப்பு தன்னம்பிக்கை வெற்றி யளிக்கும். எனவே அரசாங்கம் கால்நடை இலாகாவை முழுமையாக மலையக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.தலைவர்கள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே கால்நடை அபிவிருத்தி அமைச்சு மலையக தலைவர்கள் வசம் இருந்துள்ளது. எதிர்ப்பு அரசியல் மற்றும் இணக்க அரசியல் இரண்டையும் சமூக அபிவிருத்திக்காகப் பயன்படுத்தலாம். தேர்தல்கள் வரும்போது கொள்கைகள் ரீதியிலாக மக்களின் விருப்பத்தை கோரலாமென்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.

அரசாங்கம் கொண்டுவருகின்ற சில திட்டங்களை எமது சமூக நலன்களுக்கு சாதகமாக சாதுரியமாக கையாளும் சாணக்கியம் முக்கியமானது.

மலையக மக்கள் முன்னணி மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருகிறது. அரசாங்கத்திற்கும் ஏனைய அமைப்புகளுக்கும் விரிவான அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளது. நடைமுறை யதார்த்தங்கள் அடிப்படையில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகளுடன் இணைந்தும் பொதுவானதொரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையினையும் வலியுறுத்துகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நல்லெண்ண அழைப்பு விடுத்துள்ளார். அதே மாதிரியாக மலையக மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் விதமாக புதியதாக சிந்திக்க வேண்டும். தமிழக அரசின் உறுதுணையோடு இந்தியாவின் தார்மீக உதவியை கோர வேண்டும். மலையக மக்களின் அடுத்த தலைமுறை சிறு தோட்டங்களின் உரிமையாளர்களாக பண்ணைகளின் உரிமையாளர்களாக, பொருளாதார தன்னிறைவு அடைந்தவர்களாக, கல்வி கலாசார பரிணாம மாற்றங்களுடன் எழுச்சியுடன் இலங்கையின் வளர்ச்சியில் பாரியளவில் பங்களிப்பு செய்யலாம்.

சதீஷ்குமார் சிவலிங்கம்
MA., MPhi, சிரேஷ்ட உபதலைவர்
மலையக மக்கள் முன்னணி

Comments